சித்திரத்துக்கு நன்றி: https://jspivey.wikispaces.com/file/view/French_Revolution.jpg/96673244/French_Revolution.jpg
24 07 2013
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள், காடு மிரண்டதைக் காணாதவர்கள், நாடு மிரட்டப்படுவதை கண்டு கொள்ளாதவர்கள். இந்த அட்டூழியங்களெல்லாம் காலத்தின் கோலமடா!, முன்வினைபயனே!, பெரிய இடத்து சமாச்சாரம் என்றெல்லாம், தனக்குள் கதைகள் பல பேசியே, இப்பவோ, அப்பவோ செத்துச் சுண்ணாம்பா போனவர்கள் என்று உதறப்பட்ட சாது மஹாஜனம் தான், கை கட்டி, வாய் புதைத்து, ‘தெய்வமரபு நாங்கள்’ என்று பொய் பேசிய ஆன அரசவம்சத்துக்கு சில நூறு வருடங்கள் அணுக்கத்தொண்டு செய்து வந்திருந்தாலும், ‘மலை போல் மேனி’ என பொங்கி எழுந்தது, ஒரு நாள். விஸ்வரூபம் எடுத்தது என்று கூட சொல்லலாம். மாதக்கணக்காக கொலை பட்டினி, பஞ்சம், மிலிடேரி மிரட்டல்.
தற்காலம், உலகின் பல பாகங்களில் புரட்சி நடக்கிறது. இந்தியாவில் என்று என்ன ஆகும் என்று சொல்வதற்கில்லை. மக்களிடையே மனக்கசப்பும், அன்றன்று ஆதவனுடன் கூட உதயமாகும் கருத்துக்கணிப்புக்களும், அதிகார மையங்களில் சலசலப்பும் நம்மை உலுக்குகின்றன. நடக்கப்போவது நடந்தே தீரும். இந்த பின்னணியில், இன்றைய தேதி நிகழ்வு ஒன்றை பார்ப்போம். வரலாற்றில் பெரிதும் பேசப்படும், 10 வருடங்கள் கடுமையாகவும், கொடுமையாகவும், பீதி பரப்பிய ஃப்ரென்ச் புரட்சியின் விசில் அடித்தது இன்று: 14 07 1789. வருடாவருடம் விழா எடுக்கப்படுகிறது இந்த தினம்.
நடந்தது என்ன? அரசனுக்கும் (லூயி 16) மக்கள் நலனுக்கும் அஜகஜாந்திர தூரம். கொள்ளையர் துணிச்சலுடன் நடமாடினர். பிரபுக்களின் அட்டஹாசம் பொறுக்க முடியவில்லை. அரசனோ படை பலத்தை பெருக்கிய வண்ணம். கொடுத்த வாக்குக்களை காப்பாற்றாமல் சாக்கு போக்கு சொன்னான். அவன் உலகமே வேறு. மான் வேட்டை; பெண் வேட்டை. உலகமே நடுங்கிய அந்த நாளில் அவனுடைய குறிப்பு, ‘ஒன்றுமில்லை!‘ வேட்டையில் ஒன்றும் கிடைக்கவில்லையாம்! அதற்க்குள், சாம்ராஜ்யத்தின் அடக்குமுறை சின்னமாக இருந்த பாஸ்டீல் கோட்டை தகர்க்கப்பட்டு விட்டது. லியன்கோர்ட் பிரபு அரசனிடன் இந்த செய்தியை கூறினதும், அவன் ‘இது கலவரமா?’ என்றான். அவரோ, ‘இல்லை ஐயா!வெடித்தது புரட்சி’ என்றார்.
ஜூன் மாதத்திலிருந்தே கொந்தளிப்பு. ஜூலை 12: மக்களுக்கு வேண்டப்பட்ட அமைச்சர் திரு. நெக்கர் நெக்கித்தள்ளப்பட்டார். ஜூலை 13: புதிய பிரதிநிதிகளை ஒடுக்க, அரசன் படையை கூட்டுகிறான் என்ற பலமான வதந்தி. ஜூலை 13/14: அதி காலை தொழிலாளிகளும், நடுத்தர வகுப்பை சார்ந்த வணிக ஊழியர்களும், ராணுவ ஆயுதக்கிடங்கிலிருந்து 28,000 துப்பாக்கிகளை ( ஆளுக்கு ஒரு புள்ளி விவரம்!) கைபற்றுகிறார்கள். ஆனால், தோட்டாமருந்து இல்லை. பாஸ்டீல் கோட்டை அபகீர்த்தியான கொடுங்கோல் சிறைச்சாலை; ஆயுத கிடங்கு. அன்றைய தினம் இருந்ததோ ஏழு கைதிகள்; பேருக்கு மட்டும் பாதுகாப்பு. ஒரு வரலாற்றாசிரியர் கூறியதைப் போல, கோட்டைகாப்பாளனாக இருந்த டெ லானே பிரபு, ‘தலையை இழக்கும் முன், மூளையை இழந்தான்!’ ‘மிரண்டு’ திரண்டு வந்த மக்கட்படையின் வலிமையை புரிந்து கொள்ளாமல், அவன் முன்னுக்கு பின் முரணாக நடந்தான். தன்னிடம் 20, 000 பவுண்டு தோட்டா மருந்து இருப்பதால், அத்துடன் கோட்டைக்கு வெடி வைத்து நாங்கள் சாவோம்’ என்று வீறாப்புப் பேசினான். அவனுடைய சொற்பப்படையும், கிளர்ச்சியாளகளுடன் சேர்ந்து கொண்டது! கடுமையான தாக்குதல். அவனும் கைது செய்யப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டான். உதவிக்கு வந்த அரசுப்படையும், மக்களுடன் சேர்ந்தது. இந்த வன்முறைகள் எல்லாம் நடந்து முடிந்த பின், அரசன் படைகளை வாபஸ் செய்வதாக வாக்குறுதி அளித்தான். திரு.நெக்கர் அவர்களை மறுபடியும் பதவியில் அமர்த்தினான். உதயமாகும் புதிய ஃபிரான்ஸின் வெண்மை-நீல சின்னத்தை அணிந்தான், தனது மனம் மாறியதை குறிப்பால் உணர்த்த. அதற்குள் அதிகாரத்தின், கொடுங்கோலின் சின்னமாகத் திகழ்ந்த பாஸ்டீல் கோட்டை உடைத்து நொறுக்கப்பட்டது. இன்றைய தேதி நிகழ்வு மட்டும், சுருக்கமாக சொல்லப்பட்டது. ஃப்ரென்ச் புரட்சியின் முழுமையை எழுதலாம்! ஆனால்....!
இன்னம்பூரான்
14 07 2011
உசாத்துணை:
The Storming of the Bastille and the Arrestation of Governor de Launay. Source: Anonymous.
No comments:
Post a Comment