Wednesday, March 25, 2020

சுவரொட்டி 6 பழங்கதை 2

சுவரொட்டி 6
பழங்கதை 2
இன்னம்பூரான்
26 03 2020

அவ்வப்பொழுது நாடாளுமன்றத்துஉறுப்பினர்கள்/ சட்டசபை உறுப்பினர்கள் அடித்துக்கொள்வார்கள். நாற்காலிகளையும், ஒலிபெருக்கிகளையும் வீசியடிப்பார்கள். நாக்கும், வாக்கும் நீளும், கடுஞ்சொற்களால், வசை மொழியால். இந்தியாவில் நாம் அடிக்கடி தரிசிக்கும் காட்சி, இது. கனடாவிலும் இது நடந்திருக்கிறது. பிரதமர் ட்ரூடோவும் எம்.சார்ட்ராண்ட் என்ற தொழிற்ச்சங்கத்தலைவரும் ஒருவர் சிண்டை ஒருவர் பிடித்துக்கொண்டு பொதுமன்றத்தில் தடாலடியில் இறங்கினார்கள். எம்.சார்ட்ராண்ட் பிரதமரை அண்டபுளுகன் என்றார். அரசவையை குண்டர்கள், வேசிகளின் கூட்டம் என்றெல்லாம் வசை பாடினார். பிரதமரும் அவரை வெறியன் என்று தாக்கினார். இது நடந்தது எல்லாம் பாராளுமன்றத்தின் நடுக்கூடத்தில். அவர்கள் அடிதடியில் இறங்கும் தருணம் பொதுமக்கள் வந்து போராளிகளை விலக்கினார்களாம். தலையெழுத்து! அரசியல்வாதிகள் இப்படி குழாயடி சண்டை போட்டால், மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு படி மேலே போய் கத்திச்சண்டை போடுவார்கள். இப்படித்தான், அமெரிக்க முன்னால் ஜனாதிபதி ட்ரூமனின் பெண் பாடுவதை ஒருவர் மோசம் என்று விமரிசித்தார். ட்ரூமனுக்கு வந்ததே கோபம். அவரை அடிக்கக் கிளம்பி விட்டாராம். நாலு பேர் சமாதானம் சொல்லி அவரின் கோபத்தைத் தணித்தார்களாம். ஏன் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிராளிகள் சட்டசபையில் அவமதிக்க முயன்றனர். அவரும், அவருடைய எதிரி கருணாநிதியும், ஒருவரை ஒருவர் ஜெயிலில் அடைத்து வருத்தினர்.
சரி. சரி. நல்ல விஷயத்துக்கு வருவோம். ஒரு காலகட்டத்தில் காங்கிரஸ் நண்பர்கள் ஜவஹர்லால் நேருவும் ராம் மனோஹர் லோகியாவும் பிரிந்து செயல்பட்டனர். பின்னவர் நேருவின் மீது நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வந்த போது நான் அதை அரசு அதிகாரிகள் இருக்கையிலிருந்து கவனித்தேன். அவர நேருவை கடுமையாக தாக்கினார். அதன் பொருட்டு இல்லாமல், மற்றொரு காரணமாக லோஹியா சிறைப்படுத்தப்பட்டார். அங்கு இருக்கும்போது அவரது பிறந்த நாள் வந்தது. வாழ்த்துடன் ஒரு கூடை அல்ஃபோன்ஸா மாம்பழமும் வந்தது. அனுப்பியவர் பிரதமர் ஜவஹஜவஹர்லால் நேரு.

அடடா! சொல்ல மறந்து விட்டேனே! தற்கால கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த மாதிரி சண்டை போடவில்லை. பாவம்! அவர் மனைவிக்கு கரோனா பாதிப்பு. நான் சொன்ன சண்டை நடந்து நேற்று ஐமபது வருடங்கள் ஆயின. அந்த ட்ரோடோ இவரது தந்தை. அக்காலத்து பிரதமர்.

-x-

No comments:

Post a Comment