Friday, April 1, 2016

'உம்'

'உம்'

ராமுவும் சோமுவும் பள்ளித்தோழர்கள். கணினி மன்றத்திலும் தான். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு
விண்ணப்பித்தார். ஒரே பரிக்ஷை. அதே கேள்விகள். பால்யபருவத்திலிருந்து ஒரே மார்க் வாங்கி கின்னஸ் ரிக்கார்ட்
படைத்த இந்த இளஞர்கள் இங்கும் அப்டியே. வியப்பில் ஆழ்ந்த அதிகாரி, இரண்டு பேருக்கு இடம் காலியில்லை. ஒரு பத்து வினாத்தொடர். பத்து நிமிடங்களில் பதில் என்று பந்தயம் வைத்தார். ஒரே மார்க். சோமுவுக்குத்தான் வேலை கொடுத்தார். ராமு கொஷ்யண்ட். நியாயமான பதில் அளித்தார். அது என்ன, நண்பர்களே?

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


-----------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் 2, 2016

தொல்காப்பியம் கற்றுக்கொள்ள:

1. விடையில்லையெனினும் தேர்வு. ஐந்தாவது வினாவுக்கு, 'எனக்கு தெரியாது' என்று சோமுவும், 'எனக்கும் தெரியாது' என்று ராமுவும் எழுத, ராமுவுக்கு வேலை கிடைக்கவில்லை.
2. எதிர்பாராத டெவலப்மெண்ட்: தொல்காப்பியம் கற்று, மறக்காமல் இருக்கப்பாடம்;

எச்சம், சிறப்பே, ஐயம், எதிர்மறை
முற்றே, எண்ணே, தெரிநிலை, ஆக்கம் என்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே
நூல்: தொல்காப்பியம் (சொல்லதிகாரம், இடையியல்)
பாடியவர்: தொல்காப்பியர்
’உம்’ என்ற சொல் எட்டு விதமாகப் பயன்படுகிறது:
1. எச்சம் : மீதமிருப்பதைச் சொல்லும்போது
உதாரணம் : அங்கே மிருகங்களோடு பறவைகளும் தங்கியிருந்தன
2. சிறப்பு : ஒரு விஷயத்தைச் சிறப்பித்துச் சொல்லும்போது
உதாரணம் : கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்
3. ஐயம் : இதுவா அதுவா என்று நிச்சயமில்லாமல் சந்தேகத்துடன் ஒருவரைப்பற்றிச் சொல்லும்போது
உதாரணம் : இவரும் நன்றாகவே பாடுவார் என்று நினைக்கிறேன்
4. எதிர்மறை : ஒன்றைச் சொல்லி அதற்கு எதிர்மறையான இன்னொன்றைப் புரியவைக்கும்போது
உதாரணம் : இவன் அவ்வப்போது படிப்பதும் உண்டு (அப்படியானால், பல நேரங்கள் படிக்காமல் இருப்பதுதான் வழக்கம் என்று அர்த்தம்)
5. முற்று : முழுமையைச் சொல்லும்போது
உதாரணம்: பதினெட்டுப் பட்டிக்கும் இவர்தான் நாட்டாமை
6. எண் : எண்ணிக்கையைச் சொல்லும்போது
உதாரணம்: தமிழிலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் ஹிந்தியிலும் இவர் சரளமாகப் பேசுவார்
7. தெரிநிலை : ஆராய்ந்து சொல்லும்போது
உதாரணம்: இது பாம்பாகவும் இருக்கலாம், வெறும் கயிறாகவும் இருக்கலாம்
8. ஆக்கம் : ஒன்றின் விளைவாக இன்னொன்று ஏற்படும்போது / ஆக்கப்படும்போது
உதாரணம்: நான் பாடும் பாடல் நன்றாக உள்ளதா?
உபயம்: என்.சொக்கன்
ராமுவின் 'உம்' இந்த எட்டில் எது?
இன்னம்பூரான்

மோடி, தாடி



ஆஹான்னானாம்! இப்போ தான் ஒபாமோவுடன் செல்ஃபிண்ட நமது மதிப்புக்குரிய பிரதமர் மோடியின் தாடியை கண்டு பரவசமடைந்தேன்.
ஓஹோன்னானாம்! என்னே களை! கொண்டேன் தாடி மோஹம்! முடியழகும் ஜோர், ஆலின் ஆல் அழகு ராஜா எம்.கே.டி. போல.
நிஜம்மா சொல்றேன். இத்தனை பேர் இருக்கங்களே. அவருடைய தாடி அட்வைஸர் யாரு?
மோடிக்கும் அவருடைய ஜோடி தாடிக்கும் என் கனிவு வாழ்த்துக்கள்.

Image Credit & Copyright & Thanks: http://images.indianexpress.com/2016/04/44cdf76ea989ce10940f6a7067009b0d-1mn.jpg?w=600



இன்னம்பூரான்

Thursday, March 31, 2016

இன்னம்பூரான் பக்கம்: 🌚💥🌚 🌚இன்றொரு நாள்: 1: போஸ்ட் ஆடிட்.


இன்னம்பூரான் பக்கம்: 🌚💥🌚
🌚இன்றொரு நாள்: 1: போஸ்ட் ஆடிட்.

நடு நிசி. அமாவாசை இருட்டு. லேசான தூறல். ஆனால், கீத்து மின்னல் டால் அடிக்கிறது. இடி டமாரம் அடிக்குது. தொலைவிலிருந்து ஆந்தையின் அலறல் என் கூடாராத்தின் நூல் ஜன்னலை தாக்குகிறது. ஒரு காட்டுப்பூனை மிரட்டு மியாவுடன் என் மார்பை மிதித்துவிட்டு, அந்த ஜன்னல் வழியாக ஓடி விடுகிறது. எங்கிருந்தோ வந்த ஒரு புலியின் உறுமல் கேட்டு, என் இரத்த அழுத்தம் உச்சகட்டத்தில் தாண்டவம் ஆடியது. இத்தனைக்கும், கட்டாயத்தின் மீது நான் இந்த கானகத்தில் நுழையவில்லை. தன்னிச்சையாப் போனேனா, பச்சை பச்சையா வாந்தி. பக்கத்தில் சிகெரட் பிடித்துக் கொண்டு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்த ஃபாரஸ்ட் ரேஞ்சர் பொம்மி ரெட்டிகாரு, சிரித்துக்கொண்டே ஒரு சிகெரட்டை நீட்டினார். ‘நீரு பீடி உறிஞ்சினா சரிக ஆயுடும்’ என்று சொன்னார். அவரை சுட்டுக்கொல்லலாம் போல நம்கு ஃபீலிங். ஆனால் துப்பாக்கி அவர் கிட்டெல்ல இருக்கு. போதாக்குறைக்கு, ‘ஏன் நடுங்கி சாகிறீர்கள்? செம்மரக்கட்டைக்காட்டிலே, நாகேஸ்வர ராவ் பார்க் மாதிரியா இருக்கும்? கொலையாளிகள் நடமாடும் பிராந்தியம் ஐயா! நீ இன்னா நனச்சுக்குணு வந்தீக என்று சென்னை கொச்சையையும், மலையாளி கொச்சையையும் கலந்து அடிச்சு விட்டார். அவர் சென்னையில் ட்ரெய்னிங் வந்திருந்தாராம். களக்காடு காட்டிலேயும்  வால்பாறையிலும் ப்ராக்டிக்கலாம். யாரு கேட்டா இதெல்லாம்? 

சமாச்சாரம் இது தான். ஓய்வு பெற்ற உயரதிகாரிகளுக்கு அப்பப்பொ தாக்கீது வரும். தணிக்கைத்துறையின் தணியா வேகம் தொடரில் நான் எழுதிய ரசவாதம் என்றை கட்டுரையை சீஃப் செக்ரட்ரீ சுதாகரன் ஐ ஏ எஸ் சந்திரபாபு ரெட்டிகாருவிடம் காண்பித்தாராம். தமிழ்நாட்டு பசங்க வந்து ரெட் சாண்டர்ஸ் வெட்டிக்கிணு போராங்க. அந்த கவர்னமெண்டோ கூவுது. நீரு இந்த இன்னம்பூரானை இங்கு கைபற்றப்பட்ட ரெட் சாண்டர்ஸ் துண்டங்களை ஏலம் போடச்சே, ஸ்பாட் விஜிலன்ஸ் ஆபீஸராக போடலாமே. அப்றம் ஆடிட்காரன் தொந்தரவு இருக்காதுல்லெ.  அவருக்கு ஒரு திருப்பதி ஏகாந்த சேவை, ஏழு லட்டு, ஒரு சால்வை, இரண்டு லக்ஷ ரூபாய் கேஷ்,  மெல்லிசா ஒரு தங்க மோதிரம் கொடுக்கலாம். முன்னாலேயே சொல்லிடுங்க. அந்த ஆளு ரொம்ப கறாரு என்று கியாதி என்றாராம். லட்டு தின்ன கசுக்குமா என்ன? சரி என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் பாருங்கோ, ‘விநாச காலே, விபரீத புத்தி’ என்பார்கள். ‘சுதாகர்! உனக்கு என்னை பற்றி நன்றாகவேத் தெரியும். காட்லெ போய் இந்த வெட்ற சங்கதியெல்லாம் பார்த்தால் தான், என்னால் வேலையை எடுத்துக்கொள்வதை பற்றி முடிவு கூறமுடியும்.’ என்று திட்டவட்டமாக சொல்லி விட்டு, அவர் வரச்சேயே மணி ஏழு. சோத்தைக் கொட்டிக்கிட்டே பேசினோமா!, காண்ட்ராக்ட் பேசி முடிக்க சீ.எம். கிட்டப்போய் கேளு’ என்று அசால்ட்டா சொல்லி விட்டு தலையை சாச்சேன், பதினொன்று மணி வாக்கில். துர்சொப்பனம் ஒன்று கண்டேன். ‘போகாதே! போகாதே! என் கணவா!’ என்ற நல்ல தங்காள் பாட்டின் மெட்டில்,

‘போகாதே ! போகாதே! இன்னம்பூரா!
சாகாதே! சாகாதே! சித்தூர் காட்டில்.
ஆகாது! ஆகாது! இந்த கூலி படையெடுப்பு!
சாகரத்தில் தள்ளப்படுவாய், அசட்டு கிழமே!

இப்டி ஒரு பாட்டை பாடிக்கொண்டு வந்தது, பள்ளிக்கரணை கொள்ளிவாய் பிசாசு!
நான் ஓவென்று அலறி மணியை பாக்றேன்.
மணி: 0.001 ஏ.எம் ஏப்ரல் 1, 2016.
இன்னம்பூரான்


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, March 27, 2016

இன்னம்பூரான் பக்கம்: 3 – சமுதாயமும், நீயும், நானும், அவரும் 3‘சாதிப்பெயர்…’


இன்னம்பூரான் பக்கம்: 3 – சமுதாயமும், நீயும், நானும், அவரும் 3
  1. Monday, March 28, 2016, 5:30
  1. Featuredஇலக்கியம் 3. பிரசுரம் http://www.vallamai.com/?p=67489
‘சாதிப்பெயர்…’
இன்னம்பூரான்
25 03 2016

சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பதையும், அதை எடுத்துரைப்பதையும், அவ்வாறு எழுத்துப்பழகுவதையும் பண்பற்றதாகவும், அநாகரீகமாகவும் கருதும் காலகட்டமிது. அந்த கருத்து தமிழ்நாட்டில் அதிகமாக உலவதும் கண்கூடு. பந்துலுவும், ரெட்டியும், நாயுடுவும் ஆந்திராவில் சகஜமாக நடமாடுகிறார்கள். அண்டை கேரளாவில், மேனனும், நாயரும், பணிக்கரும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஏன்? நம்பூதிரிபாட் முதல்வராக இருந்தாரே? சாதிப்பெயரை விலக்காத கம்யூனிஸ்ட்! கன்னடதேசத்திலோ, ராவுஜியும், அய்யாவும், வடநாட்டிலோ சதுர்வேதியும் , திரிவேதியும், த்விவேதியும், சக்சேனாவும், மோடியும், காந்தியும் படேலும், அரோராவுமாக பற்பல ‘சாதியை சுட்டும்’ துணைப்பெயர்களில்லா ஆளில்லை, நேரு உட்பட. இஸ்லாமியர் என்றால், தமிழ்நாட்டில் இல்லாத ராவுத்தர், மரைக்காயர், லப்பைகளா?

இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் ஆங்கிலேய கலோனிய ஆட்சியை எதிர்த்துப்போராடிய காலகட்டத்தில், தமிழ் நாட்டில் ‘முதலியார்’ நாயக்கர்’ ‘நாயுடு’ என்ற சாதிப்பெயர்கள் மரியாதையுடன் எடுத்துரைக்கப்பட்டன. அவர்கள் திரு.வி.க.வும், ஈ.வே.ரா.வும், வரதராஜுலு நாயுடுவும் ஆவார்கள். திரு.வி.க. அவர்கள் தன் பெயரை ‘கல்யாண சுந்தரம்’ என்று எழுதினாலும், வீட்டில் அவர் ‘சின்ன முதலியார்’ தான்; மூத்தவரான திரு.வி.க. அவர்கள் தான் பெரிய முதலியார். என் தந்தையும், நண்பர்களும் இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர்.

‘உ.வே.சா அவர்கள் தன் ஆசிரியரிடம் வைத்திருந்த பக்திக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. பிள்ளையவர்கள் என்று சொல்வார்களே அன்றி முழுப்பெயரைச் சொல்லக்கூடப் பயப்படுவார்.’
இதனால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சகஜ நிலையில் போக்குவரத்து இருந்து வந்தது. ‘நான் ஒரு சூத்திரன்’ என்று எழுதியவர் தன்னை சட்டநாத கரையாளர் என்று தான் அறிவித்துக்கொண்டார். நீதிக்கட்சித்தலைவர்கள் சாதிப்பெயரை அழித்துக்கொள்ளவில்லை – டி.எம்.நாயர், தியாகராஜச் செட்டி.
திராவிட கட்சிகள் தலையெடுத்து ஆட்சிக்கு வந்த பின் ஐயங்கார் தெரு ‘தெரு’ ஆனது; சோமசுந்தர முதலியார் தெரு ‘சோமசுந்தரம் தெரு’ ஆனது; இது எல்லாம், ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ரெட் ஹெர்ரிங். தமிழில் பாசாங்கு. திசையை இப்படியெல்லாம் திருப்பி, இன்று வரை சாதி அடிப்படையில் மட்டுமே தேர்தலுக்கு ஆள் பிடிக்கிறார்கள், அந்த திராவிடக்கட்சிகள். இதெற்கெல்லாம் கேள்வி முறை கிடையாதா? எத்தனை வருடங்கள் நாம் ஏமாந்த சோணகிரியாக இருப்போம்?

நிகழ்காலத்துக்கு வருவோம்.
  • சங்கர்-கெளசல்யா ஜோடியை கலைக்க இருவரையும் பயங்கரமாகத் தாக்கி, சங்கரை கொன்ற மேல்சாதி கண்டது என்ன? – சிறை சென்றதும், பெற்ற பெண்ணை அனாதையாக்கியதும், தன் குடும்பத்தின் மேல் சேற்றை வாரி போட்டுக்கொண்டது தான்

– இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அப்பனின் ஆத்திரம் மட்டும் தானா?

  • ‘வெட்டி சாய்க்கிறார்கள்…சுற்றி நின்றவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். பதறி விலகுகிறார்கள்‘

-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? இல்லை தமிழர்களின் பாழாய்ப்போன பயந்தாங்குளி குணமா?
கெளசல்யாவின் அப்பனும், மாமனும் மிரட்டியிருக்கிறார்கள்.. இரண்டு மாதம் முன்னால் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் இந்த தம்பதி கொலை பயம் பற்றி புகார் செய்தார்கள். ஆனால் போலீஸ் புகாரை வாங்கவில்லை.
-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அல்லது போலீசின் அராஜகமா? அவர்களை சட்டம் அணுகுமா?
  • சட்டத்தை மட்டம் தட்டியவர்கள் யார்? இத்தகைய படுகொலைகளை தடுக்க எண்ணி ஒரு கோடி பெண்கள் அக்காலத்து அமைச்சர். ப.சிதம்பரத்திடம் ஒரு மனு கொடுத்தார்கள். தோழர்.பிருந்தா காரட்டும், தேசீய மகளிர் ஆணையமும், சட்ட ஆணையமும் பரிந்துரைத்தனர். என்ன நடந்தது? உரித்த வாழைப்பழமாக சட்ட ஆணையம் ‘Prohibition of Unlawful Assembly Interference with freedom of Matrimonial alliance’ என்ற சட்டவரைவை அளிக்க, பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அலசி ஒரு மசோதாவை மாநிலங்களின் கருத்து கேட்க, அனுப்பி வைத்தது, காருண்யம் பொழிந்த ப.சி. யை உள்ளடக்கிய மத்திய அரசு.
  • -இது பெரிய சமூகத்தின் சாதி வெறியா? பிரச்சனையை மறைத்து வைக்கும் சூழ்ச்சியா? ஏன் இந்த தட்டாமாலை?
  • கருணாகரமான [தவறாக நினைக்க வேண்டாம்! ‘எல்லாம் ஒரு குட்டையில் அழுகிய மட்டை தான் – காமராசர்’.] தமிழ் நாட்டு அரசு 23 03 2016 வரை மவுனம் -இது சின்ன/பெரிய சமூகத்தின் சாதி வெறியா? இல்லை அரசு கொள்கையா?

வரிந்து, வரிந்து பக்கம் பக்கமாக சாதிவெறி பற்றி எழுதும் நண்பர்கள் ஏன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் Vicarious pleasure என்பார்கள். தமிழில் ‘சொல்லி மகிழ்வது’ எனலாமோ? எனக்கு இரண்டு மொழியும் தெரியாது.

இணைய பெருமக்களே! நமக்குள் பேசி பயனில்லை.களத்தில் இறங்குங்கள். சமயம் பார்த்து விண்ணப்பிக்கிறேன். என்னால் ஆனதை செய்து வருகிறேன். அது மற்றவர்களின் ப்ரைவசியை பாதிக்கக்கூடாது என்பதால், இப்போதைக்கு முற்றுப்புள்ளி.
-#-
நன்றி: ஆனந்த விகடன்: 23 03 2016
சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, March 25, 2016

இன்னம்பூரான் பக்கம் 5: 28: கனம் கோர்ட்டார் அவர்களே! 28 கந்துவட்டியும்கமிஷனர் துரையும்




இன்னம்பூரான் பக்கம் 5: 28: கனம் கோர்ட்டார் அவர்களே! 28

ந்துவட்டியும்கமிஷனர் துரையும்

இன்னம்பூரான்
Friday, March 25, 2016, 12:27
பிரசுரம்: http://www.vallamai.com/?p=67442

எனக்கு அலுத்து விட்டது. இயற்றிய சட்டம், அதன் கிளைகள், தீர்வு அளித்த சட்டம், சட்ட நிர்வாகம், சட்ட சீர்திருத்தம் ஆகியவை பற்றி நான் தெளிவாக பலமுறை எழுதியிருந்தாலும், ‘தும்பை விட்டு, வாலையும் விட்டு, வெறும் காற்றை பிடிக்கப்பார்த்து ஏமாந்து போகிறார்கள் சிலர். நம்ம இன்னம்பூரான் தானே ! அவர் என்னத்தைக் கண்டார்? என்று ஒரு இனம். சட்டம் ஒரு இருட்டறை என்றால் எதுகையோ, மோனையோ, அலங்காரமாக இருக்குது; இது மற்றொரு இனம். சட்டம் ஒரு கழுதை என்றால், உவமை அணி என்றொரு கட்சி. ஆக மொத்தம், எல்லாரும் ராங்கு ! புது வாசகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களாவது படிக்கட்டுமே.

அரசாங்கத்தைக் குறை சொல்வது எளிது; நடாத்துவது கடினம். பல வருடங்களாக, பற்பல அரசு நிர்வாகங்களுடன் இணைந்தும், எதிர்த்தும் நற்பணி செய்து வந்த நான் விதிகளையோ, சட்டப்புத்தகத்தையோ, ஈயடிச்சான் காப்பியாக அமல் படுத்தியதாக ஞாபகம் இல்லை. எங்கள் பயிற்சி மன்றத்தில் இது பற்றி பாடம் எடுத்தார்கள். ஒரு சிறிய உதாரணம். ஒரு நோயாளிக்கு அவசரமாக பென்ஷன் எடுத்துச்செல்ல ஆணையிட்டேன். இடம், பொருள், ஏவல் பெரிய கதை. ஃபோன்: ‘சார்! ஐந்து நிமிடம் முன்னால் அவர் இறந்து விட்டார். என்ன செய்ய?’. அந்தக்காலத்தில் அவர் மனைவிக்கு பென்ஷன் இல்லை; பழம்பாக்கி போய் சேர ஒரு வருடம் ஆகும். ‘சத்தமில்லாமல் பிரேதத்தின் கைநாட்டு எடுத்து வா. நான் அதற்கு சம்மதித்து ஆணையை பதிவு செய்கிறேன்.’ ஆட்டம் க்ளோஸ். என்னது இது? அவர் பேராசிரியர். அவர் கிட்ட கை நாட்டா? பிடி சார்ஜ் ஷீட். விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட். அதுவும் செல்லுபடியாகும்!!!!

சட்டம் இயற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒரு பின்னணியை முன்வைத்து பொது நலம் நாடுவார்கள்: ஜமீன்தாரி ஒழிப்பு. ஓட்டைகள் தவறியும், திட்டமிட்டும் அமையலாம். நீதிபதிகள் மோப்பம் பிடித்து சரி செய்த பின் அது சட்டம் ஆகும். இந்த வகையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இந்த வழக்கை பாருங்கள். இந்தியாவின் மத்திய & பேரார் மாகாணத்தில் பேதுல் ஜில்லாவில் ஒரு லேவாதேவிக்காரர் ஒரு பழங்குடி மீது வட்டியும் முதலுமாக வசூலிக்க வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்கள் பக்கா. கடங்காரரோ, ‘ஐயோ! அந்த பாவி தான் கடங்காரன். காசா கொடுத்தேன். உழைப்பா கொடுத்தேன், சின்ன பசங்கக் கூட உழைத்தார்கள். அவன் நாசமா போக! கடவுளே! நீ கண்ணில்லா கபோதி! எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது. நோ ஆவணம். ‘ என்று கதறினான்.

ஜட்ஜ்மெண்ட்:
‘சட்டப்படி வாதியின் வழக்கு சரியே. பிரதிவாதி இந்த கடனை தீர்க்கத்தான் வேண்டும். இல்லாவிடின் கடுங்காவல். வட்டியும் முதலுமாக அவர் ₹ 200 கட்டவேண்டும். அவரோ பரம ஏழை. ஆகவே, சட்டப்படி வருடத்துக்கு ஒரு ரூபாய் வீதம் 200 வருடங்கள் கட்டியே ஆகவேண்டும். இந்த ஷரத்துப்படி அப்பீல் கிடையாது.’

-J G Bourne, Deputy Commissioner & ex officio Judge of the Small Cause Court.
ஆதாரம்: MN Buch: 2008 When the Harvest Moon is Blue: Har Anand (p.56-57).

சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, March 22, 2016

‘வீதியிருக்கு…’: இன்னம்பூரான் பக்கம்: 2 சமுதாயமும், நீயும், நானும், அவரும் 2



இன்னம்பூரான் பக்கம்: 2


Wednesday, March 23, 2016, 4:59

பிரசுரம்: http://www.vallamai.com/?cat=1066


இன்னம்பூரான் பக்கம்: 2 

சமுதாயமும், நீயும், நானும், அவரும் 2

‘வீதியிருக்கு…’
இன்னம்பூரான்

22 03 2016

 


கணக்குப் படிக்கும் போது, வட்டத்துக்குள் வட்டம் வரைந்து அழகு பார்ப்பதும் உண்டு. பெரிய வட்டம் இந்திய சமுதாயம், அம்பானியிலிருந்து அம்மாக்கண்ணு வரையில். அம்பானி அம்பாரியில் ஏறி ஆனை சவாரி செய்வார். அம்மாக்கண்ணு அபலை. புதுமைப்பித்தன் தான் அவரை பற்றி எழுதிவிட்டாரே. அடுத்த உள்வட்டத்தில் சராசரியில் மேன்மக்கள், செல்வத்தில். பகவத் கீதை-விஸ்வரூப தரிசனத்தில் ஆசாரியன் சொன்ன மாதிரி பற்பல பிரபஞ்சங்கள் சுழன்றவண்ணம் உள.

சில வருடங்களுக்கு முன் மும்பையில் மக்கள் ஆலோசனை மன்றத்துக்காக அலைந்து திரிந்தபோது, கால்களை இழந்த ஒரு மாற்றுத் திறனாளியை பேட்டி கண்டேன்; அவர் எனக்குக் குடும்பத்தினரை அறிமுகம் செய்து, தேநீர் வாங்கிக்கொடுத்தார்.

அவர் கதையை நான் எழுதப்போவதால், சாரம்சம் மட்டும் இங்கே, பக்கவாட்டில் கற்பனைத் தேரோட்டி!

‘நான் பிச்சை எடுத்து வாழ்ந்தேன். நல்ல வருமானம்; ஆனால் அவமானம். இந்தப் படத்தில் நான் வணங்கும் இந்த பார்ஸி அம்மை தான், எனக்கு வண்டி வாங்கிக்கொடுத்து, பழைய பேப்பர் வாங்கி விற்கும் நுட்பங்கள் சொல்லிக்கொடுத்து, இந்த கடைக்கு மூலதனம் போட்டார். இன்று நல்ல வருமானம்; மாதம் நிகரலாபம் 50,000 ரூபாய். இந்த கொலாபா பிராந்தியத்தில் தான் இந்த வியாபாரம் கொழிக்கும். ஆனால், கனவில் கூட குடிசை கூட வாங்க முடியாது. அதனால், வீதி தான் வீடு. பசங்க இங்கே தான் பிறந்தாங்க. நல்ல செக்யூரிட்டி, எங்கள் பிரபஞ்சம் தான் என்றார். போலீஸ் மாமூலில் மாதம் 10,000 அவுட்.’ என்றார்.


அடுத்த பேட்டி: மாதுங்கா போலீஸ் ஸ்டேஷன். டிஃபனும், இனிப்புடன் கொடுத்து, அசத்தி விட்டார்கள்.

இன்ஸ்பெக்டர்:

‘ஐயா! உங்களுக்கு என்ன பதில் சொல்வது? நான் சிப்பாயாக சேர்ந்து, 20 வருடங்களில் இரு உயர் பதவிகள். ஆனால், அதே ஓர் அறை குடில். வசதி நில். நேரம், காலம் தவறிய ஊழியம். இரண்டு மகனும், இரண்டு மகளும் விவரம் தெரிந்த வயது. பெற்றோர்கள் உடன். எனக்கும் என் மனைவிக்கும் தனித்துப் பேசிக்கொள்ளக்கூட இடம் இல்லை. பிறந்த நாள், விவாக நாள் என்றால், ஹோட்டலில் இடம் பிடித்துத்தான் ஜல்ஸா செய்யமுடியும். நாங்களும் மனிதர்கள் தானே! கட்டுப்படியாகாது. லோக்கல் ரெளடி தான் இது உபயம். நான் வாயடைத்து நின்றேன்.


ஹெப்ஸிபா (16) வாயு வேகத்தில் ஓட்டப்பந்தயத்தில் கெலிப்பாள்; அதிலேயே கரணம் போடுவாள். ரியோ டெ ஜெனீரோவில் நடந்த தெருவாசி பெண்களுக்கான பந்தயத்தில் வாகை சூடினாள். அது சரி. அவள் வளர்ந்த விதம் என்ன? செல்வந்தர்கள் வளைய வரும் நேரு ஸ்டேடியம் கட்ட, தெருவில் வளர்ந்து, உருண்டு பிரண்ட இந்தப் பெண் வெளியேற்றப்பட்டாள். ஏதோ சென்னை கார்ப்பரேஷன் நடத்திய சரணாலயத்தில் அபயம். கருணாலயா என்ற தன்னார்வக் குழு நடத்திய தெருவாசி பெண்களுக்கு ஆன பந்தயத்தில் நல்ல பேர் எடுத்தாள். மிகுந்த பிரயாசை செய்து, கடன் வாங்கி, கருணாலயா, அவளை ரியோ அழைத்துச்செல்ல, அவள் அங்கு வெற்றியுடன், பேசியே மக்கள் மனதைக் கவர்ந்தாள். அஷோக், ஸ்னேகாவும், உஷாவும் அங்கு சொன்ன சமாச்சாரம், ‘ நாங்கள் நாட்தோறும் போலீசுக்கு நடுங்கி வாழ்கிறோம். எங்களைப் பாதுகாக்க வேண்டிய போலீசால் தான் எங்களுக்கு அபாயம். அதிலிருந்து எங்களை தப்புவிக்க, போலீஸ் பயிற்சி மன்றங்களில் பேச எங்களைக் கூட்டிச்செல்லுங்கள்.’ இது இன்றைய ஹிந்து இதழ் செய்தி.


ஐயாமார்களே!, அம்மாமார்களே!


மூன்றுமே உண்மை செய்திகள். நன்றாகச் சிந்தித்து, இந்த மூன்றையும் மட்டும் பற்றி, திசை மாற்றாமல், உங்கள் கருத்தை வெளியிடுங்கள். எத்தனை பேர் சமுதாய சீர்திருத்தம் பற்றி 1% வது சிந்திக்கிறார்களோ, பார்ப்போம்.


-#-

சித்திரத்துக்கு நன்றி:

https://s-media-cache-ak0.pinimg.com/originals/48/b2/de/48b2de51a8e11b3f3cd617f1d3226a51.jpg

இன்னம்பூரான்

22 03 2016

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com







Thursday, March 17, 2016

இன்னம்பூரான் பக்கம்: IV:2 சற்றே இளைப்பாற... [2]

இன்னம்பூரான் பக்கம்: IV:2
சற்றே இளைப்பாற... [2]


‘மொழிப்பிரச்னைகளில் ஒன்று: கலவாமை. மொழி தீர்வுகளில் ஒன்று: கலவை.’ என்று யாம் மொழிந்ததற்கு ஆதரவு கிட்டியதை ஒட்டி மனமகிழ்ந்தோம். சில சொற்களில் மொழி குழைவதைக் கண்கூடாக காணலாம். நேற்றைய நாளிதழ் ஒன்றில் கொட்டைக் கொட்டையான முதல்பக்க செய்தி அரங்கத்தில், ‘பம்மினாரே’ என்ற சொல் தலைமை தாங்கியது. சொல்லாக்கம் செவிக்கு ‘பம்மி, பம்மி’, ‘பம்ம/பம்ம/ பமரினா/பமரினா/பம்ம/பம்ம’ என்றெல்லாம் பாலபருவத்து தாளவாத்திய கச்சேரி நிகழ்த்தினாலும், இடம்,பொருள், ஏவல் புரிய நேரமாச்சுது, ஐயா!

தேர்தல் நெருங்க, நெருங்க, தேர்தல் மேலாண்மை செல்வபயணங்களை கழுகுப்பார்வையில் கண்ணோட்டம் செய்வதாலும், சித்திரப்பாவைகளை திரைமறைவில் கம்மலில்லா பொம்மலாட்டம் ஆடவைத்ததாலும், மேலாவிலிருப்போர் காலணா காசு செலவு செய்ய சுணங்குவதாலும், இலவசமும் கலசங்களை நிரப்புவதாலும், ருசி கண்ட வாக்காள பெருமக்கள், ‘குக்கராசை, வெள்ளி சிலம்பராசை, நோட்டாசை, (கரன்சி நோட்டாசை), துட்டாசை ஆகப்பட்ட ஆனானப்பட்ட ஆசைகளை உரமிட்டு வளர்த்ததாலும், உள்ளூர் அரசியல் தலைவர்கள் ஊரை விட்டு ஓடி ஒளிந்து கொண்டார்களாம். அதை அவ்விதழ் ‘பம்மினார்கள்’ என்றது.
அகராதி சொல்லும் பொருள்: பம்முவது: மேகம்மூட்டம்போடுதல்; செறிதல்; மறைதல்; மூடுதல்; ஒலித்தல்; நூலோட்டுதல்; பதுங்குதல்.

1842 ம் வருட இலங்கை தமிழகராதி: செம்முதல், பொருத்தி கட்டிசை,மந்தாரம், மந்திப்பு, மட்டிசை, மூடுதல் என்ற வகையில் பொருள் கூறுகிறது.

ஆகமொத்தம், காசு பரிவர்த்தனை குறையுமாம்!

குறையட்டுமே.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

களைப்பாறுவுமே, ஐயகோ!
சென்னை 3500
திருநெல்வேலி 1980
மதுரை 1300
கன்னியாகுமரி 748
கோவை 815
சேலம் 700
காஞ்சிபுரம் 416
விழுப்புரம் 475
விருதுநகர் 655
தூத்துக்குடி 605
தொம்தொம் 17,350




Tuesday, March 15, 2016

சற்றே இளைப்பாற... [1] இன்னம்பூரான் பக்கம்: IV:1

இன்னம்பூரான் பக்கம்: IV:1


சற்றே இளைப்பாற... [1]

மொழிப்பிரச்னைகளில் ஒன்று: கலவாமை. மொழி தீர்வுகளில் ஒன்று: கலவை. கட்டபொம்மன் நாட்டுப்பாடலில் டீ பார்ட்டியும், சோல்ஜர்களும் வருகிறார்கள். இது என்ன ‘தமாஷ்’ இழையா என்று ஒரு.அ. சபாஷிக்கிறார். சங்கதமும் சரஸமாக வந்து சங்கடப்படுத்துகிறது. 

ஓபன் என்ற இதழில்  12 04 2014 அன்று ஸுனந்தா தத்தா ராய் அவர்கள் ‘எல்லாம் சாதாரணம் தான் [ Very Humdrum, Sir] என்று பொருள்பட எழுதியதின் ஒரு பகுதி:

‘C Rajagopalachari shared my reservation about English-language newspapers, albeit for altogether different reasons. When the first edition of The Indian Express appeared on 5 September 1932, among the goodwill messages was one from Rajaji who wrote with his customary asperity: ‘If you had asked me for advice, I should have warned you against now putting money in the English language.’ He warned that the English readership was old-fashioned, timid and indifferent to public issues. The future belonged to the masses ‘and this means that the educational and news service must be in Tamil inside our own province and in Hindi outside.’ 

Since Rajaji himself wrote superbly lucid English, he had no inkling of the social aspirations that prompt ordinary folk to say ‘palate’ instead of tashri or rakabi.

விஷயம் இது தான். இந்தியாவில் காலூன்றிய வெள்ளைக்கார்ங்க இரண்டு பேர் ஒரு தட்டை பார்த்து இது ‘தஷ்ரியா?’ இல்லை ‘ரகபியா’ என்று விவாதம் செய்தார்கள். டவாலியோ கிழவன். அவனை கேட்க, அவர், ‘ஹுஜூர்! நாங்கள் இதை பளட் (ப்ளேட்) என்போம் என்று ஒரு போடு போட்டாராம்! நீங்கள் தமிழில் ஒரு போடு போடுங்க, ஐயாமாரே! அம்மாமாரே!
-#-
சித்திரத்துக்கு நன்றி:

Sunday, March 13, 2016

III:3: இன்னம்பூரான் பக்கம்: III:3இந்திய தணிக்கைத்துறையும், நானும்[3] ஆட்டைத்தூக்கி…!


III:3: 
இன்னம்பூரான் பக்கம்: III:3
Monday, March 14, 2016, 5:31
இந்திய தணிக்கைத்துறையும், நானும்[3]
ஆட்டைத்தூக்கி…!
இன்னம்பூரான்
மார்ச் 13, 2016

தணிக்கைத்துறை சகலகலாவல்லவனாக இருக்கமுடியாது. 
ஒரு நாள் கல்லூரி ஆடிட்; 
அடுத்த நாள் நீர் பாசனம்; 
அடுத்த நாள் ஆசுபத்திரி;
அடுத்த நாள் ராணுவ தளவாடங்கள். 

எல்லாம் வேஸ்ட் சார்! இது காமன் எரிந்த கட்சி. 

சார்! கணக்கு வழக்குப் பார்ப்பவனுக்கு நிர்வாகத்தை பற்றி என்ன தெரியும்? ரோடு போடமுடியுமா? பதிலடி கொடுப்போம் இல்லை! இது ரதியும் எரிந்த கட்சி!

தணிக்கை செய்யப்பட்ட துறையுடன் ஆலோசனை செய்து, ஆடிட் திட்டமிடப்படுகிறது. அந்த துறையின் பதிலும் உள்ளடக்கம். நாங்கள் உள்ளதை, உங்கள் ஆவணங்களை ஆய்வு செய்து, சொல்கிறோம். எங்கள் அறிக்கையை, அக்கு வேறு, ஆணி வேறாக அலச, சட்டசபையின் பொது கணக்கு கமிட்டி இருக்கிறது. இது காமன் எரியாத கட்சி.

ஒரு பல்கலை கழகத்தின் நூலகம் சிதறி கிடைந்தது. நூல் வாங்க அளித்த பணத்தில் ஹாஸ்டலுக்கு அரிசி வாங்கினார்கள்; பாசனத்துக்கு சுழல்முறையில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அது தவறினால், அநீதி நிகழும். ஒரு ஆசுபத்திரியில் செத்தவங்களுக்கு சோறு போட்டதாக கணக்கு எழுதினார்கள். போஃபோர்ஸ் பீரங்கி தெரிந்த கதை. கணக்கு வழக்குப் பார்க்கிறவன், தோட்டாவை காணவில்லையே பெட்டியில். நமது சிப்பாய் எதிராளியை தாக்கமுடியாமல் சுடப்படுவானே என்று அங்கலாய்த்தால், அதில் என்ன தவறு?

தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது. வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும். தணிக்கைத்துறையின் பயிற்சிக்கூடம் 1955 வரை சென்னையில் இருந்தது. பின்னர் சிம்லாவில் அங்கு தான் எங்களுக்கு அக்னிப்பரிக்ஷை.

ஒரு அனுபவம். நான் இராணுவத்துறையில் பணிபுரிந்த போது, பொதுகணக்குத்துறையில் ஆடிட்டுக்கு எதிரணியில் பணி. உரிய நேரத்தில் முடிவு எடுக்காததால் பீர் விலை ஏறிவிட்டது. இத்தனை நஷ்டம் என்று ஆடிட் புகார். நஷ்டமில்லை. விலையில் கூட்டிவிட்டோம் என்று பதில் அளித்தார், ஹரீஷ் ஸரீன் ஐ.சி.எஸ். ஆடிட்டர் ஜெனெரல் ரங்கநாதனும் ஐ.சி.எஸ். ஆபீஸுக்கு வந்த பின் அந்த பதிலில் உள்ள தவறை ஹரீஷ் ஸரீனிடம் காண்பித்தேன். காலையில், முடிந்து போன கதையை மறுபடியும் எடுத்து, தவறை ஏற்றுக்கொண்டு, இரவே இந்த செலவை ஜவான் தலையில் கட்டக்கூடாது என்று எங்கள் தலையில் போட்டுக்கொண்டோம் என்றார், அவர். எல்லாரும் அதை சிலாகித்தார்கள். அந்த காலத்தில் எல்லாருமே மாரல் ஜட்ஜ்மெண்டில் குறியாக இருந்தார்கள். இது நிற்க.

மாஜி ராணுவவீரர்கள் நாள்தோறும் செத்துப்பிழைத்தவர்கள். எல்லாநாடுகளிலும் அவர்களுக்கு தனி மரியாதை, சலுகைகளும் உண்டு. இந்தியாவிலும் தான். ஆனால் நடந்ததை பாருங்கள். மாஜி ராணுவ வீரர்கள், அவரை சார்ந்த குடும்பம், பெற்றோர்கள் ஆகியோருக்கு [47.34 லக்ஷம்: ஏப்ரல் 2015] கைக்காசு செலவழிக்காத வகையில் மருத்துவ உதவி அளிக்க மத்திய அரசு 2002ல் ECDS என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

சமீபத்தில் நடந்த ஆடிட் முடிவுகள்:
முதல் கோணல் முற்றும் கோணல்: உறுப்பினர்களுக்கு அடையாள சீட்டு அச்சடிக்கும் மிகவும் பொறுப்பான வேலையை ஐந்து வருடங்களுக்கு விதியை மீறி ஒரு நிறுவனத்துக்குக் கொடுக்கப்ட்டது. சந்தை விலையை பற்றி ஒரு விசாரிப்பு இல்லை. அதிகப்படி தண்டம் ரூ.6.69 லக்ஷம் வேறே!

இது இலவச பராமரிப்பு இல்லை. ஒரே தடவை-சந்தா காசு கட்டினால் தான் சிகிச்சை. வேறு செலவை மாஜிகள் தலையில் கட்டக்கூடாது; ஆனால் கட்டினார்கள். கேள்வி முறை இல்லையா?

டில்லியில் மட்டும், மாஜிகளின் சந்தாவில் பணிபுரியும் இந்த ECDSலிருந்து தற்கால ராணுவ மருத்துவ இலாக்காவுக்கு அனுமதியில்லாமல் செய்த செலவு: ரூ.40.78 கோடி. அதான் ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டார்கள்!

பல பாலிக்ளினிக்களில் மருந்து பஞ்சம், வருடம் முழுதும்.
காலாவதியான மருந்துகளை தன் செலவில் ஒப்பந்தக்காரர் எடுத்து செல்லவேண்டும் என்று ஷரத்து. ஆனால், அவற்றை திருப்பி அனுப்பாததால் நஷ்டம்: ரூ.73.44 லக்ஷம்.
மற்றும் பல.

ஆடிட் ரிப்போர்ட்டை முழுதும் படித்தால், நான் குறிப்பால் உணர்த்தியது சொற்பம் என்று தெரியும். அது இலவசம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

Saturday, March 12, 2016

இன்னம்பூரான் பக்கம் 5: 27 கனம் கோர்ட்டார் அவர்களே!பெண்ணே! சகல சம்பத்துக்களுடன் வாழ்க.

இன்னம்பூரான் பக்கம் 5: 27 னம் கோர்ட்டார் அவர்களே!

Saturday, March 12, 2016, 14:43

பிரசுரம்: வல்லமை:http://www.vallamai.com/?p=67049 


பெண்ணே! சகல சம்பத்துக்களுடன் வாழ்க.

இன்னம்பூரான்
10 03 2016
innam
‘இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே’ என்ற தலைப்பில் வல்லமை ஆசிரியர் எழுதிய
‘… சட்டங்களை முறியடிப்பவர்களுக்கும், சிக்கலில் இருப்பவர்களுக்கு மட்டுமே சட்டம் துணை வருகிறது என்கிறபோது, நம் இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே. ‘
என்ற குறிப்பின் மீது,  நான் எழுதிய
‘நான் கவனித்த வரை, இந்துத்திருமணச்சட்டம் இவ்வாறு இயங்கவில்லை. சான்றுகள் கொடுத்தால், ஆய்வு செய்து பதில் தருகிறேன். இஸ்லாமில் தான் பெண்களுக்கு இன்னல்கள், ப்ராக்டிலாக பார்த்தால்.’
என்ற பின்னூட்டம், உணர்ச்சிவசமாக அவர் தொடங்கிய ‘மின் தமிழ், வல்லமை, தமிழ் வாசல்’ பதிவுகளில் காணக்கிடைக்கவில்லை. 1960 களில் நானும் வஸந்தாவும் மிகுந்த பொறுப்புடன் பங்கு கொண்ட ஒரு விவாகரத்து வழக்கில் பிறந்த பெண் குழந்தை தாயின் பராமரிப்பில் தான் வளரவேண்டும்; தகப்பனுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் விசிட்டிங் உரிமையும் மறுக்கப்பட்டது என்று தீர்வு வழங்கப்பட்டது. மெரிட் என்று ஒன்றை பார்க்கிறார்கள் அல்லவா.
திருமதி. ரேவதி நரசிம்மன் கொடுத்த அடி பலமானது.
‘மிக வருத்தம் தரும் செய்தி. ரத்து செய்ய பயந்து பொறுத்துப் போகும் பெண்களை அறிவேன்.‘
என்று அவர் சொல்வது தான் அந்த பலமான அடி. ஏனென்றால், அதில் உண்மை புதைந்து இருக்கிறது. ஆனாலும், சுட்டெரிக்கும் அந்த உண்மைக்கு இந்து திருமண சட்டமோ, நீதிமன்றத்துத் தீர்ப்புகளோ காரணம் அல்ல.
பவளசங்கரி கொடுத்த இணைப்பையும் அந்த தளத்தையும் முழுதும் படித்தேன். தகவல்கள் இருந்தாலும், பவளசங்கரியின் தொடருக்கு அது அணி சேர்க்கவில்லை. தற்பொழுது நடக்கும் உரையாடலை முழுதும் படிக்க வில்லை. இப்படியும் நடக்கத்தான் செய்கிறது என்ற இன்னல் சட்டத்தின் ஓட்டைகளால் இல்லை. இருந்தால் சொல்லுங்கள்.
நீதிபதி கஜேந்திரகட்கர் அவர்கள் மிகவும் போற்றப்பட்ட நீதிபதி. அவருடைய தீர்வுகளும், கருத்துக்களும் ஆழ்ந்து படிக்கவேண்டியவை. சட்டக்கமிஷனின் தலைவராக இருந்த அவர் மார்ச் 1974ல் Hindu Marriage Act,1955 And Special Marriage Act, 1954 பற்றி அளித்த 59 வது ரிப்போர்ட்டை கவனித்தால் நல்லது பயக்கும். எனினும், அவரவர் உரிமைக்கேற்ப பெரும்பாலோர் என்னுடைய இத்தகைய கட்டுரைகளை படிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண். ஆனால், தெரிந்த நிதர்சனத்தை எடுத்துரைக்காமல் இருப்பதும் தவறு. எனவே, ஒரு அறிமுகத்துடன், இதை நிறுத்தி விடுகிறேன். தேவைக்கிணங்க, பிறகு பார்க்கலாம்.
அக்காலத்து அரசும் அந்த கமிஷனும் விவாகரத்து செய்வதை எளிதாக்கவேண்டும், இல்லறத்தில் முழுமை, மறுமணம் செய்து கொள்வதற்கு துணை போகவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இயங்கினார்கள். இதில் என்ன தப்பு இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. கிரிமினல் கோட் ஷரத்து 488 படி ஜீவானம்சத்துக்கும் விவாகரத்து உரிமைக்கும், பெண்களுக்கு மட்டும் தான் கொடுத்தது. அதில் என்ன தவறு? அத்தகைய உரிமையை ஆணுக்கும் கொடுக்கலாமா? என்று அரசு வினா எழுப்பியது. அதில் என்ன தவறு?
The Hindu Marriage Act 1955ல் அமலுக்கு வந்தது. Hindu Succession Act, 1956, Guardianship Act, 1956 and the Hindu Adoptions and Maintenance Act, 1956 அடுத்து வந்தன. இவற்றின் பின்னணி:
“ …நமது சிந்தனைகளிலும் , அணுகுமுறையிலும் ஒரு புரட்சி வரவேண்டும். நமது தொன்மையிலிருந்து நாம் அணைந்த சாம்பலை உதறிவிட்டு, தீச்சுடர்களை எடுத்துக்கொள்ளவேண்டும். …
[தரும சாஸ்திரம் சொல்லும், தமிழ் இலக்கியம் கூறும் எட்டு வகை விவாகங்களையும், சங்க நூல்கள் பாராட்டிய தலைவன் – தலைவி கூடல்-ஊடல், பகற்குறி, இரவுக்குறி, அலர், உடன்போக்கு ஆகியவற்றில் எது தீச்சுடர்? எது அணைந்த சாம்பல் என்றொரு பட்டிமன்றத்துக்கு வாய்ப்பு இருக்கிறது!] … கடந்த காலத்தை நினைவில் வைப்போம்; நிகழ்காலத்தில் கவனம் வைப்போம்; மனதில் துணிவுடன், சுய நம்ப்பிக்கையுடன் வருங்காலத்தை படைப்போம்…” .
– ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன்
மேற்படி சான்றுகளில் தவறு, பெண்ணுக்கு அநீதி இருந்தால், சொல்லுங்கள். இதை எதிர்த்தது பழமை, தர்ம சாத்திரங்கள், சாதீய பார்ப்பனர் போக்கு ஆகியவை. நாம் அவர்களுடன் கூட்டு சேரவேண்டுமா? சொத்து பெண்களுக்கு 1882 வரை இங்கிலாந்தில் கிடைக்கவில்லை. இந்திய சனாதன சாத்திரப்படி 12ம் நூற்றாண்டு காலகட்டத்தில், ஸ்த்ரீதனம் என்பதற்கு விக்னேஸ்வரர் என்ற வல்லுனர் இட்ட பட்டியல் கீழே:
தந்தை தந்தது;
தாய் தந்தது [மஞ்சக்காணி];
கணவன் கொடுத்தது;
உடன் பிறப்பு கொடுத்தது;
மாமன்மார் கொடுத்தது;
திருமணப்பரிசுகள்.;
வாரிசு சொத்து;
வாங்கிக்கொண்டது;
சொத்துப்பிரிவினை;
பிடுங்கிக்கொடுக்கப்படது.
[இவை எல்லாம் மனுவும், யாஞ்யவல்கரும் மற்றோரும் கூறியபடி பெண்ணை சார்ந்தது].
உண்மை சுடும் என்பதை சுட்டிக்காட்ட நீதிபதி கஜேந்திரகட்கர் சொன்னதை கேட்கவும்:
“ இந்துமதம் சார்ந்த இந்த நான்கு சட்டங்களும் புரட்சிகரமானவை. தனிப்பட்டவர்களை கண்காணிக்கும் சட்டம் சமுதாயத்தை காக்கவேண்டும், மதரீதியை கழிக்க வேண்டும் (மற்ற மதங்களை பேசலாகாது; மட்டுறுத்துவார்கள். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி; அவனொரு இந்து) என்ற முற்போக்குக் கருத்தை பார்லிமெண்ட் அமல் படுத்துவது, நமது அரசியல் சாஸனத்தின் 14வது ஷரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருகிறது.’
இது தவறா?
இத்தனை சொன்னபின்னும் என்னுடைய எதிர்ப்பை சொல்லவில்லை.
‘தனிப்பட்ட ஒவ்வோருவரின் குணாதிசயமும் ஏற்படுத்தும் இழப்புக்கு மதங்கள் ,பழைய முறைகள் என்ன செய்யும் என்று தமிழ்த்தேனீ வினவியுள்ளார். ரேவதியின் கவலையை முன்பே எடுத்துரைத்தேன். ஆம். பெண்கள் எதிர் நீச்சல் அடிக்கவேண்டிருக்கிறது என்ற பொத்தாம்பொதுவான கருத்தை மூடி மறைக்க முடியாது. அது நிஜம் தான். காரணத்தைச் சொன்னால் அடிப்பார்கள். சொல்லி விட்டு விடை பெறுகிறேன். சட்டம் அளித்ததை அவரவர் சமூகங்கள் தட்டிப்பறிக்கின்றன. அது தான் உண்மை. அதனால் தான் இப்படியும் நடக்கத்தான் செய்கிறது இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. 1974க்கு பிறகு பல முன்னேற்றங்கள், பின்னடைவுகள், பொய்யும் புளுகுகளும்.
நான் ஆக்கப்பூர்வமாக யாராவது கேட்டால் பதில் சொல்கிறேன்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/75/MarriageAndMorals.jpg/220px-MarriageAndMorals.jpg
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com