அன்றொரு நாள்: அக்டோபர் 22
அ.மாதவையா (16 08 1872 - 22 10 1925)
‘பழம் தழுவி பாலில் விழுந்தாற்போல...’ என்றார். அதுவும் எத்தனை பழங்கள்! ஏதோ ஒரு பிரச்னை. சென்னை நகர் கார்ப்பரேஷன்~ ரிப்பன் கட்டிடத்தில் ஆஜர். அங்கு ஒரு நூலகம். அருமையான நூலகம். ஒரு புத்தகம் இரவல் வாங்க முடிகிறது: அ.மாதவையா: பத்மாவதி சரித்திரம் (1898). லிஃப்கோ மறுபதிப்பு. தமிழிலக்கியத்தின் ஆரம்பகால புதினங்களில் ஒன்று. காதலும் பொறாமையும், இடையில் உள்ளவை யாவும் கனவுலகில் சஞ்சரித்து, நனவுலகில் இறங்கி வந்த கதை. 1898ல் தொடங்கிய புதினம்/ வரலாறு/ வாழ்வியல் கண்ணாடி; சிறு நுட்பங்கள் கூட தவற விடவில்லை, அவர். ‘அன்றொரு நாள்’ அன்றாடம் எழுதுவதால், தினம் எனக்கு ஒரு அதிசயம் காத்திருக்கும். அ.மாதவையாவின் சந்ததிகளும் புகழ் பெற்றவர்கள். அவர்களில் ஒருவரான மா.கிருஷ்ணன் வனத்துறை ஃபோட்டோ எடுப்பதில், இந்தியாவில் முன்னோடி. அது பற்றி எழுதுவதிலும். யானையை பற்றி அவர் எழுதிய சித்திரபுத்தகத்தை என் பேத்திக்காக 1998 ல் வாங்கி வந்தேன். அதுவும், அவருடன் பழகி வந்த என் மகனின் நூலகத்தில் அவருடைய நூல்களும், இன்று கண்ணில் தென்பட்டன. பழம் இரண்டு. ‘திரு.மா.கிருஷ்ணனையே, தன்னுடைய தந்தையின் ‘பாமரகீர்த்தி’ எழுத வைத்தேன். அதை விட பிரமாதமாக நீ என்ன எழுத முடியும்?’ என்று அருமை நண்பர் தியடோர் பாஸ்கரன் கேட்கிறமாதிரி, காலச்சுவடு கட்டுரை ஒன்று கிடைக்கிறது. பழம் மூன்று. அந்த கட்டுரையை, நன்றியுடன், காப்புரிமை விளம்பி, உசாத்துணையில் சுட்டுகிறேன். முடிந்திருந்தால், முன் அனுமதி வாங்கியிருப்பேன். தவறாமல் படிக்கவேண்டும் என யாவரையும் கேட்டுக்கொள்கிறேன். ‘பாமர கீர்த்தி’ கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை, நாம் திரு.மா.கிருஷ்ணனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
- பாமரகீர்த்தி குறிப்புகள் அரிது, அரிதிலும் அரிது என்று கட்டியம் கூறுகிறது, இந்த கட்டுரை;
- நினைவாற்றலின் உதவியும், மறதியின் இயல்பும் வெளிப்படை;
- ‘இப்பேர்ப்பட்ட மகத்தான ஆளுமை இவ்வளவு எளிதாக மறக்கப்பட்டுவிடுவார் என நாங்கள் எண்ணாமலிருந்ததும் ஒரு காரணம்.’ என்று அவர் ஒத்துக்கொள்வது, ஒரு முக்கியமான ஒப்புதல்.
- உடல் எடை முதல் ஆய்வுக்கு உட்படுத்திய மேன்மை;
- ‘..மாதவையா வீரசாகசங்கள் செய்யும் மனிதர்களை மட்டுமல்ல, இன்னல் நிறைந்த வாழ்க்கையை நேருக்கு நேர் எதிர்கொண்ட எளிய மக்களையும் போற்றினார்..’ இந்த ஒரு வரி அக்ஷரலக்ஷம் பெறும்.
- ‘ராகவையங்காரும் என் தந்தையும் தமிழ்ச் செம்மொழி இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவர்கள். யாப்பிலக்கணத்தின் நெளிவுசுளிவு அறிந்த இவர்கள் இருவருமே கவிஞர்கள்...’ இது உமக்கு எல்லாம் புது செய்தி தானே;
- 1925ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் நாளில் , பிற்பகல் 3:30 மணிக்கு மதராஸ் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில், தமிழைப் பயிற்று மொழியாக வைக்க வேண்டும் என்று பேசி முடித்து உட்கார்ந்த இருக்கையிலேயே, மூளை ரத்தநாள வெடிப்பால் உயிர் துறந்தார் மாதவய்யா.‘ ~ உருக்கமான செய்தி.
- மா.கிருஷ்ணன் மரபு போற்றுபவர். தந்தையின் மேன்மையை அறிந்தவர். அவர்கள் வீட்டிலேயே மாதவையா அவர்களின் ஆவணங்கள், படைப்புகள் சீரழிந்து போயின என்றால், மற்றவர்கள் பாடு கேட்கவேண்டுமா? நம்மால் இயன்றவரை மரபு காப்போம். பாமரகீர்த்திகளை சேகரிப்போம்.
- ஒரு நாள் திரு.மா.கிருஷ்ணனின் பாமரகீர்த்தியும் எழுத வேண்டும்.
- இந்த தொடர் அன்றாடம் வருவதில் பிரச்னை எழலாம். எல்லாம் நேரமின்மை/ மற்ற அலுவல்கள்/ படிக்கவேண்டிய பட்டியல்/இயலாமை/அது/இது தான். முடிந்தபோது ‘அன்றொரு நாள்’ என்று தேதியிட்டு, அல்லது 'என்றோ ஒரு தினம்' என்று மையமாக, வேறு ஒரு நாளில் பதிப்பிக்கலாம். அல்லது ‘கொயட்டா’...
இன்னம்பூரான்
22 10 2011
உசாத்துணை:
|
|
No comments:
Post a Comment