அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 1
மின் செய்தி:
வாசிப்பது இன்னம்பூரான்
செப்டம்பர் 1, 2011
அரபு மடர் என்ற புரட்சியாளர் கடந்த செவ்வாய் அன்று கடஃபியின் இல்லத்தருகே சுட்டுக்கொல்லப்பட்டார். புதின எழுத்தாளர் ஹிஷாம் மடர் அவருடைய உறவினர்; அவர் எடின்பரோவில் நடந்த உலக புத்தக விழாவில் கூறியதின் சுருக்கம்: ‘...அத்வானமாக இருக்கிறது, எங்கும் தோட்டாக்கள்! முகம் யாதும் காணோம், கடஃபியின் ஆட்சி போல; எல்லாம் ஒரு புற தோற்றம் மட்டுமே. நிஜம்?!... எமது வரலாற்றில், ஜனநாயகம் புலப்படும் கருத்தும், காட்சியும், முதல் முறையாக, இப்போது தான். ஒரு கட்டுக்கதையாக இல்லை. புரட்சி என்பது வைரிகளை ஒழிக்கும் மனப்பான்மையல்ல. நம்மை நாமே லிபியர்கள் என்று புரியவைக்கும் வழித்துணை, அது. (1970 களில் அவருடைய தந்தை நாடு கடத்தப்பட்டர். 1990களில் வன்முறையில் லிபியாவுக்கு கொணரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார். அவர் உயிருடன் இருக்கிறாரா என்று கூட தெரியாது. அவருடைய ‘ஒருவர் மறைந்த மர்மம்’ என்ற நூலின் மூலம் அந்த கொடுங்கோல் வரலாறே.)...தனிமனிதனின் தனித்துவத்தை கையாடி, ஒழித்து, வரலாற்றை மாற்றி அமைப்பதே, யதேச்சையதிகாரத்தின் குறிக்கோள். இலக்கியம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி தனிமனிதர்களின் வாழ்வு ரகசியங்கள், காதல், படிப்பு, எழுத்து, சிந்தனை, குழந்தை வளர்ப்பு எல்லாவற்றையும் வேவு பார்த்து, குதறும் பூதக்கண்ணாடி, யதேச்சையதிகாரம். ட்யூனிஷியா, எகிப்து, லிபியா ஆகிய இடங்களில் நடப்பவை நம்மை எங்கே கொண்டு செல்லும் என அறியேன். ‘இஸ்லாமியத்துவம்’ என்று ஒன்று உண்டு. அது எங்கள் வாழ்நெறி, மரபு, இலக்கணம், மொழி. லிபிய விடுதலையில் அதன் பங்கும் இருக்கும். இக்காலம் நடக்கும் புரட்சி புனிதமானது...’
*
பின்னணி: கர்னல் கடஃபி ஜனவரி 1970யில் பிரதமரானாரே. அராபிய நாடுகளின் ஒற்றுமையை தோற்றுவிக்க முயன்ற அவர் பயங்கரவாதத்தை கையில் எடுத்துக்கொண்டார். லாக்கர்பீ விமான விபத்து ஒரு கடாஃஃப்பி சதி. அதனால் அமெரிக்காவுடனும், பிரிட்டனுடனும் உறவு முறிந்தது. 2003 இல் கடாஃஃப்பி, தடாலடியாக, மாபெரும் ஆயுதங்களை தியாகம் செய்யப்போவதாக்ச் சொல்ல, லாக்கர்பீ விமான விபத்துக்கு 2 பிலியன் டாலர் நஷ்ட ஈடாக தருவதாகச் சொல்ல, அதை ஏதோ பெரிய மனமாற்றம் என தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் மேற்கத்திய வல்லரசுகள் 2003 இல் தொடங்கி 2006 இல் லிபியாவையும், கடாஃப்பியையும் கொஞ்சி குலாவத்தொடங்கின. இத்தனைக்கும் ஐரிஷ் புரட்சியாளர்களுக்கு உதவியவர், இவர். கோடானு கோடிகள் அபகரித்தவர். 1986 லியே அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் இவரை ஒழிக்க விழைந்தார். இந்த ‘காதலும், காழ்ப்பும்’ ஆன முரண் உறவில் எத்தனை விரிசல்கள், எத்தனை ஒட்டுக்கள்! சொல்லி மாளாது. அராபிய தலைமை கூட்டமானாலும் சரி, ஐ.நா. வானாலும் சரி. மற்றவர்களை அவமதிப்பதில் கடாஃப்பிக்கு இணை அவரே. முழு விளக்கங்களுக்கு உசாத்துணைகளை அணுகவும். டோனி ப்ளையரின் ‘ப்ளா ப்ளா’ பார்க்கவும்.
*
மின் செய்தி:
வாசிப்பது பவள சங்கரி
ஆகஸ்ட் 31, 2011
கடாபி ஆதரவாளர்களுக்கு நான்கு நாள் கெடு: லிபியா இடைக்கால அரசு எச்சரிக்கை
டிரிபோலி:சிர்ட் நகரில் உள்ள கடாபி ஆதரவாளர்கள் இன்னும் நான்கு நாட்களில் சரண் அடைய வேண்டும் என லிபியா இடைக்கால அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில்,கடாபியின் மனைவி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோருக்கு அடைக்கலம் அளித்தது சரிதான் என, அல்ஜீரியா கூறியுள்ளது. கடாபியின் இரண்டாவது மனைவி சாபியா, மகள் ஆயிஷா, மகன்கள் ஹானிபல் மற்றும் முகமது ஆகியோர், நேற்று முன்தினம் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நவீன கார்களில், அல்ஜீரியாவுக்குள் நுழைந்தனர் என, அல்ஜீரிய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.அடைக்கலம் சரிதான்: இதுகுறித்து, ஐ.நா.,வுக்கான அல்ஜீரியா தூதர் மவுரத் பென்மெஹ்தி றியதாவது:இதுகுறித்து, ஐ.நா., மற்றும் லிபியா எதிர்ப்பாளர்களிடம், முதலிலேயே தகவல் தெரிவித்து விட்டோம். வட ஆப்ரிக்காவை பொருத்தமட்டில், அடைக்கலம் என வந்தவரை வரவேற்று, விருந்தோம்பும் பண்பு காலம் காலமாகப் பேணப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், அவர்கள் அல்ஜீரியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதேநேரம், அவர்களில் ஒருவர் மீது கூட, சர்வதேச கிரிமினல் கோர்ட் நோட்டீஸ் குற்றம் சாட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, பென்மெஹ்தி தெரிவித்தார்.போரைத் தூண்டுகிறது அல்ஜீரியா: இதற்குப் பதிலளித்த, லிபியா இடைக்கால அரசின் செய்தித் தொடர்பாளர் மகமூத் ஷம்மாம், "இது, லிபிய மக்களின் விருப்பத்துக்கு எதிரானது. வலுவில் போரைத் தூண்டி விடும் செயல். கடாபி மற்றும் அவரது குடும்பத்தினரை, விரைவில் கைது செய்வோம். அதற்கான நடவடிக்கைகள், சர்வதேச சட்டப்படி எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
லிபியாவின் இடைக்கால அரசை, அல்ஜீரியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.
கடாபி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக, அல்ஜீரியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கூலிப் படையினரைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.கடாபி படைகளின் கொடூரம்: இதற்கிடையில், டிரிபோலியின் தென்பகுதியில் இருந்த தற்காலிக சிறை வளாகம் ஒன்றில், எரிக்கப்பட்டுக் கிடந்த 50 உடல்கள், லிபிய ராணுவ அதிகாரிகள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள், லிபிய மக்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என, மறுப்பு தெரிவித்தவுடன் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர, பலபேர் கொல்லப்பட்ட நான்கு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேலும், மிஸ்ரட்டா நகர்வாசிகள், கடாபி ஆதரவாளர்கள் தங்களை சித்ரவதை செய்துகற்பழித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இவை அனைத்தும், கடாபிக்கு எதிராக சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் முன்வைக்கப்பட உள்ளன.கமீஸ் பலி: இத்தாலியின் "அன்சா' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கடாபியின் மகன் கமீஸ் கடாபி, டிரிபோலியில் இருந்து சிர்ட் நகருக்கு அருகில் உள்ள பானி வாலித் என்ற இடத்துக்குச் செல்லும் வழியில், காயங்கள் காரணமாக உயிரிழந்து விட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு நாள் கெடு: இந்நிலையில், சிர்ட் நகரில், கடாபி ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். கிழக்கு மற்றும் மேற்கில் இருந்து எதிர்ப்பாளர்கள் சிர்ட் நகரை நெருங்கியுள்ளனர். அந்நகரில் உள்ள பழங்குடியினத் தலைவர்களுடன் இடைக்கால அரசு தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது. ஆனால் அவர்கள் அமைதியான முறையில் சரணடைய மறுத்து வருகின்றனர்.இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் நேற்று அளித்த பேட்டியில், "இன்னும் நான்கு நாட்களில், கடாபி ஆதரவாளர்கள் சரண் அடைய வேண்டும். இல்லையெனில் அவர்கள் ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும்' என எச்சரித்துள்ளார்.
*
மின் செய்தி:
வாசிப்பது இன்னம்பூரான்
ஆகஸ்ட் 30, 2011
கடஃபிக்கு அல்ஜீரியாவில் பேத்தி பிறந்தாள்; தாயும், சேயும்,நலமே.
*
மின் செய்தி:
வாசிப்பது இன்னம்பூரான்
செப்டம்பர் 1. 1969
“இப்போது புதிய ராணுவத்தளபதி: கர்னல் முவம்மர் கடஃப்பி (27).
ஒற்றுமை, விடுதலை, சோஷலிஸம்.” என்ற புரட்சி பாசறையின் பிரகடனம் எங்கெங்கும் முழங்கியது. இன்று காலை 5 மணிக்கு ட்ரிபோலி நகரில் எல்லாவற்றையும் கைபற்றிய ராணுவ-புரட்சியாளர் குழு, எதிர்ப்போரை இரக்கமில்லாமல் ஒழித்துக்கட்டுவோம் என்றும் சபதமிட்டது. லிபியாவுக்கு லிபிய-அரேபிய குடியரசு என்று நாமகரணம் செய்தது. மன்னர் இட்ரிஸ் இந்த ரத்தம் சிந்தாத புரட்சியில் முடி இழந்தார். எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. எங்கும் ஊரடங்குச்சட்டம். இது பெரிய விஷயமில்லை என்றார் துருக்கியிலிருந்த மன்னர். லண்டனிலிருந்த இளவரசர் ஹாஸனோ, புரட்சியை வரவேற்றார். இது பிரிட்டன் சற்றும் எதிர்ப்பார்க்காதது. எனினும், சவாலை சமாளிப்போம் என்றனர். (இந்த ‘கரடி வித்தை’ குல வழக்கம் அல்லவா! லிபியாவுக்கு ஆயுத சப்ளையர் நம்பர் 1, பிரிட்டன்; ஒப்பந்தங்கள் வேறு; அமெரிக்காவுக்கும் அங்கு ஒரு விமான தளம் இருந்தது.). எகிப்தும், ஈராக்கும் புது அமைப்பை வரவேற்றன.
புரட்சித்தலைவர்: கர்னல் ஸாதுத்த்தீன் புஷ்வைர். மன்னர் பாலஸ்த்தீனியர். ஜார்டானியர்,லெபனீஸ், சிரிய நாட்டவர், பாத் கட்சி, எல்லாரையும் பகைத்துக்கொண்டவர் என்பதால், புரட்சியின் பின்புலம் தெரியவில்லை. ஆனல் மக்கள் ஆதரவு பலமாக இருக்கிறது. 1967 இல் ஆறே நாட்களில் இஸ்ரேல் இவர்களை போட்டு மிதித்து, நசுக்கிய அவலத்தையும், அரசகுலத்தின் ஊழலையும், மன்னரின் மேற்க்கத்திய மோஹத்தையும் விரும்பாத மக்களுக்கு இந்த புரட்சி நல்விருந்தாகவே அமைந்தது.
மின் செய்தி:நாளை செய்தி இன்று!
வாசிப்பது இன்னம்பூரான்
செப்டம்பர் 1. 2011
இன்று கருத்து! நாளை செய்தி; பொறுத்தாள்க. பாரதவர்ஷே ! பரதக்கண்டே! மேரோஹோ தக்ஷிணே பார்வே ( அ-து இந்தியாவில்) என்ன என்னம்மோ நடக்கிறது. ஒரே தர்மத்தை சொல்லிண்டு இரண்டு நாணயஸ்தர்கள் அடித்துக்கொள்கிறார்கள்; மடலாடுகிறார்கள்; போறவன், வரவன் எல்லாரும் சந்தியிலே நின்று கொண்டு ‘ஆர்குமெண்டேடிவ் இந்தியர்களாக’ சொல்மாரியில் நனைகிறார்கள். சொல்லையனும், கொள்ளையனும் கட்டித் தழுவுகிறார்கள். பிரதிநித்துவம் நித்தியானந்தமாக ஆகிவிட்டதே, தலைவா! எங்கும் ‘லஞ்சம் ஒழிக’ என்று பேச்சு. அதோடு நின்னும் போச்சு. பாரத புதல்வர்களே! லிபியா செப்டம்பர் 1. 1969 &செப்டம்பர் 1. 2011 ஐ பாருங்கள். இன்று கடாஃபியை காணவில்லையாம்.
பாடம் அளிப்பது லிபியா; கற்றுக்கொள்வது நீவிர். வர்ரேன்.
இன்னம்பூரான்
01 09 2011
(ரசிக்க உகந்தது இல்லை என்றாலும், ஒரு படிப்பினை.)
No comments:
Post a Comment