அன்றொரு நாள்: ஜூலை 27:II
[Image Credit: http://upload.wikimedia.org/wikipedia/commons/5/57/Human-insulin-hexamer-3D-ribbons.png
எடுத்த எடுப்பிலேயே, ஒத்துக்கொள்கிறேன். என்ன தான் கை வலித்தாலும், எழுதுவதை நிறுத்தமுடியவில்லை. படிக்க நேரம் கிடைக்கவில்லை; நாய்குட்டி விளையாடணும் என்று அடம் பிடிக்கிறான்; நடை பயிலுவது குறைந்து போகிறது, தன்னார்வப்பணியில் துண்டு விழுகிறது என்றெல்லாம் குறை பட்டுக்கொண்டிருந்தாலும், கைகள் இரண்டும் தட்டச்சு செய்யும் பலகைக்கு விரைகின்றன.
அது சரி. விஷயம் என்ன? ஒரு நன்றிக்கடன். கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஒரு நாள் சுகவீனம். அடி சறுக்கின களிறு போல் கவிழ்ந்து கிடந்தேன். போகிற போக்கில், சில நாட்களில் இரங்கற்பா பாடிடுவார்களோ என்ற ஐயமும் எழுந்தது. பிற்காலம் ஒரு இமிடேஷன் இரங்கற்பா பாடப்பட்டது வேறு விஷயம். திசை மாற்றாதே!திசை மாற்றாதே! என்று ஹெச்சரிக்கா கேட்கிறது. அது சரி. விஷயம் என்ன? தருமமிகு சென்னை பெரிய டாக்டருக்கு நேரமின்மையால், கொடுத்த காசுக்குக் கூட அவர் கவனிக்காததால், நிலைமை முற்றிப்போய், ஒரு மாதிரியான துறவறம் பூண்டு, பையனுடைய ரக்ஷணைக்கு வரும்படியாச்சு, சென்னையோ சென்னைக்கு டாட்டா சொல்லி விட்டு!
இங்கோ டாக்டர்களும், ஆசுபத்திரிகளும் கையாளும் முதல் சிகிச்சை: க்யூ! இருந்தும், நிஜமாகவே ஒரு பெரிய டாக்டர் ( ஃப்ரெண்ட் என்பது வேறு: சிகிச்சைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.) நான் எடுத்துக்கொள்ளும் இன்ஸுலின் ஊசி திட்டத்தை புரட்சிகரமாக மாற்றினார். சில நாட்கள் முன்னால் ஒரு ரிவியூ. மிலிட்டரிக்காரன் மெடல் குத்திக்கிறமாதிரி, எனக்கு சுகவீன மெடல்கள் ஐந்து; எல்லாமே பரம வீர் சக்ரா தரம்! அந்த பிரச்னைகள் யாவற்றிலும், நல்ல முன்னேற்றம், சிகிச்சையில். மற்ற மருந்துகளை குறைந்து விட்டார்கள். தேங்க் யூ,, ஸர் ஃப்ரெட்ரிக் பாண்டிங்க்.
இன்றைய தினம் ஜூலை 27, 1921 அன்று நடந்த அதிசயம் (இன்ஸுலின் கண்டு பிடிப்பு) அவருடைய கைங்கர்யம். என் மாதிரி கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றிய புண்யம் உமது. மஹாவிஷ்ணு உம்மை வைகுண்டத்தில் உச்சஸ்தானத்தில் வைத்திருப்பார், இன்ஸுலீன் சிம்மாசனே!
முக்கியமான பாயிண்ட் இது தான். இந்த டயபெட்டீஸ், புற்றுநோய், சுற்றுபுற சூழல், விண்மீன்கள், ஜலதரங்கம்: எதை எடுத்தாலும், பொறுப்புடன் நம்பகத்தனமான செய்திகளை தரலாம். ஆரோக்கியமாக அளவளாலாம். பலர் அளிக்கும் அறிவுரைகள் உபயோகமாக இருக்கலாம். சில பிரச்னைகள்: தினம் எழுத இயலாது; அரட்டைக்கும், தர்க்கத்துக்கும், திசை திருப்பவும், தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தடை வேண்டும். பரீக்ஷார்த்தமாக, உலகத்தையே ஆட்டிப்படைக்கும் நீரழிவு நோயை பற்றி, உண்மைகளும், சீரான சிகிச்சையும் பற்றி அறியலாம். முதற்கண்ணாக, நான் கனவு காணும் இந்த இழைக்கு என்ன பெயர் வைக்கலாம்? மற்ற கருத்துக்கள் யாவை? அவசரமில்லை. நிதானமாக, ஆக்கபூர்வமாக, விருப்பமிருந்தால்........
இப்போதைக்கு ஐயா படம், நன்றியுடன்,
இன்னம்பூரான்
27 07 2011
No comments:
Post a Comment