அன்றொரு நாள்: நவம்பர் 2
லக்ஷதீபம்
.நூறு ஒத்தையடி பாதைகள் (’śatapatha brāhmaṇa:शतपथ ब्राह्मण) என்ற ஷுக்ல யஜுர்வேத சம்பிரதாய/சடங்கு தத்துவ போதனையின் 211 வது ஸ்லோகத்தை என்னால் இயன்ற அளவு, எளிய தமிழில்: ஒரு உரையாடல்: மனம், சொல், குருநாதர்(பிரகஸ்பதி).
ம: யானே உன்னதம்!
சொ: யானல்லவோ உன்னதம்!
ம: எனக்கு புரியாததை நீ பேசமாட்டாய்; என்னை பிரதிபலிக்கத்தான் உன்னால் இயலும்; என் வழி நடப்பது உன் இயல்பு. யானே உன்னதம் என்பது திண்ணம்.
சொ: என்ன பேச்சு இது? நீ அறிந்ததை, நானல்லவோ சொல்லி பரப்புகிறேன். நானில்லாமல் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லை. யானே உன்னதம் என்பது திண்ணம்.
[இருவரும் பிரகஸ்பதியிடம் மத்யஸ்தம் நாடுகின்றனர்.]
பி. (சொல்லை நோக்கி) மனம் உன்னை விட உன்னதமானது.’நீ வெறும் கண்ணாடி; விளக்கு அன்று. மேலும் மனம் போன போக்கில் தான் பேசுவாய்.’ (இது என் எழுத்து: மொழிபெயர்ப்பு அல்ல). நீ தாழ்ந்தவன் தான். ஐயமே இல்லை.
[இனி வேறு விஷயம். எதற்கும் பின் குறிப்பு நோக்குக].
*
நினைவிலிருந்து: ஆந்திராவில் திவி என்ற இடத்தில் கடல் கொந்தளித்தது;புயல்;வெள்ளம்; நூற்றுக்கணக்காணவர்கள் துர்மரணம்; அங்க அடையாளங்கள் கூட கிடைக்கவில்லை. கலவை என்ற குக்கிராமத்தில் இருந்த மஹா பெரியவா, நடு இரவில், தீடீரென்று நடக்கத்தொடங்கினார். மற்றவர்கள், அடித்துப்பிடித்துக்கொண்டு கூடோடி வர. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயிலில் லக்ஷதீபம் ஏற்றி துவக்கினார். துர்மரணம் அடைந்தோரின் சாந்திக்கு விளக்கேற்றினார் என்றார்கள்.
*
தர்ப்பணம் ஒரு நீத்தோர் கடன். அதில், முன்பின் தெரியாதவர்களுக்கும், தனது மூதாதையர்களுக்குப் போல, மந்திரம் ஓதி தொழுகை. வருடாந்திர சடங்கு, திதி, ச்ரார்த்தம், தெவசம், திருவத்யானம், கல்லறை வணக்கம், கீழவெண்மணி சாராயப்படையல், நினைவாஞ்சலி எல்லாம் பன்முகம் கொண்ட ஒரே முகம்.
*
‘யோக மந்திரம்’ ஸ்தாபகரும், தற்கால யோகாப்பியாச குருநாதரும், 101 வருடம் வாழ்ந்த சான்றோன் திரு. கிருஷ்ணாமாச்சாரியார், சாங்கோபாங்கமாக, சம்பிரதாயம் தழுவி, இம்மி அளவும் பிசகாமல், தாராளமாக செலவு செய்து தன் பெற்றோர்களுக்கு திருவத்யானம் செய்வார். ஸர் அஷுதோஷ் முக்கர்ஜியின் அணுகுமுறையை பற்றி சொல்லியிருக்கிறேன். மற்றொரு வைணவ சான்றோன், தன் உடலை, தானம் செய்து விட்டார். பகவத் கீதையில் சொன்னபடி பார்த்தால், அது தவறாகப்படவில்லை. தற்காலம், இந்த நீத்தோர் கடன் வணிக மயம்.
*
இவ்வுலகில் பிறந்து, மறைந்தவர்களில் பெரும்பாலோருக்கு எந்த விதமான நினைவாஞ்சலியும் கிடையா. அவர்களோ, அவர்களின் சந்ததியோ எதையும் இழந்ததாகத் தோன்றவில்லை.
*
இந்த பீடிகை எதற்கு என்றால்?
நவம்பர் 2ம் தேதி, உலகின் பல பாகங்களில், நீத்தார் தொழுகை தினமாகக் கருதப்படுகிறது; வணங்குதல், விழா,படையல் எல்லாம். சைனாவில் ஆவிகளுக்கு விருந்தும் விழாவும்;ஜப்பானில் ‘உல்லம்பன’ (சம்ஸ்க்ருதத்தில் ‘தலைகீழ்’) விழா; ரோமானியர்களின் ‘லெமூரியா” (‘ நிம்மதியிழந்த ஆவிகள்) சடங்கு; டைரால் பகுதியில், கேக் செய்து வைக்கிறார்கள்;பிரட்டனியில் கல்லறைக்கு பாலபிஷேகம்; பொலீவியாவில் கல்லறையில் படையலை வைத்துச்செல்வது; பிரேசில் புஷ்பாஞ்சலி; மால்டாவில் சொந்தபந்தம் என்று மட்டுமில்லாமல் மயானங்களுக்கு யாத்திரை. கிருத்துவ மதம் ‘புனிதர்கள் தினம்’. ‘ஆவிகள் தினம்’ என்று உண்டு. அன்று ஆவிகள் சுற்றத்துடன் விருந்துண்ண வருவதாக ஐதீகம். வழி காட்ட மெழுகுவர்த்திகள் ஏற்றி வைப்பார்கள். ஆனால், மெக்சிகோவில் நடப்பதே வேறு.
*
மெக்சிகோவில் கத்தோலிக்கக் கிருத்துவத்தின் தாக்கம் அதிகம். அவர்கள் நவம்பர் 1 & 2 Día de los Muertos என்ற நீத்தோர் தினம் கொண்டாடும் விதம் அலாதி: தனி தனி பிரார்த்தனை கருவறைகள், சர்க்கரையில் உருவாக்கிய மண்டையோடுகள், அரளிப்பூ மாலைகள், படையல் இத்யாதி. ‘கலகாஸ்’ எனப்படும் மரக்கட்டையால் செய்யப்பட்ட மண்டையோடுகளை அணிந்து, நீத்தார் அருமை சாற்றி நடனம், அவற்றை பூஜிப்பது, சர்க்கை மண்டையோடுகளை உற்றார் உண்பது என்றெல்லாம் சடங்குகள் நடக்கின்றன. அமெரிக்காவில் அரிஸோனா பல்கலைக்கழகத்தில் கூட இவையெல்லாம் காணலாம்.
விஷயத்துக்கு வருகிறேன். சைனாவில் டாவோயிஸ்ட், பெளத்த சமயங்கள், ஜப்பானில் ஷிண்டோ, பெளத்த சமயங்கள், இந்தியாவில் சனாதனம், புராணம், கூடவே வளர்ந்த ஹிந்து மதம், கிருத்துவ மதம், தாஜ் மஹால் அஞ்சலியையும், ஆஜ்மீர் தர்கா, ஹாஜ் தொழுகையையும் போற்றும் இஸ்லாமியம் ஆகிய சமயம் சார்ந்த நீத்தார் சடங்குகளுக்கு, பல்லாயிரம் வருடங்கள் முன்னாலிருந்து பழங்குடி மக்கள், இந்த ‘பன்முகம் கொண்ட ஒரே முகமான’ நீத்தார் பொருட்டான சடங்குகளை, விமரிசையாக, அற்புதமாக ‘மனம் போன போக்கில்’
நேர்த்தியாக, அதீத அழகுடை கற்பனையோடு நடத்தி வந்திருக்கிறார்கள் என்று இந்த மெக்சிகொவின் Día de los Muertos விழா கூறுகிறது. கிருத்துவ சமய வெறியுடன் அங்கு வந்த ஸ்பானியர்கள், மரணத்தை வாழ்வின் முடிபு என்றனர். மெக்சிகோ பழங்குடிகளோ அதை வாழ்வின் அடுத்த படி என்று தழுவினர். ஆக மொத்தம், கிருத்துவ மதம் இந்த விழாவை தத்து எடுத்துக்கொண்டு, தந்திரமாக, விழா நாளையே கிருத்துவ விழா தினத்தில் பொருத்திக் கொண்டது. பேராசிரியர் கான்ஸாலவஸ் சொல்கிறமாதிரி, பழங்குடிகள் வலியிலிருந்து மரணத்தை, செல்வத்தை ஏழ்மையிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை. எல்லாமே ஒரு தொடர்கதை தான். மூவாயிரம் வருடங்களுக்கெல்லாம் முன்னாடியே, ‘‘மீக்-டெகா-கீ-வாடி’ என்ற கொற்றவையை வணங்கினார்கள், அவ்விடத்து அஸ்டெக் பழங்குடி மக்கள். அவள் தான் நீத்தார் எலும்புகளை பாதுகாப்பவள். விழாத்தலைவி அவளே. அவளுடைய சிலையில் சதைப்பற்று இல்லை. விண்மீன்களை விழுங்குபவள். எனவே திறந்த வாய். ஒரு ஐயம். நம்மூர் பச்சைக்காளி, பவளக்காளி, ஹிந்து மதத்திற்கு முந்தியவளா?
இன்னம்பூரான்
02 11 2011
பி.கு: இம்மாதிரி விஷயங்களை பேச நிறைய படிக்க வேண்டும். எழுத வேண்டும், பக்கம் பக்கமாக. இன்று அந்த தொடர்கதையின் ஒரு துளி தான் சொட்டியது. சில நாட்களாக தொன்மை (Mythology, Myths, ‘சிந்தனை செய்யாதே, மனமே’) என்னை ஆட்கொண்டு விட்டது. இயன்றவரை, மற்றவர்களுக்கு ஆர்வமிருந்தால் பகிர்ந்து கொள்கிறேன். கற்றுக்கொண்டே எழுதுவதால் ‘மானஸ தோஷ க்ஷந்தவ்யஹ’. தவறு இருந்தால், திருத்துங்கள். திரு. தேவ் படிக்க நேர்ந்தால், அவரிடமிருந்து शतपथ ब्राह्मण பற்றி மேலதிக விஷயதானம் கிடைக்கலாம்.
உசாத்துணை:
No comments:
Post a Comment