சவாலே சமாளி: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 10
இன்னம்பூரான்
16 04 2014
முதலாழ்வார்களை திருக்கோவிலூர் சத்திரத்து ரேழியில் பெருமாள் முண்டியடித்து நெருக்கியது போல, தமிழ் நாட்டில் ஸோனியா, மோடி, ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஒரே சமயத்தில் முண்டியடித்து நெருக்கி வருகிறார்கள். வாயா வார்த்தையாக கருணாநிதி, ‘ஒண்டிக்கு வாடி, காத்தாயி !’ என்ற அலைவரிசையில் அறை கூவி அழைக்க, அம்மாவும் கனிவுடன் சவாலை ஏற்று, ‘பினாமி அனுப்பால், நேரே வந்து மோதும்.’ என்று ஆரணியில், தரணி முழுதும் கேட்கிறமாதிரி, சவுடால் சவுண்டு விட்டார், நேற்று.
இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் ஸோனியா மாமி, மோடி மஸ்தான் இருவரும், இந்த கர்ஜனைகளை கேட்டு தத்தம் பப்ளிசிடி ஸ்டண்ட் ஆசாமிகளுடன் மந்திராலோசனை நடத்தினார்களா ! அந்த அற்புத பிரஜாபதிகள் எக்கச்சக்கமா ஐடியா கொடுத்தார்கள். ‘‘இது தான் சாக்கு என்று கட்டை பஞ்சாயத்து பட்டிமன்றம் நடத்தலாம். ‘நேருவும் எங்காளு; காந்தியும் நம்மாளு’ என்ற தலைப்பில் சோனியா தரப்பும், ‘குஜராத் மோடியே இந்தியா மோடி’ என்ற தலைப்பில் பா.ஜ.கா. தரப்பும் பேரிகை முழங்கி களத்தில் இறங்கினர். தத்தம் சங்குகளை கேப்டன், மருத்துவர், பெரியார் தத்துப்புத்திரன், மற்ற கூஜாக்கள், கைத்தடிகள் எல்லாரும் எடுத்தூதினர்.
நடுவர் மன்றம் நாடினர், யாவரும், கூடாநட்பின் அருமை சாற்றிய வண்ணம். ரஜினி தான் உற்ற மையம் என்று அவரை அணுக விழைந்தனர். அவரோ அண்டார்ட்டிக்கா போய்விட்டார். நோ ரிப்ளை. மவுனமாம்! மதுரை சென்று அழகிரிவலம் வர நினைத்தவர்களை கண்டித்த மு.க., அருகில் இருக்கும் வேணுகோபாலனை காண விழையாத நானா அழகிரி மத்யஸ்தத்துக்கு வருவேன்?’ என்று பகர்ந்து, தொல்காப்பியமே ஸ்டாலின் தரப்பு என்று அடித்துப் பேசினார். யாவருக்கும் அரைகுறையாக இருந்தாலும் துக்ளக்கே தேவலை என்று பட்டதாம்.
பட்டிமன்ற வாய்வீச்சுகளுக்கு வைட்டவும். நாலு பேர் கேட்டா , தகவல் உரிமை சட்டத்தின் கீழ், ரகசிய பட்டிமன்ற விவாதங்களின் தொகுப்பு வாங்கி அளிக்க ஆர்வம் ஏற்படும்.
கனவு கலையும் முன் அணுகுக.
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgATngxRXj1BNmoVp_rG4PRMQ-SOCrGPh4wuUmkI2PeluHx5qElSjsuK4b35NGr0joHlH0f9OygB_FyQN10XhDP5ccTXvkHSXEyK5B3NQOZsuWqgR0UGgon-lBJpf1eJrX3a9gw4nkFkkPb/?imgmax=800
No comments:
Post a Comment