Tuesday, April 15, 2014

ஓவர்சீஸ் பார்வை: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 9

ஓவர்சீஸ் பார்வை: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 9


இன்னம்பூரான்
15 04 2014

மூன்று நாட்களாக அரைக்காத மாவு சமாச்சாரம் ஒன்றும் கிடைக்கவில்லை. மேடைப்பேச்சுக்கள் எல்லாம் தமாஷு; பொருள் இல்லை; மருள் உளது. எல்லாம் ‘அவன் மீசையிலும் மண்ணு. என் மீசையில் சகதி இருந்தால் என்ன?’ என்ற ரகம். ஆக்கமும், ஊக்கமும் அற்ற இந்த சக்கையை கசக்குவதில் ஆதாயம் இல்லை என்று அவற்றை உதறிவிட்டேன்.

இன்று ஒரு நவீன ஓவர்சீஸ் பார்வையின் சாராம்சம்:
  • 16வது இந்திய தேசீய தேர்தல் 2014, உலகிலேயே பெரிய ஷோ; இந்தியாவின் பன்முக குடியாட்சி கலாச்சாரத்துக்கு, இது ஒரு புகழாரம்; இந்தியாவின் தொன்மை கலாச்சாரத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்க, இது ஒரு மக்கள் சாதனம். 
  • நல்லதொரு ஜனநாயக அடிப்பாரம் இல்லாத வலிமை மிகுந்த பாகிஸ்தான், சைனா, பர்மா ஆகிய நாடுகளின் நடுவில் சிக்கிய போதும், இந்தியாவுக்கு உறுதுணை, இந்த மக்கள் ஆயுதம்.
  • பயங்கரவாதம் போன்ற வலிமையான வினைகள் பல; அண்டை நாடுகளை விட, பல சமயங்களும், கலாச்சாரங்களும், மொழிகளும் வளைய வரும் இந்தியாவின் சாதனைகள் அபாரம்.  அவை பிழைத்திருப்பதைக்கு மேல், அவை வளம் பெற்று வளைய வருவதை நாம் மெச்சவேண்டும்.
  • இந்தியா தான் ஹிந்து சனாதனம், பெளத்தம், சமணம், சீக்கியம் ஆகிய சமயங்களின் ஜன்மஸ்தலம்.
  • உலகிலேயே பெரிய இஸ்லாமிய சமுதாயம், இங்கு தான்.
  • இரண்டாயிரம் வருடங்களாக, இங்கு கிருத்துவம் தழைத்தோங்குகிறது.
  • ரோமானியர் யூதர்களின் இரண்டாவது தேவாலயத்தை தீயிட்ட காலகட்டத்தில், யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு, இந்தியாவே.
  • சைனாவின் அச்சுறுத்துலை பொருட்படுத்தாது, வணக்கத்துக்குரிய தலை லாமா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது, இந்தியாவே.
  • சொந்த மண்ணிலிருந்துத் துரத்தப்பட்ட பார்சி மதத்தினருக்கு அடைக்கலம் கொடுத்ததும் இந்தியாவே.
  • அண்டி வந்த ஆர்மினியர்களையும், சிரிய நாட்டு மக்களையும் வாழவைத்த நாடு, இது.
  • OECD என்ற சர்வதேச ஸ்தாபனம், கடந்த 1500 வருடங்களாக, இந்தியா தான் உலகில் பெரிய பொருளியலில் சிறந்த நாடாகத் திகழ்ந்தது என்கிறது.
  • இந்திய ஜனாபதிகளில் மூவர் இஸ்லாமியர்.
  • சீக்கியரை பிரதமராகக் கொண்ட இந்தியாவின் ஆளும் கட்சித்தலைவர், இத்தாலிய கத்தோலிக்க பெண்மணி.
  • விஞ்ஞானியாகிய மாஜி ஜனாதிபதி, மக்களுக்கு தெய்வம் போல. அடுத்து வந்தவர் பெண்ணினம்.
  • வருடந்தோறும் 4 கோடி மக்கள் அடித்தட்டு வறுமையிலிருந்து விமோசனம் பெறுகிறார்கள்.
  • அமெரிக்க ஜனத்தொகை ஒத்த இந்திய மத்தியத்தர வர்க்கம் 2025ம் வருடம் பெரும்பான்மையாகி விடும்.
  • சினிமா, கலை, செல்வ நிலை ஆகியவற்றில், எதிர்கால நம்பிக்கை கொண்ட அமைப்புக்களின் வளர்ச்சி நோக்கப்பாலது.
  • இன்னல்களும், இடர்ப்பாடுகளும், இன்னா நாற்பதுகளும் இந்தியாவை பாடாய்படுத்தினாலும், மக்களின் வாக்கு வாகை சூடும். சூட வேண்டும்.
  • மேல்நாடுகள், இந்தியாவில் கால் வைக்க, துடிக்கிறார்கள்.
  • மேற்படி சூழ்நிலையில், உலகின் மக்கள் தொகையின் பத்து விழுக்காடு மக்கள் வாக்களிக்க முஸ்தீபு செய்வது, உலகுக்கே ஒரு முன்னுதாரணம்.
~ இது ந்யூயார்க் டைம்ஸ்: மிகவும் கவனம் சிதறாமல் சிந்தித்து எழுதும் நாளிதழ்.
என் தம்பிடி:
நம் நாட்டையும், நம் இனத்தையும் குறை கூறி பிலாக்கணம் பாடும் இந்தியர்களின்/ தமிழர்களின் தொகை கணக்கில் அடங்கா (யான் உள்பட).  மாஜி குறைபாடுகளையும், தற்கால தகராறுகளையும், வருங்கால பிரச்னைகளையும் கைக்கா உருளியாக கலந்துருட்டி, இந்தியாவை குட்டிச்சுவராக்க பாடு படும்  வாய்ப்பேச்சு வீரர்களே! லஞ்சம் ஒழிந்தால், இந்தியாவுக்கு மறுமலர்ச்சி உத்தரவாதம். எல்லா துறைகளிலும் அமோக முன்னேற்றம் தென்படும். லஞ்சம் கொடுப்பதை நிறுத்தி விட்டால், லஞ்சாதிபதிகள் ‘ஐயோ! ஐயோ!’ என்று மாய்ந்து போய்விடுவார்கள். வாக்கு அளிப்பது தெய்வவழிபாடு போல் புனிதம் ஆனது. அதை தார்மீக முறையில் செய்திடுக. தர்மம் தலை காக்கும்.
- * -


No comments:

Post a Comment