அன்றொரு நாள்: ஜூலை 10
வேலூர் சிப்பாய் கலகம்
சித்திரத்துக்கு நன்றி: http://www.aanthaireporter.com/wp-content/uploads/2013/07/ju-10-vellore-vmutiny.jpg
22 07 2013
இப்போது அதிகாலை மணி 2: ஜூலை 10: இதே நேரத்தில் 1806ம் வருடம், இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு. தமிழர்கள் போற்றும் நிகழ்வு. வேலூரில் சிப்பாய்கள் கலகம்/புரட்சி செய்தனர். அஜாக்கிரதையினால் படு தோல்வி அடைந்தனர், மறுநாளே. இரு தரப்பிலும் பலர் மாண்டனர். புரட்சி நசுக்கப்பட்டது. வரலாற்று பதிவுகள் பல இருந்தாலும், ஆதாரமுள்ள செய்திகள் எளிதில் கிடைக்கவில்லை. ஒரே விஷயத்தை பல இடங்களில், சற்றே மாற்றியமைத்த நடையில் காண்கிறோம், ஆவணங்களை அலசமால், சுட்டாமல். தவிர, ஆங்கிலேய வரலாறும், நாட்டுப்பற்று வரலாறும் சாற்றுவது வேறு, வேறு.
எனவே, பல உசாத்துணைகள். அவற்றில் இரண்டு தரம் வாய்ந்த இதழ்களில் தமிழில் பதிவானவை -கீற்று & காலச்சுவடு. ஹிந்து இதழில் திரு. எஸ். முத்தையா அவர்களின் தெளிவான கட்டுரை. ஆர்வமுள்ளவர்கள் நேரிடையாக படித்து பயன் பெறலாம். அவற்றை நான் அலசவில்லை. கல்வியாளர் திரு. பி.சின்னையன் ‘வேலூர்ப் புரட்சி’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் விருது பெற்றதாக அறிகிறேன். ( த.ஸ்டாலின் குணசேகரன்:(தொகுப்பு) ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற நூலில் திரு. பி.சின்னையனின் ‘வேலூர்ப் புரட்சி’ என்ற கட்டுரை). ஆனால், அங்கும் உசாத்துணைகளும், மேற்க்கோள் விவரங்களும் இல்லை. இங்கு எனக்கு பல நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய நூல்கள் கிடைத்தன. சிலவற்றில் ஆங்கிலேய சார்பும் அதிகம். சுருங்கச்சொல்லின், இனி எழுதப்படுவதற்கு நான் மட்டும் தான் பொறுப்பு. சில ஆதாரங்கள் எனக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.
மற்றவர்கள் அருளினால், நல்வரவே. தயவு தாக்ஷிண்யம் காட்டாமல் குற்றம் காணலாம், ஆதாரத்துடன் அதுவும் நல்வரவே.
இந்திய வரலாற்றில் இது தான் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் புரட்சி என்பது மிகையல்ல. பொதுவாக, தென்னிந்திய ராணுவ வீரர்கள் ராணுவ அதிகாரத்தை மதிப்பவர்கள், பணிந்து ஊழியம் செய்பவர்கள், போர்க்களத்தில் தியாகத்துக்கு அஞ்சாதவர்கள் என்ற கீர்த்தி உண்டு. அவர்களின் பணி உத்தமமானது, உன்னதமானது, உயர்வானது என்று ராணுவ வரலாறு அடிக்கடி கூறுகிறது. அண்டைய நாடுகளை போல் அல்லாமல், இந்திய அரசியிலிலிருந்து ஒதுங்கி இருக்கிறது, இந்திய ராணுவம். 1857ம் வருட புரட்சியை பற்றி, இங்கு பேசவில்லை. நான் ஊழியம் செய்த அலுவலகமே ஒரு புரட்சித்தளத்தில். மரபு காக்கும் பணி ஒன்று செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அது போதும், எனக்கு.
ராணுவ அதிகாரமும், செருக்கும் கூடி வாழ்பவை, அது கூடா நட்பு எனினும். ஆங்கிலேயரின் அகந்தை, இந்திய சிப்பாயின் தலைப்பாகையை மாற்றியது. அது மாட்டுத்தோல்/ பன்றித்தோல் என வதந்திகள் பரவின. ஹிந்து/முஸ்லீம் சிப்பாய்கள் அவற்றை அணிய மறுத்தனர். மதக்குறிகள் அணியலாகாது, காதணிகளுக்கு தடை; தாடிக்குத்தடை. கலாச்சாரத்தையும், மதத்தையும் பழிக்காதே என்ற மாக்கியவெலியின் அறிவுரை வெள்ளைக்காரன் தலையில் ஏறவில்லை. போதாக்குறைக்கு, வெங்கலக்கடையில் ஆனை புகுந்தமாதிரி, கிருத்துவ மத பிரச்சாரம் வேறு. இத்தனைக்கும், மே 1806 மாதமே, தனதாக இந்திய சிப்பாய்கள் சொல்லிப்பார்த்தார்கள். எடுபடவில்லை. இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு வேறு ஒன்றும் வேண்டாம். ஆனால், மற்றொரு பிரமேயம் கிடைத்தது. ஜூன் 9 திப்பு சுல்தானின் இளவரசிக்குத் திருமணம், வேலூர் கோட்டையின் சிறையில். 1799லிருந்து அந்த பெரிய குடும்பம் அங்கு சிறையில் இருந்ததால், இஸ்லாமியர்களின் போக்கு வரத்து பலமாக இருந்தது. புரட்சியின் பின்னணி, தலைமை, சூழ்ச்சி, முன்னின்று நடாத்தியது எல்லாவற்றிலும் பெரும்பாலோர், ஷேக் காசிம், ஷேக் காதம், ஷேக் ஹுஸைன் போன்ற இஸ்லாமியர். அவர்களுக்கு நாம் சலாம் போடத்தான் வேண்டும்.
கும்பிருட்டில் கோட்டை தாக்கப்பட்டது. ஆங்கிலேயரெல்லாம் (130?)சுட்டுக்கொல்லப்பட்டனர். மைசூர் சுல்தானின் கொடி ஏற்றம். திப்புவின் இளவரசர் ஃபதேஹ் ஹைதர் அரசனாகப் பிரகடனப்படுத்தார். கஜானா கொள்ளை. இத்தனைக்கும் நடுவில், தப்பிய ஒரே ஆங்கிலேயர் ஆர்காட்டில் டேரா போட்டிருந்த ராணுவத்திடம் சொல்ல, ஸர் ரோலோ கில்லஸ்பி தலைமையில் 19வது ட்ரகூன் படை வேலூருக்கு வந்து, அரைகுறையாக திறந்திருந்த கோட்டைவாசலில் வழி புகுந்து, சரமாரியாக இந்திய சிப்பாய்களை (350? /800?) கொன்று குவித்தனர்.
அப்றம் என்ன ஆச்சு? மிலிடேரி கோர்ட்டார் விசாரணை. திப்பு குடும்பம் கல்கத்தாவுக்கு மாற்றல். கவர்னர் லார்ட் வில்லியம் பெண்டிங்கும், தளபதி ஸர் ஜான் கிரடாக் இருவரும் வேலை நீக்கம். 600 பேருக்கு மரண தண்டனை என்கிறார், திரு. சின்னையன். ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறேன். தலைகள் போன பின் தலைப்பாகையும் போச்சு. தோடும், தாடியும் திரும்பி வந்தது. ஒரு செய்தி மட்டும், அரிதாக, ஒரு ஆதாரப்பூர்வமான இடத்தில் கிடைத்தது, ‘கசையடி கொடுப்பதும் தடை செய்யப்பட்டது.‘என்று.
எனக்கு தெரிந்து, இந்த அநாகரீகமான தண்டனை மூன்று இடங்களில்:
- இந்திய ராணுவத்தில், கி.பி, 1800 வருட காலகட்டத்தில்:
- நான் வசிக்கும் ஆங்கிலேய நகரின் ஒரு பகுதியில் முதல் உலகயுத்தகாலத்தில் அமெரிக்க ராணுவம் டேரா. கறுப்புச் சிப்பாய்களுக்கு கசையடி போன்ற தண்டனை; ஆங்கில மக்கள் கொதித்தெழுந்து அதை தடை செய்தனர்;
- வளைகுடா நாடுகளில் சிலவற்றில் இன்றும் இது சட்டம் தரும் தண்டனையாம்.
எனக்கு என்ன வருத்தமெனில், ஆவேசமாக தமிழனின் புரட்சி தலைப்புரட்சி என்றெல்லாம் தற்காலம் உணர்ச்சி வசப்படுபவர்கள், ஏன் பட்டை நாமம் அழிப்பதை மட்டும் கண்டு கொதிக்கிறார்கள், பட்டை பட்டை போடும் கசையடியை விட்டு விட்டு, என்று.
இன்னம்பூரான்
10 07 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment