Tuesday, January 13, 2015

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:3ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:3
இன்னம்பூரான்
13 02 2015
அதுவும் தமிழில்!
சின்சினாட்டிச்சின்னதாத்தா
(தொடர்கிறது)
[வழியிலே சூறாவளி. கேப்டன் வேறே... சொன்னால் விரோதம்! அதான் கப்பல் லேட்டு, ரஞ்சனி.]

அந்தக்காலத்திலேயே தண்டபாணி முன்கோபி. ஹாஸ்டலில் இதுலெ உப்பு கம்மி; அதுல்லெ ஒரு கல்லு ஜாஸ்தி, வாழைக்காய் பொடிமாஸ்ஸை கடிக்கவேண்டி இருக்கிறது, இட்டிலியை கெட்டிலி என்றெல்லாம் கலாய்ச்சிண்டுருப்பான்; ஒரு நாள் இவனுடைய பிலாக்கணத்தை கேட்டுக் கொண்டே சாமியார் வந்துட்டார். ‘தண்டபாணி! இன்னிலேருந்து நீ தான் மெஸ் செக்ரடரி’ அப்படினு சொன்னார், அந்த ‘சடக்’முன்கோபி ‘சதக்கென்று’ . இந்த ‘நின்னா குத்தம்; உக்காந்தா குத்தம்’ முன்கோபி, அதான் தண்டபாணி, வாணலியில் தத்தளிக்கிற மொளகாய் போல துள்ளிக் குதித்தெழுந்து, ‘சுவாமிஜி! வேண்டாம் அது. நான் குத்தம் சொல்லமுடியாதே’ என்றான். அவர் சிரிச்சிண்டே அன்னண்ட போய் பிரின்சிபால் கிட்ட வத்தி வச்சுட்டார். கேட்டு வாசல்லெ பொட்டி,படுக்கையோட சப்ஜாடா சொத்துபத்து, இரவல் வாங்கின புத்தகங்கள், நடிகைகள் படங்கள் சகிதமாக, அசட்டு அம்மாஞ்சி மாதிரி நின்னுண்டுருக்கான், தண்டபாணி. என்னடா என்று கேட்டால், என்னை எக்ஸ்ப்போர்ட் பண்ணிட்டாடா என்று ஒரு குரல் அழுதான். அதற்கப்பறம், இப்போ தான் அவனை பார்க்கிறோம்.
*
ஒரு உரையாடல்:
சுப்புடு: ஏண்டா! உன்னுடன் கூட இருக்கிற அந்த வெள்ளைக்காரக்கிழவி யாரு?
தண்டபாணி: நாக்கை அறுத்துடுவேன், அறுத்து. அவள் என்னோட ஒய்ஃப்டா.
குரு: சாஸ்த்ரோக்தமாக பண்ணிண்டையா? இல்லை..... சிகாகோவில் கோவில் இருக்கே. அதான் கேட்டேன். 
நம்ம மின் தமிழ்லெ நடக்கறாபோல, க்ஷணத்தில் சுதாரித்துக்கொண்ட தண்டபாணி, வரதனைப் பார்த்து, ‘ஏண்டா! உன் பொண்ணு நார்வேயிலெ இருக்காளாமே. ‘கரடி’ சொன்னான்.’ என்று திசை மாற்றின்னான். ‘கரடி’ வராத பிரகிருதி. அவன் காலை வாரலாம் என்று நாங்கள் இருந்த காலகட்டத்தில் தான் இந்த திசை மாற்றம். ‘கரடி’ புராணம் மிகவும் நீண்டது. நீங்க வேணும்னா வண்டலூரில் போய் ஜூவில் கரடியை பாருங்கோ. அதெல்லாம் போலி சார். இவன் தான் மூலவர் மாதிரி அட்டைக்கரி. ரோமஹர்ஷணர் (அதான் முடிகளால் மூடப்பட்ட மனிதன்). காலையும் கையும் பரப்பி அலாக்கா கரடி நடை பயில்வான். வரதன் ஐந்து தடவை ஃபோன் செய்தும் வரேன் என்று சொல்லிவிட்டும் ‘கரடி; வராததால், வரதனையே ஒரு பிடி பிடித்தோம், தண்டபாணி ஒத்துப்பாட.

ஐயா ஏற்கனவே லாகிரியால் ஆட்கொள்ளப்பட்டதால், துணிச்சலாக ஒரு காரியம் செய்தான்.
“This is a stag’s party, darling. And, these fellows are rogues of the first water. Not the place for you. I tell you what. You go to our Leela Palace Hotel and take rest. I shall come soon.” என்று சொல்லிவிட்டு மேலெழுந்தவாரியாக, அவளுக்கு ஒரு முச்சா கொடுத்தான். அது கண்டு திகைத்த குருவும் மூர்ச்சை அடைந்தான். 
நான் சொல்ல வந்தது என்ன என்றால்... பி.கு. நோக்குக.
(தொடரும்)
*
பி.கு. கவலையற்க. நான் திருக்கருகாவூரை மறக்கவில்லை. ஆனால், கதை கும்போணத்து குடமுருட்டி போல ஓட்றது. நான் என்ன செய்யமுடியும்? 

No comments:

Post a Comment