Friday, October 25, 2013

பாமரகீர்த்தி:அன்றொரு நாள்: அக்டோபர் 25: அமெரிக்க பாமரரொருவர்




அன்றொரு நாள்: அக்டோபர் 25: அமெரிக்க பாமரரொருவர்.

Innamburan Innamburan Tue, Oct 25, 2011 at 7:49 PM


அன்றொரு நாள்: அக்டோபர் 25:
அமெரிக்க பாமரரொருவர்.


ஹார்ப்பர் வார இதழ் என்று ஒரு இதழ் ஒரு நூற்றாண்டுக்கு மேல் அமெரிக்காவில் ஜனரஞ்சகமானது என்று பிரபலமானது. நாள்தோறும் அந்த இதழின் கேலிச்சித்திரங்களுக்கும், அவற்றை விளக்கும் உரைகளுக்கும் மவுசு ஜாஸ்தி. அமெரிக்கர்கள் மறந்திருக்ககூடிய ஒரு அரசியல் தலைவர், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதில் இறங்கினார். அந்த பாமரரின் பெயர்: ஜான் செய்ண்ட் ஜான். ஒரு குடிகாரனின் மகனாக 1833ல் பிறந்த ஜான் பள்ளியில் சேர்ந்து படிக்க இயலவில்லை. 12 வயதிலிருந்து 14 வருடங்கள் அங்குமிங்குமாக, அன்றாடம்காய்ச்சியாக  உழைத்த ஜான் வழக்கறிஞரானார்; ராணுவ அதிகாரியாக இருந்தார். பெண்ணியம் போற்றி, குடியை கட்டுப்படுத்துவதில் முனைந்த ஜான் 1873-74 கான்சாஸ் செனெட்டராகவும், 1878ல் ரிபப்ளிகன் கட்சி சார்பில் கான்சாஸ் கவர்னருமானார். தன்னுடைய வாசாலாகத்தாலும், அரசியல் துறையில் அவருக்கு இருந்த மதிப்பின் துணையாலும், கள்ளு காய்ச்சுவதை நிறுத்துமாறு, மக்களை வாக்களிக்கத் தூண்டினார். 1880 ல் இரண்டாம் தடவை கவர்னர் பதவியை வென்றதும், மதுவிலக்கை சட்டமாக்கினார். அவருக்கு மூன்றாம் தடவை வெற்றி கிட்டவில்லை. மூன்றாவது தவணை கொடுப்பது அங்கு மரபு அன்று. மேலும் பல எதிர்ப்புக்கள். ஆனால், கான்சாஸ் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் தொடர்ந்தது. தேசீய மதுவிலக்குக் கட்சி 1884ல் அவரை ஜனாதிபதி போட்டிக்கு தேர்ந்தெடுத்தது. போட்டியோ மும்முரம். ரிபப்ளிகன் பிரபலம் ப்ளைன் அவர்களுக்கு இது பிடிக்காத விஷயம். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், இது லோகல் பிரச்னை என்று சமாளிக்கப்பார்த்தார். அவ்வாறு செய்வதற்கு ஆங்கிலத்தில் ‘டாட்ஜ்’ என்ற வினைச்சொல் பயன்படும். போதாக்குறைக்கு அவருடைய பிரதாபங்களை மெய்கீர்த்தியாக எழுதிய பெண்மணியின் பெயரே ‘டாட்ஜ்’ கேட்கவேண்டாம் கேலிப்பேச்சை. ப்ளைனும் சகபாடிகளும், ‘மதுவிலக்கு’ கீர்த்திமான் ஆகிவிட்ட நம்ம ஜான் அவர்களை போட்டியிலிருந்து விலகச்சொன்னார்கள். அவர் மறுத்து விட்டார். உடனே பொய்யும், புனைசுருட்டுமாக, அவர் மனைவியை கொடுமை படுத்தினார் என்று புருடா கிளப்பியும், அவருக்கு லஞ்சம் கொடுக்க முனைந்தும், பாடாய் படுத்தினர். தண்ணி பட்ட பாடு என்பார்கள். இங்கு, ‘தண்ணி படுத்திய பாடு!’. நம்மூர் உள்குத்து குறுநிலமன்னர்கள், இவர்களிடம் பாலபாடம் படித்தார்களோ! எதிர்க்கட்சியான டெமாக்ரட்ஸ், ரகசியமாக, மதுவிலக்குக் கட்சிக்கு காசு கொடுத்தார்கள்! ரிபப்ளிகன் கட்சி, பெஞ்சமின் பட்லர் என்ற டெமக்ரட்ஸின் உள்குத்து ஆசாமிக்கு காசு கொடுத்தார்கள். பெரும்தலைவர் காமராஜர் சொன்னமாதிரி ‘எல்லாம் ஒரே குட்டையில் அழுகிய மட்டைகள்’! ஆக மொத்தம் மதுவிலக்குக்கட்சி/ஜான் அவர்களின் வாதப்பிரதிவாதங்களால், ப்ளைய்ன் 21 வாக்குகள் வித்தியாசத்தில், டெமாக்ரட்டிக் க்ளீவ்லாண்டிடம் (க்ளீவ்லாண்ட்:219 -ப்ளைய்ன்: 182) தோற்றுப்போனார். கான்சாஸ்ஸில் ரிபப்ளிகன் தோற்றது முதல் தடவை. கட்சி பிளந்தது. நம்ம ஜான் அமெரிக்காவின் வலிமையான வழிமுறையாகிய சொற்பொழிவு பயணம் மூலமாக, மதுவிலக்கு பிரசாரம் செய்தார். 1916ல் அவர் இறக்கும் வரை மக்களின் நன்மதிப்பை பெற்று வாழ்ந்தார். ஆனால், இன்றைய அமெரிக்கா அவரை மறந்திருக்கும். நாமும் எத்தனை பண்பாளர்களை மறந்து விட்டோமோ? நம்முடைய ஆணிவேர்களை தேடுவோமா?
இந்த கட்டுரை, ஒரு விதத்தில், ‘பாமரகீர்த்தியின்’ அச்சாரம்.
ப்ளைய்னின் ‘டாட்ஜ்’ சாகசத்தை கேலி செய்த படம் மேலே. காப்புரிமை &நன்றி: ஹார்பர்ஸ் வீக்லி & ந்யூயர்க் டைம்ஸ்.
இன்னம்பூரான்
25 10 2011


உசாத்துணை:

No comments:

Post a Comment