Friday, March 16, 2018

நூறு வருடங்களுக்கு முன்னால் [2]

நூறு வருடங்களுக்கு முன்னால் [2]
இன்னம்பூரான்
செப்டம்பர் 19, 2017

வரலாறு படைத்தவர்களை பற்றி, நாளாவட்டத்தில் மறந்து விடுவது மனிதனின் இயல்பு. வரலாற்றை மாற்றி எழுதுவதும் அவனின் உத்திகளில் ஒன்று. நூறு வருடங்களுக்கு முன்னால் நேற்றைய தேதியில் (செப்டம்பர் 18, 1917) தேசீய கூட்டங்களுக்கு புகழ் பெற்ற கோகலே மன்றத்தில், சிறையில் இற்செறிக்கப்பட்ட தேசபக்தர்களை போற்றி புகழ்வதற்கு, ஒரு கூட்டம் கூடியது. டாக்டர். சர். எஸ். சுப்ரமணிய ஐயர் அவர்கள் தலைமை வகித்தார். இதை பற்றிய அறிவிப்பு தாமதமாக வெளிவந்தாலும், குறித்த நேரத்துக்கு முன்னரே மன்றம் நிரம்பி வழிந்தது. பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கூட்டத்தில் பிராமணரல்லாதார்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தினர், தேசபக்தர்களை சிறையில் அடைத்தவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தினரை போல் வாடிய முகமில்லாமல், மலர்ந்த முகத்துடன் காணப்பட்டனர். தலைமை மேஜையில்  திருமதி பெசண்ட் அம்மையாரின் படமும், சர்.ரவீந்தரநாத் டாகூர் அவர்களின் படமும் வைக்கப்பட்டிருந்தன. லாஹூரை சேர்ந்த 19 வயது இளைஞனால் அவை வரையப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்

குறிப்பு: திரு. எஸ்.சுப்ரமண்ய ஐயர் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை பிரம்மஞான சபை ஆலமரத்தடியில் தான், திரு.ஆக்டேவியன் ஹ்யூம் அவர்களும் கலந்து கொண்ட அமர்வில் தான் விடுதலைக்கு போராடிய காங்கிரஸ் கட்சி பிறந்தது. அதற்கு பின்னர் தான் வரலாற்றில் காங்கிரஸ் பிறந்த மண்ணாக சுட்டப்படும் பாம்பே அமர்வு நடந்தது. ஐயருக்கு அந்த அந்தஸ்தை கொடுக்கலாமோ என்ற தாக்கம் தான் வரலாற்றை மாற்றி எழுதியதோ?  தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தான் அவரை முனீந்தரர் என்று புகழ் பாடினார். சென்னை செண்டினரி ஹாலின் முன் அவருடைய சிலை நிற்கிறது. கலோனிய அரசை கண்டித்து அவர் அமெரிக்க ஜனாதிபதி உட் ரோ வில்சன் அவர்களுக்கு எழுதிய மடலை பிரம்மஞான சபையின் பிரமுகர் ஹென்றி ஹாட்சனர் அவர்கள் தான் மறைமுகமாக எடுத்துச்சென்றார். அது லண்டனையும் அடைந்து பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டது; கலோனிய அரசு கண்டிக்கப்பட்டது. கவலையுற்ற கலோனிய அரசு அவருடைய ‘சர்’ பட்டத்தை பிடுங்கிவிடும் என்று பேசிக்கொண்டார்கள். அவரோ அதை கடாசிவிட்டார். உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய் அவர் எல்லாவற்றையும் துறந்து முனிவராக  வாழ்ந்து வந்தார்.

அடுத்தக்குறிப்பு: பிராமணரல்லாதார் வந்ததை குறிப்பிட்டது இன்று விநோதமாகப்படலாம். அன்றைய காலகட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சி, கலோனிய ஆட்சியின் விரோதத்தை சம்பாதிக்க விரும்பவில்லை. அது பிராமணரல்லாதார் கட்சி. அத்தகையவர்களில் பலருக்கு நாட்டுப்பற்று இருந்ததை, இந்த குறிப்பு சுட்டுகிறது எனலாம்.

சில வருடங்கள்  முன்னால் ‘முனீந்தரர்’ அவர்களை பற்றி நான் ‘அன்றொரு நாள்’ தொடரில் எழுதினேன். அந்த கட்டுரைகளை , நாட்தோறும், வல்லமை ஆசிரியர் திருமதி.பவளசங்கரி நாவுக்கரசு அவர்கள், ‘தவம் கிடந்து’ (சுபாஷிணியின் சொல்) த.ம.அ. மேடையில் பத்திரப்படுத்தினார். அந்த கட்டுரையை இங்கு பதிவு செய்வதின் நோக்கம், இன்றைய தலைமுறைக்கு அந்த செய்திகள் சேரவேண்டும் என்பதே.

*******


தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை! [2]
இன்னம்பூரான்
Mon, Apr 22, 2013 at 9:23 AM
12/5/10
அப்படி இப்படி ஒரு மாதம் ஓடிவிட்டது, ரங்கனார் ஒரு யூ-டர்ன் அடித்து எட்வெர்ட் சையது பக்கம் திரும்பி ரொம்ப பிசியாக இருப்பதால்.‘தரிசித்தேனே!  ஸ்வாமி விவேகானந்தரை!’ என்ற இழையும் காணோம்! சரி.ஸ்வாமி விவேகானந்தர் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்த போது, ஒரு வரவேற்புக்குழு காத்துக்கொண்டிருந்தது. 32 அங்கத்தினர்கள் கொண்ட அக்குழுவின் தலைவர்: மஹா கனம் பொருந்திய நீதியரசர் ஸர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள். சமீபத்தில் சாரதா ஶ்ரீசக்ரம்மாவை பற்றி எழுதிய இடுகையில் குறிப்பிடப்பட்ட டாக்டர். எம்.சி.நஞ்சுண்ட ராவ் அவர்களும், ரங்கனார் ஒரு இடுகையில் குறிப்பிட்ட யோகி. எஸ். பார்த்தசாரதி ஐயங்காரும், அக்குழுவில் உள்ளனர். ஸ்வாமிஜியை சென்னைக்கு முதலில் கொணர்ந்த அக்கவுண்டண்ட் ஜெனெரல் மன்மதநாத் பட்டாச்சார்யாவையும் காண்கிறோம். இது நிற்க.

மஹா கனம் பொருந்திய நீதியரசர் ஸர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள் யார் என்று விசாரிப்போம். சென்னை வந்த காந்திஜீ இரண்டு சுப்ரமண்ய ஐயர்களை பணிவன்புடன் தரிசித்தார். ஒருவர் இந்தியாவிலேயே பெண்ணியத்தை போற்றிய ஜீ.எஸ். மற்றொருவர், இவர். 1869ல் ஹைக்கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து கொண்ட இந்த மதுரைக்காரின் தொண்டுகள், பல துறைகளில் கணக்கில் அடங்கா. நீதியரசர், ஓய்வுக்கு பின், அன்னி பெசண்டின் சுய உரிமை இயக்கத்தின் கெளரவ தலைவர். சுதந்திரம் நாடிய தேசபக்தன். ஞானி. ஆங்கிலேய அரசு, இவரை மதித்து விருதுகள் பல வழங்கின. தேசபக்தர்களும், சனாதனிகளும் இவரை தொழுதனர் என்றால் மிகையாகாது. இந்திய திரு நாட்டின் தலை விதியை நிர்ணயித்த மஹான்களில் ஒருவர். சுத்தமாக அவரை மறந்து விட்டது, தமிழகம்.

மதுரை முனிசிபல் கமிஷனர், மீனாக்ஷியம்மன் கோயில் அறங்காவலர், அரசு வக்கீல் [1888] சட்டசபை உறுப்பினர் [1884] சென்னை மாகாணத்தில் முதல் இந்திய   முதன்மை ஹைக்கோர்ட் ஜட்ஜ் [1899, 1903 and 1906] அதற்கு முன்,தொடக்கத்திற்கு முன்பே, இந்திய நேஷனல் காங்கிரஸுக்கு வித்திட்டவர். திலகருடனும், காந்திஜியுடனும் இவரை ஒப்பிட்டு அக்காலமே பேசப்பட்டது.இந்திய வரலாற்றிலேயே, ஆங்கிலேய அரசின் மேல் தனக்கு உள்ள செல்வாக்கை,ஆக்ஷேபணைகளை புறக்கணித்து, நாட்டுப்பற்றுக்கு வித்திட்ட சான்றோன், இவர்.அரசு, இவர் சொல்லுக்கு மதிப்பு வைத்தது யாவரும் அறிந்ததே.  இவரின் மஹாத்மியத்தின் ரகசியம், வெறும் தேசபக்தி மட்டுமல்ல. பகவத் கீதை வழி நடந்த வாழ்க்கை நெறி. வேதாந்தி என்று தான் அவர் அறியப்பட்டார். ‘’ஸ்வாமிஜியின் போதனையால் ஈர்க்கப்பட்டவர் இவர்” என்று ஒரு குறிப்பு கூறுகிறது.

இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகளை கூற விரும்புகிறேன். ஆனால், என்னுடைய ஆவணங்களே எனக்கு கிடைக்காத நிலையில் அல்லல் படுகிறேன்.பொறுத்தாள்க.
(தொடரும்)
இன்னம்பூரான்
05 12 2010

***
யூ டர்ன் எல்லாம் இல்லை சார். பல ஆர்வங்கள் போயிண்டு இருக்கும். நீங்க சொல்லுங்கோ. 
உங்களுக்குப் பர்சனலா ஸ்வாமி விவேகாநந்தர் எப்படி அப்பீல் ஆனார்? உங்கள் நெடிய வாழ்வனுபவத்தில் அவர் கூறிய கருத்துகளை நீங்கள் உரசிப்பார்த்துக் கண்ட முடிவுகள் என்ன இவை பற்றியும் அவவ்ப்பொழுது கூறுங்கள்.

உம்மை நடைக்கு என்ன...ஜிலு ஜிலு நடை... 
:-)) 
ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்
***
அன்று சொன்னது: 'இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகளை கூற விரும்புகிறேன்.
ஆனால், என்னுடைய ஆவணங்களே எனக்கு கிடைக்காத நிலையில் அல்லல் படுகிறேன்.
பொறுத்தாள்க.

(தொடரும்)
இன்னம்பூரான்
05 12 2010

இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகள்:






நீதியரசராக நீடிக்க வாய்ப்பு இருந்தும், கண்ணொளி மங்கிவிட்டதனால், பணியின் நிறைவு குறைந்து விடலாம் என்று அப்பணியில் இருந்து ஓய்வு நாடிய ஐயர் அவர்கள், அன்னி பெஸண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் லீக்கின் கெளரவ தலைவராக பொறுப்பேற்றது முதல் திருப்பணி;
ஓங்கி வானளாவ வளர்ந்து விட்ட ஆலமரத்தை காண்போருக்கு,  நுண்மையான ஆலவித்து தென்படாது. அடையாறு பிரும்மஞான சபையில் இருக்கும் ஆலமரத்தை பாருங்கள். புரியும். அங்கு தான் டிசெம்பர் 1884ல் 17 அங்கத்தினர்கள் கொண்ட குழு ஒன்று அகில இந்திய காங்கிரஸுக்கு வித்திட்டது. கலந்து கொண்டவர்களில் முக்யமானர்கள் : ஹோம் ரூல் கெளரவத்தலைவரான ஐயர் அவர்கள், திரு.அனந்தாசார்லு, திரு. வீரராகவாச்சாரியார், திரு.ராவ், திரு. ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம். அனைவரும் பிரும்மஞான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர்கள். ஒரு வருடம் கழிந்த பின் தான் அகில இந்திய காங்கிரஸின் முதல் கூட்டம் நடந்தது. திரு ஐயர் அவர்களிம் திருப்பணியால், சென்னைக்கு இந்த வரலாற்றில் ஒரு சிறப்பிடம் கிடைத்து விட்டது.



அந்தக்காலத்தில் மின்னலஞ்சல்கள் கிடையா. கடித போக்குவரத்தே மாதங்கள் பிடிக்கும். அதுவும், அரசுக்குத் தெரியாமல் இயங்குவது மெத்த கடினம். அன்னி பெஸண்ட் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, ஐயர் அவர்கள் ஜூலை 24, 1917 அன்று, அமெரிக்க ஜனாதிபதி வில்சனுக்கு ஒருகடிதம் எழுதினார். வில்சனுக்கு மனித உரிமையின் நண்பர் என்ற நற்பெயர் உண்டு. அரசு பறிமுதல் செய்து விடும் என்பதால், ஹென்ரி ஹாட்ச்னர் என்ற பிரும்மஞான வாதி அதை எடுத்து சென்றார். அங்கு பிரபலம் அடைந்த அந்த கடிதம் இங்கிலாந்துக்கு வந்து பிராபல்யமான டைம்ஸ் இதழில் பிரசுரிக்கப்பட்டு, அங்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, ஆங்கிலேயரின் இந்திய ஆளுமைக்கு, உலகெங்கும் கண்டனம் வரவழைத்தது. சினம் பொங்கிய அரசு, ஐயர் அவர்களை அவமதிக்க முனைந்தது. அவரோ ‘ஸர்’ விருதை தூக்கி எறிந்து விட்டார். ஆனால், தொடைநடுங்கி இதழ்கள் மெளனித்தன. 
தேசபக்தன் இதழில் ஜூலை 21, 1918 அன்று திரு.வி.க. அவர்கள் ‘மயிலை முனீந்திரர்’ என்ற தலையங்கத்தில், விவரம் முழுதும் அளித்து விட்டார். ஐயர் அவர்களே, இந்த இதழின் துணிவை பாராட்டினாராம். அதற்கும் எதிர்வினை இல்லாமல் போகவில்லை. தேசபக்தன் ஃபெப்ரவரி 28, 1919 அன்று தடை செய்யப்பட்டது. திரு.வி.க. அவர்களும் ஆசிரியர் பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது.

ஸ்வாமிஜியை பற்றிய இதழில் திரு. ஐயர் அவர்களை பற்றி விவரமாக எழுத காரணம்: அவர் தான் ஸ்வாமிஜியை வரவேற்ற கமிட்டியின் தலைவர். ஹோம் ரூல் கெளரவதலைவர். வரலாறு முழுமையாக பதிக்கப்பட்டால், அகில இந்திய காங்கிரஸ்ஸின் தூண்களில் ஒருவர் என்றால் மிகையாகாது. 
இன்னம்பூரான்
15 12 2010
பி.கு. பர்சனலா ஸ்வாமி விவேகாநந்தர் எனக்கு அப்பீல் ஆனது அவரிடைய நிர்விகல்பஸமாதியை பற்றி படித்தது, 10 வயதில். உசிலம்பட்டியில் எனக்கு நல்ல நூல்கள் கிடைக்கும், அப்பாவின் தயவால். அவர் கூறிய கருத்துகளை உரசிப்பார்த்தது பற்றி, பிறகு பார்க்கலாம். நான் இன்றும் அவரது அடிப்பொடி. இருந்தாலும் சாக்ரட்டீஸ் மாதிரி எனக்கு தாக்கம் அளித்தவர்கள் யாருமில்லை.
இன்னம்பூரான்
***
மிக அழகாக, ஒரே சீராக சென்று கொண்டிருக்கிறது ஐயா, தொடருங்கள். நாங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறோம் தங்களை. நன்றி.

பவளசங்கரி
***
தொடருங்கள் ஐயா!. நாங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.
கன்னியப்பன்

சித்திரத்துக்கு நன்றி:
***
இந்த ஃபோட்டோ மறைந்து விடுகிறது.முனீந்திரரின் படம் தான் போட்டிருக்கிறேன் செப்டம்பர் 19, 2017 அன்று.
இன்னம்பூரான்

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/3/39/SSubramaniIyer_laterlife.jpg/200px-SSubramaniIyer_laterlife.jpg
***


நண்பர் ஆர்.எஸ். ஆர். அவர்கள் இந்த கட்டுரையை அனுபவித்துப்படித்து நியாயமான கேள்வி ஒன்று எழுப்பினார். ‘மயிலை முனீந்திரர்’  சித்திரம் அனுப்பி அதை போடாலாமே என்றார். அதை செய்து விட்டேன். நன்றி, திரு.ஆர்.எஸ். ஆர். &


இன்னம்பூரான்
22 04 2013



-#-

































































இன்னம்பூரான்



No comments:

Post a Comment