அப்டியா ! 2
“ பிரதமர் அலுவலகத்தில் நடந்த எல்லாவற்றையும், முழுமையாக, நான் அறியேன். உண்மையின் பன்முகங்களை நான் அறியேன். சொல்லப்போனால், இங்கு உண்மைக்கு எத்தனை முகங்கள் உண்டு என்பதையும் நான் அறியேன்.” - திரு. சாரதா பிரசாத்.
எதுவுமே நாம் நினைத்தபடி நடப்பதில்லை. சிந்தனைகள் கூட திசை மாறி விடுகின்றன. வாசகர்களால் பெரிதும் பேசப்படும் திரு. சஞ்சய் பாருவின் தற்போதைய பிரதமர் டாக்டர் மன் மோஹன் சிங் அவர்களை பற்றிய நூலின் ஒரு பகுதியை பகிர்ந்து கொண்டபோது, மற்றதையும் எடுத்து, தவணை முறையில், சுவைபட அளிப்பதாகத்தான் எண்ணம் இருந்தது. மதிப்புக்குரிய நண்பர் வெ.சா. அவர்களின் ஆதங்கமும், திருமதி கீதா சாம்பசிவத்தின் ஆர்வமும், நேற்று (21 04 2014) சில நண்பர்களுடன் பல மணி நேரம் பல விஷயங்களை பற்றி மனம் திறந்து அரட்டை அடித்ததும், மேலும் ஒரு ‘தூறல் உபயமும்’, என் சிந்தனையை புதியதொரு பாட்டையில் திருப்பின.
சுதந்திரம் வந்தபின் இந்தியாவின் பன்முக நிர்வாக களங்களில் பணி புரிந்த நபர்களில் டாக்டர் மன் மோஹன் சிங்கும் ஒருவர். கடைக்குட்டி கிழவர். நம் நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைத்த பட்ஜெட்டை, நிதி அமைச்சராக, அவர் வழங்கிய போது, அவரை போற்றாதவர் இல்லை; தற்காலம் தூற்றாதவர் இல்லை. அவருடைய பயோ-டேட்டா மெச்சத்தக்கதாக இருந்தது. இப்போது காங்கிரஸ் கட்சியே அவரை துச்சமாக பார்க்கிறது. காரியம் ஆகிவிட்டது; கழுத்தைப் பிடிக்கிறார்கள். அந்த குணாதிசயம் ஒரு நூற்றாண்டுக்கு மேல், அந்த கட்சியின் லாகவம். கடந்த சில வருடங்களில் நிகழ்ந்து விட்ட அவருடைய இறக்கம் நாட்டையும் அதலபாதாளத்தில் தள்ளி விட்டது. தன்னுடைய சகபாடிகளின்/ ஊழியர்களின் திருவிளையாடல்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற அவரது நிலைப்பாடு ‘நேர்மையானவன் செய்யும் காரியமா?’ என்று வெ.சா. அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘ஆம்/இல்லை’ என்று சுளுவாக பதில் கூற இயலாது. மேலும், திரு. சஞ்சய் பாருவுக்கு ஆவணங்களை பார்வையிடும் வசதி இருந்திருக்கவில்லை. ஆனாலும், எல்லா பேச்சு வார்த்தைகளும் அவருடைய பார்வையில் சிக்கின. டாக்டர் மன் மோஹன் சிங் அவர்களின் நிறைகுறைகளை,/ சூழ்நிலையை/ பின்னணியை சீர்தூக்கி ஆராய, இந்த நூல் மட்டும் போதாது. நாம் குடைந்து, குடைந்து பார்க்கவேண்டிய செயல்கள்/முறைகேடுகள் எண்ணில் அடங்கா. அவருடைய ஆட்சிகாலத்தில் நடந்த ஊழல்களை பற்றிய அலசல்கள் பொது மன்றத்தில் இருந்தாலும், நிழல் யுத்தங்களை பற்றி மக்கள் அறியாதவை பல. பொய்யுரைப்பவர்களை நம்பும் பலர் வாக்களிக்கப்போகிறார்கள்.
ஆகவே, குறிப்பாக வருங்கால படிப்பினைகளுக்கு, பிந்திய வரலாற்றையும், நடுவு நிலையில் நின்று, முன்னிறுத்தி ஆராய்ந்தால் தான் அது நமக்கு விடிவுகாலம் வர ஏதுவாக அமையும். எனக்கு தெரிந்த வரையில் தமிழில் அத்தகைய நூல் ஒன்றும் வெளிவரவில்லை. அதனாலும் திசை மாறியது, சிந்தனை. என் அணுகுமுறையை ஊக்குவித்த பழுத்த அனுபவம் பெற்ற நண்பர் ஒருவர் என்னை ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்று பணித்தார். அந்த மொழியறியேன் என்றதற்கு, உனக்கு தமிழும் தெரியாது என்று கேலி செய்தார். இது நிற்க.
நான் தேடிய நுட்ப அணி குறிப்பு, திரு. சஞ்சய் பாருவின் நூல் சமர்ப்பணத்திலேயே எனக்குக் கிடைத்தது. அவர் திரு. ஹெச். ஒய். சாரதா பிரசாத் அவர்களுக்கும், திரு. கே.சுப்ரமணியம் அவர்களுக்கும் தன்னுடைய நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். அதில் முன்னவர், இந்திரா காந்தியின் அணுக்கத்தொண்டராகிய 16 வருடங்கள் பணி புரிந்த திரு. ஹெச். ஒய். சாரதா பிரசாத். ஒரு அற்புதமான மனிதர். தன்னை எக்காலமும் முன்னிறுத்திக்கொள்ளாத மனிதர். தனக்கு சிறிதளவும் ஆதாயம் தேடிக்கொள்ளாத மனிதர். பகையறியாத மனிதர். அடுத்தவரான திரு. கே.சுப்ரமணியம், பாதுகாப்புத்துறையின் தத்துவ விசாரணை, புள்ளி விவரங்கள், ஆய்வுகள், தீர்க்க தரிசனம் ஆகியவற்றை தொகுத்து அளிக்கும் புதிய துறையின் தந்தை. சில காலம் அவரின் கீழ் பணி புரிந்திருக்கிறேன். மூடி மறைக்காமல் எதையும் பட்டவர்த்தனமாக கூறுவது, அவருடைய இயல்பு. எனவே நூலின் சமர்ப்பணமும், மேலே கூறப்பட்ட மேற்கோளும் தான் புதியதொரு பாட்டையில் பயணிக்க இருக்கும் என் சிந்தனைக்கு அடித்தளம்.
இந்த இழையில் நான் கூறுவது எல்லாம் வெறும் முகாந்திரமே. வாசகர்களின் கருத்துக்கள் மிகவும் உதவும், இதே அலை வரிசையில் இருந்தால். தலைப்பைக்கூட மாற்றுவதாக உத்தேசம். எனி சஜெஷ்ஷன்ஸ்?
இன்னம்பூரான்
22 04 2014
சித்திரத்துக்கு நன்றி: http://outsourcemagazine.co.uk/wp-content/uploads/2013/08/Amici-Aug-2013-1.jpg
No comments:
Post a Comment