Monday, November 11, 2013

வல்லிக்கண்ணன்அன்றொரு நாள்: நவம்பர் 12


பிளிட்ஸ் இதழில் அந்தக்காலத்தில் 'நாளை செய்தி இன்று' என்று கலாய்ப்பார்கள். தற்காலம் ஜன்மதின கட்டுரைகள் ஒரு நாள் முன்னால் அப்பியரிங்க்!
இன்னம்பூரான்
12 11 2013

அன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)

Innamburan Innamburan 12 November 2011 13:22

அன்றொரு நாள்: நவம்பர் 12
வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)
நெல்லை மண்ணும் அரவணைக்கும் தமிழும் ஒன்றையொன்று அண்டி வாழ்பவை ~மஹாகவி பாரதியார்,புதுமை பித்தன், கு.அழகிரிசாமி, ரசிகமணி, வல்லிக்கண்ணன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசு. வாழ்க்கைக்குறிப்புகள் எழுதுவதில் ஒரு அலாதி பாணியை, வல்லிக்கண்ணன் அவர்களிடம் கண்டேன். சமயத்தில் நினைப்பது உண்டு, அவர் பேசுகிறாரா? எழுதுகிறாரா? என்று.
நிறைந்த வாழ்வு வாழ்ந்து தனது 86வது வயதில் மறைந்தார். அவர் மறைந்த உடனேயே திரு. நா.கண்ணன் அவரை பற்றி எழுத கேட்டுள்ளார், மின் தமிழில் (11 11 2006). எனக்கு தமிழ் இலக்கிய பரிச்சியம் மிகக்குறைவு. ஐந்து வருடம் கழித்து, தனது சதாபிஷேகக் காலகட்டத்தில், திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் அளித்த அருமையான நேர்காணல்  ஒன்றை ஆறாம் திணையிடமிருந்து, இரவல் வாங்கி அளித்து, என்னால் இயன்ற பணியை செய்கிறேன். அவருடைய நூல்களை நிரந்தரப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டால் நல்லது தான்.
நன்றி,வணக்கம்,
இன்னம்பூரான்
12 11 2011
nilaipetra.jpg

*
வல்லிக்கண்ணன் நேர்காணல்ஆறாம் திணை
பிறந்த நாள் பவள விழா, தனது எழுத்து வாழ்க்கை மணி விழா என கொண்டாடத் தெரியாத எழுத்துலக மார்க்கண்டேயரான வல்லிக்கண்ணனுக்கு எண்பது வயது நடந்து கொண்டிருக்கிறது. தனது வாழ்நாளில் அறுபது ஆண்டுகளை எழுத்து – இலக்கியத்துக்காகவே செலவிட்டவர்.
உங்கள் பூர்வீகம்?
திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜவல்லிபுரம் என் சொந்த ஊர். நான்12.11.1920-ல் பிறந்தேன்.
எப்பொழுதிலிருந்து எழுத ஆரம்பித்தீர்கள்?
1939- முதல் எழுதத் தொடங்கினேன். 1940-ல் புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘திருமகள்’ பத்திரிகையில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அங்கு மூன்று மாதங்கள்தான் −ருந்தேன். அடுத்து ‘சினிமா உலகம்’ பத்திரிகையில் பணி. ‘சினிமா உலகம்’ மாதமிருமுறை வெளி வந்தது. அங்கு ஒன்பது மாதங்கள் பணியாற்றிவிட்டு, சென்னைக்கு வந்து ‘நவசக்தி’ பத்திரிகையில் சேர்ந்தேன். சக்திதாசன் சுப்பிரமணியம் என்பவர் ஆசிரியராக இருந்தார். நான் உதவி ஆசிரியர். நவசக்தி திரு.வி.க ஆரம்பித்த பத்திரிகை.
1944-ல் இருந்து 1947 வரை திருச்சியில் துறையூரில் இருந்து வெளிவந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் பணி. இதற்கு கு.ப.ரா கெளரவ ஆசிரியராக இருந்தார். திருலோக சீதாராம் ஆசிரியர்.
1950, 1951-ல் ‘ஹநுமான்’ பத்திரிகையில் பணியாற்றிவிட்டுப் பின்னர் சுதந்திர எழுத்தாளனானேன். ‘ஹநுமான்’ பத்திரிகையில் ந. பிச்சமூர்த்தியும், சங்கு சுப்பிரமண்யமும் நிறைய எழுதினார்கள்....
‘சரஸ்வதி’, ‘தீபம்’, ‘தாமரை’ முதலிய பத்திரிகைகளில் நிறைய எழுதி இருக்கிறேன். ஈழம், சிங்கப்பூர் பத்திரிகைகளிலும் எழுதினேன்.
1960 வரை சுதந்திர எழுத்தாளனாக இருப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. அதற்கு அப்புறம்தான் கஷ்ட காலம். என் உடன்பிறந்த அண்ணன் ர.சு. கோமதி நாயகத்தின் உதவியும், அரவணைப்பும் இல்லாமல் இருந்தால் வாடிப் போயிருப்பேன்!
தமிழுக்கு உழைத்துக் கருகிப்போன எழுத்தாளர்கள் பலர்- புதுமைப்பித்தன், கு.ப.ரா., சுப்பிரமணிய பாரதியார், சாலிவாகனன்.... என்று அநேகர். இந்தப் பட்டியலில் நானும் சேர்ந்து விடாமல் இருக்க என் அண்ணனின் அன்பே காத்தது!
தமிழ் இலக்கியத்திற்கு உங்கள் பங்களிப்பு என்ன ?
சிறு கதைகள், நாவல்கள், கவிதைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், நாடகம், வரலாறு என்று என் பங்களிப்பு இன்றும் தொடர்கிறது...
‘பெரிய மனுஷி’ – ‘வஞ்சம்’ ‘ஆண் சிங்கம்’ – ‘சரியான துணை’, – ‘பயந்தவள்’ – ‘அலைகள்’.... முதலிய என் சிறு கதைகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
‘நினைவுச் சரம்’, ‘அலை மோதும் கடல் ஓரத்தில்’, ‘வீடும் வெளியும்’ – ‘இருட்டு ராஜா’ முதலிய எனது நாவல்கள் புகழ் பெற்றவை.
‘வீடும் வெளியும்’ – சுதந்திரப் போராட்ட காலத்தைச் சொல்லும் நாவல்.
‘நினைவுச் சரம்’ – ஒரு திருநெல்வேலி நபரின் கதையைச் சொல்கிறது. ஒரு சோதனையான காலகட்டத்தில் ஊரை விட்டு ஓடிச் சென்ற அவர் சுமார் நாற்பது ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். புற நிலையில் மாற்றங்கள் இருந்தாலும், அக நிலையில் மக்களின் இழி குணங்கள் மாறாமல் இருப்பது கண்டு மனம் நோகிறார்.
‘அலை மோதும் கடல் ஓரத்தில்’ – ஒரே இரவில் நடக்கும் கதை. கடல் புரத்திற்குத் தற்கொலை செய்து கொள்ள வரும் ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசிக் கொள்கிறார்கள். தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டுப் புது வாழ்வு தொடங்குகிறார்கள்.
அவன் – அவள் – அவர்கள் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது இந்த நூல்.
‘இருட்டு ராஜா’ – கதையின் நாயகன் காதல் தோல்வியால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான். ஆனால் ஊருக்கு நல்லது செய்யும் பரோபகாரியாக விளங்குகிறான்.
கு.ப.ராவும், ந. பிச்சமூர்த்தியும் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தபோதே நானும் புதுக்கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன். என் முதல் புதுக்கவிதை 1943-ல் வெளி வந்தது! ‘புத்த பக்தி’ – என்ற என் முதல் புதுக்கவிதைத் தொகுதி 1944-ல் வெளியானது.
‘அமர வேதனை’ என்ற புதுக்கவிதைத் தொகுதியை சி.சு. செல்லப்பா, தன் எழுத்துப் பிரசுரமாக வெளியிட்டார்.
‘பாரதி அடிச்சுவட்டில்’ என்று பாரதியின் ‘காட்சி’ – கவிதையின் பாணியில் ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் சுமார் ஐம்பது கவிதைகளை எழுதினேன். ந. பிச்சமூர்த்தி படித்துவிட்டு மிகவும் பாராட்டினார்.
1950-ல் நான் எழுதிய நாடகம் ‘விடியுமா?’.... ஓட்டல் தொழிலாளர்கள் இதை மேடையில் நடித்துக் காட்டினார்கள். சமூகப் பிரச்சினைகள் பலவற்றை அதில் சொல்லியிருந்தேன்.
‘நம் நேரு’, ‘விஜயலட்சுமி பண்டிட்’ முதலியவை நான் எழுதிய வரலாற்று நூல்கள். புதுமைப்பித்தன் வரலாற்றையும் எழுதி இருக்கிறேன்.
1. புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்
2. சரஸ்வதி காலம்
3. பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை
4. தமிழில் சிறு பத்திரிகைகள்
5. எழுத்தாளர்கள் – பத்திரிகைகள் – அன்றும், இன்றும்
6. வாசகர்கள் – விமர்சகர்கள்
7. தீபம் யுகம்
.... முதலியவை எனது ஆராய்ச்சி நூல்கள்.
மேற்கண்ட முதல் நான்கு புத்தகங்களும் தீபத்தில் முதலில் தொடராக வெளிவந்து அப்புறம் புத்தக வடிவம் பெற்றவை.
புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும் – சாகித்ய அகாதமி விருது பெற்றது.
எழுத்தாளர்கள் – பத்திரிகைகள் அன்றும் இன்றும் – தமிழ் வளர்ச்சிக் கழகம் பரிசு பெற்றது.
நா. பார்த்தசாரதி இருபத்து மூன்று வருடங்கள் சிரமப்பட்டு நடத்திய ‘தீபம்’ பத்திரிகையின் இலக்கியப் பங்களிப்பைச் சொல்வது ‘தீபம் யுகம்’.
கார்க்கி கதைகள், கார்க்கி கட்டுரைகள், தாத்தாவும் பேரனும் (அமெரிக்க நாவல்) ராகுல சாங்கிருத்தியாயன், ஆர்மீனியச் சிறுகதைகள், சிறந்த பதிமூன்று கதைகள் – (இந்தியக் கதைகள்) .....இவையெல்லாம் என் மொழிபெயர்ப்பு நூல்கள்...
‘20-ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சி’ – என்ற நூலை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.
12.11.2000 அன்று எனக்கு எண்பது வயது பூர்த்தியானது. அதற்காக என் இலக்கிய ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க என் சுய சரிதையை எழுதி வருகிறேன்.
ஆனால் விமர்சனத்திற்காக எனக்கு நிறையப் பேர் புத்தகங்களை அனுப்புவதால் என் சொந்த எழுத்துப் பணி தடைபடுகிறது. ஆங்கில இலக்கிய நூல்கள் படிக்கவும் எனக்கு நேரம் கிடைப்பதில்லை.
ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்குக் குறையாமல் படிக்கிறேன். அப்படியிருந்தும் விமர்சனத்திற்காக நூல்கள் குவிந்து கிடக்கின்றன.
 இன்றைய தமிழ்க் கவிதை, சிறுகதை, நாவல் பற்றிச் சொல்லுங்கள்.
சராசரி வாசகன் புரிந்து கொள்ள முடியாதபடி பலர் எழுதி வருகிறார்கள். தமிழில் பின் நவீனத்துவ பாணியில் பலர் எழுதும் எழுத்து குழப்பமாக இருக்கிறது!
புதுமைப்பித்தன், கு.ப.ரா – இவர்களுக்கெல்லாம் தனித்துவம் வாய்ந்த நடை இருந்தது. இப்போது எழுதுவோர் பலர் நடை விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. தனித்துவத்திற்காக முயற்சி செய்வதில்லை!
சிறுகதை, நாவல், கவிதை எல்லாவற்றிலுமே புது விஷயங்கள் சொல்லப்படுகின்றன! களங்கள் விரிந்திருக்கின்றன.
இடைக் காலத்தில் 150 பக்கங்கள், 200 பக்கங்கள் என்று நாவல்களின் அளவு குறைவாகவே இருந்தது. இப்போது 700 பக்கங்கள் 1000 பக்கங்களுக்குக் கூட எழுதுகிறார்கள்.
புதுக்கவிதையில் உள் மன உளைச்சல், தனி நபர் பிரச்சினைகள் அதிகம் பேசப்படுகின்றன. இந்தக் கவிதைகளை எங்கோ ஆரம்பிக்கிறார்கள். எங்கோ முடிக்கிறார்கள். இவற்றைப் படித்துப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.
பழமலய் கிராமத்து மாந்தரைத் தன் கவிதைகளில் அருமையாகச் சித்திரிக்கிறார்.
ஹைகூ என்று மூன்று வரிக்கவிதைகள் நிறைய வருகின்றன. மு. முருகேஷ் எழுதும் மூன்று வரிக்கவிதைகள் நன்றாக −ருக்கின்றன. ஆனால் தமிழில் பலர் எழுதும் மூன்று வரிக் கவிதைகள் கவித்துவம் இல்லாமல் வெறும் உரைநடை வரிகளாக இருக்கின்றன...
தமிழ் நாவல் உலகை எடுத்துக் கொண்டால் அரவானிகளைப் பற்றி சு. சமுத்திரம் எழுதிய ‘வாடா மல்லி’ – எய்ட்ஸ் பற்றி அவர் எழுதிய ‘பாலைப் புறா’ முதலியன புதிய முயற்சிகள். சின்னப்ப பாரதி மலைவாழ் மக்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.
யதார்த்த பாணியிலேயே இன்றும் சிறந்த நாவல்களை எழுத முடியும் என்பதற்கு சுந்தர ராமசாமியின்-
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் – நாவலை உதாரணமாகச் சொல்லலாம்.
மரபுக் கவிஞர்களில் எனக்கு பாரதி, பாரதிதாசன், ச.து.சு. யோகி, தேசிய விநாயகம் பிள்ளை, கம்பதாசன் – இவர்களைப் பிடிக்கும். நாற்பதுகளில் க. அப்புலிங்கம் என்பவர் கலைவாணன் என்ற புனைப்பெயரில் விருத்தப் பாக்களை அருமையாக எழுதினார். தமிழ் ஒளி, கே.சி.எஸ். அருணாசலம் இவர்கள் கவிதைகளையும் ரசித்துப் படித்திருக்கிறேன்.
இன்றும் பலர் மரபுக்கவிதைகளை நன்றாக எழுதி வருகிறார்கள்...
வ.செ. குழந்தைசாமி, குலோத்துங்கன், நெல்லை. சு. முத்து... இவர்கள் சிறந்த மரபுக் கவிஞர்கள்.
இன்றைக்குள்ள வெகுஜனப் பத்திரிகைகள் எப்படி இருக்கின்றன?
அவர்களுக்கு லட்சியங்கள் முக்கியமில்லை. லட்சங்கள்தான் முக்கியம். தமிழ் சினிமாவும், வணிகப் பத்திரிகைகளும் தமிழரின் ரசனையைக் கெடுத்திருக்கின்றன. இன்றைய தமிழ் சினிமாக்களில் கதை அம்சமே இல்லை. தொழில் நுணுக்க அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.
தமிழில் நாடகங்கள் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்.
1930-களில் பள்ளி மாணவனாக இருந்தபோது கன்னையா பிள்ளை கம்பெனி நாடகங்களைப் பார்த்திருக்கிறேன்.
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும், டி.கே.எஸ். சகோதரர்களும் எனது நெருங்கிய நண்பர்கள். எங்கெல்லாம் நவாப் கம்பெனி முகாமிட்டிருக்கிறதோ அங்கெல்லாம் என்னை வந்து தங்கி நாடகம் பார்க்கும்படி நவாப் பணம் கொடுத்து அனுப்புவார். கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம், கல்லிடைக்குறிச்சி – இங்கெல்லாம் சென்று தங்கி, நாடகம் பார்த்து, நவாப் கம்பெனி நாடகங்களைப் பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறேன்.
‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, டி.கே.எஸ். சகோதரர்கள் திருச்சியில் முகாமிட்டிருந்தனர். டி.கே.சண்முகம் பணம் அனுப்பி, அழைப்பு விடுத்தார். திருச்சி சென்று தங்கி, பல நாடகங்களைக் கண்டுகளித்தேன்.
வித்யாசாகர், ஒளவையார், சிவலீலா, ராஜா பத்ரஹரி, பில்ஹணன், உயிர் ஓவியம், முள்ளில் ரோஜா, தமிழ் முழக்கம் – முதலிய டி.கே.எஸ். நாடகங்கள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருக்கின்றன.
கோமல் சுவாமிநாதன் என்னை அழைத்துச் சென்று, தன் நாடகங்கள் சிலவற்றைக் காட்டினார். தற்கால சபா நாடகங்கள் பலவற்றை நான் பார்க்கவில்லை.
தமிழிலக்கியத்திற்கு சிறு பத்திரிகைகளின் பங்களிப்பு எந்த அளவில் இருந்தது , இருக்கிறது ?
தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடைய சிறு பத்திரிகைகள்தான் பெரிதும் உதவியிருக்கின்றன.
பாரதியார் நடத்திய ‘இந்தியா’ வ.வே.சு. ஐயரின் ‘பால பாரதி’....
1933ல் இருந்து 34 வரை வந்த ‘மணிக்கொடி’ பத்திரிகை அளவில் வெளிவந்தது. அது தேச விடுதலைக்காகப் போராடியது. 1935, 36-ல் வெளிவந்த ‘மணிக்கொடி’ புத்தக வடிவில் வெளியாயிற்று. அப்போதுதான் தமிழுக்குப் பல அருமையான சிறுகதைகள் கிடைத்தன!
வீ.ர. ராஜகோபாலன் என்பவர் ‘கலா மோகினி’ என்ற பத்திரிகையை நடத்தினார். இவர் சாலிவாஹனன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார். 1942-ல் இருந்து 1948 வரை ‘கலா மோகினி’ வெளி வந்தது. ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களும் இதில் எழுதினார்கள். மாதம் இருமுறை வெளி வந்தது.
1942-ல் இருந்து 1947 மே முடிய ‘கிராம ஊழியன்’ பத்திரிகை வெளியாயிற்று. தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’ இதில்தான் வெளி வந்தது.
எம்.வி. வெங்கட்ராம் ‘தேனீ’ என்று ஒரு பத்திரிகை நடத்தினார். ‘சரஸ்வதி’ பத்திரிகை 1955-ல் ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் நடத்தப்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் நடத்திய ‘சாந்தி’. சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ போன்ற பத்திரிகைகளும் −ருந்தன. செல்லப்பா சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார் பல சிரமங்களுக்கிடையே! தீபம், நடை, கசடதபற, தாமரை, வானம்பாடி, ·, சதங்கை, காலச்சுவடு, நவீன விருட்சம், கனவு, சொல் புதிது, ஆரண்யா, புதிய விசை, கோடு, கணையாழி.... என்று இந்தப் பட்டியல் இன்று வரை நீள்கிறது!
சுப மங்களா, புதிய பார்வை – இவை இடைநிலைப் பத்திரிகைகளாக இருந்தன.
 தமிழில் சோதனை முயற்சிகள்....
டி.கே. துரைசாமி என்கிற ‘நகுலன்’ நிறையச் சோதனை முயற்சிகள் செய்திருக்கிறார். புதுமைப்பித்தனின் சிறுகதை- ‘கயிற்றரவு’. க.நா.சு.வின் ‘அசுர கணம்’ – ‘ஒரு நாள்’ முதலிய நாவல்கள். அசோகமித்திரனின் ‘ஒற்றன்’. நகுலனின் ‘நினைவுப் பாதை’ நாவல் போன்றவைகளெல்லாம் சோதனை முயற்சிகள்தான்.
அப்துல் ரகுமான், அபி, சிற்பி, சேலம் தமிழ்நாடன், பிரமிள், தரும சிவராம், ஆத்மாநாம் – இவர்கள் கவிதைகள் பல சோதனை முயற்சிகள். ஆத்மா நாம் தற்கொலை செய்து கொண்டது தமிழ் இலக்கியத்திற்குப் பேரிழப்பு!
வெளிநாட்டு சோதனை முயற்சிக் கவிதைகள் பலவற்றை பிரம்மராஜன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்!
 தமிழ் வாசகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வாசகர்கள் வளரவில்லை. தரம் உயரவில்லை. சக்தி. வை. கோவிந்தன் குறைந்த விலையில், உயர்ந்த புத்தகங்களை வெளியிட்டார். எட்டணா விலையில் தந்தார்! தமிழில் மலிவுப் பதிப்புகளுக்கு அவர்தான் முன்னோடி. பாரதியார் கவிதைகள் ஒரு ரூபாய். திருக்குறள் ஒரு ரூபாய். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி – இரண்டும் சேர்த்து ஒரு ரூபாய்க்கு – என்றெல்லாம் வெளியிட்டார்!
ஆயிரம் புத்தகங்கள் போட்டால் விற்க நான்கு ஆண்டுகள் ஆகின்றன என்று சக்தி கோவிந்தன் சொன்னார்.
இன்றும் அதையே இன்றைய புத்தக வெளியீட்டாளர்கள் சொல்கிறார்கள். இது தமிழின் துரதிர்ஷ்டம்!
க.நா.சு செத்துப் போவதற்கு முன்னால் என்னைச் சந்தித்துப் பேசியபோது சொன்னார்-
‘’ஒரு இலக்கியப் பத்திரிகை ஆரம்பித்தால் நூற்றைம்பது பேர்தான் சந்தாதாரர்களாகச் சேர்கிறார்கள். அன்றும் அப்படித்தான். இன்றும் அப்படித்தான்.’’
சந்திப்பு: எஸ்.குரு


உசாத்துணை
மீள்பதிவு: http://aim.blogsome.com/2006/11/10/p10/

Geetha Sambasivam 12 November 2011 15:46


வாசகர்கள் வளரவில்லை. தரம் உயரவில்லை//
எத்தனை உண்மை!  இது ஏற்கெனவே படிச்சாலும் மீண்டும் படித்தேன்.  நன்றி பகிர்வுக்கு.
2011/11/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 12
வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)


Subashini Tremmel 12 November 2011 17:23

நல்ல பகிர்வு திரு.இன்னம்புரான்.
மேலும் சில தகவல்கள் இவர் படைப்புக்களின் பட்டியல் இங்குள்ளது. 
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9984:2010-07-16-01-45-02&catid=1149:10&Itemid=417


2011/11/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
..பணியை செய்கிறேன். அவருடைய நூல்களை நிரந்தரப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டால் நல்லது தான்.

ஆம்.  

சுபா


K R A Narasiah 12 November 2011 20:20


நான் எழுதிய சாதாரணமனிதன் நூலை சமஸ்கிருத அறிவாளரும் மேநாள் IG யுமான சி. எல். ராமகிருஷ்ணா வெளியிட வல்லிக்கண்ணன் தான் பெற்றுக்கொண்டார்!
நரசய்யா
[Quoted text hidden]

Innamburan Innamburan 13 November 2011 10:00

நன்றி, ஸுபாஷிணி,

மேலும், 'காலச்சுவடு' இதழில் வல்லிக்கண்ணனை பற்றிய விமர்சனமும் , ஆறாம் திணையில் திருப்பூர் கிருஷ்ணன் கட்டுரையும் வந்துள்ளன. அவரே பேசட்டும் என்று, நேர்காணலை மட்டும் பதிவு செய்தேன்.

நன்றி, திரு.நரசய்யா,
அன்றொரு நாள்: ஜூன் 24 பார்க்கக்கிடைத்ததோ?
*

அன்றொரு நாள்: ஜூன் 24

‘...சிட்டிக்கு நரசையாவின் பெற்றோர் ஆதர்சம். நரசைய்யாவிற்கு
சிட்டி ஆதர்சம். சிட்டி பலருக்கு ஆதர்சம் ;-)...’
- நா. கண்ணன்: மின் தமிழ் (19 04 2009)

எதை எழுதுவது? எதை விடுவது? ‘சிட்டி’யை சிட்டிகையாக குறுக்கி அடைக்க முடியுமோ! இது ஒரு சிறிய அடி பணிந்து வணங்கும் முகாந்திரம் அவ்வளவு தான். அவருக்கு பிடித்திருக்கும் என்பதால், அவரது அபிமான நகைச்சுவை எழுத்தாளரும், பொருளியல் பேராசிரியரும், (எனக்கு இன்னம்பூர் போல, அவருக்கு,தற்காலம் நான் வசிக்கும் ஹாம்ஷையர்.) ஆன ஸ்டீஃபன் லீகாக் மேற்கோள்கள் மூன்றை சமர்ப்பிக்கிறேன். அவர் வங்கிக்கணக்கு திறந்த கதை பிரமாதமாக இருக்கும், நகைச்சுவை ததும்ப. அவரது படைப்புகள் எல்லாம் இணைய தளத்தில். நாம் எப்போது தமிழை அந்த நிலைக்கு உயர்த்துவோம்!  (நாம் எப்போது தமிழை அந்த நிலைக்கு உயர்த்துவோம்! => ஒரு முன்னுதாரணம்: http://www.tamilheritage.org/old/text/ebook/chitti_malar_2010.pdf]

ஸ்டீஃபன் லீகாக் :
1. [‘பொருளாதாரமா!] அதற்கு ‘அரசியல்-பொருளியல்’ (political economy) என்று பெயர், இரண்டும் அதில் இல்லையே!’. 
2. எழுதுவது பிரச்னையே இல்லை. தோன்றியதை எழுதி விடலாமே. ஆமாம்! தோன்றினால் தானே!
3. ‘முழுச்செங்கலை விட பாதி செங்கல் லேசு. பறக்கும், எறிந்தால். அது மாதிரி, அரை  குறை உண்மை தான் தேவலை.’
*****
“இன்று திரு. 'சிட்டி' சுந்தரராஜனின் நூற்றாண்டு விழா இனிது நிறைவேறியது, சாஸ்திரி நகர் மங்கையர் மன்றத்தில். திரு. நரசய்யா ஊக்குவிக்க, முனைவர் சதாசிவம் உறுதுணை அளிக்க, என் பழைய பேட்டை சாஸ்திரி நகருக்கு, க்ரோம்பேட்டையிலிருந்து பயணித்தேன். திரு. நரசய்யா பல சான்றோர்களையும், அறிஞர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். ஸத்யபாமா, சுப்ரமணியம், மோஹன் போன்ற பழைய நண்பர்களை கண்டு களித்தேன். 'சிட்டியின்' மகவுகள் பரிவுடன் தந்தையின் பெருமையை கொண்டாடினர். முனைவர். ஸீ.எல்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வாழ்த்துரைகள் வாசிக்கப்பட்டன். தமிழ் மரபு கட்டளையின் சார்பில் நமது நா. கண்ணன் அவர்களின் நீட்டொலை வாசிக்கப்பட்டபோது, அது மிகப்பொருத்தமாகவும், இலக்கிய நடையில் இருந்ததைக்கேட்ட யான் பெருமிதத்துடன், மற்றவர்கள் செவி சாய்த்ததை அனுபவித்தேன். பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி த்ன்னை 'சிட்டி' ஊக்குவித்ததைப் பற்றியும், அவரது (British understatement humour) நகைச்சுவையின் மேன்மையை பாராட்டிப்பேசினார். இதழாசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், தனக்கே உரிய நகைச்சுவையுடன், 'சிட்டியின்' நுட்பமான எள்ளல்களை, பகிர்ந்து கொண்டார். முனைவர் தமிழ்ச்செல்வி எவ்வாறு அவரது 'மணிக்கொடி' ஆய்வுகளுக்கு 'சிட்டி' யும் அனரது துணைவியாரும் ஊக்கம் அளித்தனர் என்பதைக்கூறி மகிழ்ந்தார். மகனுக்கு மேல் மருமான் அல்லவா! அந்த உரிமையுடன், திரு. நரசய்யா, 'சிட்டியை' பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இவர் கடலோடியாகப்போவதை 'சிட்டி' விரும்பாவிட்டலும், இவர் விடுமுறையில் வந்த போது 'சிட்டி' ரயில் நிலையத்து வந்து வரவேற்ற்தை கூறி மனம் நெகிழ்ந்தார். சிறார்களின் பங்கு மேலும் சிறப்பு சேர்த்தது. ஒரு மழலை எல்லாரின் மனத்தைக் கொள்ளை கொண்டாள்.

'சிட்டியின்' நாமம் என்றும் வாழ்க.”

இன்னம்பூரான்
18 04 2009
********
“சிட்டி என்னும் சிரிப்பாளி” – நரசய்யா:

“ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த இவரை ஈர்த்த ஆங்கில எழுத்தாளர்கள் பி.ஜி. வுட்ஹௌவுசும் ஜி.கே. செஸ்டர்னும்தான். ஆங்கிலத்தில் ஹாஸ்யம் கலந்த கட்டுரைகளை 1930ல் பச்சையப்பன் கல்லூரி நாட்க்ளிலேயே எழுதியிருக்கிறார்.

தன்னை ‘சர்க்கஸில் வரும் கோமாளி‘ என்று வருணித்துக் கொள்ளும் சிட்டி, அப்படித்தான் வாழ்க்கையிலும் இருந்தார்.

சாலிவாஹனன் (வி.ரா. ராஜகோபாலன்) இவ்வாறு கலாமோஹினியில் குறிப்பிட்டிருந்தார்.

“இவர் ஒரு பொல்லாத பேர்வழி என்று இவரது தோற்றத்திலிருந்தே தெரிகிறதல்லவா? பார்வைக்கு பரம சாது போலிருந்தாலும் பரிகாசம் என்று வந்துவிட்டால், போதும். படாதபாடு படுத்திவிடுகிறார். ஆங்கில இலக்கியத்தில் செஸ்டர்டன் என்பவர் கையாண்டதைப் போன்று கண்ணியமான பரிகாசத்தை இவர் தமிழில் கையாள்வது நிச்சயமாக ஆறுதலளிக்கக் கூடிய ஒரு விஷயம்தான்” (கலாமோஹினி :: 1943)

ஆங்கில எழுத்தாளர் ஸ்டீஃபன் லீ காக் நகைச்சுவையைப் பற்றிச் சொல்லும்போது, ‘நகைச்சுவை எவரையும் புண்படுத்தக் கூடாது’ என்று கூறுவார். அவரைப் போலவே சரித்திர எழுத்தாளரும் நகைச்சுவை எழுத்தாளருமான சிட்டி இதை முற்றிலும் கடைபிடித்தவர்.

அவர் வாழ்க்கை சிரமம் இல்லாமல் இருக்கவிலை; ஆனால் எந்த சிரமம் வந்தாலும் அதை ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அதேபோல மற்றவர்களுக்கு ஏதாவது கஷ்டம் இருந்தபோதெல்லாம் அவர்கள் இவரிடம் வந்துப் பேசினாலே அவை தீர்ந்து விடுமெனவும் நம்பினார்கள்.

சமீபத்தில் அவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனியில் இருந்தபோது கூட, இந்த வயதிலும், அவரது நகைச்சுவை சற்றும் குறையாத நிலையில் அவரைப் பார்த்த சிறந்த மருத்துவர்கள் அவரது “பாசிடிவ் அவுட்லுக்” என்பதைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அதில் ஒருவர், சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர், “இந்தப் பெரிய மனிதருக்கு சிகிச்சை வெற்றியடைந்ததற்குக் காரணம் அவரது சிறந்த மனோதிடம்தான்” என்றார். இந்த மனோதிடம் நகைச்சுவையாளர் அனைவருக்கும் உண்டென்பதுதான் உண்மை!”
(டிசம்பர் 2004)
*********
சிட்டி என்றொரு தகவல் பெட்டகம்:
இடைக்கால இலக்கியத்தில் இளம்சூரியர், முதுசூரியர் என்ற இரட்டைப் புலவர்களின் படைப்புகள் உண்டு...இருவர் சேர்ந்து இலக்கியம் படைக்க முடியுமா? முடியும் என்று, அன்றைய இரட்டைப் புலவர்கள் போல் பிற்காலத்தில் சாதித்துக் காட்டியவர் ஒருவர் உண்டு. அவர் சிட்டி என்கிற பி.ஜி. சுந்தரராஜன்... கு.ப.ராஜகோபாலனுடன் இணைந்து, "கண்ணன் என் கவி' என்ற பாரதி ஆய்வு நூல், தி.ஜானகிராமனுடன் இணைந்து, "நடந்தாய் வாழி காவேரி' என்ற பயண நூல், சிவபாதசுந்தரத்துடன் இணைந்து, தமிழ்ச் சிறுகதை, நாவல் வரலாறுகள், பெ.சு. மணியுடன் இணைந்து "அறிஞர் வ.ரா. வாழ்க்கை வரலாறு' என அவர் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றும் மணி மணியானவை... தற்கால இலக்கியத்தின் உ.வே.சா. என்று சிட்டியைச் சொல்லலாம்...அவரது படிப்பறிவு பிரமிக்கவைக்கும் அளவு அசாதாரணமானது...சிலப்பதிகாரக் காப்பியத்தை ஆய்வுசெய்து, "கண்டெடுத்த கருவூலம்' என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார். சிவபாதசுந்தரத்தின் உதவியோடு, முதல் கவிதை நாவலான "ஆதியூர் அவதானி' என்ற படைப்பை வெளிக்கொண்டு வந்தவர்...தி.ஜா. பற்பல சித்தர்களைத் தேடித் தேடி நடந்தவர்.சிட்டியோ சித்தர்களில் எல்லாம் பெரிய சித்தர் காஞ்சிப் பரமாச்சாரியார் என்று நிறைவடைந்து விட்டவர்...சிட்டி ஆங்கில எழுத்தாளர் உட்ஹவுசின் பரம ரசிகர்...
சிட்டியை ஒரு "தகவல் பெட்டகம்' என்று சொல்லலாம்..."சாதாரண' ஆண்டில் (தமிழ் வருடம்) பிறந்த சிட்டியின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழ் எழுத்தாளரும்சிட்டியின் உறவினருமான நரசய்யா "சாதாரண மனிதன்' என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார்...சிட்டியின் அதிர்ஷ்டங்களில் ஒன்று அவரது குடும்பம்...சிட்டி2000-இல் தம் 96-ஆம் வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து காலமானார்... அமரர் சிட்டிக்கு இப்போதும் ஆண்டுக்கொரு முறை அவரது குடும்பத்தினர் விழா எடுக்கிறார்கள்...

- திருப்பூர் கிருஷ்ணன் 
23 01 2011
© Copyright 2008 Dinamani
[முழுக்கட்டுரையையும் நீங்கள் ஆர்வத்துடன் படிக்கவேண்டும் என்று, குறிப்பால் உணர்த்தத் தான், சில பகுதிகளை மட்டும் இங்கு பதிவு செய்ததுள்ளேன்.
இன்னம்பூரான்24 06 2011]
http://www.dinamani.com/edition/print.aspx?artid=365324

Sunday, November 10, 2013

11: 11~11~11~11





அன்றொரு நாள்: நவம்பர் 11: 11~11~11~11
அப்டேட்: இன்று 'பாப்பி அப்பீல்' வரலாறு எழுத நினைத்தேன். ஏற்கனவே எழுதிய இந்த கட்டுரையை பற்றிய நினைவு அப்போது எழவில்லை. மனம் அசை போட்டுக்கொண்டிருந்தது.

இந்த ரத்தக்கறை மலர் ஒரு சங்கேதம். குறிப்பால் சோகம் உணர்த்தும் உருவகம். நினைவுச்சின்னம். இரங்கல். இயலாமை. யுத்தத்தில் மரணத்தின் ஜனனம். யுத்தத்துக்கு மரணம் நாடும் சங்கேதம்.
*
‘...Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance...’
‘...பல்லாயிர புஷ்பங்களின் நடனம் கண்டேன்/ஒய்யாரமாகவே தலையசைத்து...’ என்று டாஃபிடல் மலரை கண்டு, வெர்ட்ஸ்வொர்த் என்ற கவிஞர் (1875).
‘...In Flanders fields/the poppies blow,/between the crosses,/row on a row...’
‘...சிலுவைகளோ அணி அணியாக மயான அமைதி காக்க,/ஊடே புகுந்த ரத்தக்கறை பாப்பி மலர்களும்/அணி அணியாக மயான அமைதியில்...’
என்று பொருள்பட கவி இசைத்தார், லெஃப்டினண்ட் கர்னல் ஜான் மக்ரேஸ். அவரொரு டாக்டர், கவிஞர். 
முழுக்கவிதை:
In Flanders fields the poppies blow
      Between the crosses, row on row,
   That mark our place; and in the sky
   The larks, still bravely singing, fly
Scarce heard amid the guns below.

We are the Dead. Short days ago
We lived, felt dawn, saw sunset glow,
   Loved and were loved, and now we lie
         In Flanders fields.

Take up our quarrel with the foe:
To you from failing hands we throw
   The torch; be yours to hold it high.
   If ye break faith with us who die
We shall not sleep, though poppies grow
         In Flanders fields. 
[மே 3.1915]
என்னத்தை சொல்றது போங்கோ! அவர் தான் சொல்லிட்டாரே:
‘...சிலுவைகளோ அணி அணியாக மயான அமைதி காக்க,/ஊடே புகுந்த ரத்தக்கறை பாப்பி மலர்களும்/அணி அணியாக மயான அமைதியில்...’/ நாங்களோ பரலோகத்தில்/ குயிலிசை குண்டுச்சத்தத்தில் குமைந்ததுவே/ ஆம். உதயமும் அஸ்தமனமும் கண்டு,காதலித்தும், காதலிக்கப்பட்டும் வாழ்ந்த நாங்கள் ஃப்ளாண்டர்ஸ் மண்ணிலே கலந்தோம்/ வைரியிடம் எமக்காக வாதாடும்/வலுவிழந்த கைகளிலிருந்து யாம் கொடுத்த தீவட்டியை தூக்கிப்பிடி/ நீ வாக்குத்தவறினால், உறைந்து போன நாங்கள் உறங்க மாட்டோம். ரத்தக்கறை மலர்கள் என்னமோ /அணி அணியாக...’
1916 மே மாதம். அர்ராஸ் ரணகளத்தில் 35000 வீரர்களை இழந்த காலகட்டத்தில் , அங்கு முளைத்த பாப்பி மலரை ஒரு சிப்பாய் அணிந்து கொண்ட வரலாறு உண்டு. மற்ற வரலாறுகளும் உண்டு. 1921ல் அது மடிந்த வீரர்களின் ஞாபக சின்னமாக ஃபீல்ட் மார்ஷல் டக்ளஸ் ஹைக் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இன்றளவும் (நானும் அணிந்திருக்கும்) இந்த காகிதப்பூவின் விற்பனை அதிகம். மாஜி ராணுவ வீரர்களுக்கு உதவும் நன்கொடை. ஆனால் ஒன்று தெரியுமோ?
உலகசமாதானம் விரும்பி வெண்மலர்களும் உலகின்றன.
இன்னம்பூரான்
11 11 2013


Innamburan Innamburan 11 November 2011 17:06


  • அன்றொரு நாள்: நவம்பர் 11
11~11~11~11
இன்று லக்ஷக்கணக்கான பிரிட்டானியர்கள், நவம்பர் 11, 1918 அன்று காலை 11 மணிக்கு முதல் உலக யுத்தம் முடிவடைந்ததின் நினைவாகவும், அந்த யுத்தத்திலும், இரண்டாவது உலக யுத்தத்திலும், 385 வீரர்களை பலி வாங்கிய ஆஃப்கனிஸ்தான் சண்டைகள் உள்பட, பல போர்களில் மாண்ட  பிரிட்டீஷ் துருப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று காலை 11 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மெளனம் காத்தனர். லண்டனில்  வீரர்களின் ட் ரஃபால்கர் நினைவு மண்டபத்தில் வீரவணக்க நிகழ்வு நடந்தது. அந்த கட்டிட அமைப்புப்படி காலை 11 மணிக்கு சூரிய வெளிச்சம், அன்று மட்டும், ஞாபாகர்த்த சிலையில் மீது படியும். ராணுவ தளபதிகளுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நெதர்லாந்தை சேர்ந்த அட் ரியன் கீஸ் (85 வயது: 1944~49 கடற்படையில் பணி புரிந்தவர்), ‘எங்கள் நாட்டை உய்விக்க வந்த பிரிட்டீஷ் ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்க வந்தேன்’ என்றார். ஆஃப்கனிஸ்தானில் பாஸ்டியன் முகாம் என்ற இடத்தில் நடந்த நிகழ்வில் ராணுவ அமைச்சர் கலந்து கொண்டு, வீர வணக்கம் செலுத்தினார். நாடெங்கும் இந்த நிகழ்வு நடந்தது. இங்கு ‘பாப்பி அப்பீல்’ என்று ஒரு வழக்கம் உண்டு. எல்லாரும் ‘பாப்பி’ மலர் போன்ற காகிதப்பூவை, மாஜி ராணுவர் நிதிக்கு நன்கொடை கொடுத்து, வாங்கி அணிந்து கொள்வர்.  அவற்றை நினைவு மண்டபத்தில் சமர்பிப்பர். சிறுவர்கள் பங்கேற்கும் படம் ஒன்று மட்டும் இங்கே.
Picture Attached
Children placed poppies in one of the fountains at Trafalgar Square after the two minute silence

ஒரு வரலாற்று பதிவு. முதல் வருட நிகழ்வு நவம்பர் 11, 1919 அன்று. மான்செஸ்டர் கார்டியன் 12 11 1919 இதழில், “...11 மணி அடித்ததும், மாயாஜாலம் போல. ட் ராம் வண்டிகள், மோட்டர் வண்டிகள், குதிரை வண்டிகள் எல்லாம் இருந்த இடத்தில் உறைந்த வண்ணம். ஒருவர் குல்லாயை எடுக்க, யாவரும் தலை குனிந்து வீரவணக்கம் செய்தார்கள். ஒரு மூலையில் ஒரு கிழவர், மாஜி ராணுவ வீரர், அட்டென்ஷனில் நின்றார். ஒரு கிழவி அழுதாள். மயான அமைதி...........”
ஏதோ ஆங்கில மோகத்தில் நான் இதை எழுதவில்லை. இன்றைய நிகழ்வு. வரலாறு பேசுகிறது. மேலும், தேசாபிமான விழிப்புணர்ச்சி ஏற்பட, இத்தகைய நிகழ்வுகள் உதவும். ஜனவரி 30ம் தேதி இது போன்ற இந்திய நிகழ்வை பெரும்பாலோர் கண்டு கொள்வதில்லை. அந்த ஆதங்கத்தில் எழுதினேன்.
இன்னம்பூரான்
11 11 11 
பி.கு.
இன்று தேசபக்தர் மெளலானா அப்துல் கலாம் ஆஸாத் அவர்களின் பிறந்த நாள். அவரை பற்றி எழுத தொடங்கும் போது, ‘Resisting Colonialism & Communal Politics: Maulana Azad and the Making of the Indian Nation’ என்ற சமீப காலத்து நூல் ஒன்றை பற்றி படித்தேன். இது வரை கூறப்பட்ட வரலாற்றின் சில பகுதிகள் மீள்பார்வைக்கு உட்படவேண்டியிருக்கும். எனவே ஆய்வு காலம் எடுக்கும், அதனால், பிறகு தான் அவரை பற்றி எழுதவேண்டும்.
உசாத்துணை:
http://www.bbc.co.uk/news/uk-15676087

Image credit: http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a0/Poppy2004.JPG
http://us.123rf.com/400wm/400/400/taolmor/taolmor0804/taolmor080400718/2861766-india-bijaipur-opium-poppy-field-dark-blue-sky-and-white-poppy-flowers.jpg


11 11 11 11.pages
72K

Geetha Sambasivam 11 November 2011 19:16


ஜனவரி 30ம் தேதி இது போன்ற இந்திய நிகழ்வை பெரும்பாலோர் கண்டு கொள்வதில்லை. அந்த ஆதங்கத்தில் எழுதினேன்.//

உங்கள் மனம் இந்தியாவில் தான் இருக்கிறது என்பது தெரியும்.  ஆகவே தவறாய் நினைக்க மாட்டோம்.  மேலும் நற்பழக்கம் யாரிடமிருந்தாலும் ஏற்றுக்கொள்வதே முறை. நன்றி பகிர்வுக்கு.  ஆஸாத் பற்றி எழுதுங்கள்.  அவரை இரட்டை வேடம் போடுபவர், மறைமுகமாகப் பாகிஸ்தானின் ஆதரவாளர் என்றே கேள்விப் பட்டேன்.  அது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியாது.

2011/11/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>

இன்று தேசபக்தர் மெளலானா அப்துல் கலாம் ஆஸாத் அவர்களின் பிறந்த நாள். அவரை பற்றி எழுத தொடங்கும் போது, ‘Resisting Colonialism & Communal Politics: Maulana Azad and the Making of the Indian Nation’ என்ற சமீப காலத்து நூல் ஒன்றை பற்றி படித்தேன். இது வரை கூறப்பட்ட வரலாற்றின் சில பகுதிகள் மீள்பார்வைக்கு உட்படவேண்டியிருக்கும். எனவே ஆய்வு காலம் எடுக்கும், அதனால், பிறகு தான் அவரை பற்றி எழுதவேண்டும்.
உசாத்துணை:

Innamburan Innamburan 11 November 2011 20:38
To: mintamil@googlegroups.com
நன்றி. ஒரு நிகழ்வு நினைவலையில். 1984 ஜனவரி 30ம் தேதி காலை 11 மணி நிகழ்வு அலுவலகத்தில். அவரவர் இடத்தில் என்பதால், நான் நாலு சுவர்களுக்குள் நிற்காவிட்டால், யாருக்கு தெரியும்?  நானோ முன்னாலேயே வெளியில் வந்து எல்லாரையும் கூட்டி பொதுமன்றத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த இரண்டு நிமிடங்களுக்குள் பேசிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை, இரண்டு அசடுகளுக்கு. நான் அவர்களை விளாசி விட்டேன், கடுஞ்சொற்களால். அந்த காலத்தில் ட் ரேட் யூனியன் பிரச்னை அதிகம். யூனியன் தலைவர் நான் மன்னிப்பு கேட்காவிட்டால், ஹர்த்தால் செய்யப்போவதாக பயமுறுத்தினார். ஸ்தலத்தில் என்னை விட மூத்த அதிகாரி ஒருவர் இருந்ததால், அதிகப்படி பிரச்னை. தரதரவென்று அந்த யூனியனாரை காரியாலய மையத்துக்கு இழுத்து வந்து, காந்திஜியின் படத்தின் கீழ் நின்று பயமுறுத்த சொன்னேன். உடனடி பதில் கொடுப்பதாக வாக்கு அளித்தேன், பெரிய கூட்டத்தின் முன். அவர் வாபஸ்ஸ்ட். எனக்கு போனஸ் அன்றிலிருந்து யூனியன் பிரச்னை இல்லை.
2. மெளலானா ஆஸாத் இஸ்லாமிய கோட்பாடுகளை முற்றிலும் அறிந்தவர். உண்மையான தேசபக்தர். புதிதாகப் பேசப்படுவது கூட அவருடைய தேசபக்தியை சந்தேஹிக்கவில்லை. ஜின்னா வெறுத்த இஸ்லாமியர் யார் என்றால், அது இவர் தான்.


கி.காளைராசன் 12 November 2011 07:15


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2011/11/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
 நான் அவர்களை விளாசி விட்டேன், கடுஞ்சொற்களால். அந்த காலத்தில் ட் ரேட் யூனியன் பிரச்னை அதிகம். யூனியன் தலைவர் நான் மன்னிப்பு கேட்காவிட்டால், ஹர்த்தால் செய்யப்போவதாக பயமுறுத்தினார். ஸ்தலத்தில் என்னை விட மூத்த அதிகாரி ஒருவர் இருந்ததால், அதிகப்படி பிரச்னை. தரதரவென்று அந்த யூனியனாரை காரியாலய மையத்துக்கு இழுத்து வந்து, காந்திஜியின் படத்தின் கீழ் நின்று பயமுறுத்த சொன்னேன். உடனடி பதில் கொடுப்பதாக வாக்கு அளித்தேன், பெரிய கூட்டத்தின் முன். அவர் வாபஸ்ஸ்ட். எனக்கு போனஸ் அன்றிலிருந்து யூனியன் பிரச்னை இல்லை.

கள்ளர் பள்ளியில் மாணவர் தலைவர் அல்லவா?

அன்பன்
கி.காளைராசன்
[Quoted text hidden]

coral shree 12 November 2011 16:37


அன்பின் ஐயா,

இதில் படங்கள் வரவில்லையே? தொடுப்பும் கொடுக்கவில்லயே. மரபு விக்கியில் போடுவதற்காக படத்தின் தொடுப்பு கொடுத்தால் நலம் ஐயா. அருமையான பதிவு. நன்றி.



Innamburan Innamburan 13 November 2011 10:11


அட்டேச்ட்
[Quoted text hidden]

11 11 11 11.pages
72K

coral shree 

Sorry sir, its not opening to me. Some probs it seems.
[Quoted text hidden]

வாகை சூடினாரே, மன்னர் வாகை சூடினாரே!அன்றொரு நாள்: நவம்பர் 10



அன்றொரு நாள்: நவம்பர் 10 வாகை சூடினாரே, மன்னர் வாகை சூடினாரே!
Innamburan Innamburan 10 November 2011 17:42


அன்றொரு நாள்: நவம்பர் 10
வாகை சூடினாரே, மன்னர் வாகை சூடினாரே!
போர்க்களம் என்றாலே வரலாறு படைக்கப்படுகிறது என்பது திண்ணம். ராமாயணத்தில் யுத்த காண்டம். மஹாபாரத குருக்ஷேத்ரத்தில் கீதோபதேசம். பிரதாப்கட் போரில், பாரத பூமியின் வீறு கொண்டெழுந்த அவதார புருஷனொருவன், நவம்பர் 10, 1659 அன்று தேசாபிமானத்தின் கண்மலர் திறந்தான் என்றால், அது மிகையன்று. மலையெலி ஒன்றை சிம்மத்தை வீழ்த்தியது என்றால், அது பொருத்தமான உவமையே. வீரமாமுனிவர் ‘தேம்பாவணியில்’ நேரில் கண்டதை போல், ‘பெரிய குன்றமோ பேயதோ பூதமோ வேதோவுரிய தொன்றிலா வுருவினை’க்கொண்டகோலியாத் என்ற இராக்கதனுக்கும் கடவுளை நகைப்பவேட்டலால் விளி விழுங்கிய கயவன்’ யாரென்று முழங்கிய தாவீது என்ற தெய்வாம்சம் பொருந்திய சிறுவனுக்கும் நடந்த சண்டையில், தாவீது வெற்றி பெற்றதை வருணிப்பார். நமது கதாநாயகனுக்கு முற்றும் பொருந்தும் உவமை அது. இருதரப்பும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. உள்நாட்டுப்போர் என்றாலும், இந்த யுத்தம் தேசாபிமானத்திற்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே நடந்தது, பவானி அம்மனின் அருளும், நற்றன்னை ஜீஜிபாயின் அரவணைப்பும், குரு சமர்த்த ராமதாஸ் அவர்களின் ஆசியும் பெற்ற சத்ரபதி சிவாஜி மஹராஜ் மராட்டா பிராந்தியத்தில் முகலாய சாம்ராஜ்யத்தையும், அதனுடைய குறுநிலமன்னர்களையும் கருவேலமுள்ளென குத்திக்கிழித்தார். மொகலாயப்படை என்றால் சொகுசும், படோடாபமும், சோத்துக்கடையும், இல்லறமும், களவியலும் கூடி, ஆங்காங்கே டேரா போட்டுக்கொண்டு, ஆடி அசைந்து வரும். சிவாஜியின் மின்னல் படையோ, சத்துமாவு முடிச்சுடன், விரைந்து செல்லும் புரவிப்படை. நதிகளிலிருந்து சத்துமாவுடன் நீர் சேர்த்து உணவு. பெண்களை தொடக்கூடாது என்று விதி. எதிரியை முன்னால் போகவிட்டு, பின்னால் வரும் சோத்துக்கடையில் கை வைத்தால், அறுசுவை உணவு. இப்படியாக, இரு தரப்பும் இயங்கும் தருணத்தில், சிவாஜியின் சகோதரரை வஞ்சகமாகக் கொன்ற பீஜப்பூர் தளபதி அஃப்ஸல்கான் தலைமையில், அடில்ஷாஹி தர்பார், ஒரு படையை அனுப்ப, அவனும் சிவாஜிக்கு வலை விரிக்கவேண்டி, துல்ஜாப்பூர் கோயிலை உடைத்தான். பண்டர்பூர் விட்டலர் கோயிலை தாக்க விரைந்தான். சிவாஜியின் முகாம்: பிரதாப்கட் கோட்டை. மின்னல் தாக்குதல்களுக்கு செல்ல உகந்த இடம். வலிமை மிகுந்த கானோஜி ஜேதே, சிவாஜி பக்கம் சாய்வார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவருடைய தலைமையில் சிவாஜியின் படைகள், அஃப்ஸல்கானின் 1500 துப்பாக்கி வீரர்களை துவம்சம் செய்தனர். அஃப்ஸல்கானின் தளபதி மூசேகானை திடீர்தாக்குதல் செய்து விரட்டியடித்தனர். சிவாஜியின் தளபதி மோரோபந்த் அஃப்ஸல்கானின் பீரங்கிப்படையை மின்னல் தாக்குதலில் செயலிழக்கச்செய்தான். அவர்கள் நம்பியது பீரங்கிப்படை. அது புஸ்வாணப்படையாக மாறவே, அஃப்ஸல்கானின் வீரர்கள் வீரமிழந்தனர். கையோடு கையாக, சிவாஜியின் தளபதி ரகோ ஆத்ே ரேயின் புரவிப்படை, அஃப்ஸல்கானின் புரவிப்படையை மின்னல் தாக்குதலில் நாசமாக்கியது. அஃப்ஸல்கானும் சாமான்யப்பட்டவன் அன்று. படை குண்டு. நடமாட்டமே மந்தம். ஓட்டமாவது! ஆட்டமாவது! அவ்வளவு தான். இருந்தும் பக்கத்தில் இருந்த ‘வாய்’ கிராமத்தில் ஒரு படை ரிஸர்வில் வைத்து இருந்தான். அங்கு ஓடினர், தப்பிய தம்பிரான்கள். வழி மறிக்கப்பட்டு, தோற்றுப்போயினர். மிஞ்சியவர்கள் பீஜாப்பூர் நோக்கி ஓட, துரத்திய சிவாஜியின் படைகள் 23 அடில்ஷாஹி கோட்டைகளை கைப்பற்றின. கோல்ஹாப்பூரின் அடில்ஷா கிலேதார், தானே முன்வந்து சாவியை கொடுத்து சரணடைந்தார்.
புள்ளி விவரம்: அடில்ஷாஹி ராணுவம் இழந்தது 5000 வீரர்கள், 65 களிறுகள், 4000 குதிரைகள், 1200 ஒட்டகங்கள், மூன்று லக்ஷம் பெறுமான நகை, நட்டுகள், ஒரு லக்ஷம் பணம், துணிமணி, கூடாரங்கள். 3000 வீரர்கள் படுகாயம். மற்றவர்கள் தலை குனிந்து வீடு திரும்பினர்.
நீங்கள் கேட்கவிரும்பும் கதை சொல்கிறேன். சிவாஜி சமாதான தூது அனுப்பினார். அவரும் அஃப்ஸல்கானும் பிரதாப்கட்டில் ஒரு ஷாமியானாவுக்கு அடியில் சந்தித்தனர். நிராயுதபாணி என்ற நிபந்தனையில் இருவருக்கும் நம்பிக்கையில்லை. அஃப்ஸல்கான் ஒரு கட்டாரியை ஒளித்து வைத்திருந்தான். சிவாஜி ‘புலிநகம்’ என்ற ஆயுதத்தை ஒளித்து வைத்திருந்தார். கவசமும் அணிந்திருந்தார். ஏழு அடி உயரமான அஃப்ஸல்கான் சிவாஜியை முதுகில் குத்த, அவருடைய கவசம் காப்பாற்றியது. அவரோ, ஒரு கிழித்தலில், அவனுடைய குடலை உருவினார். அஃப்ஸல்கானின் மெய்காப்பாளர் கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னி சிவாஜியை காயப்படுத்தினார். மற்றொரு மெய்காப்பாளர் சயீத் பண்டாவும் சிவாஜியை தாக்கினார்.சிவாஜியின் மெய்காப்பாளர் ஜீவா மஹலா அவனை வெட்டிப்போட்டார். அஃப்ஸல்கானும் மாவீரன். தன் குடலை அமுக்கிக்கொண்டு பல்லக்கில் ஏறி வெளியேறினான். அவனை தப்பவிடாமல் சாம்பாஜி கவிஜி கொண்டால்கர் பாய்ந்து சென்று அவனுடைய சிரம் கொய்தார். பழி வாங்கும் படலங்கள் நிறைவேறும்போதே, சிவாஜியின் ஆணைப்படி பீரங்கிகள் வெடித்தன. கானகத்தில் ஒளிந்திருந்த மராட்டா காலாட்படைக்கு அது ஒரு சங்கேதம். அவர்கள் உடனே அடில்ஷாவின் ராணுவதளங்களை தாக்கத்தொடங்கின.
இரண்டு பாயிண்ட்: 
1.ஹிந்து-முஸ்லீம் காழ்ப்புணர்ச்சி தலை தூக்கவில்லை. இரு தரப்பிலும் இரு மதத்தினரும் இருந்தனர். அஃப்ஸல்கானின் மெய்காப்பாளர் கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னி. சிவாஜியின் மெய்க்காப்பாளர் சித்தி இப்ராஹீம். 
  1. உள்நாட்டு போராயினும், இந்தியாவின் முதல் தேசாபிமான யுத்தம் பிரதாப்கட் போர்: நவம்பர் 10,1659.
இன்னம்பூரான்
10 11 2011
india00094.jpg

உசாத்துணை:

Saturday, November 9, 2013

ஸோராத் (ஜூனாகட்)போனதும்,வந்ததும்.அன்றொரு நாள்: நவம்பர் 9

அப்டேட்: அசட்டுப்பிசட்டுண்னு அசத்துகளும் கசப்புகளும் சர்தார் படேல்/ ஜவஹர்லால் நேரு பற்றி அமிலம் பொழிந்தாலும், வரலாற்றை சொப்பு மாதிரி ஒளித்து விளையாடமுடியுமோ? மூன்று நாளாக, நவம்பர் 9க்கு காத்திருந்தேன்.
இன்னம்பூரான்
09 11 2013

அன்றொரு நாள்: நவம்பர் 9 ஸோராத் போனதும்,வந்ததும்.

Innamburan Innamburan 9 November 2011 17:33

 அன்றொரு நாள்: நவம்பர் 9
ஸோராத் போனதும்,வந்ததும்.
இந்தியா விடுதலை அடையும் தருணம் பிரிவினை ஒரு சிக்கல், இனக்கலவரம்/வன்முறை ஒரு இன்னல், புலன் பெயர்தல்/அகதிகள் ஒரு பிரச்னை, இந்தோ-பாகிஸ்தான் மனஸ்தாபங்களும், தாயாதி விரோதமனப்பான்மையும், காழ்ப்புணர்ச்சியும் ஒரு வ்யாகூலம், கலோனிய அரசின் செயல்பாடுகளில் ஒரு குழப்பம், எல்லைத்தகராறு, நிர்வாக அனுபவமின்மை ஒரூ சவால், புதிய ஆளுமையும், பழைய அதிகாரமயமும் மோதல்/தழுவல்/நழுவல் என்றெல்லாம் ஒரு சூழல். ஆதலால், எதிர்நீச்சல். சிறுவனாக இருந்தாலும், இதெல்லாம் ஓரளவு புரிந்தது. அதனால் தான் அக்காலத்து தேசீயத்தலைவர்களை, இக்காலத்து வாண்டுகள் சாடும்போது, சிரிப்பு வருகிறது. காந்திஜீயின் மஹானாதீனமும், தியாகத்தீயில் புடம் போட்டு எடுத்த தலைவர்களின் தன்னலமற்ற பணியும், தேசாபிமானமும், பல வருடங்கள் விடுதலை வேள்வியில் புரோகிதம் செய்த நட்புரிமையும், அவரவருடைய பெர்சனாலிட்டியும் தான் இந்த களேபரத்தை கையாளுவதில் கை கொடுத்தன.இதையெல்லாம், நம் தலைவர்களின் ஆற்றலை பற்றியெல்லாம், சொல்ல நிறைய இருக்கிறது. 
போதாக்குறைக்கு, பலசரக்கு சாமானை வந்து கூடத்தில் கொட்டினமாதிரி, பெரிய பொட்லமாக, சிறிய பொட்லமாக, தம்மாத்தூண்டுப்பொட்லமாக, 572 சமஸ்தானங்கள். அவை, பிரிட்டானிய துரைத்தனத்தாரின் அரவணைப்பை இழந்து, திக்குத்தெரியாமல், திரிசங்கு சுவர்க்கத்தில் அல்லாடிக்கொண்டிருந்தன. சட்டமும், திட்டமுமாக வக்கணை பேசும் பிரிட்டீஷ் அரசு முகலாய அரசின் வாரிசாக, ‘தானுமதுவாக பாவித்த வான்கோழி’ போல, அந்த சமஸ்தானாதிபதிகளிடம், “அஹோ! ஓடும் பிள்ளாய்! நான் கப்பலேறுகிறேன். எமது ‘வெண்குடையை’ அந்த காங்கிரஸ்க்காரனிடம் கொடுப்போமோ? அதை சுருட்டி கப்பலில் வைத்து விட்டோம். இனி உன் பாடு. அவர்கள் பாடு. நான் அம்பேல்” என்ற பொருள்பட பலஹீன பிரகடனம் செய்து விட்டு, நீட்டிவிட்டார்கள், கம்பி! இந்த மாஜி மகாராசாக்களும் , நவாபுகளும், தர்பார்களும், சாஹேபுகளும், மாட்டிக்கொண்டார்கள், சர்தார் படேலிடம். அந்த சஹாப்தம் எழுத நாள் பிடிக்கும். அதை தெரிந்து கொள்ளாதவர்கள் இந்தியாவில் வாழலாமோ? இது நிற்க.
நான் கூட பார்த்திருக்கேன், புதுக்கோட்டை சமஸ்தானம், டவுன் ஹாலில், கொயட்டா, இந்தியாவுடன் இரண்டறக்கலந்ததை. ஆனா, சில அசடுகள் போர்க்கொடி பிடித்தன, ஸர்.சி.பி.ராமஸ்வாமி அய்யர்வாள் போல. காஷ்மீர் ஹரிசிங்கின் அடைக்கலப்பத்தும், நைஜாமின் டப்பாங்குத்தும் ஏற்கனவே எழுதப்பட்டன. இன்றைய தினம், நவம்பர் 9, 1947 ஜூனாகட் தினம். இந்தியாவுடன் இணைந்த தினம். 
ஜூனாகட்டின் நவாப்ஜாதா முகம்மது மஹாபத் கான் ஜீ III நல்ல மனிதர் தான். 300 நாய்கள் குரைத்தாலும், பொறுத்துக்கொள்வார். அவற்றின் மீது அலாதி பிரியம். கல்யாணம் காட்சியெல்லாமுண்டு. புகழ் வாய்ந்த கத்தியவாத் புரவி, கிர் பசு என்ற உயர்தர கால்நடை இனப்பெருக்கத்தை வளர்த்தவரும் இவரே. உலகப்புகழ் சாஸன்கிர் ஆசிய சிங்கத்தை பாதுகாத்தவரும் இவரே. ஏதோ அசட்டுத்தனமாக, ஹிந்து மெஜாரிட்டியாகவும், எல்லாரும் சுமுகமாக வளர்ந்த ஜூனாகட் ஸமஸ்தானத்தை பாகிஸ்தானோடு இணைந்ததாக, 15 ஆகஸ்ட்1947 அன்று அறிவித்து விட்டார். ஒரே மாதத்தில் பாகிஸ்தானும் சம்மதம் தெரிவித்தது. இது ஸோராத் (ஜூனாகட்) போன கதை.
இத்தனைக்கும், ஜூனாகட்டை சுற்றிலும் இந்திய பிராந்தியம். பாகிஸ்தானுக்கு போகணும்னா, கடல் தாண்டணும்; பறந்து தான் போகணும்.  இவரும் பறந்தாரே, அக்டோபர் 26,1947 அன்று, குடும்பம், நாய்கள், கஜானாவிலிருந்த காசு, பணம், நகை, நட்டு, ஜங்கம சொத்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு. அப்படி ஒன்றும் புராதனமான சுல்தனத் இல்லை இது. வம்சம் தலையெடுத்ததே 1735ல். எல்லாம் கலோனிய அரசின் காருண்யம். மனுஷனை அவ்வளவாக குற்றம் சொல்லமுடியாது. உலகத்திலேயே பிரமாதமான சாஸன்கிர் சிங்கத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாத்தவராச்சே, இந்த வெள்ளைக்கார வேட்டைக்கும்பலிடலிருந்து. சுத்துப்படை அப்படி. பாகிஸ்தான் ப்ரேமை அப்படி. இந்த ஸமஸ்தானத்தின் குறுநில மன்னர்களாகிய மாங்ரோல், பப்ரியாவாத் ஜமீன்கள், சினம் பொங்கி, இந்தியாவுடன் இணைந்து கொண்டார்கள். நவாப் அவர்கள் மீது படையெடுத்தார்! சமல்தாஸ் காந்தி என்ற மக்கள் தலைவர் இந்தியாவில் ஜூனாகட் மக்களாட்சி அறிவித்தார். ஒரே கலாட்டா தான் போங்கள். எல்லாம் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டம்! எல்லாம் தலைகீழ். நவம்பர் 7, 1947 அன்று பிற்கால பாகிஸ்தான் தலைவரான திருமதி.பெனெஸைர் புட்டோவின் தாத்தாவான ஸர் ஷாநவாஸ் புட்டோ தான் ஜூனாகட் திவான். அவர் இந்தியாவின் ஸெளராஷ்டிரா கமிஷரான திரு, புச் அவர்களுக்கு, வந்துதவ வேண்டும் என கடிதம் எழுதினார். நவம்பர் 9, 1947 அன்று இந்தியா உள் நுழைந்து ஆவன செய்தது. பாகிஸ்தான் ஆக்ஷேபித்தது. இரு நாடுகளும் பேசிக்கொண்டபடி 24 ஃபெப்ரவரி 1948 அன்று மக்கள் வாக்கெடுப்பு நடந்தது. அதன்படி மறு நாள் ஸோராத் இந்தியாவுடன் இணைந்தது. போன மச்சான் வந்தான், பூமணத்தோட.
இன்னம்பூரான்
09 11 2011
junagadh-arms.gif
உசாத்துணை:

DEV RAJ 9 November 2011 19:17

இரும்பு மனிதரின் மாநிலத்திலேயே இத்தனை கூத்து !
சுவையான பதிவு; சற்று விரிவாக எழுதியிருக்கலாம்


தேவ்



Geetha Sambasivam 9 November 2011 19:47

ஜாம்நகரிலே வசித்த காலத்திலும், அதன் முன்பும் பலமுறை இது குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  இத்தனை விரிவாக இல்லை எனினும் ஓரளவு தெரியும்.
 
கொஞ்சமானும் தெரிந்த செய்தி வந்தது குறித்து மகிழ்ச்சி.
 
 
2011/11/9 Innamburan Innamburan <innamburan@gmail.com>
 அன்றொரு நாள்: நவம்பர் 9
ஸோராத் போனதும்,வந்ததும்.
.
இன்னம்பூரான்
09 11 2011

Friday, November 8, 2013

யாழ்ப்பாணம் சி.கணேசையர்:அன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே! யாழ்பாணத்துத் தமிழே! அழகின் உருவே! என் அன்னையே!



அன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே! யாழ்பாணத்துத் தமிழே! அழகின் உருவே! என் அன்னையே!

அன்றொரு நாள்: நவம்பர் 8.2
தமிழே! யாழ்பாணத்துத் தமிழே! அழகின் உருவே! என் அன்னையே!
தமிழ் லெக்ஸிகனை பற்றி படிக்கும்போது, அந்த ஆய்வுக்குழு மதுரையில் இயங்கியதற்கு காரணங்களில் ஒன்று, யாழ்ப்பாணம் தொலைவில் இல்லை என்று படித்தேன். திரு.வி.க. அவர்களை ‘தமிழ்த்தென்றல்’ என்று விளித்தது யாழ்ப்பாணம். ஒப்பியல் இலக்கியம் என்றால், கலாநிதி.க.கைலாசபதி அவர்கள். ‘யாழ்ப்பாணமும் தமிழும்’ என்று அடுக்கிக்கொண்டே போகலாம். யாழ்பாணத்துத்தமிழின் அழகே அழகு! யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள புன்னாலைக்கட்டுவன் கிராமத்தில், தமிழ் மொழி இலக்கிய/இலக்கண/ஆய்வு/உரை/விளக்க மறுமலர்ச்சிக்கு வித்திடவே, அவதரித்த மேதை திரு.சி.கணேசையர் அவர்களின் சிரத்தாஞ்சலி தினம் இன்று: நவம்பர் 8, 1958. யான் செய்த பாக்கியம், அவரை பற்றிய நல்லதொரு கட்டுரை கிடைத்ததே. அதை அப்படியே, சில குறிப்புகளுடன், காப்புரிமை போற்றி, நன்றி கூறி, உசாத்துணை பகர்ந்து, உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என்ன தான் மகிழ்ச்சி என்றாலும், 1940களுக்கு பிறகு, அதுவும் தற்காலம், தமிழன்னையின் ஆராதனை, ஒளி குன்றி, அணியின்றி, ஒலி அடங்கி, மலர் வாடி, கனி அளிந்து, சோபையிழந்திருப்பதை கண்டு, என் மனம் பரிதவிக்கிறது. ஒரு காரியம் செய்வோம். தமிழன்னை ஆராதனையை, நம்மால் இயன்றதற்கும். சற்றே அதிகமாக செய்வோம். 
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
08 11 2011
1gane_w.jpg

உசாத்துணை:

*
தொல்காப்பிய ஆசான் யாழ்ப்பாணம் சி.கணேசையர்:தினமணி: பொ.வேல்சாமி: முதல் பதிவு: ஜூன் 7, 2009






pastedGraphic.pdf
தமிழின் தலைசிறந்த நூல் என்று நாம் கொண்டாடும் தொல்காப்பியம் 19-ஆம் நூற்றாண்டில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்றவர்களே அறியாத நூலாக இருந்தது. அந்தக் காலத்தில் தமிழ்நாடு முழுமையிலும் தொல்காப்பியத்தைப் பாடம் சொல்கிற ஆசிரியர் "வரதப்ப முதலியார்' என்ற ஒருவர் மட்டும் இருந்ததாக சி.வை.தாமோதரம்பிள்ளை போன்றோர் எழுதியுள்ளனர். 1847-இல் மழவை மகாலிங்கையரால் தொடக்கம் பெற்ற தொல்காப்பியப் பதிப்புப் பணி 1935-இல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளையால் தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை-மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் போன்றவை வெளியிடப்பட்டவுடன் நிறைவடைந்தது. 1930-களின் பின்னர் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தொல்காப்பியம் பாடமாக வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் இதனைப் பாடம் சொல்வதற்கு ஆசிரியர்கள் பெருமளவில் இடர்ப்பட்டனர். இதற்கு தொல்காப்பியச் சூத்திரங்களை முறைப்படுத்த வேண்டும். உரையாசிரியர்கள் குறிப்பிடும் கருத்துகளைத் தெளிவுபடுத்தும் விளக்கங்கள் வேண்டும். தமிழ்நாட்டில் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி எழுத்ததிகாரத்துக்கும் சொல்லதிகாரத்துக்கும் விளக்கக் குறிப்புகளை எழுதினார். வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் மூல பாடத்தில் பல நல்ல திருத்தங்களைச் செய்துள்ளனர். அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து சி.கணேசையர் என்பவர் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, பொருளதிகாரம் நச்சினார்க்கினியர்-பேராசிரியர் உரைகளுக்கு விளக்கக் குறிப்புகளை விரிவாக எழுதினார். அதே நேரத்தில் சுவடிகளுக்கு இடையேயான பாட வேறுபாடுகளையும் நுட்பமாக ஆராய்ந்து சரியானவற்றைக் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் கொடுத்தார். இன்றுவரை இந்த விளக்கங்களை விஞ்சக்கூடிய எதனையும் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள புன்னாலைக்கட்டுவன் என்ற கிராமத்தில் 1878-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி பிறந்தார் கணேசையர். இவருடைய தந்தை சின்னையர்-தாய் சின்னம்மாள். இவரது பெரிய தந்தை கதிர்காம ஐயர், புன்னாலைக்கட்டுவனில் நடத்தி வந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை தமிழும் வடமொழியும் படித்தார். அத்துடன் ஆறுமுகநாவலரின் சகோதரி மகனாகிய பெரும்புலவர் பொன்னம்பலம்பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிப் புலவர், கணேசையர் உறவினரும் சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமையாளருமாகிய காசிவாசி செந்தில்நாத ஐயர், வடமொழி அறிஞர் பிச்சுவையர் போன்றவர்களிடம் கல்வி பயின்றார். தமது 21-வது வயதில் இருந்து விவேகானந்த வித்தியாசாலை, நாவலரின் சைவப் பிரகாச வித்தியாசாலை போன்றவற்றில் ஆசிரியராகப் பணி செய்தார். இவருடைய 32-வது வயதில் அன்னலட்சுமி எனும் அம்மையாரை மணந்தார். திருமணத்துக்குப் பின்னர் மணிமேகலை நூல் குறிப்பிடும் மணிபல்லவத்தீவு என்று கருதப்படுகின்ற நைனார் தீவில் ஆசிரியப் பணி புரிந்தார். 15-ஆம் நூற்றாண்டில், இலங்கை அரச வம்சத்தைச் சேர்ந்த "அரசகேசரி' என்பவர் காளிதாசனுடைய ரகுவம்சம் நூலை 2444 பாடல்களில் மொழிபெயர்த்தார். இந்த நூலின் 1506 பாடல்களுக்கு கணேசையர் உரை எழுதியுள்ளார். ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர்கள் சரித்திரம் போன்ற பல நூல்களை எழுதி இருப்பினும் கி.பி.1868, 1885, 1891-ஆம் ஆண்டுகளில் சி.வை.தாமோதரம்பிள்ளையால் முதன் முதலாக வெளியிடப்பட்ட தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களுக்கும் கணேசையர் செய்த திருத்தங்களும் விளக்கக் குறிப்புகளும் மிகவும் சிறப்பான பணியாகும். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் "செந்தமிழ்' பத்திரிகையில் 1905-ஆம் ஆண்டிலிருந்து இவர் எழுதிய "கம்பராமாயணத்தில் பாட வேறுபாடுகள்' என்ற கட்டுரைத் தொடராக வெளிவந்தது. இது இன்றும் பழந்தமிழ் நூல்களுக்கான செம்மையான பாடங்களை ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகக் கருதத்தக்க சிறப்புடையதாகும். 1937-இல் கணேசையர் தொல்காப்பியக் குறிப்பை வெளியிடுவதற்கு முன்பே சி.வை.தாமோதரம்பிள்ளை, ரா.ராகவையங்கார், கா.நமச்சிவாய முதலியார், வ.உ.சி.யுடன் இணைந்து வையாபுரிப்பிள்ளை, திரிசிரபுரம் கனகசபைப் பிள்ளையுடன் இணைந்து மன்னார்குடி சோமசுந்தரம்பிள்ளை முதலிய பல்வேறு அறிஞர்கள் தொல்காப்பியம் மூலபாடத்தையும் சிறுசிறு குறிப்புகளுடனும் பதிப்பித்து வெளியிட்டிருந்தனர். இத்தகைய அறிஞர்களின் உழைப்பிற்குப் பின்பும் தொல்காப்பியமும் அதன் உரைகளும் மேலும் திருத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே இருந்தன. இந்நிலையில் ஈழகேசரி பத்திரிகையின் அதிபரான நா.பொன்னையாபிள்ளை, சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவைப் போற்றும்படியான ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்று விரும்பினார். அதற்கு சி.வை.தாமோதரம்பிள்ளை வெளியிட்ட தொல்காப்பியத்தைத் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் செம்மையான பதிப்பாகவும் தேவையான விளக்கங்களுடனும் வெளியிடுவது சிறந்ததாகும் எனக் கருதினார். இந்தப் பணியை சிறப்பாகச் செய்யக்கூடிய அறிஞர் கணேசையரே என்று கருதி, இப்பணியைச் செய்து தருமாறு அவரிடம் வேண்டினார். தனக்கு அளிக்கப்பட்ட பணியை வெகு சிறப்புடன் செய்து முடித்தார் கணேசையர். தொல்காப்பியப் பொருளதிகாரம், பேராசிரியர் உரையை ஆராய்ச்சி செய்யும்போது இன்னும் பல திருத்தங்களைச் செய்ய வேண்டிய நிலையில், இலங்கை முழுவதிலும் இதற்கான திருத்தமான பிரதிகள் கிடைக்கவில்லை. எனவே, கணேசையர் தமிழ்நாட்டுக்கு வந்து, மதுரையில் டி.கே.இராமானுஜ ஐயங்கார் உதவியுடன் மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரதிகளைப் பார்த்துத் தம்முடைய குறிப்புகளைத் திருத்தம் செய்துகொண்டார். கடும் உழைப்புடன் தன் நுண்மையான அறிவைப் பயன்படுத்தி தொல்காப்பிய மூலத்திலும் உரையிலும் கணேசையர் பல திருத்தங்களைச் செய்தார். எடுத்துக்காட்டாக, பேராசிரியர் உரை எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாக்கள் 300,302,307,313,369,419,448,490,491 போன்றவற்றில் அறிவியல் பூர்வமான பல திருத்தங்களை கணேசையர் செய்துள்ளார். வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த கணேசையர், உடல்நலக் குறைவு காரணமாக 1958-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். என்றாலும், தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கு அவர் எழுதிய விளக்கக் குறிப்புகளும் திருத்தங்களும் இன்றளவும் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது. தொல்காப்பியம் உள்ளவரை கணேசையரின் சீரிய தமிழ்த்தொண்டும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
  • #

Geetha Sambasivam 9 November 2011 01:50

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
கேட்டதே இல்லை இவரைப் பற்றி இன்றே அறிந்தேன்.  இப்படிப் பல நல்ல அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் அறிமுகம் செய்து வைக்கும் உங்கள் பணி சிறக்கட்டும். நன்றி
2011/11/8 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 8.2

. வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த கணேசையர், உடல்நலக் குறைவு காரணமாக 1958-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். என்றாலும், தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கு அவர் எழுதிய விளக்கக் குறிப்புகளும் திருத்தங்களும் இன்றளவும் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது. தொல்காப்பியம் உள்ளவரை கணேசையரின் சீரிய தமிழ்த்தொண்டும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
  • #