12:28 PM (6 minutes ago)
| ||||
கோளுருளை பதிகம்
இன்னம்பூரான்
15 10 2013
1960ம் வருடம் என்று நினைவு. அஷ்டகோளங்கள் (planets) ஒரே நேர்க்கோட்டில் அமைந்து வலம் வருவதால், அந்த நாளன்று இந்த பூலோகம் அழிந்து விடும் என்று ஜோதிடர்கள் அழிச்சாட்டியமாக அச்சுறுத்த, அச்சமிகுதியால் அடங்கிக்கிடந்தனர், மக்கள் ~ தத்தம் வீடுகளில். நான்கு சுவர்களுக்குள் கோளங்களின் பாதிப்பு புகல இயலாது என்ற கணிப்போ அல்லது போறது போகச்சே கூண்டோடு கைலாசம் போகலாமே என்ற அங்கலாய்ப்போ, யான் அறியேன். நானும் என் மனைவியும், குழந்தையுடன், மாற்றலாகியதால், 271/2 மூட்டை முடிச்சுகளுடன், அன்று மொகல்சராய் பாஸெஞ்சர் என்ற ஸ்லோமோஷன் ரயில் வண்டியில் கல்கத்தாவிலிருந்து சித்தரஞ்சன் சென்று கொண்டிருந்தோம். காஞ்சி பெரியவா உபதேசித்த படி திருஞானசம்பந்தரின் கோளறு திருப்பதிகம் மனனம், வழி நெடுக. சித்தரஞ்சன் ஸ்டேஷனுக்கு வந்த சரோஜ் குமார் மித்ரா,‘ஏண்டா! குடும்பத்துடன் வரே. இந்த கொள்ளைக்காரன் வண்டியிலா வரது’ என்று மென்மையாக கண்டித்தான். ‘ஓஹோ! ஒன்பதாவது கிரகசாரம் வேறே இருக்கா?’ என்று நினைத்துக்கொண்டேன். தலைப்பை விளக்க இப்படி ஒரு சமாளிப்பு!
ஆங்கில சொற்களுக்கு தமிழில் அர்த்தம்; அனர்த்தமாக அமைந்தது. தற்காலம் கோர்ட்டுக்குப் போவது கொல்லைப்பக்கம் போவது போல. ஆண்டிப்பட்டி விஜயலக்ஷ்மி உயர்நீதி மன்றத்தின் ஆராய்ச்சி மணியை அடித்தல்லவா, தவறான கேள்விக்கு சரியான பதில் அளிக்க முடியாது என்று வாதாடியல்லவா 89+ 1 மதிப்பெண்கள் வாங்கினார்! கதை கேளும். நடந்த கதையை காது கொடுத்துக் கேளும்.
ஜூலை 12. 2012 வரலாறு காணாத வகையில் சிறப்பு மிகுந்த தினம். அன்று பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடந்தது. வந்தது வினை, வினா 117ல்: “ 7 மீ., உள் விட்டமுள்ள ஒரு உள்ளீட்டற்ற உருளை ஒன்றில், ஒரு சக்கர வாகன ஓட்டி சாகசங்களை நிகழ்த்துகிறார். அவருக்கு அந்த வாகனத்தை ஓட்டுவதற்கான உள்ள பரப்பு (ச.மீ.,) என்ன? ஆங்கிலத்தில் உள்ளீட்டற்ற கோளம் (ஸ்பியர்) என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘உருளை’ என்பதற்கு ஆங்கிலம் சிலிண்டர்; ‘கோளம்’அன்று. உருளையின் பரப்பு கண்டு பிடிக்க விட்டத்தின் அளவும் தெரிய வேண்டும். அதன் உயரமும் தெரிய வேண்டும். ஆக மொத்தம் 117ம் கேள்விக்குறியாகி விட்டது. அதை ஒரு மார்க் என்று ரசவாதத்தீர்ப்பு வாங்கி விட்டார், பெண்ணரசி ஆண்டிப்பட்டி விஜயலக்ஷ்மி. ஜய விஜயீ பவ, விஜயலக்ஷ்மி.
-#-
No comments:
Post a Comment