அன்றொரு நாள்: டிசம்பர் 11
ஒளி படைத்தக் கண்ணினாய்!
இன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதி அவர்களின் ஜன்மதினம். இணைய தளத்தில் பலர் அவருடைய புகழுரைப்பார்கள். செப்டம்பர் 11, 2011 அன்று யான் ‘‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;...’ என்று இறை வணக்கம் செய்து, ‘பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி...’ என்று குரு வந்தனம் செய்து,
‘வந்தாரே அமானுஷ்யன்;
சட்டையில் காலரில்லை;
ஆனா டை கட்டி தொங்குதடா,
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு,
தோளின் மேல் சவாரி,
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே.
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல.
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு.
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே!
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு?
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா?
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு?
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா;
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி! ஆதி பராசக்தி!
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி.
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!
என்று கவி வந்தனம் செய்து, ‘பராக்! பராக்!’ என்று சல்யூட் அடித்து, அஞ்சலி செய்ததை மீள்பதிவு செய்து விட்டு, சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். 1930-40களில் பாரதியார் வாசம் மாணவர்கள் நாவில். அவருடைய பாடல்கள் ஸ்ருதி தான். படிக்கக்கிடைக்காது.
நான் சொல்வது எந்த அளவுக்கு இன்றைய சூழ்நிலையில் புரியும் என்று தெரியவில்லை. மதிப்புக்குரிய தமிழாசிரியர் வி.ஜி.ஶ்ரீனிவாசன், பாலு சார், தலைமை ஆசிரியர் யாகூப் கான் போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்தது. பாலு சார், எமது சூத்ரதாரி. அவருடைய எதிரொலியாக திலகர் மைதானத்தில் கர்ஜித்தேன், பாரதி கீர்த்தியை. வி.ஜி.எஸ். தந்தையின் நண்பர். ரொம்ப அன்யோன்யம் என்று நினைக்கிறேன். அவருடைய இல்லத்தில் என் அம்மா பால் காச்சியதும், அதிலிருந்த பால் ஏடு வாங்கி ருசித்ததும் மட்டுமே பாலப்பருவத்திலிருந்து இன்று வரை நினைவில் இருக்கிறது. அப்பா அடிக்கடி பாரதியாரை பற்றி வி.ஜி.எஸ் சொன்னதாக, அவ்வப்பொழுது சொன்னது மனதில் தங்கியிருந்திருக்கலாம். தலைமை ஆசிரியரோ எங்களை எங்கள் போக்கில் விட்டதே பெரிய ஸ்வாதந்தர்யம். அதற்கான வலியையும் பொறுத்துக்கொண்டார். எங்கள் ஹீரோ.
ஆம். ஒரு பிற்போக்கான கிராமத்தில், பின் தங்கிய சமுதாயத்திற்கான ஏழைகளின் பள்ளியில், ‘என்னா ப்ரதர்!’ என்ற உறவே துலங்கும் மாணவருலகத்தில் பீடு நடை போட்டு, வீறாப்புடன் நடந்த கவிஞன் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். எங்களை உய்விக்க வந்த மஹானுபவன். ஒளி படைத்த கண்ணினான்.
60 வருடங்களுக்கு மேல் கடந்தன. புதுச்சேரியில் மஹாகவி வாழ்ந்த இல்லத்தை அங்குலம் அங்குலமாக யான் அனுபவிக்கும் வேளையிலே, இரு சம்பவங்கள். ஒரு பெண் எம்.லிட். ஆய்வு செய்கிறாளாம். நூலகத்தில் உள்ள நூல்களை படித்து வந்தாள். ஏடுகள் காற்றில் பறக்காமல் இருக்க, ஒரு கல்லை அதன் மேல் வைத்தாள். மடிந்த பக்கம் லேசாகக் கிழிந்தது. நான் அவளை கோபித்துக்கொண்டேன். அங்கு ஒரு விசிப்பலகை. அதில் அமர்ந்து தான் மொட்டை மாடியில், மஹாகவியும், நண்பர்களும் அளவளாவினர். அந்த விசிப்பலகையில் ஒருவர் அமர, நான் அவரை எழுந்திருக்கச் சொன்னேன், கறாராக பேசி. அவர் ஒத்துக்கொண்டார். ஆனால், அந்த இல்லத்தை பராமரிப்பவர்கள் தங்களால் அத்தனை கண்டிப்பாக பேச முடியவில்லை என்றும், பார்வையாளர்கள். கேட்கமாட்டார்கள் என்றும் சொன்னார்கள். அங்கு வாங்கிய பாரதியார் நூல்களை, எங்கு வாங்கியவை அவை, ஆங்கிலேயனை அவர் விமர்சித்த முறை, வின்ச் துரையெல்லாம் சொல்லி, போர்ட்ஸ்மத் நூலகத்துக்கு அன்பளிப்பாகக்கொடுத்தேன்.
எது எப்படியோ! மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் தயவில், அவர் பெயரில், ஒரு புரட்சி நிகழவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
இன்னம்பூரான்
11 12 2011
No comments:
Post a Comment