Monday, August 19, 2013
சென்னை குறிப்புகள் ~3
டைம் பாஸ் எக்ஸ்பெரஸ்...!
யான் செய்த முற்பயன் விளைவாக, நமது வடிவேலரை (வேறு யாரு? வ.வெ. தான்.) போலவே அஞ்ஞாத வாசம் சென்னை மாநகரத்தில், நான்கு நாட்கள். அதனால், நேற்று புதுச்சேரிக்குப் பயணம், முல்லைப்பாட்டையும், கபிலரையும் நாடி. அருந்தவம் செய்ததின் நற்பயன், முன்கூட்டி பயணச்சீட்டு கெழுமை நண்பரொருவர் மூலமாக பதிவு செய்த அசகாய வருமுன் காப்போன் செயல். சாஸ்திரி நகரிலிருந்து ஒரு நண்பரின் காரில், மற்றொரு நண்பரின் உறுதுணையோடு, மாலை 6.00 மணிக்கு, அதாவது அரை மணி நேரம் முன்னதாகவே ஆஜராக வேண்டும் என்ற கட்டளை பயணச்சீட்டில் கொட்டை கொட்டையாக எழுதப்பட்டிருந்ததால், ஜாமான்கள் ஐந்து இருந்ததால், 5.38க்கே ஆஜரானோம். ஊழ்வினை உறுத்தூஊம் அல்லவா. திருவாரூர் தேர் போல ஆடி அசைந்து வந்த ‘பர்தா’ எக்ஸ்பெரஸ், குறித்த இடத்தை விட்டுத் தள்ளியே நின்றது. முன் பின் தெரியாத என்னை, ‘அஸால்ட்டாக’ பயணச்சீட்டு வகையறா கேட்காமல், ‘டுர்ரெ’ன்று கிளம்பிவிட்டது. உதவியாளர் ‘கொச்சினா?’ என்று வினவினார். நான் திக்கிட்டுப்போனேன். ‘பரவாயில்லை. முதலில் புதுச்சேரி’ என்று ஆசுவாசப்படுத்தினார். ஏன் போகும் ஊர் பேர் போடவில்லை என்றேன், அப்பாவியாக. என்னை பிள்ளைப்பூச்சியை போல் திரணமாக மதித்த ஓட்டுனர், ‘அதெல்லாம் போடக்கூடாது. நாங்கள் ரூட் பஸ் இல்லை, தினந்தோறும் ரூட் பஸ்ஸாக பயணித்தாலும்.’ என்றார். உடனே, தனக்கு ‘ஆமாம்! ஆமாம்! போட்டுக்கொண்டார். தமிழ் நாட்டில் சட்டம் செல்லாக்காசு என்று சொல்லாமல் சொன்னார். அந்த நிமிடம் முதல், என்னால் தடைப்பட்ட ‘கடலை போடலை’ ஊர்தி ஓட்டுனரும், அவருடைய இரு உதவியாளர்களும் இடை விடாமல் புதுச்சேரி வரை ‘லொட லொட’ என்றும், ‘சள சள’ வென்றும் தொடர்ந்தனர். இருவருக்கும் தெரிந்த சமாச்சாரங்களைச் சொல்லி சொல்லி, ஆயிரம் வாலா வெடி போல் சிரித்து மகிழ்ந்தனர். எனக்கோ அஸ்தியில் ஜன்னி. ஃப்ரண்ட் சீட் ஆச்சே!. பெல்ட் இல்லை. ஒரு பாடாக புதுச்சேரிக்கு தாமதமாக வந்து சேர்ந்தோம். பஸ் ஸ்டேண்டுக்கு செல்லாமல், வழியில், அவர்களின் ‘ஆபீஸ்’ என்ற இடத்துக்கு முன்னால் நின்றது பஸ்ஸு. ஏன் இப்படி என்றேன். மறுபடியும் என்னை பிள்ளைப்பூச்சியை போல் திரணமாகவும் விநோதமாகவும் ஓட்டுனர், ‘அதெல்லாம் போடக்கூடாது. நாங்கள் ரூட் பஸ் இல்லை, தினந்தோறும் ரூட் பஸ்ஸாக பயணித்தாலும்.’ என்றார். உடனே, மறுபடியும் தனக்கு ‘ஆமாம்! ஆமாம்! போட்டுக்கொண்டார். மறுபடியும் தமிழ் நாட்டில் சட்டம் செல்லாக்காசு என்று சொல்லாமல் சொன்னார். புதுச்சேரியிலும் தான் என்று நினைத்துக்கொண்டேன். இன்னும் சொல்ல எத்தனையோ இருக்கிறது. ‘பர்தா’ எக்ஸ்பெரஸ்’ ஒரு அச்சுப்பிழை.
வர்ரேன்....
இன்னம்பூரான்
18/19. 08 2013
No comments:
Post a Comment