Friday, January 2, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:2


‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:2

இன்னம்பூரான்
02 01 2015

சில கடிதங்கள் இயல்பாக அமைந்து விடுகின்றன. சில எழுதப்படுகின்றன. சில படைக்கப்படுகின்றன. என் அம்மா எழுதிய கடிதங்களில் சிலவற்றை இன்று பார்வையிட்டேன். இன்லண்ட் கடுதாசி தான் எழுதுவார். ஒரு வெற்றிடம் இல்லாமல் குறிப்புகள் தென்படும். அன்பு தொனிக்கும். அறிவுரை மென்மையாக இருக்கும். விசாரணைக்கெல்லாம் குறைவில்லை. ‘நீ ஸ்னானம் பண்ணுகிறாயா?’ என்று மாட்டுப்பெண்ணுக்கு ஒரு வரி, பிள்ளையார் சுழிக்கு மேலே! அப்பா கடுதாசிலே மார்க் கேட்பார். கண்டனம் இருக்கும். அவருடைய ஆதங்கங்கள் எனக்கு மட்டும் புலப்படும். இவை இயல்பாக அமைந்த கடிதங்கள். நேருஜி-இந்திரா கடிதங்கள் எழுதப்பட்டவை. சிந்தித்து, சிந்தித்து, பல அரிய விஷயங்களை எழுதினார். செஸ்டர்ஃபீல்ட் பிரபுக்கு சாமுவேல் ஜான்சன் எழுதியது படைக்கப்பட்ட வகை. பிற்காலம் இன்னம்பூரானும் இதைப்பற்றி எழுதட்டுமே என்ற முன்யோசனை உள்ளங்கை நெல்லிக்கனி! இத்தனை முஸ்தீபு எதற்கு என்று கேட்பீர்கள். சில கடிதங்களில் படைப்பாற்றல் தென்பட்டாலும், இல்லை, விழுந்து விழுந்து நாட்தோறும் அவர் கடிதங்கள் எழுதினாலும், இயல்பு முத்திரை காணப்படும். அப்படிப்பட்ட ஒரு கடிதத்திலிருந்து சில பகுதிகள்:

“...கம்பர் விழாவில் உரைகல்லில் உரைத்து உரைத்துப்பார்த்துத் தெலுங்கு ராமாயணத்துக்குப் பொன்னாடை போர்த்தினார்கள். தமிழன் அப்பாவி என்ன செய்வான். பொன்னாடை போர்த்துவதற்கு நாமாவது கிடைத்தோமே என்ற அனுதாபத்தோடு சந்தோஷப்பட்டிருப்பான் அந்த தெலுங்காசாமி. இனி-...நம்முடையவர்களுக்கு ஆஸ்பத்திரியைப் பிரத்யேகமாகத்தான் கட்டவேண்டும். கீழ்ப்பாக்கத்தில் உள்ளது போதாது...தமிழ் பொல்லாத பாஷை என்று தெரிகிறது. தமிழனையே ஏமாற்றி விடுகிறது. அப்படியானால் அயலார் பாடு என்னாகும்! ...எனக்கு உடம்பு சுமாராய் இருக்கிறது...டாக்டர் தினம் வந்து போகிறார்...”. குறிப்பு: ப”பெரிய குழந்தைக்குச் சாப்பாடு ஏற்று வருகிறது. எல்லாம் சரியாய்ப் போய்விடும் நாளை.”
-#-
குறிப்பு? யார், எப்போது, எங்கே, ஏன் என்றா கேட்கிறீர்கள்? ஊகிப்பதில் மன்னர்களும், ராணிகளும் வாழுமிடம் இது அல்லவோ?!

1, 2, 3...

No comments:

Post a Comment