Wednesday, June 3, 2015

1.பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் - பேராசிரியர் தெய்வசுந்தரம்


நான் வளைய வரும் மற்றொரு குழுவாகிய 'மின் தமிழில்'தன்னுடைய முகநூல் [தெய்வ சுந்தரம் நயினார்.] மூலம் தமிழறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கும் பேராசிரியர் 
தெய்வசுந்தரம் அவர்கள் அவற்றை மீள்பதிவு செய்வதுடன், மற்றவர்கள் அவற்றை தாராளமாக அவரரது தொடர்புகளில் மீள்பதிவு செய்யலாம் என்று சொல்லியதுடன், எனக்கும் தனிப்பட்ட முறையில் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு நகல் அனுப்பியுள்ளேன்.

அவருக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்து இங்கு பதிவு செய்யும் முதல் இழை, இது.
அன்புடன்,
இன்னம்பூரான்
ஜூன் 3, 2015
1.பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (1901-80) …. பேரா. தெ.பொ.மீ. என்று அன்போடும் மரியாதையோடும் அனைவராலும் அழைக்கப்படும் மொழியியல் மற்றும் தமிழ்ப்பேராசிரியர். பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராகத் திகழ்ந்தவர். தமிழ்மொழி வளத்தை உலகிற்கு எடுத்துரைத்தவர். தமிழாய்வு உலகத்தில் ஒரு புதிய 
தலைமுறையை உருவாக்கியவர். மொழி ஆய்விலே உலகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை, வளர்ச்சியைத் தமிழுக்குச் செயல்படுத்திக் காட்டியவர் ... செயல்படுத்தும் ஒரு தலைமுறையை உருவாக்கியவர். மொழியியல் என்ற ஒரு அறிவியல்துறை இந்தியாவிலே … குறிப்பாகத் தமிழகத்திலே அறிமுகமாவதற்குக் கலங்கரைவிளக்கமாய் நின்று ஒளி பாய்ச்சியவர். 18 மொழிகள் தெரிந்த ஒரு பன்மொழிப் புலவர். ‘பல்கலைச் செல்வர்’. ‘ அறிவுலகின் குருதேவர்’. சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. (1920) பட்டம் … பின்னர் பி.எல். (1922) பட்டம் … எம்.ஏ., (1923) பட்டம்… வரலாறு, பொருளியல், அரசியல் மூன்றிலும் எம்.ஏ., பட்டங்கள் … பல்வேறு அரசியல் பணிகள். 1934 –க்குள் பி.ஓ.எல்., எம்.ஓ.எல்., பட்டங்கள். 1944-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர். 1955 – ஆம் ஆண்டுகளையொட்டி, பூனாவில் ராக்பெல்லர் பவுண்டேஷன் உதவியுடன் நடைபெற்ற மொழியியல் பட்டயப்படிப்புக்குப் பேராசிரியராகப் பணி. 1958-இல் இவருடைய கடும் முயற்சியினால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை நிறுவப்பட்டு, அதன் தலைவராகச் ( இலக்கியத்துறைப் பேராசிரியர் பணியோடு) செயல்பட்டார். 1961 – ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியரானார். 1966-இல் மதுரையில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டவுடன், அதன் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, மூன்றாண்டுகள் பணியாற்றினார். 1970 –இல் இவருக்கு மதுரைப் பல்கலைக்கழகமும், 1977-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 1973-74 இல் திராவிடமொழியியல் கழகத்தின் சிறப்பாய்வாளராகத் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு இவருக்குக் ’கலைமாமணி’ பட்டமும், இந்திய நடுவண் அரசு ‘ பத்மபூஷன்’ பட்டமும் வழங்கிச் சிறப்பித்தது. அமெரிக்கா. ஜப்பான், ரஷியா போன்ற பல நாடுகளுக்குச் சென்று தமிழின் புகழை நிறுவினார். 1980 ஆம் ஆண்டு மறைந்தார். இன்று நம்மிடையே வாழும் பேராசிரியர்கள் பொற்கோ, கி.அரங்கன் , கருணாகரன் , கமலேஸ்வரன், ஞானசுந்தரம் உட்பட பெரும்பேராசிரியர்கள் எல்லோரும் இவருடைய மாணவர்களே. 1962 – ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் மேனாட்டு அறிஞர்களுக்குத் தமிழ்மொழி வரலாற்றை விளக்க அவர் ஆற்றிய உரையே “ History of Tamil Language”. இதைப் பூனே பல்கலைக்கழகம் வெளியிட்டது. தற்போது இதனுடைய தமிழாக்கமும் ( ‘தமிழ்மொழி வரலாறு’) ‘காவ்யா’ பதிப்பகத்தின் உதவியினால் நமக்குக் கிடைக்கிறது. 1977 –இல் அவருடைய மேற்கூறிய தமிழாக்க நூல் வெளியானபோது அவர் தனது முன்னுரையில், தனது நூல் 1962 –க்கு முற்பட்ட மொழியியல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் அதற்குப் பின்னர் புதிய மொழிக்கொள்கை தோன்றி வளர்ந்துள்ள சூழலில் பழைய நூலை மறுபடியும் அப்படியே வெளியிடுவது மன்னிக்கமுடியாத குற்றமேயாகும் என்றும் கூறுகிறார். இருப்பினும் ஒருவகையான சூழல் நெருக்கடியில்தான் இந்த வெளியீட்டை ஒத்துக்கொண்டதாகவும் கூறி, தனது முன்னுரையில் 36 பக்கங்கள் புதிய மொழியியல் கொள்கைகளை விளக்குகிறார். சாம்ஸ்கி ( Chomsky), ஃபில்மோர் (Fillmore), ஹாலிடே (Halliday), மெக்காலே ( MeCawley) என்று மொழியியலார் பலரின் மொழிக்கொள்கைகளை அவர் மிக எளிமையாக விளக்கிக் கூறியுள்ளது ஒரு நேர்மையான ஆய்வாளர் எப்படி இருக்கவேண்டுமென்பதை ஆய்வுலகத்திற்கு எடுத்துக்காட்டி நிற்கிறது. இலக்கியம், இலக்கணம், மொழியியல் பற்றிய இவரது நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் இவரது பெருமையைத் தமிழ்வரலாற்றில் நிலைத்து நிற்கச் செய்யும். பேரா. தெ.பொ.மீ. நிறுவிய மொழியியல்துறையின் மாணவன் என்ற முறையிலும் அவரது நேரடி மாணவராகிய பேரா. பொற்கோ அவர்களின் மாணவன் என்ற முறையிலும் பேரா. தெ.பொ.மீ. அவர்களின் புதல்வி முனைவர் காமேஸ்வரியின் சொற்புள்ளியியல் - மொழியியல் ( Lexicostatistics) மாணவன் என்ற முறையிலும் நான் பெருமை கொள்கிறேன்.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment