Saturday, August 24, 2013

நாமக்கல் கவிஞர்:அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24


அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24

Innamburan Innamburan Wed, Aug 24, 2011 at 1:34 AM

அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24
     உங்களுக்கு கருப்பையா பிள்ளையை தெரியுமோ? அம்மணியின் எட்டாவது குழந்தை. இது அம்மா ஆசையுடன் கூப்பிடும் பெயர். அவர் தான் நாமக்கல் கவிஞர். கவிஞர்களில் சிலரின் உரைநடை, கவிதை, அறிவுரை எல்லாம் எளிய நடையில், படோடோபமில்லாமல் இருக்கும் என்பதற்கு பாரதியார், கவிமணி, பாவேந்தன், நாமக்கல் கவிஞர் ஆகியோர் தக்க சான்றுகள். சிறுவயதில் நாமக்கல் கவிஞரின் ‘என் சரிதம்’ என்னை ஈர்த்ததின் காரணம் அதுவே. இயல்பான நடை என்னை கேட்டால், இந்த விஷயத்தில், அவரை முன்னால் வைப்பேன். அவரிடம் ராஜ விசுவாசமும், விடுதலை பற்றும், அவரது கவிதைகளும், ஓவியங்களும் ஒரு சேர இருப்பதைப் போல், முரண் யாதுமில்லாமல், தன்னிச்சையாக வளைய வருவதைக் கண்டேன்.  அக்டோபர்19, 1888 இல் பிறந்த திரு. வெ.ராமலிங்கம் பிள்ளை (நாமக்கல் கவிஞர்) அவர்களை ஆகஸ்ட், 24, 1972 அன்று இழந்தோம். காந்திஜி விதைத்த விதை என்று ராஜாஜி அவரை விமரசித்தது சரியே. சதா சர்வகாலமும் காந்திஸ்மரணை, இவருக்கு. இவருடைய காந்தி மலர் ஒரு நூலன்று. அது ஒரு வாடாத பூச்செண்டு. இது ஒன்று போதும் சமச்சீர்க்கல்வியை, படிப்படியாக அளிக்க.
     வாழ்க்கை விநோதமானது. தந்தை வெங்கடராமனோ காவல் துறை. தேசபக்திக்கான உரம் யாதுமில்லை. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், நல்லிசையும் செவிப்பழக்கம், நாடகமும் நடைப்பழக்கம் என்று இருந்த கவிஞரின் நண்பர் எஸ்.ஜி. கிட்டப்பாவின் ஏழுகட்டை சுருதி தமிழுலகம் அறிந்ததே. அவருக்கு பாட்டு எழுதப்போய், இவரையும் நாட்டுப்பற்று தொற்றிக்கொண்டது. நாகராஜ ஐயங்கார் என்பவரும் இவருடன் சேர, இருவரும் அரவிந்தர் போன்ற சான்றோர்களின் உரைகளை கேட்டு களத்தில் இறங்கினார்கள். நம் கவிஞரின் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. வாசாலகர் இவர் என்க.
     ஒரு உரையாடல்: செட்டி நாடு/காரைக்குடி: 
பாரதியார்: ‘கவி பாடுவீரோ? ஒன்று பாடும்.’
கவிஞர் (அவருக்கு நல்ல குரல் வளம்): "...தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...’
பாரதியார், "பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. "தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...' பலே, பலே இந்த ஓர் அடியே போதும்''.
     நாடு விடுதலை அடைந்தது 1947. சென்னை மாகாண ஆஸ்தான கவிஞர் 1949 இல் பிள்ளைவாள்.1956-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி நிர்வாக உறுப்பினரானார். 1956 முதல் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 1971-ஆம் ஆண்டு பாரத அரசு அவருக்கு "பத்மபூஷண்' விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘அவளும் அவனும்’ ஒரு இனிய காவியம். புதினங்கள் பல எழுதினார். அவரின் ‘மலைக்கள்ளன்’ திரைப்படமாக வலம் வந்தது. இவரை தமிழுலகத்துக்கு அறிமுகம் செய்த பெருமை, ‘தமிழ்ப்பண்ணை’ சின்ன அண்ணாமலையை சாரும். அவரும் அருமையான சொற்பொழிவாளர். கேட்டிருக்கிறேன்.
     மறக்கலாகாது, ஐயா. நாமக்கல் கவிஞர் வேதாரண்ய உப்பு சத்யாக்ரஹத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார் என்பது பெரிய செய்தி அல்ல. உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலொன்றை அவர் இயற்ற, அது இன்றளவும் அஹிம்சையின் இனிய குழலோசையாக அமைந்ததே பெரிய செய்தி.க ேளும்:
’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
     1387.jpg
     இன்று தமிழ், தமிழன், தமிழ்நாடு, தமிழகம், செந்தமிழ், தனித்தமிழ், செம்மொழி, என்று தோள் தட்டுகிறோம்; குரலெழுப்புகிறோம்; வாதங்களில் இறங்குகிறோம், படியில்லா கிணற்றில் சறுக்கியபடி.  
"தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்' 
என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை உதட்டசைத்து மட்டும் பாடுகிறோம். ஐயகோ! அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!
வணக்கத்துடன்,
இன்னம்பூரான்
24 08 2011


Geetha Sambasivam Wed, Aug 24, 2011 at 8:39 PM

அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!//

என்ன அற்புதமான சொல்லாடல்!  ஐயா,உங்களின் இந்த வரிகள் மனதைப்பிழிகிறது.  கேட்பவர் கேட்டால் நன்மை விளையும்.  விளையட்டும். அனைவரும் திருந்தப்பிரார்த்திப்போம்.  நாமக்கல் கவிஞர் குறித்த செய்திகளுக்கு நன்றி. பள்ளிப்பாடத்தில் படித்தது. 


2011/8/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24
   ஐயகோ! அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!
வணக்கத்துடன்,
இன்னம்பூரான்
24 08 2011

No comments:

Post a Comment