Sunday, June 28, 2015

இதுவும் ஒரு பிரகிருதி ~II வது தொகுப்பு: 2


இதுவும் ஒரு பிரகிருதி ~II வது தொகுப்பு: 2


இன்னம்பூரான்
Monday, June 29, 2015, 5:23


திடீரென்று காரைக்குடி போக வேண்டியிருந்ததால், புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்கு ஓடினேன். அடுத்த பஸ் கிளம்ப ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னார்கள். அந்தக்காலத்தில் டாக்சி, ஆட்டோ அதெல்லாம் கிடையாது. அடுத்த ரயில் ராத்திரி பெருத்த சங்கூதலுடன் நுழையும் போட் மெயில் தான். நிற்கக்கூட இடம் கிடைக்காது. அவசரம் தான். கு.ரங்காச்சாரியார் போய்ட்டார். அவருடைய அருமை மைந்தன் சாரங்கபாணி சிவகங்கையிலிருந்து வரணும். அதனாலே பாடியை வச்சிருப்பா என்று ஒரு எண்ணம். ஆனால் தந்தியில் வந்த சமாச்சாரம் சுருக்கமாக இருந்ததால் ஒன்றும் சொல்வதற்கில்லை. எல்லாத்துக்கும் மேலே, தான்தோன்றி சுயம்பு ஆலோசகர்கள் பங்கஜம் மாமியை துளைத்து எடுத்துக்கொண்டிருப்பார்கள். என் பேச்சு கொஞ்சம் எடுபடும். அதான் அவசரப்படறேன். திடீரென்று ஆபத்பாந்தவனாக வக்கீல் ஜம்புநாதன் மாமா காரை நிறுத்தி விசாரித்தார்; ஒரு கேசுக்காக தேவகோட்டைக்கு போய் கொண்டிருப்பதாகவும், வழியில் இறக்கி விடுவதாகவும் சொன்னவர், திரும்பிக்கொண்டு வருவது உத்தரவாதமில்லை என்ற நிபந்தனையும் விதித்தார். அவர் அப்படித்தான் ஜபர்தஸ்து ஆசாமி.
வழி நெடுக ஓயாமல் பேசினார். கு.ரங்காச்சிரியார் மாமாவை அவருக்குத் தெரியாது என்றாலும் அவருடைய குணாதிசயங்களை பற்றி, மெய்யும், பொய்யுமாக, விமரிசித்தார். திருமயத்தில் காஃபி குடித்தோம். பார்சல் நிறைய வாங்கிக்கொண்டார். ஆபத்து சம்பத்துக்குப் பரவாயில்லை, காஃபி குடிக்கலாம் என்று சாத்திரம் படைத்தார், பில்லை என் பக்கம் தள்ளி விட்டார். இதெல்லாம் விடுங்கோ, சார். அந்த வக்கீல் மாமா ஒரு மாதிரி. கறக்கறதெல்லாம் கறந்துடுவார், கட்சிக்காரன் கதற, கதற. ‘எச்சில் கையால் ஈ விரட்டமாட்டார்.’ என்று ஊர்ஜனங்கள், அவர் இல்லாத போது, அக்கம்பக்கம் பார்த்து, சொல்லிக்கொள்வார்கள்.
ஒரு நாள் இப்படித்தான் கையேந்தி பவன் சங்கர ஐயர் ஜம்புநாதன் மாமாவிடம் இசைகேடாக மாட்டிக்கொண்டார். பேரென்னமோ ‘மங்களவிலாஸ் பிராமணாள் ஹோட்டல்’. (தப்பா நினைக்காதீர்கள். அந்த காலத்தில் இப்படித்தான் போடுவார்கள்.) அறுசுவை நாயகன் பாலு நாயர் கூட தன் ஹோட்டலுக்கு அப்படித்தான் பெயர் வைத்தார். கல்லாவில் அவர் தானே உட்கார்ந்திருப்பார். எல்லாம் ஒரு ஷோ தான், ஜம்புநாதன் மாமா சொல்றமாதிரி.
சங்கர ஐயருக்கு ஒரு வில்லங்கம். ஹாஜி மொய்தீன் சாயபு கடையில் தான் மளிகை வாங்குவார். நாலு நாள் முன்னால் வாங்கிய துவரம்பருப்பில் கல்லு ஜாஸ்தி இருந்தது. சாயபு கிட்ட இதமா சொல்லியிருந்தால், எல்லாமே மிதமாக முடிஞ்சிருக்கும். போறாத வேளை. சாயங்காலம் அன்யோன்யங்களை ஜமா சேர்த்து அதையும் இதையும் அருந்துவதற்கு ஸ்பென்சர் சோடா வாங்க வந்த ஜரிகைத்தலைப்பா இன்ஸ்பெக்டர் வரதாச்சாரியிடம் துவரம்பருப்பை காண்பித்து, அங்கலாய்த்துக்கொண்டார், சங்கர ஐயர். வரதாச்சாரிக்கு ஏற்கனவே ஹாஜி மீது காட்டம். எஃப்.ஐ.ஆர் போடறேன் பேர்வழி என்று வெத்துப்பேப்பர்லெ சங்கர ஐயர் கையொப்பம் வாங்கிக்கொண்டு போய் விட்டார்.
அலறினார், சங்கர ஐயர். அவர் கொடுத்தது என்ற சொல்லப்படும் பிராது ஹாஜியை உசுப்பி விட்டதாம். இருக்காதா பின்ன? நூடில்ஸ் தோத்தது போங்கோ. அரிசியில் கிராம ஃபோன் ஊசி, மண்டை வெல்லத்தில் கருப்பட்டி, கொட்டை எடுத்த புளியில் வீசைக்கணக்கில் கொட்டைகள், நல்லெண்ணெயில் நாற்றம், இத்யாதி கம்ப்ளைண்டை கண்ட ஹாஜி, ஆவேசமாக மங்களவிலாசில் புகுந்து, காச்சு மூச்சு என்று கத்த, சங்கர ஐயருக்கு எக்கச்சக்க நடுக்கம். அவருக்குத்தான் தெரியுமே, இதெல்லாம் பொய் என்று. அவசரமாக எடுபிடி கோபுவை போலீஸ் தாணாவுக்கு அனுப்பினால், அவன் ஓடோடி வந்து, வரதாச்சாரி திருச்சி போய்விட்டார் என்றான்.
சமய சஞ்சீவியாக அங்கு திடீர் பிரசன்னம் ஆன வக்கீல் மாமா, சாவகாசமாக ஹாஜியை கூப்பிட்டு, ‘நான் தான் ஹோட்டலுக்கு வக்கீல். உம்மீது மானநஷ்ட வழக்குப் போடுவேன். உமது வக்கீல் ஜலாலுதீன் அப்பாவி. நான் உம்மை தீர்த்துக்கட்டுவேன், ஓய்.’ என்றார்.
நீங்கள் இதையும் தெரிஞ்சுக்கணும். ஆதனக்கோட்டை முந்திருப்பருப்பு ரொம்ப ஃபேமஸ். ஏகபோகம், முத்தையா செட்டியாருக்கு. ஏதோ ஒரு சிக்கல். எனக்கு நினைவில் இல்லை. அவர் நம்ம வக்கீல் கிட்ட மாட்டிக்கொண்டார். அவர் செலவில் மசால் தோசை, ஃப்ரூட் சாலெட் சாப்பிட ஆசை கொண்டு, கையேந்தி பவனில் அவர் நுழைந்த மாத்திரம், சினிமா மாதிரி இது எல்லாம் நடந்து விட்டது. செட்டியாருக்கே என்னாடாது இது, பிள்ளையார் பிடிக்க அது சிவனாரின் நாடி பிடிக்குதே என்று தனக்குள் சூள் கொட்டிக்கொண்டார்.
புதுக்கோட்டை கீழ மூணாம் வீதி புகழ் வக்கீல் ஜம்புநாதன் மாமா ஒரு அலாதி பிறவி. தூண்டில் போட்டு கட்சிக்காரனை இழுப்பார். அவருடைய குமாஸ்தா ராமராவ் நாமமும், விபூதியும், கரும்சாந்துப்பொட்டும், இடம், பொருள், ஏவல் கருதி மாற்றி மாற்றி அணியும் ஜகஜ்ஜால கில்லாடி என்றாலும், வக்கீல் மாமா வக்கீல் மாமா தான்.
இரண்டு பக்கத்து கட்சிக்காரர்களிடமும் இணக்கமாக பேசுவார். எல்லா வக்கீல்களோடும் விரோதம் பாராட்டுவார். அவன் மண்ணாங்கட்டி, இவன் பூஜ்யம், அது, இது என்று ஏசுவார். கூச்சமே இல்லாமல், பொய்யும் புனைசுருட்டுமாக, கட்சிக்காரர்களிடம் தற்பெருமை சாற்றுவார். ஏதாவது கேட்டால், பிரிவி கெளன்சிலில் தான் வாதாடும்போது லார்ட் தாமஸ் ஹோர் பாராட்டினார் என்பார். கதை அளப்பதில் மன்னர். அவர் ஹாஜியின் புறப்பாட்டுக்கு பிறகு சங்கர ஐயரிடம் சொன்னதே ஒரு சான்று.
ஐயர்வாள்! பஜ்ஜி போட்டா போறாது. சொஜ்ஜி, கொஞ்சமாவது இனாம தொட்டுக்குக் கொடுக்கவேண்டும்.
யாராவது துவரம்பருப்பில் கல்லு என்றால் கோர்ட்டார் கேட்பார்களா? வழித்துக்கொண்டு சிரிப்பார்கள். நாம தான் தூபம் போடணும்.
அதனால் தான் அந்த கடங்காரன் வரதாச்சாரி வெத்துக்கடுதாசிலெ உம்ம கை நாட்டு வாங்கினான்.
நல்ல வேளை! நான் வந்து சேர்ந்தேன். போலீஸ் கேசை ஜலாலுதீனே தோக்க அடிச்சுடுவான். நீர் விஷ்கிக்கப்பம் கட்டாட்டா, ஜரிகை உன்னை முழுங்கி ஏப்பம் விட்டுடும்!
போடும் மான நஷ்ட வழக்கு, லக்ஷ ரூபாய்க்கு. எனக்கு ஃபீஸ் வேண்டாம். நம்ம ஃப்ரெண்டாச்சே! ஃப்ரீ. வந்ததிலே பாதி கொடுத்தா போதும். உமக்கு என்ன கசக்குது,ஓய்?
வக்கீல் ஜம்புநாத ஐயர் ஒரு பிருகிருதி: இல்லாட்டா, தன்னுடைய அம்மா கிட்டவே எக்கச்சக்க ஃபீஸ் வாங்கிண்டு, ராமராவை விட்டு பொய் சாட்சிகளை தயார் செய்வாரா? எனக்கு அவருடைய சித்தி புத்திகள், வித்தைகள் எல்லாம் தெரியும். எதிர் வாடையில் நாலாவது வீடு தானே.
-#-
சித்திரத்திற்கு நன்றி: http://ecx.images-amazon.com/images/I/51px9X4yqeL._SY344_BO1,204,203,200_.jpg

பிரசுரம் & நன்றி: http://www.vallamai.com/?p=59166
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment