உங்கள் எல்லாருடைய தயவில், இந்த இழை ‘சாக்ரெட்டீஸ்’ என்றே தொடரட்டுமே.
தமிழ் தேனீ என்னில்லம் வந்தபோது, அங்கு சாக்ரெட்டீஸ் வியாபகமாகத்தான் இருந்தார். அந்த நூல் என்னிடம் வந்த பின்னணி: இங்கிலாந்தில், ஒரு நாள், என் மருமகப்பெண் என்னை தன்னுடைய ஃபிலாஸஃபி வகுப்புக்கு அழைத்துச்சென்றாள். அந்தக்குழுவின் இலக்கு, தற்கால சிறார்களுக்கு தத்துவபோதனை தொடங்குவது. என்னிடம் கேட்ட முதல் கேள்வி, ‘வடமொழி தெரியுமா?’ அடுத்தது, ‘ஆதி சங்கரரைப்பற்றி நன்கு அறிவீர்களா? இவ்வாறான அலை வரிசை இருக்குமிடத்தில், அந்த நூலை வாங்கிக்கொடுத்தாள், அவள்.
சில சமயங்களில், நம் மனக்கிடக்கையை மற்றவர்கள் சொல்லி புரிந்துக் கொள்கிறோம். தமிழ்த்தேனீ எனக்கு அந்த கொடுப்பினையை அளித்திருக்கிறார் என்றால் மிகையல்ல. I see Jean-Paul Sartre’s authenticity in his prayers to my wife, Vasantha. நெகிழ்வாக அவர் என்னை பற்றி, ஆதரவாகவும், புகழ்ந்தும் கூறியதையும், மீனா, செல்வம், ஜனா ஐயங்கார்,பவளா, சீதாலக்ஷ்மி, ஓம் ஐயா, தேவ் ஆகியோர் எனக்களித்த புகழுரைகளையும், ‘தன்னடக்கம்’ என்ற ஜமுக்காளத்தின் அடியில் தள்ளும் ரகம் அல்ல, யான். பணிவுடனும், துணிவுடனும், அந்த கெளரதைகளை மதித்து, மேலும், மேலும், யான் இயங்கும் தரத்தை உயர்த்திக்கொள்ள முயல்வேன். இனி என்னை ஒதுக்கிவிடுவோம். சாக்ரெட்டீஸ் வருகிறார்.
சிறு வயதில், தத்துவம் புரியாத நிலையிலும், சாக்ரெட்டீஸ் என்னை மிகவும் பாதித்தார்், வெ.சாமிநாத சர்மா அவர்களின் மொழியாக்கத்தின் மூலம். என் மனம் அவர் உயிரிழந்த காரணத்தை ஒப்புக்கொள்ள மறுத்தது. 18/19 வயதில் கில்பெர்ட் முர்ரே, பெஞ்சமின் ஜொவெட் போன்ற பேராசிரியர்களின் நூல்களின் மூலம் தெளிவுரைகள் கிடைத்தன. என் பயணங்கள் எப்படியெல்லாம் அமைந்தாலும், சாக்ரெட்டீஸ் அக்ராசனராகவே இருந்தார். எனவே, தமிழ் தேனீ என்னில்லம் வந்தபோது, அங்கு அவர் சர்வவியாபகியாக இருந்தது வியப்புக்குரியது அல்ல.
எனினும், இனி நான் சொல்லப்போவது, சில நாட்கள் கழிந்த பின் 17 10 2010 அன்று கார்டியன் இதழில் வந்திருந்த சாக்ரெட்டீஸ் பற்றிய குறிப்பு. அதன் சுருக்கத்தின் சுருக்கம், என்னிடம் உள்ள நூலின் அட்டைப்படம். (இணைத்துள்ளேன்) ‘விண்ணுலகத்திலிருந்து தத்துத்தை இவ்வுலகில் தரவிறக்கம் செய்தவர் சாக்ரெட்டீஸ்’, என்கிறார், சிசிரோ. சாக்ரெட்டீஸ் வாழ்வின் இலக்கு அறிய விழைந்தார். அவரின் பாதை கடினம், கல்லும், முள்ளும். ஆனால், என்னே கவர்ச்சி! என்னே நேர்த்தி! என்று இளைஞர்கள் சூழ, அவரதடிகள் பணிய, கீர்த்திமானாகி விட்டார், அவர். ஐம்பது வருடங்கள் கழிந்தன, இவ்வாறு. கிரேக்க அரசுகள் சிறியவை, நகருக்கு ஒன்று. முனிசிபாலிட்டி என்று கூட சொல்லலாம். அவர் வாழ்ந்த ஏதென்ஸ் நாட்டின் அரசுக்கு கெட்டகாலம்: போர்க்களங்களில் படு தோல்வி, நிதி நிலை மோசம், ஏழைகள் பட்டினி, எல்லாம் தலைகீழ். சால்ஜாப்பு தேவை. புரிகிறதா? [இன்று இந்த உலகில் பல நாடுகள் இருக்கும் நிலைமை, இது. இந்தியாவிலும் தான். ]
அகப்பட்டுக்கொண்டது சாக்ரெட்டீஸ், கி.மு. 399ம் ஆண்டின் நாளொன்றில். அரசவைக்கு இழுத்து வரப்பட்டார். குற்றப்பத்திரிகை படிக்கப்பட்டது: 1. நாட்டின் கடவுளர்களை அவமதித்தது; 2. இளைஞர்களின் மனதை குலைப்பது. குற்றம் என்று தீர்ப்பு. தண்டனை: அரசு மேற்பார்வையில் தற்கொலை, ஹெம்லாக் என்ற விஷம் அருந்தி.
கி.மு. 469ல் ஒரு கல்லுளி மங்கனாக (சொல் வந்து பொருத்தமாக விழுந்தது!) பிறந்த (son of a stonemason) சாக்ரெட்டீஸ், கிரேக்க அழகு இல்லாத விகாரரூபன்; பானை தொந்தி; விசித்திரமான நடை, தேடும் கண்கள், ரோமம் அடர்ந்த உடல். ஊரார் மாதிரி பட்டும், பகட்டும், அவரை கவரவில்லை. ஊருக்கு ஒவ்வாத மனிதன். சமயம் சமுதாயத்தின் பொது சொத்து ஆக ஆளுமை செய்த அக்காலத்தில், தன்னுடைய உள்ளுணர்வை ("daimonion") மட்டும் மதித்து, இளைஞர்களிம் மனம் கவர்ந்த இந்த கள்வனை, இன்று நாம் மதிப்பதின் காரணம், இன்றும் அவரின் கோட்பாடுகள் உன்னதமாக கருதப்படுவதே.அவர் வாழ்ந்த காலத்தில், ஜனநாயகத்தின் நுணுக்கத்தை, உட்பொருளை, வினா-விடையாக விளக்கியவரை, சர்வ வல்லமை பொருந்திய அரசு வெறுத்தது, இன்றும் நடக்கக்கூடிய இழிவே. லிங்கனும், காந்திஜியும் சுடப்பட்டது போல, இவரும் தாக்கப்படுவார்; 2010ல் அதிகாரமையங்கள் அவரை கொல்லும்.
"மாடமாளிகைகளும், போர்க்கப்பல்களும், சிலை வரிசைகளும் இருந்து பயன் என்ன, மக்கள் அதிருப்தியுடன் இருந்தால்? நேசமில்லா வாழ்வினால் யாது பயன்?” என்று வினா தொடுத்தார், அவர். சுவாசிக்கும் காற்று போல, அறிவை நாடுவதை போற்றினார், அவர். ஏதோ ஒரு ஞானி என்று முத்திரை குத்தி, அவரை விலக்காதீர்கள். ஒரு பாமர மனிதன், அவர். நேசமும், ஆற்றலும் தான் அவருக்கு முக்யம். தண்ணியும் போடுவார். சண்டையும் போடுவார். இந்த உலக புருஷன், மற்றவர்கள் மாதிரித்தான்.
ப்ளேட்டோவும், க்செனோஃபானும். அவருடைய வரலாறு எழுதும் போது, அவரின் வினாக்களை கோர்த்து அளிக்கிறார்கள்.
- வாழ்க்கையின் பொருள் என்ன?
- அவரவரது வாழ்க்கையின் பொருள் என்ன?
- எது மகிழ்ச்சி தருகிறது?
- எது நன்மை பயக்கிறது?
- எது நன்கடமை?
- எது நேசம்?
- நாம் வாழ்க்கையின் தரம் உயர்த்த என் செய்யவேண்டும்?
மறுபடியும் படியுங்கள். இன்று நம்மை எதிர்நோக்கும் வினாக்களே, இவை. எனவே, அவர் சொல்வது இன்றும் சாலத்தகும்.
எழுதப்பட்ட ஆவணங்களை பற்றியும், நேருக்கு நேர் பேசுவதின் வலிமையையும் அறிந்த அவருடைய பிரசித்தமான வினா: ரொட்டியும், கள்ளும் எங்கு கிடைக்கும் என்று கேட்டு எளிய விடை பெற்ற அவர்,’ நேர்மையானதும், உன்னதமானதும் எங்கு கிடைக்கும் என்று , மற்றவர் தடுமாற, ‘என்னிடம் வா’ என்றார். உங்களுக்கு காந்திஜீம் சத்தியப்பிரமாணம் நினைவில் வருகிறதோ! சாக்ரெட்டீஸ், ‘சொல்லின் பொருள் ஆராய்ந்து அறிக’ என்று அடிக்கடி சொல்வார். ‘புரிந்து செயல்படுக.’ என்பார். தர்க்கவாதம் அவருக்கு பிடிக்காது.(Rhetoric without truth was one of the greatest threats to the "good" society.)
“The Hemlock Cup: Socrates, Athens and the Search for the Good Life, by Bettany Hughes” என்ற இந்த நூலாசிரியர், ஏதென்ஸ்ஸின் ஏமாற்றத்தின் பலிகடா, சாக்ரெட்டீஸ் என்கிறார். ஆராய்ந்து நெறிப்படுத்தாத வாழ்க்கை பயனற்றது ("the unexamined life is not worth living" ) என்ற அவரின் வாதம் எந்த சர்வாதிகார அரசுக்குத்தான் பிடிக்கும்?
சலிப்பு தட்டுகிறதா? முடித்து விடுவோம். அவர் வழக்கு மன்றத்தில், ‘ என் குற்றங்களுக்கு தண்டனை இல்லை. வதந்திகளும், வீண்பேச்சுகளும், உங்கள் முணுமுணுப்புகளும் என்னை குற்றவாளியாக சித்தரிக்கன்றன’ என்று கூறி, இன்முகத்துடன், சட்டத்தை நிறைவேற்றி தன்னை மாய்த்துக்கொண்டார்.
தமிழ்த்தேனி சொல்வது போல், ‘ஹூம் எத்தனையோ சாக்ரடீஸ்கள்!’
நன்றி , வணக்கம்,
இன்னம்பூரான்
21 10 2010
No comments:
Post a Comment