Monday, October 28, 2013

கறுப்பு செவ்வாய்:அன்றொரு நாள்: அக்டோபர் 29




அன்றொரு நாள்: அக்டோபர் 29 1 & 2 & 3

Innamburan Innamburan Sun, Oct 30, 2011 at 7:34 PM



அன்றொரு நாள்: அக்டோபர் 29
1 & 2 & 3
  1. அக்டோபர் 29, 1929
பொருளியல் பற்றி நான் எழுதுவதில்லை. அதை பொருளாதாரம் என்றும் சொல்கிறார்கள். அந்த ஆதாரம் எனக்குத் தென்படுவதில்லை. நான்கு பொருளியல் வல்லுனர்கள் இருந்தால் ஐந்து கருத்துக்கள்! யாருடைய அபிப்ராயங்களையும் மாற்றுவது கடினம். பொருளியல் என்றால் மெத்தக்கடினம். ‘அமேரிக்கா’, அமேரிக்கா’ எனப்படும் செல்வக்களஞ்சிய நாட்டில் அக்டோபர் 29, 1929 தினம் ‘கறுப்பு செவ்வாய்’ என்று நிந்திக்கப்படுகிறது. பங்குச்சந்தை என்ற பரமபத சோபனப்படத்தில், அரவம் தலைவழியாக பங்குகள் அன்று அதலபாதாளத்தில் வீழ்ந்தன. சில நாட்களில் 30 பிலியன் டாலர்கள் ‘மறைந்துப்’ போயின. மார்ச் 30 வாக்கில் 32 லக்ஷம் மக்களுக்கு வேலையில்லாத்திண்டாட்டம். திகைத்துப்போன மக்கள் நவம்பர் வாக்கில் தெருக்கோடியில் ஆப்பிள் விற்கத் தொடங்கினர். ஃபெப்ரவரி 1931ல் மினியாபொலீஸில் சோத்துப்புரட்சி. அடுத்த மாதம் ஃபோர்ட் மோட்டார் கம்பெனியில் 3000 தொழிலாளிகள் வேலை நிறுத்தம். டிசெம்பரில் ந்யூ யார்க் அமெரிக்கன் வங்கி திவால். $ 200 மிலியன் டமால்! ஜனவரி 1932 ல் கோடீஸ்வர பூஜை. வங்கிகளுக்கும், காப்பீடு நிறுவனங்களுக்கும், ரயில் கம்பெனிகளுக்கும் கடனளிக்க ஒரு அரசு கம்பெனி. ஏப்ரல் 1932 வந்த போது, 750 ஆயிரம் மக்கள், அரசின் மான்யத்தில். தொங்கலில் மேலும் 160 ஆயிரம் பேர். ஆளுக்கு $8.20 மாதத்திற்கு பஞ்சப்படி. ஜூன் 1932 வந்ததா? 15 -25 ஆயிரம்  இந்த கோடீஸ்வர பூஜை அரசு கம்பெனி மாநிலங்களுக்கும் கடன் உதவி ~ பஞ்ச நிவாரண திட்டங்களுக்காக. மாஜி ராணுவவீரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகை. மாஜி ராணுவ வீரர்களை விரட்ட, பிற்கால ஜப்பான் புகழ் ஜெனெரல் மக் ஆர்தர் தலைமையில் துரத்தல் படை! அமெரிக்காவில் மாஜி ராணுவ வீரர்கள் இப்போது கூட இரண்டாம் பக்ஷம். ஹூம்!
வந்தாரையா புது ஜனாதிபதி ரூஸ்வெல்ட், நவம்பர் 1932ல். மார்ச் 1933ல் மக்களை உற்சாகமூட்டி பேசிய அவர், அம்மாதம் 6ம் தேதி, நான்கு நாட்களுக்கு வங்கிக்கதவுகளை மூடி, ஒரு புரட்சிகரமான திட்டம் வகுத்து 12ம் தேதி ‘அச்சம் தவிர்’ என்ற புகழ்பெற்ற உரையாடலை துவக்கினார், மக்களுடன் நேருக்கு, நேராக. ஏப்ரல் மாதத்தில்  உலக அளவில் நடைமுறையிலிருந்த ‘தங்க அளவுகோலிலிருந்து’ விலகினார். ஒரு மக்கள் சக்தி தன்னார்வ பட்டாளத்தை தொடங்கினார். 1935ல் 500 ஆயிரம் இளைஞர்கள், அந்த பணியில். மே 1933ல்  ஹாரி ஹாப்கின்ஸ் ( அவரை பற்றி ஒரு நாள் எழுதவேண்டும்.) தலைமையில் மத்திய நிவாரண நிறுவனம் விறுவிறுப்பாக ஆக்க்ப்பூர்வமான வேலையில் இறங்கியது. மே 1933ல் டென்னஸி பள்ளத்தாக்கு அணைகள் அணி என்ற துணிவான திட்டம் வகுக்கப்பட்டது. ஜூன் 1933ல், இன்று வரை பேசும்படும் க்ளாஸ் ~ஸ்டீகல் சட்டம் (சேமிப்பு+ கடனளிக்கும் வங்கிகளையும், முதலீடு வங்கிகளையும் பிரித்து) இயற்றப்பட்டது. மற்றும் பல திட்டங்கள். ‘மோட்டார் தொழில் வளர்ச்சியில், வீழ்ச்சியை மறந்தோம்’ என்று ஒரு வணிக இதழ் எழுதியது. ஆகஸ்ட் 1935ல் ஊதியவரி ஒன்று விதித்து, அதன் மூலம் சமுதாய நிவாரணமளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கென்னெத் டேவிஸ் என்ற வரலாற்றாசிரியர்: ‘...இது அமெரிக்காவின் வரலாற்றின் பெரிய திருப்புமுனைகளில் ஒன்று. இனி வணிக லாபத்திற்கு மட்டும் அரசு தகுந்த சூழல் அமைக்கவேண்டும், இந்த லாபத்தை சம்பாதித்துக் கொடுக்கும் மக்களின் நலனுக்கு அரசு பொறுப்பல்ல என்று முதலாளித்துவத்தின் தனித்துவம் பேச முடியாது’ என்றார். 2007-08 வீழ்ச்சியின் போது நான் அமெரிக்காவில் இருந்தேன். மின் விகடனில் அது பற்றி ஒரு தொடர் எழுதினேன். உரியவேளை வந்தால், அதை மீள்பார்வை செய்யலாம். நிச்சியமாக கென்னெத் டேவிஸ்ஸின் கருத்துக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். நல்லது தானே.
*
  1. அக்டோபர் 29,2011: முல்லைப்பெரியார் அணையின் 125 வது ஆண்டு விழா:
அன்றொரு நாள் திருவிதாங்கூர் சமஸ்தானம் 8000 ஏகரா நிலத்தை சென்னை மாகாணத்துக்கு
நீண்ட குத்தகையில் கொடுக்க, 1887-1895ல் முல்லைப்பெரியார் அணைக்கட்டு ஒரு பொறியல் துணிச்சலாகக் கட்டப்பட்டு, மதுரை-ராமநாதபுரம் ஜில்லாக்களின் 70 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு நீர் வார்த்தது. சொல்லப்போனால், வருஷ நாடு செழித்ததற்கு இது தான் காரணம். 1850க்கு முன்பே தோன்றிய கருத்து. மேஜர் ரைவ்ஸ்ஸும், கர்னல் பென்னிக்யுக்கும் 84.71 லக்ஷம் செலவில் கட்டினார்கள். நம் வருசநாட்டு மக்கள் எளியவர்கள், ஐயா. நன்றி மறவாதவர்கள். கர்னல் ஐயாவுக்கு சிலைகள். இன்றும் அவருக்கு நினைவாஞ்சலி. கம்பம் பள்ளத்தாக்கு மக்கள் கொடுத்த உபசரிப்பில் மயங்கிவிட்டார், அவருடைய கொள்ளுப்பேரன் ஸ்டூவர்ட் சாம்ப்ஸன். அது அன்று. கடந்த 40 வருடங்களாக லடாய். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின், சென்னை மாகாணத்தின் வாரிசுதார்கள் மும்முரமாக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கர்னல் ஐயாவின் சிலையின் கண்களிலிருந்து நீர் வடிகிறது. காலத்தின் கோலமடா, மாயாண்டி!
*
  1. அக்டோபர் 29: உலக பக்கவாத தினம்.
இப்போதெல்லாம் அடிக்கடி ஆஸ்பத்திரி விஜயம். நேற்று ஸைண்ட் மேரிஸ் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டி ஆகிவிட்டது. அங்கு, ஒரே இடத்தில் நான் பார்த்தவை: அவசரசிகிச்சை உபகரணங்கள், ரத்தப்பரிசோதனை கூடம் (ஒரே ஒரு நர்ஸ்.), அவசரம், அவசரமாக இதயத்தை சரி செய்து அடிக்க வைக்கும் கருவிகள், அங்கும், இங்கும், பக்கவாதம் சம்பந்தமான ஆலோசனைகள் (ரத்த அழுத்தம் அளவுடன் ப்ளீஸ்: 110/70 பெட்டர்.), கை, கால், நீட்டி, மடக்க சொல்லித்தரும் தாதிகள், பேச்சு வர பயிற்சி. சுளுவாகச்சொன்னால், மூளையின் செல்கள் பாதிப்பால் இந்த வியாதி ஏற்படுகிறது.60 வயதுக்கு மேல், அதிகம். இப்போது, வயதில் சிறியவர்களுக்கும். உலகில் 6 வினாடிக்கு ஒரு பக்கவாதமாம். வருடத்தில் 15 மிலியனுக்கு. பாதி காலி. முதல் காரணம் கட்டுப்பாட்டில் இல்லாத நீரழிவு நோய். சமீபத்தில் இன்ஸுலின் மிகவும் மாறி விட்டது. மேலும் ஒன்று சொல்லலாமா? தவறாக நினைக்க மாட்டீர்களே. மிகவும் சிக்கனமாக, சமுதாய நலனை பாதுகாக்க முடியும். சென்னையில் உலக பிரசித்தி பெற்ற டாக்டரொவர், குறைந்த செலவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், இளம் பெண்களின் உதவியுடன், ரத்த அழுத்தமும், சிறு நீரகபாதிப்பும் குறைக்க ஒரு புரட்சியே நடத்தி வருகிறார். அதே மாதிரி சங்கர நேத்ராலயா  செய்யும் பணி உன்னதம். மற்றொரு டாக்டர் சிறார்களாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி செய்கிறார். கான்ஸர் இன்ஸ்டிட்யூட் தெய்வத்திற்கு அடுத்த படி. சரி, விடை பெறுகிறேன்.
இன்னம்பூரான்
30 10 2011
78075346-9812.jpg
Regulating-Reservoir-Section-1899-300x300.jpg



உசாத்துணை:

Geetha Sambasivam Mon, Oct 31, 2011 at 8:32 PM



பொருளாதாரம் எல்லாம் சரியாகக் கணிக்க இயலாது.  வாச்சான், பொழைச்சான் என்பார்களே அப்படி!  என்னதான் திட்டமிட்டாலும் எங்கானும் காலை வாரும். தவிர்க்க முடியாது.
முல்லைப்பெரியாறு அணை குறித்துக்கவலையாய்த் தான் இருக்கிறது.  கேரளா அட்டூழியம் செய்கிறது. தட்டிக் கேட்பார் இல்லை.  என்ன ஆகப் போறதோ!
யார் அந்த மருத்துவர் காஞ்சீபுரத்தில் சேவை செய்பவர்?  மற்ற இருவர் சங்கர நேத்ராலயாவும், அடையார் புற்றுநோய் ஆஸ்பத்திரி குறித்தும் அறிவேன்.


Innamburan Innamburan Mon, Oct 31, 2011 at 9:06 PM
To: Geetha Sambasivam

Dr.M.K.Mani, World-renowned Nephrologist. A most extraordinary ethical person.

Dr.C.V.Krishnaswamy~Juvenile diabetes,

Innamburan

No comments:

Post a Comment