அன்றொரு நாள்: டிசம்பர் 6
ஆண்டாண்டு தோறும்...
ஆண்டாண்டு தோறும் 1992லிருந்து இந்தியா முழுதும் பீதி நிறைந்த நாளாகி விட்டது, டிசம்பர் 6. அன்றைய தினம் நான் டில்லியில் இருந்தேன். பாபர் மசூதி இடிக்கப்படுவதைத் தொலைக்காட்சியில் கண்டு, மனம் கலங்கி, ஒரு இஸ்லாமிய நண்பரும் நானும், ஒருவரை ஒருவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டோம். சில நாட்கள் கழித்து, பிரயாக் ராஜ் எக்ஸ்ப்ரெஸ் என்ற நீண்டதொரு தொடரான ரயில் வண்டியில், அலஹாபாத் நகருக்கு பயணம் செய்தேன். கிட்டத்தட்ட 21 பெட்டிகள் அடங்கிய அந்தத் தொடரில் ஒரு வண்டியை தவிர, மற்றவை பூட்டிக்கிடந்தன. அந்த வண்டியில் சில அசட்டு பயணிகள், நானும், என் மகளும், போலீஸ், பச்சைக்கொடி/சிவப்புக்கொடி கார்டும், ஒரு இஸ்லாமிய டிக்கெட் பரிசோதகரும், உள்பட. வண்டி ஓட்டியது ஒரு கெத்துக்கு என்றாலும்,எதற்கு அவரை அனுப்பினார்கள் என்று இன்றும் புரியவில்லை. நடுங்கிக் கிடந்தார், அவர். மற்ற ஹிந்து பிரயாணிகள் அவருக்கு உறுதுணை. ஒருவர் மட்டும் அலஹாபாத் இஸ்லாமியர்களை ஒழிப்பது பற்றி உறுமிக்கொண்டிருந்தார். கான்பூர் ஸ்டேஷன் வரும்போது, கிலி கூடியது. ஸ்டேஷனில் கொலை நடப்பதாக வதந்தி இருந்ததால். எப்படி தான் ரயிலை ஓட்டிச்சென்றார்களோ!
அலஹாபாத்தில், பலத்த காவலுடன் அழைத்துச் சென்றார்கள். போலீஸ் அதிகாரிகளுடன் நட்பு கெட்டித்தது. அதன் பயனாக, மிக்க தயக்கத்துடன், எங்களை நடுநிசி ரோந்து போகும் போது, கூட்டி சென்றனர். இது எனக்கு தெரிந்த அலஹாபாத் இல்லை;பிரயாகை இல்லை. திரிவேணி சங்கமம் இல்லை. சுலைமானும், சின்ஹாவும், முக்கர்ஜியும், கணபதியும் நண்பர்களாக இருக்கும் ஆஃபீஸ். ஒரு கிருஷ்ணன் கோயில், ஒரு இஸ்லாமிய தொழுகை மன்றம் அங்கே உண்டு. இத்தனைக்கும் பத்தாம்பசலியூர். ஃப்யூடல். ஆனால், ஒரு சமபந்தி போஜனம், நடுவில். இன்றோ நடுநிசியில் அபாயம், கத்ரா என்ற பேட்டையில். கத்ரா என்றாலே, அபாயம் என்று பொருள். ஒரு அலறல். ஒரு முனகல். ஒரு ‘சதக்’. ஒரு தோட்டா விர்ரென்று பறக்கிறது. போலீஸ் புலிப்பாய்ச்சல். இனி இதை பற்றி பேசப்போவதில்லை. காழ்ப்புணர்ச்சி, பட்டி மன்றம், விதண்டா வாதம், சறுக்கும் சர்ச்சை: இதற்கெல்லாம் ஹேதுவாக இருக்க விருப்பமில்லை. ஒரு டைம் லைன், வரலாற்று நோக்கில். அத்துடன் சரி.
1528: பாபர் மசூதி கட்டப்படுகிறது; அது ஶ்ரீராமனின் ஜன்மஸ்தலம் என்று சில ஹிந்துக்கள் நம்புகிறார்கள்.
1853: அவ்விடத்தில் சமயம் சார்ந்த வன்முறை, முதல் தடவையாக பதிவு ஆகிறது.
1859: கலோனிய அரசு பிரிவினை வேலி எழுப்பி, ஹிந்து/முஸ்லீம் பகுதிகளுக்கு எல்லை வகுக்கிறது.
1949: மசூதிக்குள் ஶ்ரீராமன் சிலை. முஸ்லீம் கண்டனம். கோர்ட் கேஸ் இரு தரப்பிலிருந்தும்; வம்பு எதற்கு என்று அரசு பூட்டி விடுகிறது.
1984: விஸ்வ ஹிந்து பரிஷத், புனித இடத்தை விடுவித்து கோயில் கட்ட, ஒரு கமிட்டி அமைக்கிறது. தலைமை திரு. லால் கிருஷ்ண அத்வானியிடம் போய் விடுகிறது. அவர் பி.ஜே.பி. முன்னணி தலைவர்களில் ஒருவர்.
1986: கேட்டை திறந்து ஹிந்துக்கள் ஶ்ரீராமனை வணங்க, கோர்ட்டார் அனுமதி. முஸ்லீம் எதிர்ப்பு கமிட்டி.
1989: விஸ்வ ஹிந்து பரிஷத் மசூதிக்கு அருகில் கோயிலுக்கு அஸ்திவாரம் போடுகிறது.
1990: விஸ்வ ஹிந்து பரிஷத் வாலெண்டியர்கள் மசூதியை கொஞ்சம் உடைத்து விடுகிறார்கள். பிரதமர் சந்திரசேகரின் சமாதான முயற்சிகள் தோல்வி.
1991: அயோத்யா இருக்கும் உத்தர் பிரதேசத்தில் பி.ஜே.பி. ஆட்சிக்க்கு வருகிறது.
1992: டிசம்பர் 6 நிகழ்வு. நாடு முழுதும் கிளர்ச்சி. இரண்டாயிரம் பேர் மரணம்.
1998: அதுல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள் தலைமையில், மத்தியில் பி.ஜே.பி.யின் கூட்டரசு.
2001: டென்ஷன் கூடுகிறது. வீராவேசப்பேச்சுக்கள்.
2002: ஜனவரி: பிரதமர் சமாதான பேச்சு வார்த்தைக்கு வகை செய்கிறார். ஃபெப்ரவரி: அனல் பறக்கிறது. குஜராத் கோத்ரா ரயில் தாக்குதல். 58 ஹிந்து ஆர்வலர்கள் பலி. மார்ச்: குஜராத் இனவெறி தாக்குதல்களில், 1000/2000 மக்கள் பலி. பெரும்பாலும் இஸ்லாமியர். ஏப்ரல்: யாருக்கு சொந்தம்? உயர்நீதி மன்ற விசாரணை.
2003: ஜனவரி: கோர்ட்டார் ஆணைப்படி, ஶ்ரீராமன் கோயிலை தேடி அகழ்வாராய்ச்சி. ஆகஸ்ட்: கோயில் இருந்ததாக சாட்சியம். அதை இஸ்லாமியர் ஒத்துக்கொள்ளவில்லை. ஹிந்து ஆர்வலர் ராமசந்திரதாஸ் பரமஹம்ஸின் இறுதி ஊர்வலத்தில் கோயில் கட்டுவதாக பிரதமர் வாக்கு. அதே மூச்சில் கோர்ட்டு தீர்மானிக்கட்டும். பேச்சு வார்த்தைகள் ஜெயிக்கட்டும் என்ற பேச்சு. செப்டம்பர்: கோர்ட், மசூதி தாக்குதலுக்கு ஏழு ஹிந்து தலைவர்கள் மீது வழக்கு என்று. அத்வானி மேல் கேசு போடவில்லை.
2004: அக்டோபர்: அத்வானி கோயில் கட்டப்படும் என்று சாதிக்கிறார். நவம்பர்: கோர்ட்டார் அத்வானிக்கு கொடுத்த விதி விலக்கு சலுகையை மீள்பார்வை செய்யவேண்டும் என்கிறது.
2005: ஜூலை: இஸ்லாமியர்? தாக்குதல். போலீஸ் ஆறு பேரை சுட்டுத் தள்ளியது, பயங்கரவாதம் என்று சொல்லி.
2009: ஜூன்:மசூதி இடிக்கப்பட்டதை விசாரித்த லிபெர்ஹான் கமிஷன் 17 வருடங்களுக்கு பிறகு, அறிக்கை சமர்ப்பித்தது. நவம்பர்: நாடாளுமன்றத்தில் அந்த அறிவிக்கையை பற்றி அமளி.
2010: அலஹாபாத் உயர் நீதிமன்றம் பாகப்பிரிவினைக்கு ஆணையிட்டது. மூன்றில் ஒரு பாகம் ( மசூதி இருந்தவிடம் உள்பட) ஹிந்துக்களுக்கு, மூன்றில் ஒரு பாகம் இஸ்லாமியருக்கு; மூன்றில் ஒரு பாகம் நிர்மோஹி அக்காடா என்ற சன்யாசி அமைப்புக்கு. இஸ்லாமியர் அப்பீல் செய்யப்போவதாக சொன்னார்கள். பின் குறிப்பு நோக்குக.
2011: ஏப்ரல் 12: ராமநவமி விமரிசையாக, அயோத்தியில். திருவிழாக்கூட்டம், பல வருடங்களுக்கு பின். நல்லிணக்கம். இஸ்லாமியர் தண்ணீர்பந்தல் வைக்கிறார்கள். தன்னார்வப்பணியிலும்.
உபரிச்செய்தி: அபரிமித நல்லிணக்கம்: அயோத்தியில் ‘அம்மாஜி மந்திர்’ தெரியுமோ? ஶ்ரீ ராமசாமி கோயில். உத்ஸவர் திருப்பாற்கடலிலிருந்து, ஒரு மாதரசியின் கனவை பூர்த்தி செய்ய 1904ல், ஶ்ரீ யோகி பார்த்தசாரதி ஐயங்கார் ஸ்வாமிகளால், அயோத்திக்கு எழுந்தருளப்பட்டவர். காதிலெ விழறதா,ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்? முனைவர். வேங்கடகிருஷ்ணன் அவர்களின் மூதாதையர் என்று நினைவு. கோயில் அறங்காவலர்கள் 1992க்கு பிறகு,ஶ்ரீராம நவமி கொண்டாட தயங்கினார்கள். கோயிலுக்கு பரம்பரையாக புஷ்பம் தருபவர்கள், தாங்கள் பாதுகாப்பு தருவதாக, ஊக்கம் அளித்தனர். அவர்கள் அனைத்தும் இஸ்லாமியர். விழாவும் விமரிசையாக நடந்தேறியது என்று படித்ததாக ஞாபகம்.
இன்னம்பூரான்
06 12 2011
பி.கு: ஏதோ ஒரு சிக்கல். தீர்வு கிடைக்கலாகாது என்று கங்கணம் கட்டிக்கொள்கிறார்கள், வாதி ~ பிரதிவாதிகள். சிக்கல்கள் பலவற்றை தருவித்து, உணர்ச்சிப்பெருக்கால், நெருக்கமாக பின்னி, ‘ஐயோ சாமி! அவிழ்த்து விடுங்கோ’ என்று கனம் கோர்ட்டாரிடம் போயி, தாக்குதல்களை தாக்கல் செய்து, ஒத்திப்போடவைத்து, அதற்குள் மொத்திக்கொண்டு, அப்பீலுக்கு மேல் அப்பீல்! ஆண்டவா! உசாத்துணை 4: கோர்ட்டு சமாச்சாரம் முச்சூடும். சுருக்கமா எழுதினாலே, ஆயிரம் பக்கம். முதல் சில வரிகள் மட்டுமிங்கே: “...1500 சதுரகஜம். சின்ன இடம். தேவர்கள் நடக்க அஞ்சுமிடம். எக்கச்சக்கப் பொறிகள்... சில சான்றோர்கள்,‘போகாதே! போகாதே! நீதியரசே! சுக்குநூறாகிச் செத்துப்போவாய் என்றார்கள்...”
ஹூம்! சொல்றத்துக்கு எக்கச்சக்கமாக இருக்கு, சிக்கல்களும், முடிச்சுகளும். ஆனா ஒண்ணு. இரு தரப்பினரும் சுமுகமாக கும்பிட்டு வந்தனர், ஆண்டாண்டு தோறும். அதை சொல்ல வேண்டாமோ?
இ
babri masjid verdict
உசாத்துணை:
No comments:
Post a Comment