அன்றொரு நாள்: அக்டோபர் 23
பாமரரேறே!
‘...என் கொள்ளுத்தாத்தா ஒரு கம்பவுண்டர். புரட்சி தொடங்கியவுடன், மருந்துகள் சேகரித்து, ரகஸ்யமாக சாக்கடைகளில் ஊர்ந்து சென்று, நோயாளிகளிடம் கொடுப்பார்.என் தாத்தா ரகஸ்யமாக வரும் புரட்சி இதழ்களில் எழுதுவார்...’
*
‘...எங்கள் குடும்பம் 1957ல் ஹங்கேரியிலிருந்து ஓடியது. திக்குத்தெரியாத காட்டில், எதிரியின் இடர்ப்பாடுகளையும் கடந்து, ஐந்து குழந்தைகளுடன் பட்ட கஷ்டத்தை அம்மா சொல்லுவாள்..’
*
‘...14 வயது சிறுவன் நான். அப்பா பனி மூடிக்கிடந்த டான்யூப் நதியில் நீந்தி தப்பிக்க முயன்றார். சுக்கு நூறாக சுட்டு தள்ளி விட்டார்கள்..’
*
‘... எங்கள் கட்டிடத்திற்குள் ஓடி வந்து புரட்சியாளர்களை ஒரு ரஷ்யன் சுட்டான். நடுங்கிக்கிடந்தோம், சிறுவர்கள்...’
*
வரலாறு சொல்கிறது: பாமரர்களின் எழுச்சியே புரட்சியாக வெடிக்கிறது; குருதி வெள்ளம் ஓடும்; கணக்கற்றவர் உயிர் இழப்பர். அவர்களில் மாணவனும், ஏழையும் தான் முதல் பலி கடா. கொடுங்கோல் பேயாட்டம் போட்டபின் ஒடுக்கப்படும். அக்டோபர் 23, 1956 அன்று ஹங்கேரிய மாணவர்கள் கம்யூனிஸ்ட்/சோவியத் கொடுங்கோல்/அடக்குமுறைகளை எதிர்த்து, திடீரென்று எதிர்பாராத வகையில் ‘காடு கொள்ளாத வகையில்’ திரண்டு எழுந்தனர். நவம்பர் 11, 1956 அன்று சோவியத் கூஜாவான ஜானோ காதர், புரட்சியை நசுக்கி விட்டதாக பிரகடனம் செய்தான். அதற்குள் கொல்லப்பட்ட ஹங்கேரியர்கள் 2,500; ஓடிப்போனவர்கள் 200 ஆயிரம்.
பின்னணி: இரண்டாவது உலகயுத்தம் முடிந்தவுடன், சோவியத் ராணுவம் ஹங்கேரியில் தங்கி, கைக்கூலி மத்யாஸ் ராகொசியிடம் யதேச்சாதிகாரத்தை கொடுத்தது. ஸ்டாலின் வீழ்ச்சிக்கு பிறகு இம்ரே நாகி என்ற தேசாபிமானி பிரதமரானர். ஆனால், உள்ளிருந்தே அவருக்கு குழி பறிக்கப்பட்டது. எர்னோ கிரோ என்பவர் கட்சியின் பிரதான புருஷரானார். வந்தது அபாயம். நிம்மதி குலைந்தது. ஏற்கனவே, போலந்தின் ஜூன் 1956 தொழிலாளர் புரட்சி நசுக்கப்பட்டாலும், அவர்களின் தலிவர் கோமல்கா, போலந்துக்கு ஓரளவு சுயாட்சியும், தாராளக்கொள்கையும் பெறமுடிந்தது. 1955ல் ஆஸ்ட்ரியா வார்ஸா ஒப்பந்தத்திலிருந்து வாய்தா வாங்க முடிந்தது. இதெல்லாம் கொஞ்சம் நம்பிக்கை துளிர்க்கக் காரணம்.
நடந்தது என்ன? ஹங்கேரியன் எழுத்தாளர் சங்கம் போலந்துக்கு ஆதரவு காட்ட அவர்களின் ஹீரோ ஜெனெரல் பெம் அவர்களின் சிலைக்கு மாலையிடுவதாக திட்டம். மாணவர் சங்கத்துக்கு அரசியல் பலம் இருந்தது. அவர்களும் வருவதாக சொன்னார்கள். அக்டோபர் 23, 1956 மதியம், அங்கு 50 ஆயிரம் மக்கள், தானாகவே, கூடினர்.ஹங்கேரியன் எழுத்தாளர் சங்கத்தலைவர் பீட்டர் வெரெ நாட்டின் விடுதலை பிரகடனம் வாசித்தார்.மாணவர் சமுதாயம், ரஷ்யர்கள் வெளியேற்றம், யுரேனியம் விற்கும் உரிமை என்று தொடங்கி 16 கோரிக்கைகளை முன் வைத்தனர். தேசாபிமான பாடல்களும் , கோஷங்களிம் உரக்க ஒலித்தன.கம்யூனிச முத்திரை, ஹங்கேரியின் கொடியிலிருந்து கிழித்து எறியப்பட்டது. பார்லிமெண்டை நோக்கி சென்ற கூட்டம், மாலை ஆறு மணிக்கு, அடைந்த போது அது 200 ஆயிரமாக பெருத்து விட்டது. ஆனால், எட்டு மணி அளவில், கீரோ கோரிக்கைகளை நிராகரித்து வானொலி அறிவிக்கை விடுத்தான். வெகுண்டெழுந்த மக்கள், 1951 ல் நிறுவப்பட்ட ஸ்டாலினின் சிலையை உடைத்தெறிந்தனர். வானொலி நிலையத்தை கைப்பற்ற விரைந்தனர். ரகசிய போலீஸ் அவர்களை சுட்டுத்தள்ளியது. கலகம் வலுத்தது. போலீஸ் கார்கள் கொளுத்தப்பட்டன. கம்யூனிச சின்னங்கள் கிழிக்கப்பட்டன. ராணுவ வீரர்கள் புரட்சியில் சேர்ந்தனர். சோவியத் ராணுவம் தருவிக்கப்பட்டது, மறுநாள். பயங்கர கெடுபிடி இருந்தாலும், மக்களை மதித்து, இம்ரே நாகி அவர்கள் மறுபடியும் பிரதமராக்கப்பட்டார். தொலைந்தது மறுநாள். ஒரு சோவியத் டாங்கி நிராயுதபாணி மக்களை கொன்று குவித்தது. 28ம் தேதி, சோவியத் துருப்புக்கள் வாபஸாயினர். பிரதமர் ஆக்கப்பூர்வமான அலுவல்களில் இறங்கினார். ஆனால், சோவியத் அரசு உலகளவில் தோல்வி அடைவதை விரும்பவில்லை. மாஸ்கோவில் ஹங்கேரியின் தலை விதியை தீர்மானித்தார்கள். சின்ன ஹங்கேரி மீது பெரிய ரஷ்யா படையெடுத்தது. 24ம்தேதியே ஆயிரம் டாங்கிகள் உருண்டோடி வந்தன. உள்ளூர் ராணுவம் மக்கள் பக்கமல்லவா. நசுக்கப்பட்டது. இம்ரே நாகி வல்லரசுகளுக்கு விண்ணப்பம் விடுத்தார், கடைசி வானொலி அறிக்கையில். தூக்கி எறியபட்டார். ஆட்சியை கைப்பற்றிய ஜனோஸ் காதர் ரஷ்யாவிடம் நாட்டை அடகு வைத்தார். கொலை. படுகொலை. கும்பல் கும்பலாகக் கொலை. ஆனால் இறந்தவர்களி 700 பேர் சோவியத் ராணுவத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் பலர், சண்டை போட மறுத்ததற்காக, சுடப்பட்டவர்கள். இதை கவனமாக படிக்கவும்.
அத்துடன் விட்டதா? ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள், யாதொருவித முகாந்திரமில்லாமல், சோவியத் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்ப்அட்டனர். இம்ரே நாகி உள்பட 350 பேர் கொல்லப்பட்டனர்.
ஆனாலுல், ஒரு ஆச்சரியமான திருப்புமுனை. இது எவ்வளவு தூரம் வாய்மையான தகவல் என்று என்னால், ஒரு நாளில் ஆய்வு செய்யமுடியவில்லை. உசாத்துணை சொல்வது: காதர் ஒரு திறன் மிகுந்த தலைவனாக மாறி, அடக்குமுறைகளை தணித்து, ‘நமக்கு எதிரியில்லாதவர்கள் நண்பர்களே’ என்று கோஷித்து, ‘ சந்தையுமான’ நவீன கம்யூனிசத்தை புகுத்தி, நாட்டுக்கு நன்மை செய்தான். 1989ல் சோவியத் ரஷ்யா உடையும் வரை, ஹங்கேரி, அந்த ‘கூட்டுக்குடும்பத்தின்’ நல்ல தம்பி!
இதில் எனக்கு மிக வருத்தம் யாதெனில், ஐ.நா.வில் இந்த பிரச்னை விவாதத்திற்கு வந்த போது, சோவியத் ரஷ்யாவுக்கு தாளம் போட்ட ஒரே நடுநிலை (?) நாடு இந்தியா, பிரதமர் நேருவின் தலைமையில். அதற்கு பிறகு, அகில உலக அளவில் அவருடைய/ இந்தியாவின் மதிப்பு கணிசமாகக் குறைந்தது. 1962ல் இந்தியாவுக்கு சோதனை வந்த போது... ஆம். சில விஷயங்களை பேசி பயன் இல்லை.
இன்னம்பூரான்
23 10 2011
http://greekstampstore.com/product/pics/M10433.jpg
உசாத்துணை:
http://www.budapest-life.com/budapest/1956-hungarian-uprising
|
|
No comments:
Post a Comment