அன்றொரு நாள்: நவம்பர் 28
‘சூத்திரன்’
“ அன்னியரிடமிருந்து பெறும் விடுதலையை விட சமுதாய முன்னேற்றம் அளிக்கக்கூடிய ஜனநாயகம் தான் முக்கியமானது என்று போதித்தவரும், மேல்மட்டத்தின் அடிமைகளாக தாம் உழல்வதை அடிமட்டத்து ஹிந்துக்களுக்கு உணர்த்தியவருமான புத்துணர்ச்சி சூத்திரன் தான் ஜோதிராவ் பூலே.’’
~பாபா சாஹேப் அம்பேத்கர்.
நவம்பர் 28, 1890 அன்று அமரரான பாமரர் ஜோதிராவ் பூலே மே 11, 1888 அன்று ‘மஹாத்மா’ என்று பொதுமக்களால் போற்றப்பட்டவர். மஹாத்மா காந்தி பிற்கால மஹாத்மா. அருமை நண்பர்களே! குறித்துக்கொள்ளுங்கள். மஹாராஷ்டிரத்தில் சமுதாய சீர்திருத்தம் பதின்னெட்டாம் நூற்றாண்டிலேயே தலையெடுத்தது என்றாலும், பெண்ணியம் போற்றப்பட்டது என்றாலும், பல நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதிக்கொடுமைகளை எதிர்த்து போராடிய கறிகாய் கடைக்காரன் வீட்டுப்பையன் ஜோதிராவ் தான் கண்ணில் படுவார்; பிறந்த தினம் ஏப்ரல் 11, 1827. கொடுத்து வைத்த மஹானுபாவன். அவருக்கு 13 வயதில் வாய்த்த இல்லத்தரசி சாவித்திரி பாய் எல்லா விதத்திலும் இந்த புரட்சிக்காரனுக்கு ஈடு கொடுத்தார். இருவரும் திவ்ய தம்பதி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தாமதமாக ஏழு வயதில் தொடங்கி 20 வயது வரை, முண்டியடித்துக்கொண்டு, ஒரு இஸ்லாமிய ஆசிரியரும் ஒரு கிருத்துவ அண்டை வீட்டுக்காரரும் அளித்த ஊக்கத்தால், கற்ற கல்வி, இவரை தாமஸ் பெய்ன் அவர்களின் ‘மனித உரிமை’ என்ற இறவா வரம் பெற்ற ( ஆங்காங்கே அவ்வப்பொழுது தடை செய்யப்பட்டதால், வாசகர்கள் கூடினர்.) நூலிடம் அடைக்கலம் நாட தூண்டியது, 20 வயதில். இவருடன் கூட்டு சேர்ந்தவர்கள்: சதாசிவ பல்லல் கோவாந்தே,மோரோ விட்டல் வல்வேகர்& சகாராம் யஷ்வந்த் பரஞ்சிபே. மூவரும் பக்கா பார்ப்பனர்கள். நால்வரின் நட்பும், கூட்டு சமூகப்பணியும் ஆயுசு பர்யந்தம் தொடர்ந்தது. சொல்ல நினைத்ததை சொல்லி விடுகிறேன். 1. 20 வயதில் என் மனதையும் ஆக்ரமித்துக்கொண்டவர் தாமஸ் பெய்ன். ஆறு வருடங்கள் முன்னால், அவரால் உலகம் அடைந்த பயனை பற்றி நான் எழுதிய கட்டுரையை தேடினேன். கிடைக்கவில்லை. 2. எந்ததொரு காலகட்டத்திலும், பிராமணர்களில் சிலர் முற்போக்காக இன அபேதவாதிகளாக இயங்கியதை வரலாறு பதிவு செய்து இருக்கிறது ~ராஜாஜி.
அடுத்த வருடமே (1848), சூத்திரர்களின், அதி சூத்திரர்களின் பெண் குழந்தைகளுக்கு பள்ளி அமைத்தார். முதல் மாணவி, மனைவி. அதற்கு அடுத்த வருடமே, இருவரும் ஜாயிண்ட்-சந்நியாசம் எடுத்துக்கொண்டதாகச் சொல்லலாம். பஞ்சமர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதா? என்று கடும் எதிர்ப்பு. கல்வீச்சு. மேல்மட்டத்தின் தாக்குதல் தாங்க முடியாத தந்தை இவர்களை வீட்டை விட்டு போகசொல்கிறார். நல்லதா போச்சு. இங்கு ஒரு நுட்பம் காணவேண்டும், ஐயா. ‘பூலே’ ஒரு காரணப்பெயர். மஹாராஷ்ட்டிராவில் பேஷ்வா (பிராமணர்கள்) அதிகாரம் கொடிகட்டி பறந்தது. அந்த ராஜகுடும்பத்துக்கு பூக்கார வம்சம், பரம்பரை, பரம்பரையாக , இவரது. ‘பூலே’ என்றால் பூக்காரன். பூ வேண்டும். ஆனால் பூக்காரன் தள்ளுபடி! எப்படி? அடுக்குமா?
ஆரம்ப கல்வியின் பயனை நன்கு அறிந்த பூலே அவர்கள், அடிமட்டத்தின் வறுமை, தற்காப்பு இழந்த நிலை, மேல்மட்டத்தின் ஆளுமையில் அடங்கி கிடந்த நிலை எல்லாவற்றிற்கும் காரணம், அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதால் என்று உறுதி பட கூறி, இடை விடாத உழைப்பினால், பள்ளிகள் பல நிறுவினார். இதற்கெல்லாம் உற்றதுணை, பிராமண தோழர்கள்.
இவருடைய புரட்சி அன்றாட நடவடிக்கையில் பிரதிபலித்தது. தன் வீட்டில் பஞ்சமர்களுக்கு ஸ்னான கட்டம். சம பதி போஜனத்திற்கு வருக என்ற இவருடைய அறிவிப்பை அச்சிலேற்ற அச்சப்பட்டன, இதழ்கள். பிற்காலம் அழுத்ததுடன் தீண்டாமை பிரச்சாரம் செய்தவர்களில் பேச்சில், இவருடைய தீவிரம் காண இயலாது. சாத்தூர் பச்சை மிளகாய்.
உசிலம்பட்டி பெண் சிசு காப்பாளர்களே! செவி சாய்க்கவும். இவரது காலத்தில், கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்னால், பிராமணர் வீடுகளில் விதவைகள் மறுமணம் தடை. குழந்தை விவாகம் தடபுடல். இளம் விதவைகள் கரு தரிப்பது உண்டு. சிசுஹத்தியும் தெருவில் விடுவதும் உண்டு. மண்ணாங்கட்டி சமூகம் கண்களை இறுக்க மூடிக்கொள்ளும். கரு தரித்த விதவைகளுக்கு புகலிடம் கொடுத்து, அவ்வாறு 1873ல் பிறந்த குழந்தை ஒன்றை தத்து எடுத்துக்கொண்ட மஹானை ஏன் ‘மஹாத்மா’ என்று விளிக்கக்கூடாது? அதே வருடம், இவரது தலைமையில் ‘சத்ய ஶோதக் சமாஜ் ( வாய்மை நாடுவோர் சங்கம்) நிறுவப்பட்டது. முதல் சபதம்: ‘சமத்துவம் போற்றுவோம். யாவரும் தெய்வத்தின் மக்கள்’. அடுத்த படியாக, பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு விசுவாசம்.
வேதங்கள் பெரிதல்ல; சிலை வழிபாடு வேண்டாம்; நான்கு வர்ணங்கள் வேண்டாம். இன பாகுபாட்டை ஒழி; ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமே;சமய வெறியும், ஆவேச தேசாபிமானமும் நன்மை தரா. இப்படியெல்லாம் தீவிர ‘திராவிட?’ போதனை செய்த பூலே அவர்கள் 1876ல் துரைத்தனத்தாரால், பூனே முனிசிபாலிடி கெளன்சிலராக நியமிக்கபட்டார். 1877ல் பஞ்சம் வந்த போது ஏழை பாழைகள், குழந்தைகளை கூட புறக்கணிக்க நேர்ந்தது. அந்த சிறார்களுக்கு அநாதை ஆசிரமம் அமைத்தார், மஹாத்மா.
பிரம்மோ சமாஜம், பிரார்த்தனா சமாஜம், சர்வஜனிக் சபை, இந்தியன் நேஷனல் காங்கிரஸ் ஆகியவையும் இவரிடம் வாங்கிக்கட்டிக்கொண்டன. மக்கள் தொண்டு உதட்டளவில் என்று குப்பை கொட்டிய இந்த சபைகள், பிராமண ஆதிக்கத்தில் சிக்கியவை என்றார். நல்ல வேளை. இந்த தி/அ.தி./ம./ப~ க. திராவிட கட்சிகள் சாதி என்னும் சகதியில் உருண்டு, பிரண்டு வருவதை பார்க்காமல் கண்ணை மூடியது, மஹாத்மா பூலே அவர்களின் கொடுப்பினை. வெள்ளைக்காரனையும் அவர் விடவில்லை. அரசு போஷாக்கில் இருந்த அந்தக்காலத்து டாஸ்மாக் கடைகளை எதிர்த்தார். ராஜாங்கமானாலும், வீண் செலவு செய்யக்கூடாது என்றார். ஒரு சமயம் விக்டோரியா ராணியின் சார்பில் வந்திருந்த கன்னாட் பிரபுவை வரவேற்க, அணிகலம் பூண்ட படோடாபிகள் சூழ்ந்திருந்த மீட்டிங்கில், ‘இவர்கள் இந்தியாவின் பிரதிநிதிகள் அல்ல. கிராமத்துக்கு வந்து பாருங்கள் என்று அறை கூவல் விட்டு, அவையோரை அசத்தினார். பிற்காலம் இன்னொரு மஹாத்மா இந்த மாதிரி வாரணாசியில் செய்த கதை தெரியுமோ?
சொல்ல நிறைய இருக்கிறது. நேரம் தான் இல்லை. கெடு நெருங்கி விட்டது. இவரது பிராமண துவேஷத்தை அலட்சியம் செய்யலாகாது, அதில் கசப்பான உண்மைகள் இருப்பதால். பரிகாரமாக, ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு ஜி.சுப்ரமண்ய ஐயர் பற்றி தெரியுமோ? ஹிந்து பத்திரிகை அவரை தாக்கிய கதை தெரியுமோ?
இன்னம்பூரான்
28 11 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment