Monday, January 5, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:4: ஒரு முடங்கல்: புதுமைபெண் 1

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:4
ஒரு முடங்கல்: புதுமைபெண் 1
இன்னம்பூரான்
05 01 2015

முற்றும் துறந்து பற்றறவராக தன் கொள்கைக்காகவே வாழ்ந்த ஒரு சான்றோன் எழுதிய கடிதம். அவரது முகவிலாசம் கடிதத்திலேயே இருக்கிறது. இது ஒரு பதில் கடிதம். அந்த பெண் எழுதிய வினாக்கடிதம் காணக்கிடைக்கவில்லை. இந்தக்கடிதத்தில் அதன் உள்ளுறை இதில் இருப்பது போதுமே. அவர் ஆற்றிய உரைகளை கேட்டிருக்கிறேன்.சாதாரணம். ஆனால் நம்மை கவர்ந்து விடுவார். அவர் உள்ளதை உள்ளபடி எளிய தமிழில் இயல்பான,யதார்த்தமான, எழுத்தறிவில்லாத பாமர்களும் புரிந்துகொள்ளும் தரத்தில், அருகே நின்று அளவளாவது போல இருக்கும் உரையாற்றல், அவரது. மடலின் சில சொற்களை, சொல்லாக்கங்களை, குறிப்பால் உணர்த்தியுளேன். நுட்பம் அறிக.

தற்காலம் நானிருக்கும் இடத்தில் ‘அல்லி ராஜ்யம்’ தான் என்றால் கேலி அன்று; சற்றே அவர்களுடன் களங்கமில்லாமல் பகிர்ந்து கொள்ளும் மிகை. எல்லாருமே முதியவர்கள். 90 வயதைக் கடந்த மூதாட்டிகள் புன்னகையோடு வலம் வருகிறார்கள்.ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் நூல்கள் எழுதியுள்ளார்கள்;சிலர் கையில் ஐபேட். பாகவதமும், திருப்பாவையும், திருவெம்பாவையும்.  பெரும்பாலும் எல்லாருமே மெத்தப்படித்தவர்கள். முனைவர்களும் உளர். மேற்படி கடிதம் எழுதப்பட்ட காலகட்டத்தில், இவர்கள்இளம்பெண்கள்,சிறுமிகள்,குழவிகள்.  இவர்களுக்கும், வினாக்கடிதம் எழுதிய பெண்ணுக்கும் பின்புலம் வேறா?
*
அன்புமிக்க............
உனது முடங்கல் தடங்கலின்றிக் கிடைத்தது. கடிதத்தின் உள்ளடக்கத்தைச் சுவைத்தேன்; மேலும் சுவைத்தேன். என் நெஞ்சம், உணர்ச்சியை இன்பத்தில் தோய்த்துத் தோய்த்து எடுத்தது."பழம்பெரும் தமிழ்ப்பண்பாட்டில் பெண்களைப் பற்றிய கருத்து என்ன? கண்ணோட்டம் என்ன? சாதாரண மக்களிடையில், தலைமுறைத் தத்துவமாக, பெண்களைப்பற்றி இருந்துவரும் மனப்பான்மை என்ன? சான்றோர்கள் பெண்மையைப் பற்றி, குறைத்துப் பேசுகிறார்களா? கூட்டிப் பேசுகிறார்களா? சரியாக, முறையாகப் பேசுகிறார்களா?"

அன்பே! இவ்வாறு உனது கடிதத்தில் கேள்விமேல் கேள்வி கேட்டிருக்கிறாய். 
இன்று உலக முழுவதிலும் பெண்கள் நிலைமை என்ன? பாரத நாட்டில் பெண்கள் வாழ்வு எப்படி? தமிழகத்தில் பெண்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஜனநாயகம் என்றும், சமதர்மம் என்றும், சமாதானம் என்றும் உலகமெங்கும் முழங்கப்படுகிறது அல்லவா, இன்று? இந்த கோஷங்களுக்கும் பெண்களுக்கும் என்ன ஒட்டு? என்ன உறவு!பெண்களுக்குத் தனிப் பிரச்சினைகள் உண்டா? உண்டென்றால் அவைகளுக்கு பைசல் காண பெண்களுக்கு மட்டும் தான் பங்கா? அல்ல ஆண்களுக்கும் பங்கு உண்டா? பெண்ணுரிமைக்காக, பெண் விடுதலைக்காகத் தனி இயக்கம் வேண்டுமா? தனி ஸ்தாபனங்கள் வேண்டுமா? உலகத்தில், இந்தியாவில், தமிழகத்தில் பெண்கள் இயக்கம் எந்த நிலையில் இருக்கிறது? என்னென்ன பிரச்சினைகளுக்காகப் போராடுகிறது?  இவ்வாறு, உனது அன்புக் கடிதத்தில் கேள்வி மாரி பொழிந்திருக்கிறாய். என்றும் இல்லாதவாறு, என்னைக் கேள்வி மழையில் தள்ளி, திக்கு முக்காடச் செய்திருக்கிறாய்.  இதுகாறும் தீட்டிய கடிதங்களில், நீ குடும்பக் கதைகளை எழுதுவாய்; உனது படிப்பையும், பரீட்சைகளையும் பற்றி எழுதுவாய்; ஆடல் பாடல்களைப் பற்றி எழுதுவாய்; கிடைத்த 'மார்க்கு' களையும் தேறிய தரத்தையும், பெற்ற பரிசுகளையும் பற்றி எழுதுவாய்; நீயும் உனது தோழியர்களும், பொழுது போக்குக்காக அவ்வப்போது நடத்தும் இனிய உரையாடல்கள் பற்றியும், அவற்றில் நீர்க்குமிழிபோல் தோன்றி மறையும் செல்லச் சண்டைகள் பற்றியும் எழுதுவாய். இவைகளையெல்லாம், நான் படிக்கப் படிக்க சுவை சொட்ட, இன்பம் சொட்ட எழுதுவாய். இது உனது வழக்கம். ஆனால், இன்று நான் பெற்ற உனது கடிதமோ, முன்மாதிரியானதல்ல. உன் உணர்ச்சியில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டுகிற கடிதம் இது. அன்பே! உலகச் சரித்திரத்தில் பெண்கள் இயக்கம், எப்படித்தோன்றி வளர்ந்து வந்திருக்கிறதென்று வினா எழுப்பி, விடை கேட்கிறாய். சகல துறைகளிலும், சர்வ வியாபகமாய்ப் பெண்கள் இயக்கம் எப்படிப் பரவிப் படர்ந்து நிற்கிறதென்று என்னிடம் கேட்கிறாய். இவைகளைப்பற்றிய எனது அறிவையும், அனுபவத்தையும் பற்பல கேள்விகளால் நயமாகக் கிண்டிவிட்டு, விடை காண முயல்கிறாய். என்றைக்கும் இல்லாத புதுமையாக நீ சரமாரியாகக் கேள்விகள் கேட்டும் கடிதம் எழுதி யிருக்கிறாய். உலகம் தழுவிய ஒரு பெரும் இயக்கமான, பெண்கள் இயக்கத்தைப்பற்றிக் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறாய். தேனென இனிக்கும் வகையில் சுவை படக் கடிதம் எழுதியிருக்கிறாய். இவை யாவற்றிற்கும் மேலாக, பொட்டு வைத்தது மாதிரி, மனித இனத்தின் செம்பாதியும், உன் னினமும் ஆகிய பெண்ணினத்தின் பிரச்னைகளை யெல்லாம் கிளறி, முன்னிறுத்தி எனது பதில்களில் என்ன தீர்வுகள் பிறக்கின்றன என்று பார்க்கவும் துணிகிறாய்.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல், அன்பே இன்றையப் பெண்கள் இயக்கத்தில், நவீனப் படிப்புப்படித்த பெண்களின் கடமை என்ன, சொல்லுங்கள்! என்றும் கேட்டு எழுதி யிருக்கிறாய்.
உனது கடிதத்தை, குறிப்பாக, உனது கேள்விகளுக்குப் பதில் சொல்லும் உனது எழுத்துப் பாணியை, நினைக்க நினைக்க ஏற்பட்ட எதிரொலியைத்தான், உனது கடிதத்தைப் படித்ததும் எனது நெஞ்சம் இன்பக் கடலாடுகிறது என்று தொடக்கத்தில் படம்பிடித்துக் காட்டினேன்.
இவ்வளவு தூரம் உனது கடிதத்தைப் பற்றியே எனது மன வெழுச்சியைக் கூறினேன். இது இருக்கட்டும். அன்பே! உனது வேண்டுகோள்படி பெண்கள் இயக்கத்தின் பல்வேறு கூறுகளைப் பற்றி உனக்கு அடுத்த கடிதத்திலிருந்து எழுதுவேன். பலப்பல கடிதங்கள் எழுதுவேன். இடையீடின்றித் தொடர்ச்சியாக எழுதுவேன். எனவே 'ஜன சக்தி' வார மலரை ஒரு இதழ்கூடத் தவறவிடாமல், கட்டாயம் சேர்த்துவைப்பாய் என்று நம்புகிறேன்.  இனி இந்தக் கடிதத்தில், அறிமுகமாக உனக்குச் சில சொல்ல விரும்புகிறேன், நினைவாற்றலும், சிந்தனைத் திறனும் படைத்த நீ, கருத்தில் ஊன்றி வைத்துக்கொள்வாய் என்பது உறுதிசொல்கிறேன், கேள்.
படித்த, படிக்கிற யுவதிகளில் பலர் எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? கடற்கரையில் விளையாடும் சின்னஞ்சிறு குழந்தைகள் துள்ளிக் குதித்து, ஆடி, இங்கும் அங்கும் ஓடி, அங்கு ஒரு அழ காண சிப்பியையும், இங்கு ஒரு மெல்லிய கடற்பாசியையும் கண்டு மகிழ்வதைப்போல் வாழ்கிறார்கள்.
ஆனால், நீ அப்படிப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவளல்ல. அறியப்படாமல் பரந்து விரிந்து கிடக்கும் பெருங்கடலை அறிய முயல்கிறாய் நீ. அதனால்தான், விடைவேண்டி, ஆயிரத்தெட்டுக் கேள்விகளை என்னிடம் கிளப்பி இருக்கிறாய். இலட்சியம் இல்லாத ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, திசையறி கருவியில்லாத கப்பல் என்ற உண்மை உன் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது என்பதை நான் காண்கிறேன். கண்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன். அன்பே! எனக்கு மிகப்பழக்கமான ஒரு பெரிய டாக்டரிடம் ஒரு தடவை ஒரு கேள்வி கேட்டேன். ஒரு சிறந்த மருத்துவரிடம் என்னென்ன பண்புகள் இருக்கவேண்டும் என்பது என் கேள்வி. அவர் சொன்னார்:
"நல்ல வைத்தியனிடம் மூன்று பண்புகள் இருக்கவேண்டும். ஒன்று, தன்னலங் கருதாமலும் உள்ளதை மறைக்காமலும் இருக்கும் உணர்வு; இறந்து, நோயாளி படுகிற துன்பத்தையும் வேதனையையும் தீர்க்க விரும்பும் பரிவு; மூன்று, நோயின் தன்மையையும் அதனால் வரும் கேட்டையும் பகுத்து அறிந்து, அதைக் குணப்படுத்தும் மருந்தை அறிகிற அறிவு" என்று. இதை உன் நினைவுக்குக் கொண்டுவருகிறேன். ஏன்! நான், மேலே காட்டிய நல்ல டாக்டரின் பண்போடு சமுதாய வாழ்வில் பெண்ணினத்தின் பிரச்னைகளையும் பைசல்களையும் தெரிந்து புரிந்து காட்டுவதில் எந்த அளவு வெற்றி பெறப்போகிறேன் என்பதை நீதானே முடிவு கட்ட வேண்டும்? அதற்காகத்தான்.

அன்பே! ஏடுகளையும் நூல்களையும்போல் எனது கடிதமும் ஓரளவுக்குத்தான் உனக்கு உதவி செய்ய முடியும். மற்றப் பெரும் பகுதி, அனுபவ வாயிலாக அறிய வேண்டியவைகளே. கைகாட்டி மரம் உனக்கு வழியைச் சுட்டிக் காட்டமுடியும். ஆனால் நீ போகவேண்டிய இடத்திற்கு உன்னைக் கொண்டு சேர்க்க அதனால் முடியாது.
இவைகளை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு, எனது கடிதங்களை நீ ஊன்றிப் படிப்பாய் என்று நம்புகிறேன். உனது சகோதரிகளையும் படிக்கவைப்பாய் என்பதில் எனக்கு நம்பிக்கை யுண்டு.
இந்தக் கடிதம் உனக்கு எந்த அளவு சுவைக்குமோ எனக்குத் தெரியாது. ஆனால், அடுத்த கடிதத்தை நீ ஆவலோடு எதிர்பார்ப்பாய் என்று மட்டும் என்னமோ என் மனதில் படுகிறது. 

-#-

No comments:

Post a Comment