Friday, August 1, 2014

பெருங்களத்தூர் நோட்ஸ் 1 அலை பாயுதே !

பெருங்களத்தூர் நோட்ஸ் 1
அலை பாயுதே !
இன்னம்பூரான்
01 08 2014

தர்மமிகு சென்னை நாலாபக்கமும் விரவி வருவதால், வண்டலூர் மிருக கண்காட்சி
சாலைக்கு அருகில் உள்ள பெருங்களத்தூர் என்ற மனித கண்காட்சி சாலையின்
மவுசு ஏறி வருகிறது. புதிய பெருங்களத்தூரின் பிறவி வேறு. அருகே கானகம்
வேறு மெருகேற்றுகிறது. சுற்று வட்டாரத்தில் வேங்கை நடமாடினாலும், இங்கு
புகலடைந்தேன். கிட்டத்தட்ட தமிழில் நாற்பது நூல்கள் எழுதிய சான்றோன்
ஒருவரின் நட்பு கிடைத்தது. அவர் ஜே.கே.யின் தத்துவங்களை பற்றி ஒரு
அருமையான நூல் படைத்திருக்கிறார். அதை படித்துக்கொண்டிருக்கிறேன்.இது வரை
எழுதியதற்கு அவருடைய முன்னுமதி இருப்பதால், எழுதிவிட்டேன்.  அவருடன்
அளவளாவுவது ஒரு இனிய அனுபவம்.

அவரும் நானும் பல விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். அத்தருணம், என்னுடைய
ஜனவரி 1953ம் வருட குறிப்பு ஒன்று தற்செயலாக கிடைத்தது. அதில் ‘The
Psychology of Study’,வீணடிக்கப்பட்ட நேரம், ஆனந்த விகடனில் தேவன் எழுதிய
கதையை பற்றிய விமர்சனம்,அரிஸ்டாட்டில், என்னுடைய சிநேகிதி, அண்ணல்
காந்தி, சர்தார் படேல், கன்ஃபூஷியஸ் எல்லாரும் உலவுகிறார்கள். இருவரும்
இதை படித்துவிட்டு, நினைவலைகளில் மிதந்தோம். அதன் நற்பயனாக, “Master
Kong” (Chinese: Kongzi), Confucius எனப்படும் சீன தத்துவ மேதையிடம்,
எங்கள் சிந்தனை அலை பாய்ந்தது. நண்பர் வயதானவர்.ஓய்வெடுக்க சென்று
விட்டார். கன்ஃபூசியஸ்ஸிடம் வசமாக மாட்டிக்கொண்டேன். தமிழில் அவரை பற்றிய
செய்திகள் குறைவாகத்தான் காணப்படுகின்றன. சாக்ரட்டீஸ் மாதிரி அவரும்
பெரிதும் புகழப்பட்டவர், நிந்திக்கப்பட்டவர்;அவரே தெய்வம்;அவரே சாத்தான்!
எனினும், உலகமெங்கும் சிந்தனைக்களங்களில் இன்றளவும் பேசப்படும் அந்த
ஞானியை பற்றியும் அவருடைய சூத்திரங்களை (Analects (Chinese: Lunyu)
பற்றியும் நாம் அறிந்தது சொற்பம் என்ற தோற்றம். எனவே, அபரிமிதமான
துணிவுடன், அவரை பற்றிய இந்த தொடரை துவக்கியுள்ளேன் பார்க்கலாம்!

இங்கு ஆசான் எனப்படுவது அவரே.அரசாங்கமும், பொது நடப்புகளும் என்ற
தலைப்பில் அவர் எழுதிய சூத்திரங்கள் இந்திய சமுதாய முன்னேற்றத்துக்கு
பொருத்தமானவை. இன்றைக்கு முதலாவது:

‘ஆயிரம் தேர்கள் ஆடி வரும் நாட்டில், கண்ணியம், சிக்கனம், கொடை,
காலத்துக்குகந்த வேலை வாய்ப்பு, தரமுயர்ந்த வணிகம் ஆகியவற்றின் மீது
தீவிர கவனம் தேவை என்று ஆசான் அவர்கள் கூறினார்.

‘The Master said: In ruling a country of a thousand chariots there
should be scrupulous attention to business, honesty, economy, charity,
and employment of the people at the proper season.’

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


-
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment