இந்த 9/11 பயங்கரத்தை தொலைக்காட்சியில் ‘ லைவ்’ ஆக பார்க்க நேரிட்டது, பத்து வருடங்கள் முன்னால். (2001 இன்றைய தேதி). அதை பற்றி பேச்சு எழுந்தால், முதற்கண்ணாக, ந்யூ யார்க் நகரின் தீயணைப்புப் படைக்கு, சிரம் தாழ்த்தி, வீர வணக்கம் செய்வது என் வழக்கம். கடமையாற்றுவதின் உயர்நிலையில் பணியாற்றி, அவர்களில் பலர் மாண்டனர். ‘ லொட்டு லொசுக்கு மண்ணாங்கட்டி’ என ‘இது உள்குத்து’, ‘இது வேண்டுமென்று செய்த கட்டிட நாசம்’ ‘பெண்டகனை தாக்கியது ஒரு ஏவு கணை’ போன்ற வதந்திகள், இன்னும் அதனுடைய பின்னணி மர்மங்கள் ஒளிக்கப்பட்டு இருக்கின்றன என்ற கசப்பு உண்மையை மறைக்கின்றன. சில மர்மங்கள் ~சுருக்கமாக:
வேவு துறைகளை பற்றிய அமெரிக்க நாடாளும் மன்றங்களின் 800 பக்க கூட்டறிக்கை ஜூலை 2004 ல் வெளியிடப்பட்டது, 28 பக்கங்களை தவிர்த்து. புஷ் மூடி வைத்த அந்த மர்மத்தை ஒபாமாவும் அடை காக்கிறார்! ஹேஷ்யங்கள் பல. அமெரிக்க ஆய்வாளர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. உசாத்துணையில் சுட்டிருக்கும் நூல், ந்யூஸ்வீக் இதழின் அலசல், ஆகியவை இந்த வகை. அவற்றிலிருந்து, சில துளிகளின் தொகுப்பு:
- அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட்: ‘இத்தகைய பின்பலம் இல்லாமல் அல்-கொய்தா யாதும் செய்திருக்க முடியாது. இவர்களின் உதவி உண்டு. எனக்கு பல விஷயங்கள் தெரியும். அதனால் தான் அழுத்தம் திருத்தமாக, சொல்கிறேன்.’ விவரம் கேட்டபோது, யோசித்தார். சிக்கல் என்றார். வாயை மூடிக்கொண்டார்.
- பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர்:‘ஸெளதி அரேபிய அரசும், சில அன்னாட்டு பிரமுகர்களும் இந்த பயங்கரவாதிகளுக்கு (அவர்களில் 15 பேர் அன்னாட்டு மக்கள்) பல உதவிகள் செய்தனர். அவையில்லாமல், இது சாத்தியமே அல்ல.”
- அமெரிக்கா-வாழ் அரேபியர் (ஒமர் அல் பயொமி) இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தார். மூன்று அரேபியர் மீது சந்தேஹம். ஆனால், ஆக்ஷன் ஒன்றுமில்லை.
- இதே மாதிரி அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டார்கள். அவர் இப்போது ஏமன் நாட்டில். அமெரிக்கா அவரை கொலை செய்ய விரும்புகிறது.
- பயணிகளால் மீட்கப்பட்ட விமானம் பென்ஸில்வேனியாவில் வீழ்ந்தது. அதை சுட்டு வீழ்த்த ஆணையளித்ததாக அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் சொல்கிறார்கள். ஒருவர் விமானத்தில்; ஒருவர் பாசறையில். இந்த ஆணை பதிவே ஆகவில்லை!
- புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றனர். ஏன்? ஏன்?
- ஈரான் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை; ஆனால். மேற்படி கமிஷன், விமான பயணங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்.
- ஈராக் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை.
- ஸெளதி தூதுவர் இளவரசர் பண்டார் பின் சுல்தான், இந்த கமிஷன் தன் நாட்டின் வாய்மையையும், ஈடுபாடாததையும் நிரூபித்து விட்டது என்கிறார், ஒரு துணுக்கு ஆதாரமில்லாமல்.
- எத்தனை டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்! ராஜேஷ் டேயும் மைக்கேல் ஜாகோப்ஸனும் நோண்டி, நோண்டி எடுப்பதையெல்லாம், ஸ்னெல் குழி பறித்து மூடிக்கொண்டிருந்தார்!
- அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.
- 9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது.
உசாத்துணையில் சுட்டியிருக்கும் நூல் இன்னும் வெளிவரவில்லை. சில பகுதிகள் எட்டிப்பார்க்கின்றன. இன்னம் பல மர்மங்களை அலசினால், கட்டுரை நீண்டுவிடும். வாசகர்களுக்கு சலித்து விடும். கேட்பவர்களுக்கு, இணைப்பு தருகிறேன்.
இதெல்லாம் சரி. 9/11 வரலாறு ‘திக்’ ‘திக்’ என்று மாற்றி அமைக்கப்படலாம்.
நம் நாட்டிலும், எந்த புற்றில் எந்தப் பாம்போ?
இன்னம்பூரான்
11 09 2011
உசாத்துணை:
Summers.A & Swan.R:The Eleventh Day: The Full Story of 9/11 and Osama bin Laden
No comments:
Post a Comment