அன்றொரு நாள்: அக்டோபர் 15, 1931
இந்தியாவின் தென்கோடி முனை ராமேஸ்வரத்தில் பாமரனாய் பிறந்து, சீமானாக உயர் பதவிகளில் இருந்த போதும், பாமரனாக வாழ்ந்து காட்டி, காந்தி அண்ணலின் நினைவை முன் நிறுத்துபவரும், நேருவை போல் சிறாரின் துருவநக்ஷத்ரமாக ஒளி தருபவருமான முன்னால் ஜனாதிபதி பாரத ரத்னா ஜனாப் ஆவுல் ஃப்க்கீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவருடைய வரலாறு பல இடங்களில் உமக்குக் காணக்கிடைக்கும். அவர் ஒரு விழிப்புணர்ச்சி தலைவர் என்பதை யாவரும் அறிவர். அவருடைய பாமரகீர்த்தியின் அறிமுகம் மட்டும் இங்கே. ஆங்கிலத்தில் அவர் எழுதியதின் சாராம்சம் அது. மொழியாக்கத்திற்கும், சுருக்கத்திற்கும் பொறுப்பு எனது. மற்றபடி உசாத்துணை, உங்கள் கையில்.
- தன் அன்னையை பற்றி: ‘...1941. இரண்டாவது உலக யுத்தம். பஞ்சப்பாட்டு தான். ஒன்றும் கிடைக்காது. (என் அன்னையும் அரிசி கூட கிடைக்காது என்று எழுதியிருக்கிறார். என் நினைவில்: கருப்பட்டி மல்லி காப்பி, கம்புசாதம், கேழ்வரகு கஞ்சி. ஆபீசில் காகிதம் குத்த கருவேல முள்.) கூட்டுக்குடித்தனம் பெரிது... காலை 4 மணிக்கு குளித்து விட்டுப்போனால் தான் சாமியார் என்ற ஆசிரியர் கணக்கு சொல்லித்தருவார். எனக்கு முன் எழுந்து அம்மா என்னை குளிப்பாட்டி விடுவார்...வயது 10...பிறகு வாப்பா மசூதிக்கு நமாஸ் செய்ய, திருக்குரான் படிக்க, கூட்டிச்செல்வார். அதற்கு பிறகு மூன்று கிலோ மீட்டர் நடந்து ஸ்டேஷனில் அன்றாடம் ரயிலிலிருந்து வீசி எறியப்பட்ட நாளிதழ்களை பொறுக்கி, விநியோகம் செய்வேன்.காலை மணி எட்டு. அம்மா எனக்கு பரிவுடன் அதிகம் உணவு அளிப்பார். ஒரு நாள், என் அண்ணன் அம்மா பட்டினி கிடந்து எனக்கு அதிகம் தருகிறாள் என்று என்னை கண்டித்தான்...மின்சாரம் கிடையாது. 93 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்து, நாள் தோறும் ஐந்து முறை நாமஸ் படித்த தேவதையான அம்மா தான் எங்களுக்கு வெளிச்சம். அதனால் தான் ‘அக்னிச்சிறகுகள்’ என்ற நூலில், நிலா ஒளியில் என் அம்மா.
- தன் ஆசிரியர்களை பற்றி: வீட்டில் வந்து என் படிப்பை சிலாகித்த முத்து ஐயர் அவர்களை சொல்வேனா?... அவர் ஆசிரியர் மட்டுமல்ல. அவர் ஒரு முன்னோடி... பக்ஷி பறப்பது என்பதை கடற்கரைக்கு எங்களை அழைத்து சென்று காண்பித்து, சொல்லிக்கொடுத்த சிவசுப்ரமண்ய ஐயரை மறப்பேனா? அதனால் தானே நான் பறக்கும் விஞ்ஞானம் கற்க வந்தேன். அவர் தான் முதல் அக்னிச்சிறகு... பிற்காலம் பேராசிரியர் தோத்தாத்ரி ஐயங்காரும், கால்குலஸ் ஶ்ரீனிவாசனும் எத்தனையோ மாணவர்களின் மின்னல் வருங்காலத்துக்கு வித்து இட்டிருக்கிறார்கள்...உயர்படிப்பின் போது ஆராய்ச்சியின் மதிப்பை, அழுத்தம் கொடுத்து அழ வைத்து, சொல்லிக்கொடுத்த பேராசிரியர் ஶ்ரீனிவாஸனை மறக்கமுடியுமா?
*
ஜனாதிபதியாக சிறப்புற பணியாற்றிய ஜனாப் அப்துல் கலாம் அவர்கள் பீஹார் அரசை டிஸ்மிஸ் செய்ததிலும், நாடளுமன்ற அங்கத்தினர்களின் சுயாதீன அதிகரிப்பு விஷயத்தில் இரண்டாம் சுற்றில் ஒத்துப்போனதை பற்றி சர்ச்சைகள் எழுந்தன. ஜனநாயகத்தின் அடித்தளத்தை விட அக்காலத்து அரசின் ஆளுமைக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் இடம் கொடுத்து, அரசியலில் தார்மீகம் புறக்கணிக்கப்பட்டதற்கு ஒரு காரணி ஆகிவிட்டாரே என்று எனக்கும் வருத்தம் தான்.
இன்னம்பூரான்
15 10 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment