மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 2
இன்னம்பூரான்
09 03 2018
இந்த தொடரின் முதல் பகுதி ஒரு பீடிகையாக இருந்த போதினும், இதை என் வலைப்பூவின் உலகத்தமிழ் வாசகர்களில் பலர் படித்தனர்; நண்பர்கள் ஒரு அரிசோனன், வ.கொ. விஜயராகவன் ( பல வருடங்களுக்குப் பிறகு), சி.ஜெயபாரதன் ஆகியோர் ஆழ்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நன்றி. என்னை வீழ்த்திய இடம் சென்னை ராஸ்தாக்கள் அல்ல. அவை என்னை கொன்றிருக்கக்கூடும். நான் வாழும் இடத்திலேயே காலை உடற்பயிற்சி செய்த இடத்தில் கவனம் பாண்டிச்சேரி தமிழ் ஆய்வு பாடங்கள் மீது செல்ல, உடல் பள்ளத்தில் விழுந்து முகம் ஈயச்சொம்பு போல் நசுங்க, மூக்கு உடைந்தது; நான் தேறி வருகிறேன். இதுவே பகுத்து அறிவதற்கு உவமையாக அமைந்து விட்டதை பாருங்கள். போலி பகுத்தறிவும் கவனக்குறைவால் தான். தும்பையும் விட்டு விட்டு வாலையும் விட்டு விட்டு, காலை பிடிப்பது போல், பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது போல் அமைந்து விட்டது. ஈ.வே.ரா.அவர்களின் உன்னதமான சமுதாய சீர்திருத்தங்கள் காழ்ப்புணர்ச்சியினாலும், வன்முறையினாலும், பகைமை அணுகுமுறையினாலும் பாழாயின. அவரின் சிலையை உடைப்பதினால் நன்மை ஏற்படப்போவதில்லை; அவர் பிள்ளையாரை உடைத்துக் கண்ட பயன் யாது? நான் எழுத நினைப்பது எல்லாம் அன்றாடம் மாறிவிடுகின்றன. திரு. ஒரு அரிசோனன் ‘ஒரு இனம் தெரியாத தவிப்பு’ என்றதில் ஒரு உண்மை இருக்கிறது. மதாபிமானம் மதவெறியாக அதிக முயற்சி தேவையில்லை; சுயமரியாதை பிறரை தாழ்த்த நினைக்கும்போது, பூணலையும், குடுமியையும் அறுக்க விழையும்போது, தன்னையே மாய்த்துக்கொள்கிறது; தன் வாழ்வியலை சிதைத்துக்கொள்கிறது. தமிழ்தென்றல் திரு.வி.க. அவர்களின் சகிப்புத்தன்மையை புறம் தள்ளி விடுகிறது. இது நிற்க.
தற்காலம் அசட்டுத்தனமாக சிலை உடைப்பு தலையெடுத்த போது, அதை பிரதமர் முளையிலே கிள்ளி விட்டார் என்றாலும், பட்ட கறை பட்ட கறை தான்.
ஆலயத்திலிருக்கும் விக்ரஹங்கள் ஆனாலும் சரி, மனிதர்களின் சிலையாயினும் சரி, ஒரு கிரேக்க பாடம் படிப்போம் இன்று. மஹாத்மா காந்தி, நேரு, ஈ.வே.ரா. ஆகியோர் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவர்களின் சிலாரூபங்கள், மரணத்தையும் கடந்து, அதனால் ஏற்பட்ட இழப்பையும் கடந்து, மாண்டோர்களின் சிலைகளில் உறையும் உயிர்மை சிரஞ்சீவி என்க. ஏன்? அசோகரின் கல்வைட்டு, ராஜராஜன் கட்டிய பெரிய கோயில், எல்லா கோயில்களில் உள்ள சிற்பங்கள், அங்கிருந்து திருடப்பட்ட சிற்பங்கள், மோனா லீசாவின் ஓவியம், சலப சாத்திரத்தின் நுன்கணக்குப்படி அமைக்கப்பட்ட ஆலயங்கள் எல்லாமே வாழ்வியலின் இறவா நிலையை குறிப்பிடுகின்றன எனலாம். இன்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
(தொடரும்)
-#-
இன்னம்பூரான்
...தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும் தமிழரின்தொன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தொல்காப்பிய மொழி...விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியாக எளிதில் மலர்விக்கும்...இத்தொன்மை வழிவழி வந்தவர் தமிழராவர். பழந்தூய தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்...கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு...தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது... அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?...இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?...இயகை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நட்ட்9; வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாக்ய்ன் கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்...பார்ப்பனர் பார்ப்பனல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது...வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி,,,’ யாதும் ஊரே யாவருங்கேளீர்’ என்னும் விழுமிய கொள்கையுடைய தமிழர் வழிவழி வந்த இக்கால தமிழர் சிறிமைப் பிரிவுகளில் கருத்திருத்தல் அறமாகுது...”
~தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள் ஜூலை 5: 1928, ஏப்ரல் 10,11,12: 1929 & ஆகஸ்ட் 6 :1932 அன்று ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.
No comments:
Post a Comment