[3] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370
இன்னம்பூரான்
02 06 2014
‘சொன்னால் விரோதம்’ என்று வாளாவிருந்தனர், உள்ளுறை அறிந்த காங்கிரஸ்காரர்கள் கூட. ஒரு நிகழ்வு. பாம்பேயிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த நான், அகஸ்மாத்தாக திரும்பிப்பார்த்தேன். எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகமாக, இரு போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அரசியல் கைதியாக அமர்ந்திருந்தார், ஷேக் அப்துல்லா சாஹேப். மரியாதை நிமித்தம் கையாட்டினேன். மலர்ந்த முகத்துடன், அவரும். ஒரு போலீஸ் அதிகாரி வந்து என்னை குடைந்து எடுத்து விட்டார். தான் மதித்த நண்பனை கைது செய்யும்படி நேரு உத்தரவு இட வேண்டியிருந்தது. பிறகு மன்றாட வேண்டி இருந்தது. படேலின் அணுகுமுறை வேறு: அவருக்கு ஷேக் அப்துல்லாவின் நிறம் மாறும் குணம் பிடிக்கவில்லை. ஷரத்து 370ன் சிற்பியும், நிபுணத்துவத்தின் சிகரமும் ஆன என்.கோபாலஸ்வாமி அய்யங்கார் அவர்களுக்கு படேல் எழுதினார்,’ பல்டியடிக்க விரும்பும் போதெல்லாம் ஷேக் சாஹேப் தான் மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமையை முன்வைப்பார்.’!
1953ம் வருடம் காஷ்மீருக்குள் அனுமதியில்லாமல் இந்தியர் நுழையமுடியாது. (1981/82 சில உட்பகுதிகளுக்கு செல்ல, நான் அதை பெறவேண்டியிருந்தது! ) இந்த தடையை மீறிய தேசபக்தரும், ஹிந்து மஹா சபை தலைவரும் ஆன திரு. ஷ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி கைது செய்யப்பட்டார். மருந்துகள் சரிவர கொடுக்கப்படவில்லை. மரணம் அடைந்தார். அவரோ புருஷோத்தமன். தந்தையோ மஹாபுருஷன் அஷுடோஷ் முக்கர்ஜி. அண்ணனோ தலைமை நீதிபதி ராம்பிரசாத் முக்கர்ஜி. சவ ஊர்வலம் அஷுடோஷ் முக்கர்ஜி ரோடு வழியாக, ஷ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி ரோடு வழியாக மயானம் அடைந்தது. லக்ஷோபலக்ஷம் மக்கள் அஞ்சலி செலுத்தினர். ஊரோ இந்தியாவின் பெரிய நகரம், கல்கத்தா. வீதிகளோ ராஜபாட்டைகள். அவற்றின் பெயர், இவருடைய குடும்பம் சார்ந்தது. அந்த படத்தைப் பார்த்து என் மனம் நொந்தது இன்னும் நினைவில் உளது. அவருடைய அன்னை நேருவுக்கு கடிதம் எழுதினார், ‘My son was killed. I charge you with complicity in that murder.’: ‘என் மகன் கொல்லப்பட்டான். அந்த கொலையின் உள்கை நீ.’. எனக்கு தெரிந்தவரை நேரு அதற்கு பதில் போடவில்லை.
1981/82ல் நான் காஷ்மீர் போனபோது ஒரு அயல்நாட்டில் இருப்பதாக உணர்ந்தேன். எங்கு பார்த்தாலும் துப்பாக்கி போலீஸ். மாடமாளிகைகளும், மாடமாளிகை ஓடங்களும், குடிசைகளும், ஏதோ ஒரு ஒத்துழைப்பில், கலந்து வாழ்ந்தன. காஷ்மீரவாசிகள் ஒருவராவது தன்னை இந்தியராக கருதவில்லை. ஆங்கிலேய காலனித்துவம் போல இந்திய தொப்புள்கொடியை அவர்கள் பாவித்தனர். ஷரத்து 370 கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு இந்த நிலை! ஷஷ்டியப்தபூர்த்தி காலகட்டத்தில், சலுகைகளை அனுபவித்த யாம், ஷரத்து ரத்து ஆகலாம் என்ற பேச்சு எழுந்தாலே, இந்தியாவை விட்டு விலகிவிடுவோம் என்று ஒமர் அப்துல்லா பயமுறுத்துகிறார். பேஷ்!
இது பற்றி நன்கு ஆராய்ந்து, ஆஸ்ட் ரேலியாவின் மெல்போர்ன்/ இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் ஆன அமிதாப் மட்டு (‘மட்டு’ காஷ்மீரத்தில் பாபுலர் பெயர்.) ஐந்து வினாக்களை எழுப்பி, நிஜத்துக்கும், கற்பனைக்கும் இது விஷயமாக உள்ள வித்தியாசத்தை அலசியிருக்கிறார்.
அந்த வினாக்களை புரிந்து கொள்ள ஒரு சின்ன வரலாற்று தகவல் தொகுப்பு:
- ஷரத்து 370ன் தேவை என்ன? என்று மெளலானா ஹஸ்ரத் மோஹினி அக்டோபர் 17, 1949ல் அரசியல் சாஸன மன்றத்தில் கேட்டார். பதில் அளித்த அரசியல் ஞானியும், காஷ்மீரத்து மாஜி திவானும், அந்த ஷரத்தை எழுதியவரும் ஆனவரும். எல்லா துறைகளிலும் புகுந்து தீர்வு காணும் பொறுப்பு உள்ள (மோடி தர்பாரில் அத்தகைய அமைச்சர்-Minister without Portfolio - இருக்கவேண்டும்.) தஞ்சாவூரான் திரு. என்.கோபாலசாமி அய்யங்கார், மூடி மெழுகாமல் உகந்த பதில் அளித்தார். அது என்ன?
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: http://kashmirvoice.org/wp-content/uploads/Gopalaswami-Ayyangar.jpg