சுவரொட்டி 5
பழங்கதை
இன்னம்பூரான்
25 03 2020
வரலாறு படைக்கும் பாடங்கள் சுவையானவை; தவறுகளை சுட்டிக்காட்டுபவை; மனிதனின் வக்கிரமான போக்கை தங்கு தடையில்லாமல், உள்ளது உள்ளபடி, சித்திரிப்பவை. இன்றைய பழங்கதை மார்ச் 24 1970 அன்று ஹிந்து இதழில் கூறப்பட்டது.
இன்று காணாமல் போன சோவியத் ரஷ்யாவை ஸ்தாபனம் செய்த வ்ளாடிமீர் ஈவான் இலியச் லெனினின் நூற்றாண்டு விழாவை ஏப்ரல் 1970ல் கொண்டாடும் வகையில் 6000 சொற்களில் பதிவு செய்யப்பட்ட கட்டுரையில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி அவரது பொன்வாக்கு என்று ஒரு வாசகத்தை பதிவு செய்தது. அது ஃபேக் ந்யூஸ். அதை கூறியவர் ஆஸ்டிரியாவின் கம்யூனிஸ்ட் தலைவரும், லெனினை எதிர்த்தவரும் ஆன ஆட்டோ பாவர். அது நன்றாக இருந்ததலோ அல்லது அசட்டையின் காரணத்தாலோ லெனின் வழங்கியதாகக் கூறப்பட்டதுடன் நிற்கவில்லை. ப்ராவ்டா நாளிதழ் முதற்கொண்டு, கம்யூனிஸ்ட் பிரசார பீரங்கிகள் அந்த பொய்யை பரப்பி வந்தன. அந்த கட்சியின் உயர்நிலை கமிட்டி கூட ஆமாம் போட்டது. அமெரிக்காவில் கூட யாரும் இந்தக் கூத்தை விமர்சிக்கவில்லை. ஆத்திரம் தாங்கமுடியாமல், கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிஸ்ட் தலைவர் வால்டர் உல்ப்ரெக்ட் தான் மாஸ்கோவுக்கு இந்த அட்டூழியத்தைப்பற்றி ஃபோன் செய்தார். கப்சிப் கபர்தார் தான் பதில். ஆனால், விஷயம் கசித்து ஊரெல்லாம் இதே பேச்சு. அந்த கட்டுரையை புத்தகமாக போட்டபோது, கமுக்கமாக, அந்த பொன் வாக்கை நீக்கி விட்டார்கள். அது கிடக்கட்டும் கம்யூனிஸ்ட் தான் பொய் சொல்வார்களா? எல்லா அரசியல் வாதிகளின் பெட்டகத்தில் பொய்யும் புனைசுருட்டும் இருக்குமோ? அது சரி. உங்களுக்கு சிம்மர்மேன் தந்தி கலாட்டா தெரியுமோ?
No comments:
Post a Comment