Monday, April 13, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” ~1 & 2


"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” ~1 & 2
இன்னம்பூரான்

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.

‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’   [அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] 
என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை 

முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ 

ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

(தொடரும்)

இறை வணக்கம்

தர்மமிகு சென்னைக்கு அருகில் உள்ள வைணவத் தலமாகிய திருநின்றவூர், ‘திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று.’ என்கிறது தல புராணம். இவ்விடம் அருள் பாலிக்கும் இலக்குமிப் பிராட்டிக்கு, ‘என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி‘ என்று பெயர். நம் மீது திரு வைத்திருக்கும் கனிவுக்கு ஏற்ற காரணப்பெயர் எனலாம். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை தெய்வ சன்னிதானத்தில் காண்கிறோம். அண்ணல் பக்தவத்ஸலன்; அன்னை பெற்ற தாயார். இதை விளக்கி காஞ்சி முனிவர், ‘இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள் (ஒளவை). ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.’ என்று அருளமுதம் தந்துள்ளார். 

(தொடரும்)

3 comments:

  1. Pretty section of content. I just stumbled upon your blog and in accession capital to assert that I acquire
    actually enjoyed account your blog posts. Any way I'll be subscribing to your augment and even I achievement
    you access consistently fast.

    ReplyDelete
  2. For hottest news you have to pay a quick visit web and on internet I found this site
    as a finest web page for most up-to-date updates.

    ReplyDelete
  3. I every time spent my half an hour to read this website's articles
    every day along with a cup of coffee.

    ReplyDelete