“ உண்டியலில் போட்ட காசு குலுங்கும்போதே, இறந்தவரின் ஆவி நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கு பறந்தோடி விடும்.” ~ ஜோஹான் டெட்செல்: கத்தோலிக்க மதகுரு.
“ உலக செல்வந்தர்களில் முதன்மை வகிக்கும் போப்பாண்டவர் புனித பீட்டர் தேவாலயம் கட்ட தன் பணத்தை செலவழிக்காமல், ஏழை விசுவாசிகளிடம் நன்கொடை கேட்பதேன்?”
~ மார்ட்டின் லூதர்: சமய புரட்சி செய்த ஜெர்மானிய மதகுரு
ஒரு சுரங்கத்தொழிலாளிக்கு நவம்பர் 10, 1483 பிறந்த மார்ட்டின் லூதர் சமயநெறியில் ஆழ்ந்த கவனம் செலுத்தி, அகஸ்டினியன் மடத்தில் 1505ல் சேர்ந்து, 1507ல் தீக்ஷை பெற்று, 1512 ல் சமயநெறி என்ற துறையில் பண்டாரகர் விருது பெற்றார். அதற்கு முன் 1510ல் ரோமாபுரிக்கு சென்ற போது கத்தோலிக்கத் தலை நகரமான வாடிகனில் இருக்கும் ஊழல் கண்டு திகைத்துப் போனார். ஊழலின் ஊற்று: காசு கொடுத்தால் பாவமன்னிப்பு. இறந்தவருக்கும் கிடைக்கும். இருப்பவருக்கும் கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷத்துக்கு பசுமாட்டை தானம் கொடுக்கும் பரிகாரம் போல. (ஹிந்து மதத்தினர் கருமாதி செய்யும்போது ‘கோதானம்’ என்று காசு தானம் செய்வது நடப்பு.) அதற்கும் ஜோஹான் டெட்செல் அவர்களின் பட்டியல் வேறு. கிட்டத்தட்ட, ‘வருங்கால பாபிகளே! அஞ்சேல். இனி செய்யப்போகும் அட்டூழியங்களுக்கு அச்சாரம் கட்டினால், பாவமன்னிப்பு உத்தரவாதம்’! என்பது போல. தாங்கொண்ணா சினம் எழ, மார்ட்டின் லூதர், இந்த அவலங்களை கண்டித்து ’95 ஆக்ஷேபணைகள்’ என்ற நூலை 1517ல் எழுதினார். கிருத்துவர்களை காப்பாற்றுவது தெய்வநம்பிக்கை மட்டுமே என்பதில் உறுதியாக இருந்த மார்ட்டின் லூதர், பல நூல்களை எழுத, அச்சு இயந்திரம் வந்து விட்டதால், அவை பிரபலமாகி விட, போப்பாண்டவரின் சினம் தலை தூக்கியது. போப்பாண்டவரின் மடல்களுக்கு ‘புல்’ (Bull) என்று பெயர். அத்தகைய ‘புல்’ ஒன்றில் மார்ட்டின் லூதர் தன் கொள்கைகளில் 41 கொள்கைகளை கைவிடவேண்டும் என்று கட்டளையிட்டு, விதித்த கெடு முடிந்த தினம், டிசம்பர் 10, 1520. மார்ட்டின் லுதரும், ‘ஆண்டவனின் வாய்மையை குலைத்தாய் நீ ( போப்); இன்று அவரு உன்னை குலைக்கிறார்’ என்று மந்திரமோதி, அந்த மடலை அக்னி தேவனுக்கு ‘ஸ்வாஹாஹா’ செய்து விட்டார். 1521ல், போப் லியோ~10 மார்டின் லூதரை வெளியேற்றினார். இவரும் அவர்களின் சொல்லை மதிக்கவில்லை. மன்னன் சார்லஸ் ~5 இவரை நாத்திகன் என்று பிரகடனப்படுத்தி நாடு கடந்து ஓடி ஒளிய வைத்தான். 1522 ல் திரும்பிவந்து ஒரு கன்யா ஸ்திரியை மணந்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்தினார்.
ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா!குடியானவர்கள் ஒரு கிளர்ச்சி செய்தார்கள். அதன் தலைவர்கள் இவருடைய வாதங்களை திறனுடன் முன்வைத்து கிளர்ச்சியை நியாயப்படுத்தினர். இவரோ ப்ளேட்டை மாற்றி வாசித்தார். அவர்களை ஆதரிக்கவும் இல்லை. அரசாங்கம் கிளர்ச்சியை நசுக்குவதை ஆதரித்தார். அதன் விளைவாக, இவருக்கு ஆதரவு குறைந்தது. போதாக்குறையாக, நியாயமின்றி யூத சமுதாயத்தைத் தாக்கத் தொடங்கினார், தன் இறுதி நாட்களில்.
என்ன தான் இருந்தாலும், அவருடைய இறை நம்பிக்கை, ஊழலெதிர்ப்பு, விவிலியத்தை ஜெர்மானிய மொழியில் எளிமை நடையில் எழுதி, பாமரமக்களின் இறை நம்பிக்கையை வளர்த்தது, ஜெர்மென் மொழியே, இதனால் அடைந்த நற்பயன், உலக அளவில் சிந்தனையை தூண்டிய கம்பீரம் ஆகியவற்றை போற்றத்தான் வேண்டும்.
இவருடைய சமய புரட்சி ஐரோப்பாவின் அரசியல் வரலாற்றின் தடத்தை மாற்றியது.
இன்னம்பூரான்
10 12 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment