நாளொரு பக்கம் 3
Friday, the 27th February 2015
“கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்/தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம்/நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம்/ இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.”- தமிழ் நீதி நூல்: திரிகடுகம்.
‘திரிகடுகம் போலும் மருந்து’
Image Credit: தினமலர்
‘ அறம் செய்ய விரும்பு’ என்றாள், அவ்வைப்பாட்டி. ‘அகரமுதல் எழுத்தெல்லாம்...’ இறை வணக்கம் செய்தார், திருவள்ளுவர் பெரும்தகை. ‘யாமறிந்த மொழிகளிலே இனிதான...’ தமிழ்மொழியின் சங்க கால இலக்கியத்தில் நீதி நூல்கள் பல. அக்காலத்திலேயே தமிழன் கண்டறிந்து பொருத்தமாக கையாண்டு பயன் பெற்ற மூலிகைகளை முன்னிறுத்தி அறிவுரை அளித்த நீதி நூல்கள் மூன்று. யாவரும் அறிந்த மூலிகைகள் ஆன சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் வாழ்வாதாரம் தருபவை: அவையே ‘திரிகடுகம்’ என்ற உயிர் மருந்து நூல் எனலாம். இம்மைக்கும் (கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் வகையறா) மறுமைக்கும் (அவாவறுத்தல், மெய்யுணர்தல் வகையறா) ஏற்புடைய நல்வழிகளை உணர்த்தி அறம் சாற்றும் நூல், இது.
இறை வணக்கத்தில் துவக்குவது சங்ககாலத்திலிருந்து தமிழ் மரபு. கவிஞர் நல்லாதனார் ‘திரிகடுகத்தின்’ காப்பு செய்யுளில், தர்ம சாஸ்திரத்தின் சிருஷ்டிகர்த்தாவான கிருஷ்ண பகவானின் புகழ் பாடுகிறார். திருமாலின் லீலாவிநோதங்களில், வாமனாவதாரமும், குருந்தை மரத்தை முறித்ததும், மாயச்சகடம் உதைத்ததும் கூறி, அந்த ‘பூவைப்பூ வண்ணன் அடி’ போற்றி வணங்குகிறார். வரும் பாடல்களில் மூன்று மூன்று கருத்துக்களும், ஈற்றடியில் ஒரு பொது கருத்தும் கோர்க்கப்படுவது போல, இங்கும் மூன்று லீலாவிநோதங்களும், ஈற்றடியில் வணங்குதலும் பயின்று வரும் நுட்பத்தைசுவைப்போமாக.
-#-
சித்திரத்திக்கு நன்றி: http://img1.dinamalar. com/admin/Bookimages/247713. jpg
No comments:
Post a Comment