Showing posts with label பந்து மித்திர சோதரர்காள். Show all posts
Showing posts with label பந்து மித்திர சோதரர்காள். Show all posts

Monday, July 20, 2015

பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [2]



பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [2]



இன்னம்பூரான்
ஜூலை 20, 2015

குடியரசு புரிவது என்றால் அது ஒரு வகையான ‘பினாமியா’ என்ற வினா எழுகிறது. தேர்தல் நடக்கவேண்டும்; அதை முறையே நடத்தவேண்டும்; அமங்கலமும் வேண்டா; திருமங்கலமும் வேண்டா; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ‘பினாமி’ போல் இல்லாமல், பொது நலனுக்கு பாடுபடவேண்டும். ஆனால் பாருங்கள். பஞ்சாயத்துத் தலைவிக்கு பினாமி அவருடைய கணவர் பல இடங்களில். முனிசிபல் கெளன்சிலருக்குக் கைத்தடிகள் மெய்/பொய் காப்பாளர்கள். துட்டு புரளும். எம். எல். ஏ என்றால் தடபுடல் தான். அழுத குழந்தை வாயை மூடும். அடுத்த வீட்டுக்கிழவி சாபமிடுவாள். இந்த கரை வேட்டிகள் வெட்டியா படுத்தற பாடு, பல வருஷங்களாக பிரசித்தம். கரை மாறும். உறை மாறாது. எம்.பி. என்றால், அவர் எதிர்வீட்டு எதிராஜுவாக இருந்தாலும், ஆகாயத்துக்கும் அந்தரத்துக்கும் குதியா குதிப்பார். பார்லிமெண்ட் காண்டீனில் வயிறார உண்டு களிப்பார்கள். சுத்துப்படை படுத்தற பாடு இந்த பரமனுக்கே பொறுக்காது. இதற்கும் ஒரு மேல்சாதி ஒன்றுண்டு. அது தான் அமைச்சரின் அருமந்த காரியதரிசி குழு. மணலை கயிறாக திரித்து, தக்ளியில் அதை நூல் நூற்று, சிட்டம் போட்டு காந்திஜியின் கதர் என்று விற்று விடுவார்கள். 

கீர்த்தனாரம்பம் இப்படி இருக்கையிலே, வியத்தகு நிகழ்வு ஒன்று எமக்கு மன மகிழ்வு அளித்தது,எமது அன்பார்ந்த பந்து மித்திர சோதரர்காள்! மொகல்சராய் ஒரு பெரிய ரயில்வே சந்திப்பு. ஜாமான்கள் பொட்டிப்பொட்டியாக, மலைபாம்புகள் போல வந்து போகுமிடம். அவ்விடத்து பிரதிநிதி பப்பன் சிங் செளஹான் தன் எல்லைக்குட்பட்ட அலிநகருக்கு ஈத் வாழ்த்துக்கள் கூற, கெளன்சிலர் மூர்ஷிதா பேகத்தின் கணவருடன் போய், வசமா மாட்டிக்கிட்டாரு. அங்கு மின்வெட்டும், மின் தட்டுப்பாடும் அன்றாட வாடிக்கை. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயிலாண்டி இல்லையா? கிராமப்புறம் என்றால் இளப்பம் தான். தருமமிகு சென்னை மால் தோறும் கண்ணைப்பறிக்கும் ஜகஜ்ஜால லாந்தர்கள். தாம்பரம் தாண்டினா பம்பரமாக சுற்றினாலும் மருண்ட உலகமே. அப்டின்னா உத்தர் பிரதேச கிராமம் என்றால், அதலபாதாளம் தான். ஆனால் இந்தக்காலத்து ‘விழிப்புணர்ச்சி’ குடிமகன் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறான். ஆக மொத்தம், அலிநகர் மாந்தர்கள் கேட்டது, ‘ஓய்! ரொம்ப நாளாக அந்த விவசாய கனெக்ஷனை அவிழ்த்து விட்டு நகரம் நோக்கி நகரும் இணைப்பு கொடுங்கள். அலி நகர் மொகல்சராயில் உள்ள பேட்டை தானே என்று கரடியா கத்தறோம். கம்னு இருக்கேயே. சொல்லு பதில்.’ என்று அதட்டிக்கேட்டவுடன், சினம் மிகுந்த பப்பன் சிங் செளஹான் எம்.எல்.ஏ. அவர்கள், ‘நான் தான் கலைக்டர் கிட்டேயும், பொறியாளர் கிட்டேயும் சொல்லிட்டினே.’ என்று திருப்பி அதட்ட, கோபாவேசம் தலை தூக்க, மக்கள் அவர்கள் இருவரையும் கயிற்றால், அமர்ந்திருந்த நாற்காலிகளில் கட்டி விட்டனர். நாலுமணி நேரம் கேரோ! கலைக்டர் கிட்டேயும், பொறியாளர் கிட்டேயும் கதறினார்கள். ஊஹூம். நோ ஹெல்ப். அப்றம் போலீஸ் வந்து சமரசம் செய்தார்களாம். ஆனால் பாருங்கள், பந்து மித்திர சோதரர்காள் ! அந்த பப்பன் சிங் செளஹான் எம். எல். ஏ. ஹிந்து இதழிடம் சொன்ன பொன் வாக்கு, “ நான்கு மணி நேரம் கட்டுண்டு இருந்தோம். உதவி வரவில்லை. சட்டசபையில் புகார் செய்வேன்!!!!!!!!!”. டொண்டானுக்குண்டொய்!!!

சர்வ வல்லமையுடைய பாரதமாதாவே! உனக்கு இத்தகைய மைந்தர்கள் தேவையா???
-#-

Saturday, July 18, 2015

பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]

பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]
இன்னம்பூரான்
18 07 2015

சோதரிகளும் உள்ளடக்கம், சொற்றொடர் பொருட்டு.

தங்குத் தடையில்லாமல், மருத்துவரை நாடாமல், கருச்சிதைவு நிகழ்ந்தால், அதை விட வேறு வினை வேண்டாம். தயக்கமின்றி, அதை சிசுஹத்தி என்றே சொல்லலாம். ஒரு செய்தி. மும்பையில் 15-19 வயதிற்குட்பட்ட யுவதிகள் போன வருடம் 1,785 கருச்சிதைவு செய்து கொண்டார்கள் என்றும், மேலும் 15 வயதுக்குட்பட்ட 185 சிறுமிகளும் அவ்வாறு செய்தனர் என்றும், மொத்தத்தில் ஒரே வருடத்தில் 30,000 கருச்சிதைவுகள் நிறைவேறியதாகவும் சட்டசபையில் நேற்று (வெள்ளி: 17/7/15) அறிவித்த அமைச்சர் ஏக்நாத் கட்ஸே, வெளிநாடுகளிலிருந்து இணையம் மூலமாக, ரகசியமாக, இந்த சமத்கார யுவதிகளும், சிறுமிகளும் வாங்கியதாகவும் , மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் உயிருக்கே ஆபத்து என்றார். இது நகரவாசிகளின் நரகம் என்று அவர் சொன்னாலும் ஒரு தமிழகக் குக்கிராமத்தில் இப்படி நடந்து, மூடி வைத்த விவகாரம் எனக்கு கிடைத்தது. இது ஒரு புறமிருக்க, அமெரிக்காவில் சிறுமிகளும், யுவதிகளும் Plan B One-Step என்ற மாத்திரைகளை சட்டபூர்வமாக வாங்கமுடியும். அவர்களுக்கு நன்கு புரிந்த சமாச்சாரமே என்கிறார்கள், அதிகாரிகள். இங்கிலாந்தில் 24 வாரங்களுக்குள் எந்த பெண்ணும் கருச்சிதைவுக்கு மருத்துவரை, பெற்றோருக்குத் தெரியாமல் அணுகலாம்.  16 வயதுக்குட்ப்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வது சட்ட விரோதம் என்றாலும், நடந்து போன விவகாரத்துக்கு தீர்வு காண்பார்களே தவிர தீவிரம் காட்டமாட்டார்கள். (எனக்கு நீதிபதி தேவதாஸ் அவர்களின் மனிதநேயம் நினைவுக்கு வருகிறது. - - -’..It is illegal in England, Scotland and Wales to have heterosexual sex under 16 - and in Northern Ireland under 17.However, in practice prosecutions are rare as long as both people consented and there is no evidence of exploitation or a large age difference.pregnancy, it is important that young people seek advice as soon as possible while there are still some choices left, they say.... BBC.)

சித்திரத்துக்கு நன்றி: http://s3.amazonaws.com/media.wbur.org/wordpress/11/files/2013/04/0405_planb2.jpg

 உசாத்துணை: பிபிஸி.http://news.bbc.co.uk/2/hi/uk_news/england/nottinghamshire/3942353.stm, Indian Express today.
-#=

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com