Wednesday, April 22, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” 1 to 4




"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்”  1 to 4

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.
‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’[அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை ‘முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

(தொடரும்)

இறை வணக்கம்

தர்மமிகு சென்னைக்கு அருகில் உள்ள வைணவத் தலமாகிய திருநின்றவூர், ‘திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று.’ என்கிறது தல புராணம். இவ்விடம் அருள் பாலிக்கும் இலக்குமிப் பிராட்டிக்கு, ‘என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி‘ என்று பெயர். நம் மீது திரு வைத்திருக்கும் கனிவுக்கு ஏற்ற காரணப்பெயர் எனலாம். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை தெய்வ சன்னிதானத்தில் காண்கிறோம். அண்ணல் பக்தவத்ஸலன்; அன்னை பெற்ற தாயார். இதை விளக்கி காஞ்சி முனிவர், ‘இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள் (ஒளவை). ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.’ என்று அருளமுதம் தந்துள்ளார். 

உனது நாமகரணம்
எமது தேசத்தை பாரதமாதா என்று விளித்து, வணங்குவது சாலத்தகும். பாரதம், இந்தியா, ஹிந்துஸ்தான் என்ற பெயர்களை தாங்கும் தீபகற்பம் ஒரு தெய்வத்திரு. மஹாகவி சுப்ரமணிய பாரதியார் ‘மன்னும் இமயமலை/ இன்நறு நீர் கங்கை/ உபநிடநூல்/ பாரத வீரர்/ நாரத கானம்/ பூரண ஞானம்...’ எல்லாமே பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே; 
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!’  என்று என்றோ 

தீர்க்கதரிசனம் தந்துருளினாரல்லவா! அதன் தொடர்பாக, நானும் 

பாரதமாதா என் அன்னை, அவளே இந்தியத் தாய் என்று 
தொழுது வணங்குகிறேன்.

உன் வரலாறு

அம்மா என்று உன்னை விளிக்கும் போது என் உள்ளம் பரமானந்தத்தால் துள்ளல் நடை போடுகிறது. இந்த பாரதத் திருநாட்டில் சக்தி உபாசனை தொன்மையானது. கடவுளர்களில்
தேவி முதன்மை ஸ்தானம் வகிக்கிறாள். அவள் தான் மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் பராசக்தி. சிங்கம் அவளது வாஹனம். அவளே பாரதமாதாவான வரலாறு, இது. கலோனிய அரசின் அதிகார துஷ்பிரயோகமும் 1857ல் நடந்த சுதந்திர போராட்டமும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி, நாட்டுப்பற்று, அச்சமின்மை, துணிச்சல், தியாகம் போன்ற தன்மைகளை அளித்தது. எங்கும், குறிப்பாக, வங்காளத்தில், சக்தி, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி, காளி மாதா என்றெல்லாம் பேச்சு எழுந்தது எனலாம். 16 வருடங்களுக்குள் பாரதமாதா என்ற நாடகம் கிரண் சந்திர பானர்ஜி அவர்களால்1873இல் முதன்முதலாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. தனது நாட்டை இழந்த ‘திக்கற்ற பார்வதியாக ( ராஜாஜி பிற்காலம் எழுதிய கதையின் தலைப்பு இங்கு பொருத்தம்.) பாரதமாதா அந்த நாடகத்தில் சித்திரிக்கப்பட்டது, மக்களின் மனதைத் தொட்டது; அம்மையே! உனது பாதகமலங்கள் கிழிந்து குருதிக் கொட்டியது; கங்கை, யமுனா நதிகளை போல உன் கண்களில் பிரவாகம். இந்த அவலம் தேசீய நினைவு கருவூலத்தில் பதிவாகி விட்டது. அன்னை பட்ட பாடு, நாம் அன்றாடம் கண்டு வேதனை படும்படி பிரதிபலித்ததால், பாமர மக்கள் கூட, பெருமதிப்புக்குரிய அன்னையின் இன்னல்களை புரிந்து கொண்டனர்.

இன்றைக்கு 136 வருடங்களுக்கு முன்னரே 1882இல் எழுதப்பட்ட பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்தமடம் என்ற புதினத்தில் இடம் பெற்ற "வந்தே மாதரம்" பாடல் விடுதலை இயக்கத்தின் பாடலாக அமைந்தது. குருதேவ் அதற்கு அமைத்த மெட்டு அதை தேசீய கீதமாகப் பரிமளிக்கச்செய்தது. ஆனந்த மடம் நாட்டுப்பற்று மிகுந்த, அதற்காக சகலத்தையும் துறக்கவும், கலோனிய அரசு மீது புரட்சிப்போர் தொடுக்கவும் முன் வந்த துறவிகளின் கூட்டத்தைப் பற்றியது. அது பற்றி சர்ச்சை பின்னர் எழுந்தாலும், பாரத மாதாவை, வந்தே மாதரம் பாடி வணங்கும் வழக்கம் எங்கும் பரவியது. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த கர்சான் பிரபு வங்காளத்தை மதாபிமான அடிப்படையில் பிரித்தாள முயன்றதும் கலோனிய அரசு மீது வெறுப்பையே ஏற்றி விட, தாயே!, உன்னை தெய்வம் என பாவித்து மக்கள் உன்னிடம் அடைக்கலம் நாடத்தொடங்கினர். அபனிந்தரநாத் தாகூர் உன்னை மற்றொரு கோணத்தில் வரைந்த பாரத மாதா ஓவியத்தில் காவியுடையில் அமரிக்கையான தேவியாகக் காட்சி அளிக்கிறாய், நீ. கற்பனா சக்தி மிகுந்த ஓவியமது. ஹிந்து தெய்வங்களைப்போல் நான்கு கைகள். வேதநூல்கள் ஒரு கையில்; இந்தியாவின் வேளாண்மையை பிரதிபலிக்கும் நெற்கற்றை ஒரு கையில். ஜபம் செய்யும் பாரதமாதாவின் மற்றொரு கையில் ஜெபமாலை. பரிசுத்தம் பாராட்டும் தேவி அவள் என்பதைக் குறிக்க மற்றொரு கையில் வெள்ளைத்துணி.  தேசபக்தியை தூண்ட வேறு என்ன வேண்டும் தாயே! மேலும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் முயற்ச யால், பிற்காலம் சென்னைக்கு விஜயம் செய்த பிபின் சந்திர பால் அவர்கள் நுட்பமான ஹிந்து மத சடங்குகளையும், வணங்கும் பழக்க வழக்கங்களையும் ஏற்புடைய வகையில் இணைத்து, பாரதமாதாவின் தேசீய திருவுருவை நமது முன் நிறுத்தினார். 

1 comment:

  1. part-4 is very nice.
    https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/04-vandhe-maatharam
    The above link gives the full poem in Snskrit and Bengali. lso the duet rendered by Smt.MS and Dilip KumR roy. Also the great translation of the song by Subramanya Barathy.

    ReplyDelete