அன்றொரு நாள்: டிசம்பர் 2
தோலுரிக்கும் படலம்
‘தற்காலத்து அடிமைபடுத்தும் முறைகள் பலவகையானவை. அவற்றை ஒழிக்க புதிய உத்திகள் தேவை. அரசுகளூக்கு தான் முக்கிய பொறுப்பு என்றாலும், தனியார் துறைக்கும் இந்த அரும்பணி செய்யும் கடமை உளது. ஐ.நா.வின் (மனித உரிமைகளை) ‘பண்புடம் பாதுகாத்து நிவாரணம்’ அளிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை அரசுகளும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயலாற்ற முடியும் என்று மனித உரிமை கழகம் கூறியதை நான் வரவேற்கிறேன்.’
~ ஐ.நா. தலைவர் பான் கீ-மூன்: டிசம்பர் 2, 2011: ‘அடிமை ஒழிப்பு தினம்.
ஆஹா! இன்றைய செய்தி. வரவேற்கட்டும். யார் வேண்டாம் என்கிறார்கள்? எத்தனை உதடுகள் அசையும் தெரியுமா! ஐ.நா.வின் பொது மன்றம் டிசம்பர் 2, 1949 தேதியில் எடுத்த தீர்மானம் 317 (IV) மிகவும் முக்கியமானது தான். பெண்களை கடத்தி வன்முறையால் கட்டாயப்படுத்தி விபசாரிகளாக்கும் கும்பல்களை ஒழிப்பது தான் அதன் இலக்கு. 62 வருடங்கள் ஆன பிறகு, இன்று உலகளவில் அடிமைப்படுத்தும் அபசாரத்தின்/அசிங்கத்தின்/அட்டூழியத்தின் அருவருப்பு அவதாரங்களில் பலவற்றை கண்டு நடுங்கி சாகிறோம். இரண்டு கோடி மக்கள் கொத்தடிமைகள்; நைஜரில் உடலுறவு கட்டாயப்படுத்தப்படுகிறது, மேலும் அடிமை உற்பத்திக்காக; பாகிஸ்தானில் சட்டவிரோதமாக 50 லக்ஷம் கொத்தடிமைகள்; அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து காலணா செலவழிக்கப்படவில்லை; இங்கிலாந்தில் நடந்த மொரெகொம்பே கொத்தடிமைச்சாவில் கொலைவெறி கண்கூடு. எங்கெங்கே பாலகர்கள் ராணுவ உடையில், துப்பாக்கியுடன் போரிடப்பழக்கபடுத்தப்பட்டனர் என்று உங்களுக்கு தெரியும்.
இந்தியா பேடண்ட்: ஜமக்காளம்,கண்ணாடி வளையல்,முறுக்கு,சாயா பாயா,இட்லிமா,கார் ரிப்பேர்,சுண்ணாம்பு காளவாய்~பிடி பசங்களை.அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் அச்சாரம் கொடு. சுற்றத்திலும்,சுற்றுப்புறத்திலும் தரகர்கள்.பொது மக்கள் மறைமுக ஆதரவு.அரசு அசட்டை. கல்ஃப் ஆசையில் கல்ப் ஆன கொத்தடிமைகள் வேறு.உங்களுக்கு மைரான் வீனர் தெரியுமோ? இந்தியாவில் சட்டமும்,அதனுள்ளே உறையும் சட்டவிரோதமும் சிறார்களை படுத்தும் துன்பத்தை பற்றியும் ஆய்வுகள் செய்தவர். கொஞ்சம் பழங்கதை. இது நிற்க.
சில கண்ணீர்துளிகள்;
~ துர்காவதி: உத்தர் பிரதேச காளவாயில். தாங்கொண்ணா பசி. ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தான். வருடக்கணக்காக அடைத்து வருகிறேன். என் ஐந்து வயது பெண்ணும் செங்கல் சுடுகிறாள். கொஞ்சம் சுணங்கினாலும் அடிப்பான். வரேன்.
~ அருண் சிங்: துர்காவதியின் எஜமானன். ஒப்பந்தம் போட்றுக்கோம்லெ. குழந்தைகளும் வேலை செய்கின்றன.கூலியா? சோறு போட்றேனே. அதுவே பெரிசு. அது போகட்டும். காசு கொடுத்தால் தான் நேர் காணல். ஆமாம்.
~ கர்பன் ககாய்: கொத்தடிமை. என் தந்தை வாங்கிய கடன்.வருடங்கள் பல ஆயின. எனக்கு விடிவு காலமும் இல்லை. கூலியும் இல்லை. நான் ஓடிப்போகப்பார்த்தேன். பிடிச்சு அடிச்சுப்போட்டார்கள், அரை உயிருடன்.
~ ஸுப்ரியா அவஸ்தி: தன்னார்வ பணி: உலகில் 27 மிலியன் அடிமைகள். பெரும்பாலும் இந்தியாவில். வல்லுனர்களும், ஆய்வாளர்களும், தன்னார்வப்பணியாளர்களும், தற்கால அடிமைகள் 10 மிலியனிலிருந்து 30 மிலியன் வரை என்கிறார்கள்...30 வருடங்களாக இது சட்டவிரோதம். ஆனால், இந்த ஏழை பாழைகளுக்கு தங்கள் உரிமையை பற்றி ஒன்றும் தெரியாது.
~லால்தி: கொத்தடிமை. ஏழு குழந்தைகளுக்கு நற்றன்னை: ஏழு வருடம் முன்னால், என் புருஷனின் க்ஷயரோகத்திற்கு மருந்து வாங்கக் கடன் வாங்கினேன். தொலஞ்சது. கொஞ்சம் சுணங்கினால், என் முன்னே என் பெண்ணை கற்பழிப்பார்கள்.
̀ரன் விஜய் சிங்க்: மாஜிஸ்ட் ரேட்: ஏழ்மை. ஏழ்மை. ஏழ்மை. நான் என்னத்தை சொல்ல?
~ மீட்கப்பட்ட பத்து வயது ராஜ்குமார்: எனக்கு ஸ்கூலுக்கு போகணும். நல்லவேலை பார்க்கணும்.
~ மத்வாரு: ராஜ்குமாரின் தந்தை: மூன்று தலைமுறைக்கு முன் வாங்கிய கடன். என் சகோதரிகளையும், மகள்களையும் சூறையாடுவான். தட்டிக்கேட்டதற்கு அடித்த அடியில் என்னால் வேலை செய்ய முடியவில்லை. அது தான் ராஜ்குமாரும் அடிமை.
~ இது எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்புக்கொடுமை:பிரபாத்.ஸி. சதுர்வேதி என்ற இந்திய மத்திய அரசின் லேபர் காரியதரிசி (நம்பர் ஒன் போஸ்ட், சார்.) நேர்காணலில் ஸேரா சிட்னரிடம் திருவாய் மலர்ந்தருளியது:
‘எனக்கு வியப்பு ஒன்றுமில்லை.கொத்தடிமை இருக்கிறது.சிறார்கள் கொத்தடிமையும் உளது. அதற்காக ‘அடிமை‘ என்ற சொல் தகாத வார்த்தை. எனக்கு பிடிக்கவில்லை. இது என்ன அடிமை என்ற சொல்? இது ஏழ்மையின் விளைவு. அதை சொன்னால் போதும்.நீங்கள் கேட்பது:‘அடிமைப்படுத்தப்பட்டோம்;அடிக்கிறார்கள். கூலி கிடையாது.பசியால் துடிக்கிறோம்.‘ என்று அலறுகிறார்களே.இது அடிமை நிலை என்று உங்களுக்குப் படவில்லையா?”. என்ன மிகைப்படுத்துகிறீர்கள். நான் அடிமை என்ற சொல்லை உபயோகிக்கவேமாட்டேன்.
எனக்கு இனி எழுதத் திராணியில்லை. படங்களை, விழியங்களை பாருங்கள்.
இன்னம்பூரான்
02 12 2011
Ilegal child labour is widespread throughout India. Today ...
உசாத்துணை:
No comments:
Post a Comment