Saturday, August 16, 2013
சென்னை குறிப்புகள் ~2
அதே நாற்காலி!
=
பல நாள்....! நான் சொல்லவந்தது வேறே! பல வருடங்கள் என்று தான் சொல்ல வேண்டும். திரு. நரசய்யா அவர்களை, நாங்கள் இருவரும் கலந்துரையாடிய ஒரு நிகழ்வுக்குப் பிறகு, அவரது இல்லத்தில் இறக்கி விட்டு விட்டு, ‘நாளை வருகிறேன்’ என்று அவரிடம் சொல்லி விட்டு, இருபது வருடங்கள் கழித்து இன்று தான் போய் சந்தித்தேன். ஏற்பாடு ஒரு மாதம் முன்னால். போனஸ்: கொழுக்கட்டை! ஆம். வரலக்ஷ்மி நோன்பு அல்லவா. அடித்தது யோகம். அவருடைய குடும்பத்தினரின் விருந்தோம்பலை, மனதாலும், உடலாலும், சிந்தனையாலும், நாவினாலும், செவியினாலும் சுவைத்தேன். சகபாடி, ‘அலெக்ஸாண்டர் புகழ்’ நண்பர். திரு. சம்பத். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அளவளாவினோம், ஒரு நிமிடம் கூட தொய்வில்லாமல். எது எது பற்றி நாங்கள் பேசிக்கொள்ளவில்லை என்ற பட்டிமன்றத்தை என் மனதின் உள்ளுறையாக நடத்திப்பார்த்தேன். ஒரு சமாச்சாரமும் அதில் சிக்க வில்லை. எதை எதை பற்றி அலசித்தீர்த்தோம் என்று ஆலோசித்தேன். சிக்கியதை எழுத ஒரு அத்தியாயம் வேண்டும். எனவே, அவற்றை தொகுத்து வைத்து, அவர் எதிர்பாராத காலகட்டங்களில் அவிழ்த்து விடுவதாக உத்தேசம். எதற்கும் சில வார்த்தைகள். புறநானூறும், கலித்தொகையும் உலா வந்தன. சிட்டி அவர்கள் பூரணமாக மருமானை வாயிலாக வைத்துக்கொண்டு கலங்கரை விளக்காக ஒளி வீசினார். இந்திரா பார்த்தசாரதி, விகடன் ‘பாலு’(அவருடைய படப்பை தோட்டத்து கிளிகள் இதழாசிரியர் உரிமையை நிலை நாட்ட சிறை சென்ற விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்ரமணியம் அவர்களை அப்படித்தான் பிரியத்துடன் அழைக்கும்.), திருமதி கிருத்திகா அவர்கள், தருமமிகு சென்னை, ஆகஸ்ட் 18 அன்று, பழனியப்பா பிரசுரம் புகழ் திரு. செல்லப்பா அவர்கள் தலைமையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி கழகத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வு, அதை நழுவவிட்டு புதுச்சேரி சென்று விடும் எனக்கு ஒரு மென்மையான டிக்-ஆஃப், ஏற்கனவே நடந்த தொன்மை ஆராய்ச்ச்சிக்கு இருந்த வரவேற்பு, திரு.கோபால் காந்தி, மற்றும் பல பிரபலங்கள் வலம் வந்தனர். இன்றைய சமுதாய நிலை, அரசல் புரசலான அரசியல், தமிழகத்தின் ‘புறம்’ எல்லாம் தப்பவில்லை. வீடு திரும்பும் பார்த்தால், என் எடை கூடியிருந்தது. திரு. நரசய்யா அவர்களின் அன்பளிப்பாக, என் மகவுகளுக்கும், எனக்கும் நல்வரவாகிய MADRAS: JOURNEY 1639,Lettered Dialogue, A slim Collection of his short stories, translated into English, QUEEN OF THE CORAMANDEL ஆகிய நூல்களின் சுமை இனிமையானது.
(தொடரும்)
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: http://media.newindianexpress.com/article1468011.ece/alternates/w460/K-R-A-Narasiah.jpg
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
No comments:
Post a Comment