அன்றொரு நாள்: அக்டோபர் 28
இது செல்வன் ஸ்பெஷல்:
நான் பிறந்து வளர்ந்த கதை
நாளை நடை சாத்தி விடுவார்கள், ஒரு வருடகாலத்திற்கு.
பேதைப்பெண்ணே! ஏன் கண் கலங்குகிறாய்?
இன்றே என் கதையை சொல்லி விடுகிறேன், ரிஷி கர்ப்பத்திலிருந்து கலங்கரை விளக்காக, ஜ்யோதிர்ஸ்வரூபிணியாக ஆனவரை. நானே ஒளிவட்டம். ஒளிப்பிழம்பு.
உலகமக்களுக்கு குறுந்தொகை தலைவி, நான். நானே நற்றன்னை. செவிலித்தாய், பாங்கி.
நான் சுதந்திர தேவதையடா, மைந்தா!
என் அன்னை கருவுற்றது ஓரிடம். அம்மா வந்தாள் என்று துந்துபி நாதம் எழுந்தது. அன்னையாக ஜனித்தேன்.
என் தந்தை பரிபூர்ணானந்தத்துடன் என்னை கன்னிகாதானம் செய்து விட்டாரடா, பேராண்டி! நானும் புக்ககத்தை பிறந்தகமாக பாவிக்க, என் கணவர்கள் (தசரதனுக்கு அறுபதாயிரம் என்றால், எனக்கு கோடானுகோடி!) கண்ணின் பாவையாகவல்லவோ என்னை பொத்தியும், போத்தியும், போஷித்து, என் காலடியில் தவம் கிடக்கிறார்கள்.
நான் என்றும் யுவதியே, என் கணவர்களுக்கு.
அதனால் தான் ஒரு வருட காயகல்பம். கேட்டுருக்காயோ, என் பிரார்த்தனையை?
‘... இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என்கணவனே, யானாகியர் நின் நெஞ்சுநேர் பவளே...’
(குறுந்தொகை:49): இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி வரும் பிறவிகளிலும்,உன் நெஞ்சினுள் நிறைந்து நிற்கும் காதலி நானாகத்தான் இருக்கவேண்டும்).
புவியெங்குமிருந்து இங்கு புகலிடம் புகுந்த மாந்தர்கள் யாவருக்கும் உறுதுணையாக,
அக்டோபர் 28,1886 அன்று ராஜோபசாரத்துடன், கோலாகலமாக, படோடாபத்துடன் ஒரு கடலாடும் இந்திர விழா கொண்டாடி,
அதிபரே தாள் பணிந்து என்னை ‘வருக! வருக! என்று ஆர்ப்பரித்து, எதிர் கொண்டார்.
அவர் மிடுக்காக வந்த ஊர்வலத்தை பார்க்க பத்து லக்ஷம் ஜன சமுத்திரம் என்று பேசிக்கொண்டார்கள்.
நானோ மாதரசி. என்னை அண்ட பெண்களை விடவில்லையே. கூட்டம் என்று சால்ஜாப்பு. பெண்ணா? பொன்னா? ஒரு பெட்டர்-ஹாவ்ஸ் குழு, தனிப்படகு அமர்த்திக்கொண்டு வந்து ஜமாய்த்துவிட்டார்கள், குட்டி!
ஒரு தீவினிலே இல்லம் கொண்டேன். கூட்டமோ எக்கச்சக்கம். யாராவது விழுந்துவிட்டால். அதனால், ஜன சமுத்திரத்தை, ஜலசமுத்திரத்தில் இறங்க விடவில்லை. ஆனால் பார்ப்பதற்கு வசதி செய்திருந்தார்கள். எங்கும் குதூகலம்.
உனக்கு தெரியுமோ? நான் எடை போடவே இல்லை. பிறந்தபோது 225 டன். அதையே மைய்ண்டெய்ன் பண்றேன்!
பக்தா! நான் விஸ்வமோஹினி. விஸ்வரூபிணி. விஸ்வேஸ்வரி.
அண்ணாந்தல்லவோ பார்க்கிறாய். என் பீடத்தையும் சேர்த்து நான் 305 அடி 6 அங்குலம்.
என் முகவிலாசமே எட்டு அடி அகலம். இந்தக்காலத்து ஹாலிவுட் பெண்ணழகியல்லவா, நீ. என் இடுப்பளவு கேட்கிறாய்! 35 அடி! அதற்கேற்ற உயரம்.
இந்த மைனாரிட்டி ஐயங்கார்கள் இல்லாத இடம் உண்டோ? அவர்களுக்காக, என் உயரத்தை 111 அடியாக வைத்துக்கொண்டேன்!
என் காலடியில் பார்த்தாயோ? உதறிவிட்டேன் தளையை. உடைந்த இரும்பு சங்கிலி கேட்பார் இல்லாமல் கிடக்கிறது.
பாதாதிகேசம் பார்த்தாயானால், என் கிரீடத்திலிருந்து ஒன்பது அடி பாயும் ஏழு கிரணங்களை பார். ஈரேழு கண்டங்களிலிருந்தும், ‘யாதும் ஊரே! யாவறும் கேளீர்’ என்று எல்லாரையும் சொந்தம் கொண்டாடத்தான் அந்தக் கதிர்வீச்சு.
கூத்தனூர் மஹாசரஸ்வதி தேவியை போல, என் கையிலிருக்கும் பட்டயத்தைக் காண்.
அதில் பொறித்திருக்கும் JULY IV MDCCLXXVI அமெரிக்க சுதந்திரதினம், தம்பி. தர்மம், நியாயம், சட்டம் என்ற உள்ளுறை.
‘அகதி’ என்ற சொல் உகந்தது அன்று. புலன் பெயர்ந்து வந்து இங்கு தன்னையும், என்னையும் உயர்த்தினோர் எனலாம். இந்த எயிலை கண்டீர்களோ, என் அருமை கண்மணிகளே? அதில் பதித்திருக்கும் 700 ஆயிரம் பெயர்கள், உலக பிரதிநிதிகள் அல்லவா. எயில் என் பாதுகாப்புக்கு அன்று. நான் தான் எயிலுக்கு பாதுகாப்பு.
விழா எடுத்தது 1886ல். உனக்கு தெரியாதா என்ன, மக்கள் சக்தியை முதலில் முன்னிறுத்தியது ஃபெரன்ச் புரட்சி என்று? இருபது வருடம் முன்னால் அந்த நாட்டு சான்றோன் ‘லபாலய’ அவர்கள் அமெரிக்க மக்களுக்கு பரிசில் கொடுக்க நினைத்தார்.பார்த்தோல்டி என்ற சிற்பி என்னை சிலையாக வடித்தார். அமெரிக்க அதிபர் க்ரோவர் க்ளீவ்லாண்ட் தான் இந்திர விழா எடுத்தவர்.
பீடம் அமெரிக்க செலவு. அமெரிக்க பள்ளிக்குழந்தைகள் கூட ஓடோடி வந்து நன்கொடை அளித்தனர். என் தியாகம் 60 செண்ட்;நானொரு கூலி: அஞ்சு செண்ட்; சர்க்கஸ் போகாமல் அனுப்றோம் என்று சிறார்கள்: சில டாலர்கள்; நானொரு 76 வயது கிழவி: ஒரு டாலர்; குடிகாரர் கும்பல்: 15 டாலர்: கிண்டர் கார்டன் ஸ்கூலு; $1.35. ஐயன்மீர்! 80% நன்கொடை ஆளுக்கு ஒரு டாலர் கொடுத்த பாமர மக்கள். இந்தியாவில் இது நடந்து விட்டால்! ஒரு காலம் நடந்தது. மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் முன் ‘ராமு’ என்ற அதன் ஸ்தாபகர் சிலை. பி & சி.மில் முன்னால் திரு.வி.க. சிலை. இரண்டும் மக்களின் நன்கொடை. சிலைகளுக்கு நான் காசு கேட்கவில்லை. தாராளமாக கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். இது தான் நாம் அமெரிக்கர்களிடம் முதலில் கற்கவேண்டியது. இங்கும் டாடா, ராஜா ஸர், பார் அட் லா எல்லாரும் வள்ளல்கள் தான். உமக்கு டாடா, ராஜா ஸர், பார் அட் லா எல்லாம் யாராரு தெரியுமோ?
எம்மா லாஸேரஸ் 1883ல் எழுதி, யாவரும் மறந்து, பிறகு இறவாவரம் பெற்ற 14 வரி சான்னெட்: ‘...என் கோட்டை வாயில் தங்கமாக ஜொலிக்கிறது.ஒளி பாய்ச்சுகிறேனல்லவா!அநாதை, அபலை, திக்கற்றோர்,நசுங்கியவர்கள் எல்லாரையும் அனுப்புங்கள்...’ நான் அமுதசுரபியும் ஆன சுதந்திர தேவதை. இப்பாடலை சாற்றக்கேண்மீன்.
இன்னம்பூரான்
28 10 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment