Monday, December 2, 2013

கூரை இல்லமும் மனநிறைவும் அன்றொரு நாள்: டிசம்பர் 3

இன்றைய அப்டேட்: ராஜன் பாபு குடிசைக்குத் திரும்பினார். மாஜி ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் திருப்பினார். எதை? அரசு சம்பந்தமாக வந்து எடுத்துச்செல்லப்பட்ட பரிசுகளை. ஒரு தர்மஸ்தாபனத்துக்கு இரவல் கொடுக்கப்பட்டு திரும்பியதாக சொல்கிறார்கள். ஆனால், அவர் பதவிக்காலம் முடிந்த போது அள்ளிண்டு போறாரே என்று ஊடகங்கள் கூறின. எது எப்படியோ? ஒருவர் திரும்பினார். மற்றொருவர் திருப்பினார்.


வாழ்க பாரத திரு நாடு.
இன்னம்பூரான்
3 12 2013
சித்திரத்துக்கு நன்றி: http://i.dailymail.co.uk/i/pix/2012/09/26/article-2209088-1538A770000005DC-367_468x324.jpg


அன்றொரு நாள்: டிசம்பர் 3 கூரை இல்லமும் மனநிறைவும்


Innamburan Innamburan 3 December 2011 17:38



அன்றொரு நாள்: டிசம்பர் 3
கூரை இல்லமும் மனநிறைவும்
ராஜன் பாபு மும்முறை காங்கிரஸ் அக்கிராசனராகவும் (1934,1939,1947) நமது அரசியல் சாஸன சபையின் தலைவராகவும் (1946-49), இருமுறை நமது ஜனாதிபதியாக இருந்தவருமான (1952 -62) தேசாபிமானி. ராஜன் பாபு என்று அறியப்பட்ட ‘ தேச ரத்ன’ ‘பாரதரத்ன’ ராஜேந்திர பிரசாத் அவர்களின் ஜன்மதினம் டிசம்பர் 3, 1884. பின்தங்கிய பீகார் கிராமத்தில் பிறந்த ராஜன் பாபு எப்போதும் படிப்பில் முதல். பாட்னா/கல்கத்தாவில் நல்ல வருமானமுள்ள வழக்கறிஞர்; அதை விட்டு விட்டு, காந்திஜியின் தலைமை ஏற்றார், 1917-18 சம்பரான் இயக்கத்தின் போது. 1918ல் ஸெர்ச் லைட் என்ற விழிப்புணர்ச்சி இதழை துவக்கினார். சர்தார் படேல் பர்தோலி இயக்கத்தின் சர்வாதிகாரியாக இருந்தாற்போல், பீகாரில் தொண்டு செய்தார், 1932ல் (சர்வாதிகாரி என்றால் பூரண ஆளுமை தரப்பட்ட தலைவர் என்று பொருள்.) மூன்றாவது முறையாக கைதும் செய்யப்பட்டார்.
ஒரு சான்றோனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சில சொற்களில் கட்டிப்போடும்போது, போனது, வந்ததுக்கெல்லாம் உசாத்துணை கொடுத்து விட்டு, அவருடைய மையக்கருத்துக்களில் ஒன்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். 1946ல் மத்திய அமைச்சராக டில்லிக்கு வரும் வரை ஒரு கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார். 1962ல் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், சிதிலமடைந்த அந்த கூரை வீட்டிற்கே வந்தார். தள்ளாத வயது. அது ஒத்து வரவில்லை. பலஹீனம் வேறு. லோகநாயக் ஜெயபிரகாஷ் நாராயன், நன்கொடைகள் பெற்று, பீஹார் வித்யாபீடத்தில் ஒரு குடில் அமைத்துக் கொடுத்தார். அங்கு தான் ராஜன் பாபு, ஃபெப்ரவரி, 28, 1963யில் உயிர் பிரியும் வரை வாழ்ந்தார். வாழ்க்கைக்குறிப்பு முற்றியது. 
இனி மையக்கருத்து:
அக்டோபர் 11, 1954 அன்று மஹாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துகையில், மனநிறைவு (True Happiness) என்ற தலைப்பில் ராஜன் பாபு நிகழ்த்திய சொற்பொழிவின் சாராம்சம்:

‘...செல்வம் குவித்து நிம்மதி பெற இயலாது என்றாலும் அண்ணல் காந்தி சொன்னாற்போல், ஏழைக்கு சோறு தான் இறை தரிசனம்...பணக்கார நாடுகளில் மன அழுத்தமும், ஏழை பாழைகளின் மனநிறைவும் காணக்கிடைப்பது அதிசயமில்லை...மகிழ்ச்சியின் ஊற்று, உள்மனதிலிருந்து என்பதிலும் ஐயமில்லை. சொத்துசுதந்திரம் எல்லாம் நடைபாதை. இலக்கு அன்று...வெளி உலகம் விதிக்கும் அதீத கட்டுப்பாடுகள் மனநிறைவை குலைக்ககூடும். நாமே நமக்கு உரிய விதிகளை அனுசரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். எனினும் சமுதாயம் நமக்கு பூர்ணசுதந்திரம் தராது. அதன் தலையீட்டை தணிக்க கற்றுக்கொள்வது மனநிறைவை தேட உதவும்...ஸ்தாவர ஜங்கம சொத்துக்கள் நம்மை கட்டிப்போட்டு விடுகின்றன. மனநிறைவையும், ஆன்மீக தேடலையும் அடைய, அவை தடைகளாகி விடுகின்றன. முன்னேற்றத்தின் விலை தனிமனிதனின் சுதந்திரம் என்றால், அது மிகையல்ல... வாழ்க்கைத்தரம், பொருளியல் நோக்கில் உயர, உயர,நாம் மற்றவர்களின் தயவு நாடவேண்டியிருக்கும் என்பது நிதர்சனம். அந்த அளவுக்கு மனநிறைவு குறைந்தும் விடுகிறது...போக்குவரத்து முன்னேற்றம், தேசங்களை அடுத்த வீடுகளாக அமைத்து விட்டது. நல்லது தான். வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களுக்கு விமானமூலம் உணவு அளிக்க முடிந்தது. ஆனால், அமெரிக்காவில் கோதுமை அமோக விளைச்சல் என்றால், இங்கு விலை அடிமட்டத்தில்...உலக சந்தை, தாராளமயம் எல்லாவற்றிற்கும் மறுபக்கமும் உண்டு...என்ன தான் முன்னேற்றமிருந்தாலும், எந்ததொரு பொருளும், உலகமக்கள் எல்லாருடைய தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தியாவதில்லை. அதனால் தான் வாழ்க்கைத்தரம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு படி நிலையில். இதனால் விரோதம் ஏற்படுகிறது...காந்தி மஹான் போற்றும் ‘எளிய வாழ்வியலும், உன்னத சிந்தனையும்‘ தான் நல்வழி...முன்னேறவேண்டும் என்ற ஆசையை நான் தடுக்கவில்லைமனநிறைவுக்கு வெளி உலகத்தை மட்டும் நம்பினால், சண்டையும் சச்சரவும் தான் மிஞ்சும் என்று அஞ்சுகிறேன்...’

வால்மார்ட்டும், ஜன்னல் கோர்ட்டும் படையெடுக்கும் தருணத்தில், இது என்ன பத்தாம்பசலி பேச்சு? இது ஒரு காந்திபக்திமானின் உளரலா என்று கேட்பவர்கள் உளர். நான் அவர்களிடம் சொல்லக்கூடியது, இது தான். தலைப்பு பொருளியலுக்கு அப்பாற்பட்டது. பெரிய விஷயம். ராஜன் பாபு பொருளியலில் முதுகலைப்பட்டம் வாங்கியது 1907ல். கட்டற்ற சந்தை போற்றப்பட்ட காலமது. அதை அவர் போற்றவில்லை என்ற நுட்பம் நோக்குக. அவர் சட்டவல்லுனரும் ஆவார். பொது மக்களுடன் பல்லாண்டுகளாக நெருங்கிய பழக்கம். தொண்டு செய்வதும் வழக்கம். தேசாபிமானி என்பதால், அவர் நாட்டின் நலம் நாடுபவர் என்பதில் ஐயமில்லை. இந்த பின்னணியில் தான் அவருடைய கருத்துக்களை ஏற்கவேண்டும். இவர் காலத்துக்கு முன்னாலேயே மேல் நாடுகளில் க்வேக்கர் இயக்கம் எளிமையை போற்றியது. பல வருடங்கள் கழிந்து 1973ல் வெளி வந்து ஒரு சீடர் கூட்டத்தை அமைத்துக்கொண்ட ‘சிறியதின் அழகு‘ என்ற நூலின் உபதலைப்பு. ‘மக்களை பொருட்படுத்தி’. அதை எழுதிய ஈ.எஃப். ஷூமெக்கெர் பிரபல பொருளியல் வல்லுனர். அவருடைய கருத்துக்கள் மேற்படி சொற்பொழிவுடன் ஒத்துப்போவதை மறக்கலாகாது. ராஜன் பாபுவுக்கும் நேருவுக்கும் கருத்து வேற்றுமை இருந்தது வியப்புக்குரியதல்ல. நாமும், இன்றைய சூழ்நிலையில், மேற்படி கருத்துக்கள் நடைமுறையில் ஒத்துப்போகவில்லை என்றும் அறிவோம். ஆனால், தலைப்பையும், நீல நிறத்தில் உள்ள கருத்துக்களை அலசுபவர்கள், ராஜன் பாபுவின் அணுகுமுறையை புரிந்து கொள்ளலாம்.
நான் சொல்லியதை விட, விட்டுப்போனது அதிகம். ஜனாதிபதியாக இருந்த போது ரூபாய் 1000 தான் மாதாமாதம் பெற்றுக்கொண்டார், ராஜன் பாபு என்றொரு செய்தி; சிக்கனவாழ்வில் ஊறியிருந்த ராஜன் பாபு கருமி போல் பணம் சேர்த்தார்; அதை மாற்றச்சொல்லி நேரு கேட்டுக்கொண்டார் என்றும், ஒரு முரணான செய்தியை, வெகு நாட்களுக்கு முன் ஆதாரத்துடன் படித்த ஞாபகம். நாள் முழுதும்  தேடினேன். இரண்டிற்கும் ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், எத்தனை அருமையான கடிதங்களை படிக்க நேர்ந்தது! நமது தேசபக்தர்களின் கடமையுணர்ச்சியும், இடை விடாத உன்னத உழைப்பும், மக்கள் மீது இருந்த ஆழ்ந்த அக்கறையும், அபிப்ராய பேதங்களும், அதை கடந்த பாணியும் என்னை திக்குமுக்காடவைத்தன. என்றோ ஒரு நாள், அவற்றையும் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்ற அவா என்னை வாட்டுகிறது.
இன்னம்பூரான்
03 12 2011
http://philamirror.info/wp-content/uploads/2010/12/Dr-Rajendra-Prasad-Stamp.jpg

Geetha Sambasivam 4 December 2011 22:05

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
..செல்வம் குவித்து நிம்மதி பெற இயலாது //

...மகிழ்ச்சியின் ஊற்று, உள்மனதிலிருந்து என்பதிலும் ஐயமில்லை.//

இதைத்தான் வேறொரு இழையில் ராஜம் அம்மாவிடமும், செல்வனிடமும் கூறினேன்.  தேவைக்கு மேல் பணம் இருத்தல் நிம்மதியைத் தராது.  பலரையும் பார்த்தாச்சு! 





DEV RAJ 5 December 2011 04:12



>>> .காந்தி மஹான் போற்றும் ‘எளிய வாழ்வியலும், உன்னத சிந்தனையும்‘
தான் நல்வழி...முன்னேறவேண்டும் என்ற ஆசையை நான் தடுக்கவில்லை.
மனநிறைவுக்கு
வெளி உலகத்தை மட்டும் நம்பினால், சண்டையும் சச்சரவும் தான் மிஞ்சும்
என்று
அஞ்சுகிறேன்...<<<

ஸாதா³ ஜீவந், உச்ச விசார் - காந்தியாருக்கும் முன் காலம் காலமாக
நிலவிவந்த
மிக நல்ல கருத்து; கடைப்பிடிக்கவும் ஆசைதான். இன்றைய சூழலில் சாத்தியமா ?
அருமை மகன் வாய்க்குள் திணித்த காட்பரீஸ் ஐஸ் க்ரீமைச் சுவைத்தபடி.....


தேவ்


No comments:

Post a Comment