Showing posts with label innamburan.. Show all posts
Showing posts with label innamburan.. Show all posts

Saturday, May 28, 2016

இன்னம்பூரான் பக்கம் [5]: மனோதிடம். [2]

இன்னம்பூரான் பக்கம் [5]: 
மனோதிடம். [2]

“இதயத்தையும் ஆத்மாவையும் என் பணியில் ஆழப்பதித்து விட்டேனா? அதனுள் என் மனதைத் தொலைத்து விட்டேன்.”
- வின்செண்ட் வேன் கோஹ் 
I put my heart and my soul into my work, and have lost my mind in the process. 
Vincent Van Gogh

37 வருடங்கள் மட்டுமே (1853 - 1890) வாழ்ந்த டச்சு நாட்டு ஓவிய கலைஞர் வின்செண்ட் வேன் கோஹ் (உச்சரிப்பு வேற்றுமை அதிகம்.) அதிசயமானதொரு மனிதர். இருபதாம் நூற்றாண்டு கவின் கலைக்கு அடிகோலியவர் அவர் என்று சொன்னால் மிகையாகாது. அவருடைய கை படாத ஓவிய வகைகள் இல்லை எனலாம். ஸெல்ஃபி முதற்கொண்டு மனித உருவங்கள், இயற்கை காட்சிகள், அசையா பொருட்படம், செடிகொடிகள், விளைநிலங்கள், மலர்கள் எல்லாமே முன்னும் பின்னுமான காலகட்டங்களில், அவருடைய கைவண்ணமாக உருவெடுத்தன.

சிறுவனாக இருந்தபோதே வரைய தொடங்கினாலும், சுகவீனமும், தனிமையும், அலைச்சலும் அவரை மிகவும் வாட்டின. ஆகவே, இருபது வருடங்கள் வரையாமல் இருந்த வின்செண்டின் அழியாபுகழ் வாய்ந்த ஓவியங்களை தனது ஆயுள் முடியும் காலகட்டத்தில் தான் வரைந்தார். 32 வயதில் அவர் வரைந்த The Potato Eaters என்ற ஓவியம் பெரிதும் பாராட்டப்பட்டது. அடுத்த வருடமே பாரீஸ் நகரம் சென்றார். கதிரவனின் கதிர்கள் அவரை மிகவும் கவர்ந்தன. சாமான்ய மண்ணின் நிறத்தை அசகாயமாக கையாண்ட வின்செண்ட் பலவிதமான நிறங்களில் வரைய தொடங்கினார். தனது குறுகிய வாழ்க்கையின் இறுதி பத்து வருடங்களில் தான் தன் இதயத்தையும், ஆத்மாவையும் ஓவியம் வரையும் கலையார்வத்துக்கு தானம் செய்து விட்டார் -2100 ஓவியங்கள், அவற்றில் 860 ஆயில் பைய்ண்டிங். அவை யாவும் இன்றளவும் போற்றப்படுகின்றன.

அவர் சொல்வது சரி தான். இதயத்தையும், ஆத்மாவையும் ‘என் பணி கலைத்தொண்டு செய்து கிடப்பதே என்று சொல்லி தன் மனதைத் தொலைத்த வின்செண்ட் 37 வயதில் தன் ஆவியையும் மாய்த்துக்கொண்டார், தன்னே தானே சுட்டுக்கொண்டு. ஏன் என்ற வாதம் இன்றும் தொடருகிறது. அது பற்றி நான் பேசவில்லை.

உயிருள்ளவரை அவரையோ, அவரது ஓவியங்களையோ சீந்துவாரில்லை. பிற்காலம் அவரை ‘ஓஹோ’ என்று கொண்டாடுகிறது.
கோபன்ஹேகன் சென்றுள்ள சுபாஷிணி இவருடைய படங்களையும் தேடிப்பிடித்துப் பார்த்து எழுதவேண்டும்.
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, May 5, 2016

மானம் பறக்குது !இன்னம்பூரான் பக்கம்: III:6 இந்திய தணிக்கைத்துறையும், நானும்[6]

இன்னம்பூரான் பக்கம்: III:6 
இந்திய தணிக்கைத்துறையும், நானும்[6]

பிரசுரம்: http://www.vallamai.com/?p=68618: April 6, 2016


மானம் பறக்குது !
இன்னம்பூரான்
ஏப்ரல் 4, 2016

ஒரு பென்சில் தயாரிக்கும் கம்பெனி. போர்டு தீர்மானம் போட்டு, அதன்படி ஒரு யானை வாங்கினார்கள். கம்பெனி ஆடிட்டர் போர்டு தீர்மானம் இருப்பதால் டிக் அடித்து விட்டார். அது கவர்மெண்ட் கம்பெனி. ஆடிட்டர் ஜெனரல்காரன் விடாப்பிடியாக பென்சில் கம்பெனிக்கு யானை எதற்கு என்று துளைத்து எடுத்து விட்டான்.

அந்த மாதிரி இந்த அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் விவகாரம் இந்தியாவின் மானத்தை பறக்க வைத்து விட்டது. ஹிந்து இதழில் தெரிவித்த ஆசிரியர் கருத்தின் சாராம்சம்: நாடாளும் மன்றத்தில் இந்த ஊழலை பற்றி பேசியது எல்லாம் பொருளற்றவை. இத்தாலிய்ன் கோர்ட்டில் இந்திய ராணுவத்தில் லஞ்ச லாவண்யம் அலசப்பட்டது. சோனியா போன்ற பிரமுகர்களை பற்றி குறை காணப்பட்டது என்றாலும், அவை ருசுவாகாத குற்றங்கள். ஆனால் நாம் அவற்றை தீவிரமாக விசாரிக்கவேண்டும். அந்த கட்டுரையின் மீது நான் எழுப்பிய வினாக்கள்: (1) ஸோனியா போன்றோர் ஒரு பிரமாணபத்திரம் தாக்கல் செய்யலாமே, பார்லிமெண்ட்டில் குய்யோ முறையோ என்று கூவாமல்.
(2)இந்த விமானங்கள் ராணுவ உபயோகத்தை முன்னிட்டு ஆர்டர் செய்யப்படவில்லை. அரசியல் தலைவர்கள் உயர பறக்க ஒரு எல்லை வகுத்து, அதற்கு, இந்த கம்பேனி மட்டும் லாயக்கு என்றல்லவா செயல்பட்டார்கள். இந்த குட்டை ஏன் ஒரு ஊடகமும் எழுப்பவில்லை? நோ ரிப்ளை !
இப்போது, நாக்கைப் பிடுங்கிகிறாப்போல ஆடிட்டர் ஜெனெரல்  இரண்டு வருடங்கள் முன்னால் கேட்ட பத்து கேள்விகளையாவது பார்ப்போம்.

  • ஆரம்பித்திலிருந்து ராணுவ இலாக்கா விதிகளை ஏன் மீறின?
  • இந்த ஹெலிகாப்டர்கள் எத்தனை உயர பறக்க வேண்டும் என்ற நிர்ணயத்தை , இந்த ஒரு கம்பெனி மட்டுமே தரக்கூடும் என்ற செயற்கை நிர்ணயம் ஏன் வகுத்தீர்கள்?
  • ராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்ப இல்லாமல், விஐபி தேவைக்கு உகந்த டெண்டர் பொருளற்றதாக இருக்க செய்ததின் பின்னணி என்ன?
  • விலை நிர்ணயம் தீர விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லையே, ஏன்?
  • சோதனை ஓட்டங்கள் இந்தியாவில் தான் செய்யப்படவேண்டும் என்ற விதி ஏன் மீறப்பட்டது?
  • விதி மீறி வெளி நாட்டில் செய்த பரிசோதனை ஓட்டங்கள் இந்த விமானங்களில் செய்யப்படவில்லை. வேறு வகை விமானங்களில் செய்யப்பட்டன. ஏன்?
  • விவகாரம் முற்றுவதற்குள் மூன்று விமானங்கள் வந்து சேர்ந்தன. ஏன்?
  • ஊழல் விவகாரம் வெளிச்சத்தற்கு வந்த பின்னும், அந்த கம்பெனியுடம் பண விவகாரம் நீடித்தது.
  • சிபிஐ ஆய்வு 2012லியே தொடங்கினாலும், ஏன் சூடு பிடிக்கவில்லை.

சொல்லிக்றாப்லெ இல்லை! எங்கே எங்கே எல்லாம் ஏமாந்தோமோ? இது முதல் தடவை இல்லை. போஃபோர்ஸ் ஆடிட் ரிப்போர்ட்டில் ஜவானின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய விவகாரம் ஆடிட்டால் கேட்கப்பட்டது. பீரங்கியை தயார் செய்து குண்டு வைக்கும் பெட்டியை திறந்தால், அது காலி. அதற்குள் எதிரி நம் ஜவானை சுட்டுத்தள்ளி விடுவான். இந்த கேள்வியை ஆடிட் எப்படி எழுப்பலாம்? காசா? பணமா? என்றார்கள், வசூல் ராஜாக்கள்.
-#-
படித்தது: ஆடிட் ரிப்போர்ட் + Printable version | May 4, 2016 7:50:29 PM | http://www.thehindu.com/opinion/editorial/editorial-on-debate-in-parliament-on-agustawestland-helicopter-deal-more-noise-than-light/article8533351.ece
© The Hindu

சித்திரத்துக்கு நன்றி: 

பின்குறிப்பு: ஒரு பனிமலையின் உச்சியில் தெரியும் சிறு தோற்றம் இது. நான் எழுதிய 48 மணி நேரத்துக்குள் மேலும் பல தெரிய வந்துள்ளன. ஆடிட் ரிப்போர்ட் நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிவித்த மறு நிமிடமே, பொது மன்றத்தில் வைக்கப்படுகிறது. வாசகர்களே அதை தமிழிலும், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பல வருடங்களாக, இலவசமாக படிக்கலாம். கடந்த முப்பது வருடங்களில் பயிரை மேய்ப்பதற்கு என்றே வடிவு அமைக்கப்பட்ட ‘வேலிகள்’ எண்ணில் அடங்கா. பாரதமாதா மனது வைத்தால் தான் இந்தியமக்களுக்கு உண்மையான விடுதலை. அம்மா! தாயே! கிருபை செய்ய, தாள் பணிந்து வேண்டுகிறேன். உன்னுடைய புதல்வர்களும், புதல்வர்களும் நாங்கள் அல்லவோ, அன்னையே!

இன்னம்பூரான்
ஏப்ரல் 6, 2016

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, May 1, 2016

கூட்டுக்களவாணிகள், இன்னம்பூரான் பக்கம்: III:5 இந்திய தணிக்கைத்துறையும், நானும்[5]

இன்னம்பூரான் பக்கம்: III:5 இந்திய தணிக்கைத்துறையும், நானும்[5]

பிரசுரம்: http://www.vallamai.com/?p=68510
Monday, May 2, 2016, 4:54


கூட்டுக்களவாணிகள்

இன்னம்பூரான்

“…தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது. வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும்… உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில் நமக்கு இணை நாம் மட்டும் தான். அது தவிர யான் ஒன்றும் அறியேன், பராபரமே !.”.


பாரததேசமென்று தோள் கொட்டியது கார்கில் போரில். பாரதத்துக்கு மோசம் செய்திடுவோம் என்று தேள் கொட்டியது மும்பை கொலாபாவில். உலகிலேயே விலை அதிகமான பூமி என்று அதற்கு புகழோ/இகழோ உண்டு. எனக்கு தெரிந்த கிராமமொன்றில், சுடுகாட்டில் போய் தகனமான பிணங்களின் தங்கப்பல்லை பிடுங்கும் மாபாவிகள் நிறைந்த இந்த சுதந்திர நாட்டில் ‘ஆதார்’ என்ற நற்பெயருக்குக் களங்கம் விளைத்து 2003ல் கட்டிய வானாளாவிய 31 தளங்கள் கொண்ட மாடமாளிகை ஒன்றை இடிக்கச்சொல்லி, இன்று மும்பாய் உச்சி மன்றம் ஆணையிட்டு இருக்கிறது. 

முழுக்கதையை சொல்ல ஒரு நூலே எழுதவேண்டும். இதையே விரல் விட்டு எண்ணக்கூடிய கனவான்கள் மட்டும் தான் படிப்பார்களோ? என்னமோ? இந்த அழகில் புத்தகம் போட்டால், கட்டை விரலை சப்பிக்க்கொள்ள வேண்டியது தான்! அதனால் ஆடிட்காரன் என்ன சொன்னான் என்பதை மட்டும் கேட்போம். 150 வருட பாரம்பரியம் கொண்டதும், அம்பேத்கார் அவர்களால் மிகவும் மதிக்கும் படி பேசப்பட்டு, இந்திய அரசியல் சாஸனத்துக்கு அடி பணிந்து ஊழியம் செய்யும் ஆடிட்டர் ஜெனெரலை கட்டிப்போட ஏன் விரும்பமாட்டார்கள், இந்த அரசியலர்?

இந்த ஆதார் உப்பரிகை பற்றி ஆடிட் ரிப்போர்ட் நாக்கை பிடுங்கிறாப்பல கேட்ட எட்டு கேள்விகள்:
வேலி பயிர் மேய்ந்த கதை, இது; இல்லை என்று நிரூபியுங்கள், பார்க்கலாம்;
  1. கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் விதவைகளுக்கும், தீவிர காயமடைந்த வீரர்களுக்கும், எத்தனையோ விதிமுறைகளை தளர்த்தி, இந்த இருப்பிடம் அவர்களுக்குத் தருவோம் என்று வாக்களிக்கும் முன்பே, உங்கள் திருட்டுக்கைவரிசையை தொடங்கிவிட்டது, இது தேசத்துரோகமா? இல்லையா?
  2. பொறுப்புடன் நிர்வகிக்க சம்பளம் வாங்கும் பலர் மோசடிகள் ஏன் செய்தார்கள்?
  3. மத்திய அரசு, மாநில அரசு, கட்டிட கலை வல்லுனர்கள், மந்திரிமார், உயர் அதிகாரிகள் எல்லாரும் செய்த இந்த அட்டூழியங்களை கூட்டுக்களவாணித்தனம் என்கிறோம். இல்லை என்று சொல்ல தகரியம் இருக்கிறதா?
  4. விதி தளர்த்துவது, கட்டிட அளவுகளை கூட்டி அளிப்பது போன்ற சலுகைகள் கேட்டபொது, ‘ இது கார்கில் வீரர்களுக்கு’ என்று பதிவுகள் செய்யும்போதே, அவை பொய் என்று தெரிந்தும் துரோகம் ஏன் செய்தீர்கள்?
  5. ஆகமொத்தம், ஆதாரத்தில் ஆதாய மீன் பிடித்தவர்களில், பெரும்பாலோர், கார்கில் சம்பந்தமற்ற அதிகாரிகள், பார்லிமண்ட் அங்கத்தினர்கள், பதவியில் இருப்பவர்களின் சொந்தபந்தம். இந்த அநீதி அடுக்குமா?
  6. முனிசிபல் கமிஷனர் திரு.ஜெயராஜ் பதக் பதுங்கி பதுங்கி செய்ய வேண்டிய விதி விலக்குகளை செய்து கொடுத்தார். அதற்கு கைக்கூலி தானா, கார்கில் அருகே மனதால் கூட செல்லாத அவருடைய திருமகனாருக்கு ஒரு மாளிகை? இது அடுக்குமா?
  7. எட்டு அகார்கிலார்களுக்கு (கார்கில் பக்கம் தலை வைக்காதவர்களுக்கு ) அலாட்மெண்ட் கொடுத்தால், அதிகப்படி கட்டிக்கலாம் என்றார்களே. இது எந்த ஊர் நியாயம்?
  8. கதை மேலும் பயங்கரமா போகிறது. முதல் அமைச்சரே முதலை அமைச்சரானார்.
விவகாரம் மிகவும் பெரியது. வடூவூர் துரைசாமி அய்யங்கார் துப்பறியும் நாவல் போன்றது.
யாராவது கேட்டால் பார்க்கலாம். இல்லாவிடில் வாளாவிருக்கலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com