Showing posts with label இதுவும் ஒரு பிருகிருதி. Show all posts
Showing posts with label இதுவும் ஒரு பிருகிருதி. Show all posts

Thursday, November 27, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் 7: இதுவும் ஒரு பிருகிருதி: 4

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் 7

இதுவும் ஒரு பிருகிருதி: 4

உங்களுக்கு கிச்சாமி அத்தானை தெரிஞ்சிருக்காது. அந்த பூவரசமரம் நிக்கறதே, அதான் அவாம். (வீடு). அந்த மரத்துக்கே ஒரு தனி மவுசு உண்டே. வேடந்தங்கல் பறவைகள் அழகு என்றால், இந்த மரம் பூத்து குலுங்கறதும்,சிந்தியிருக்கிறது அழகு தான். பூ பொறுக்கப் போனா, வெறி பிடிச்சமாதிரி விரட்டறத்துக்கு வந்துருவார், அத்தான். இத்தனைக்கும் அவர் வச்ச மரமா என்ன? அப்பா சொல்லுவார், ‘கிச்சாமி எச்சக்கையாலே காக்கா விரட்டமாட்டான்’ அப்டினு. அப்பாவுக்கு அவர் கருமி. எங்களுக்கு அவர் ஒரு கிருமி.

கிச்சாமி அத்தான் லோக்கல் ஃபண்ட் ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர். கலர் கலரா மிக்ஸர் மெகா பாட்டில்களுடன் உறவாடுவார். ‘டாக்டர்னு ஒத்தன் வருவான். அவன் கிட்ட சீட்டு வாங்கிண்டு வா. நான் சரியான மருந்து தர்ரேன்’ என்பார். அதாவது சீட்டுக்கும், மருந்துக்கும் ஸ்னானபிராப்தி கூட கிடையாது. ஆனா, சீட்டு தான் பாஸ்போர்ட். டாக்டர் பிரணாதார்த்திஹரன் எல்.எம்.பி. அந்தக்காலத்து மனுஷன். வைஷ்ணவாளை கண்டா கொஞ்சம் பிடிக்காது. அவ்வளவு தான். அத்தான் பட்டை நாமம். டாக்டர் பட்டை விபூதி. மாட்டிக்கொண்டது ஊர் மனுஷா. சின்ன ஊர்னாலும், ஆஸ்பத்திரி தம்மாத்தூண்டு. மார்கழி வந்தா போறும், எல்லாம் மூக்கை சிந்தும். 

போர்ட்: காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை;
வாட்ச்மேன்: தினோம் 81/2 மணிக்குள்ளார திறப்பேங்க.
கிச்சாமி அத்தான் 9 மணிக்கும், டாக்டர் 10 மணிக்கும் வருவாஹ. 
இரண்டு பேரும் பேசிக்கொண்டதாக லோக்கல் ஃபண்ட் ஆஸ்பத்திரி வரலாற்றில் பதிவு இல்லை.
[இந்த இண்டெர்வல் ஒரு மணி நேரம் போது, எங்களுக்கு அத்தானை கவிழ்க்க. பின்ன என்னங்க? பூவரசாவது இவா வீட்டு வாசெல்ல. கொடுக்கப்புளி மரம் தள்ளி தானே இருக்கிறது. பறிக்கணும் கல்லாலடித்தால், மனுஷன் மூர்க்கத்தனமா வந்து கூச்சல் போடுவாரு.]

கூட்டம் நெட்டி முறிச்சுடும், டாக்டர் வருவதிற்கு முன்னாலே. பூஜை, புனஸ்காரம் எல்லாம் நடக்கும்; அத்தான் முறைச்சிண்டு மெகாபாட்டில்களுக்கு, பின்னால். டாக்டர் வலகை, இடகை ஆசாமி. இரண்டுப்பக்கமும், மாற்றி மாற்றி, நாடி பார்ப்பார்; நாக்கை பார்ப்பார். மின்னல் வேகத்தில், ஜலதோஷம். காய்ச்சல், இழுப்பு, காசநோய், புற்று நோய் எல்லாத்துக்கும் டயக்னஸிஸ்; கலர் மிக்ஸர் 1/2/3/4. அத்தான் கொடுப்பது 4/2/3/1 என்று அமையலாம். இத்தனை குளறுபடி நடுவிலே, ஊர்க்காரா அதிகமா செத்துப்போகவில்லை என்றால், தெய்வத்தில் அருள் தான் காரணம்.
அந்த 9 மணிக்கும், டாக்டர் 10 மணிக்கும் நடுவில் உள்ள இண்டெர்வலை பற்றி சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும் போல இருக்கு. பட்டப்பா, சீனு, கதிரு, லச்சுமி, வாசு, நான் ஆகிய குழுமம் ஒரு கட்சி; தனியா, திராணியில்லாமல் எங்களுடன் போராட ஒரே ஆளு, கிச்சாமி அத்தான். ஸ்கூல் பக்கத்திலே தான் ஆஸ்பத்திரி. வேறு வினை வேண்டாம்! 

உரையாடல் 1: காலை 9 10:
சீனு: ‘அத்தான்! லச்சுமி பூவெல்லாம் எடுத்துண்டு ஓட்றா.’
அத்தான் நோ ரிப்ளை.
வாசு: டேய்! அத்தான் வாய் நிறைய கலர் மிக்ஸர் டோய்! எனக்கும் அத்தான், ப்ளீஸ்.
[இது பரமரகஸ்யம். அத்தானோட டாஸ்மெக் இங்க தான். தினம் அடிப்பார். மெகாபாட்டில் எல்லாம் தண்ணி ரொப்பிடுவார். ]
அத்தான்: ‘ போங்கடா, காலிப்பசங்களா. டாக்டர்ட்டெ சொல்லிடுவேன்.’ [வாசு ரோஸ் கலர் மிக்ஸர் அடிச்சுட்டான், அதுக்குள்ளே.]
கதிர்: [ கதிரும் ஒரு பிரகிருதி தான். பாப்பாரக்கூட்டத்திலே ஒரே, என்பி. (நாந்பிராஹ்மின்: அந்தக்காலத்து வார்த்தை. No harm intended. அவன் சொற்களில் இல்லாத தெளிவு தொல்காப்பியத்தில் இல்லை.] ‘ கிச்சாமி, இன்னா பேச்சு பேச்றே, மேன். [கிச்சாமி நெளிகிறார் இந்த frontal attackலெ.] நீயும் டாக்டரும் பேசிக்கிணா மழை பெய்யுமே. எனக்கு அந்த பச்சை மிக்ஸர் கொடு - எடுத்து கொட்டிக்கிறான். 
அப்ப பார்த்து பட்டப்பா கொடுக்காப்புளி அடிக்க அனுமதி வாங்கறான். டாக்டர் வந்துட்டார். கப்சிப்.

உரையாடல் 2: காலை 10 10:
டா: ‘என்னாது இது, மருந்து வாசனை?’
அத்தான்: [முணுமுணுப்பு] ‘ஆஸ்பத்திரியில் கர்தப வாசனையா இருக்கும்.’
டாக்டருக்கு பாம்புச்செவி: ‘ டேய்! பட்டப்பா! நானும் கர்தபவாசனையைத்தான் நாசூக்கா சொன்னேன். ஐயங்கார் குளிச்சிட்டுத்தான் வந்தாறான்னு கேளு. அது சரி. நீ இங்கே எதுக்கு வந்தே? ஸ்கூலுக்குப் போ.
கதிர்: கிச்சாமி அத்தான்! பட்டப்பா கொடுக்காப்புளி அடிக்கச்ச, உங்காத்து ஜன்னல் கண்ணாடியை உடச்சுட்டான். ஓட்றான்.

கிச்சாமி வீட்டுக்கு ஓட, டாக்டர் பிரணாதார்த்திஹரன் எல்.எம்.பி. காலி மெகாபாட்டில்களை கண்டு புலம்ப, ஆஸ்பத்திரி மூடப்பட்டது. 
‘ஸர்வே லோகா சுகினோ பவந்து’
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இன்னம்பூரான்
31 12 2010

*

நாலு நாளா கிச்சாமி அத்தான், யார் கண்ணிலும் படாமல், 'மப்' லே இருக்காப்லே. மறுபடியும் சொல்லுடான்னு திருவுள்ளம்.
அதான்.
*

கோபுலு படங்கள் எல்லாம் கண்ணெதிரே வருதே??? 
கீ
*

நல்ல காமெடியான காரக்டர்தான்...........நன்றாயிருக்கிறது ஐயா.
இது ஒரு மீள்பதிவு, நீங்கள் கேட்டதாலெ.

இன்னம்பூரான்
27 11 2014


Tuesday, November 18, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 4 இதுவும் ஒரு பிருகிருதி

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 4

இதுவும் ஒரு பிருகிருதி



சில ஜாம்பவான்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்தக்காலத்தில் நாடோடி என்பவர் 'இதுவும் ஒரு பிருகிருதி' என்ற அருமையான நூல் ஒன்று எழுதினார்; விகடனில் தொடராகவும் வந்திருக்கலாம். இந்த பூலோகத்தில் சிருஷ்டி செய்யப்பட்ட கொனஷ்டைகளின் குணாதிசயங்களை, ஈஷ்வர கிருபையால், அழகாக விவரித்து இருந்தார். தேடினாலும் கிடைக்கவில்லை, அந்த புத்தகம். கதாநாயகர்/கி களின் ஆசைமுகமும் மறந்து போச்சு. எனவே இது புதிய வார்ப்பு:2010.

எத்தனையோ பேர் வந்து போகிறார்கள், இந்த உலக நாடக மேடையில். சிலர் சூடு போடுவார்கள்; சிலர் சுட்டுக்கொள்வார்கள். சிலர் அடிப்பார்கள்; சிலருக்கு தர்ம அடி வாங்கிக்கொள்வது வாடிக்கை. சிலர் சொற்சிலம்பம் ஆடுவார்கள்; சிலர் பேசவே தயங்குவார்கள். பட்டியலே பல பக்கங்கள் என்பதால், இத்துடன் இதை நிறுத்தி எனக்கு தெரிந்த பிருகிருதிகளை அறிமுகம் செய்து வைக்கிறேன்.

1. 'முடுக்குத்தெரு கிட்டு மாமா': அவரை  முதல் முறையாக சந்தித்தபோது, அவருக்கு நாற்பது வயது இருக்கலாம். எனக்கு 17. தருமமிகு சென்னையில் நான் கால் எடுத்து வைத்த முதல் நாள் மாலை. கபாலி கோயில் வாசல்லே, புகையிலையை குதப்பிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். தானாகவே முன் வந்து முகமன் கூறி அறிமுகம் செய்து கொண்டார் - என் அத்தையின் மைத்துனனின் மைத்துனன் என்று. உபயகுசலோபரி முடிந்த பிறகு, ' ரவாதோசை ன்னா கணேஷ் பவன்' என்று சப்புக்கொட்டிக்கொண்டார். நான் வழக்கம் போல அமைதி காத்தேன். 'சட்' என்று கோபித்துக்கொண்டார். 'நான் கூப்ட்றேன்; சும்மா இருக்கிறாயே' என்று செல்லமாக கண்டித்து, அழைத்துச்சென்றார். கீரை வடை, கிள்ளு பக்கோடா எல்லாம் சாப்ட்டப்பறம் தான் ரவாதோசை, டிகிரி காஃபி. சொல்லக்கூடாது. மனுஷனுக்கு என்ன வாசாலகம்!. 'அடடா! பர்ஸ் விட்டுப்போச்சே. பரவாயில்லை. நீ கொடுத்திரு. நானே கொண்டு வந்து தர்ரேன்' என்றார். இன்னி வரைக்கும் வரல்லை. படிப்பினை 1. இருந்தாலும், நான் தலையெடுத்த பிறகு, என் செலவில் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறார். ஒவ்வொரு தடவையும் தவிர்க்க நினைப்பேன். நடக்காது. அப்படிப்பட்ட டிஃபன் வசீகரன் அவர். 

சுருங்கச்சொல்லின் அவருடைய பயோ டேட்டா: 
ஸ்கூலுக்கு போயிருக்கிறார். ஆனால், எஸ்.எஸ்.எல்.சி எழுதியதாக சொல்லிக்கொண்டதில்லை. அந்தக்காலத்து பீ.ஏ. தான் பீ.ஏ. என்பார், தான் ஆங்கிலம் பேசும்போதெல்லாம். வேலை ஒன்றும் தேடியதில்லை என்று பீற்றிக்கொள்வார். வேலை ஒன்றும் அவரை தேடி வரவில்லை என்பதை ஒத்துக்கொள்ளமாட்டார். மாமி வசை பாடும் போது தான் அந்த ரகசியம் வெளிவரும். ஆனா, கிட்டு மாமா எப்பவும் பிஸி. தரகு கை வந்த கலை. கமிஷனுக்காக, உன்னோட கப்பலையை வித்துருவார். மைக்கேல் மதனகாமராஜன் என்ற சினிமாவில் ஒரு பாட்டி ஒத்தரோட பல் செட்டை அபேஸ் பண்ணிடுறா. அந்த மாதிரி தன் இவரும். எல்லா கல்யாணத்துக்கும் போவார், கூப்டாட்டாக்கூட. எல்லாரும் உஷார் தான். வந்த கிஃப்ட்லெ, நாலு கடியாரம் காணாமப்போயிருக்கும். 'எதுக்கடா! அவாளுக்கு இத்தனை கடியாரம்?' என்பார். வித்துருவார். அவருடைய சாதனைகள் சொல்லி மாளாது. எல்லா சங்கீதக்கச்சேரிக்கும் போவார். அந்தக்காலத்திலே இலவசம் தான். ஒரு நாள் மிருதங்கத்தை தூக்கிண்டு வந்துட்டார்! அவருக்கே பெருமை தாங்கல்லே. அப்றம், என்னமோ மாயாஜாலம் செய்து என் அத்திம்பேர் அதை உரியவரிடம் சேர்த்து விட்டார். 

ஆனா, அடுத்த கேஸ்லெ அத்திம்பேருக்கு படு தோல்வி. எதித்தாத்து கிழம் ஒரு நா மண்டையை போட்டுடுத்து. அவா ரொம்ப பணக்காரா. இருக்கவரைக்கும் அவருக்கு தயிர் சாதம் மறுத்த அவரது திருமகன் சாங்கோபாங்கமாக அவருக்கு அபர காரியங்கள் செய்தான். தினோம் விருந்து! கூத்து! சிரிப்பு! 'சுபம்' பண்றச்ச கருமம் பண்றவன் தலெலே முண்டாசு கட்டி, மயில் தோகை பிடிக்கிறேன் பேர்வழி ன்னு அவன் கைலே கரும்பு கொடுப்பா. அன்னிக்கு ஸ்கூல்லேந்து வந்தா, எங்களுக்கு எல்லாம் குஷி: கரும்பு துண்டுகள்! கிட்டு மாமா உபயம். அத்திம்பேர் சுவத்திலே சாஞ்சு உக்காந்துட்டார், அவமானத்தாலே.
இன்னும் அவருடைய தரகு ரகசியங்கள் சொல்ல முடியவில்லை. பல பக்கங்கள் பிடிக்கும்.  எனக்கென்னமோ அவர் மேல் இரக்கம் தான். இன்னிக்கு இருந்தா, அவருக்கு எத்தனை சான்ஸ்!  ஊரை வித்திருக்கலாம்; ஏரியை வாங்கி இருக்கலாம். அதை வித்து ரண்டு ஊர் வாங்கியிருக்கலாம்.  இரண்டரை ஜீயை நாலேமுக்கால்ஜீயா வித்திருக்கலாம். மாமிக்கு வைரத்தோடு என்ன? வைரமாலையே போட்றுக்கலாம். கொடுத்து வைக்கலை பாவம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைக.
இன்னம்பூரான்
16 12 2010

கமெண்ட்டுகள்:
எம்விஎஸ்: ஓய்! வ ரா தோத்துட்டாருங்காணும். 

ஜமாய்க்கிறீர். அந்த பஞ்ச் காமெடி உமக்குக் கைவந்தது. 

>>>>அந்த மாதிரி தன் இவரும். எல்லா கல்யாணத்துக்கும் போவார், கூப்டாட்டாக்கூட. எல்லாரும் உஷார் தான். >>>> 

இந்த இடம் டாப்பு 
:-)

டீடீ:
அடடா  எல்லாரையும் பத்தி சொல்லியாச்சு

நல்ல அறிமுகம்

உங்க  நுணுக்கம் விளையாடறது.

தே: இன்னம்பூரர்  வாசாலகத்துக்கு கேக்கணுமா ?
வேங்கடரமண பாகவதரின் அய்யம்பேட்டை பக்கத்து ஊராச்சே.
இந்த எழுத்துத்தான் ‘நீயிரும் வம்மின்’ என்று இழுக்கிறது.

கீ: இன்னி வரைக்கும் வரல்லை.//

நச்!!!!

இரண்டரை ஜீயை நாலேமுக்கால்ஜீயா வித்திருக்கலாம். மாமிக்கு வைரத்தோடு என்ன? வைரமாலையே போட்றுக்கலாம். //

விஷயம் மெல்லன்னா வெளியே வருது!

க: 
மதிப்பிற்குரிய ஐயா! இனிய காலை வணக்கம். அருமை. தாங்கள் ஏன் சுய சரிதை எழுதக்கூடாது. எழுதினால் அதுமிகவும் பயனுள்ளதாகவும் அக்கால கட்டத்தை அறிய உதவும் நூலாகவும் இருக்குமே. பாண்டிச்சேரியின் அக்கால கட்டத்தை நினைவூட்டும் ஆன்ந்த ரங்கர் நாட்காட்டியினைப் போன்று இது அமையலாமே. எம் போன்றோருக்கு பயனுள்ளதாக அமையுமே.

ரா: கதையும் கதையாசிரியர் சொல்லும் வகையும் தனி தினுசு! இவ்வளவு நாள் இதெக் காணாம இருந்தோமே...


இன்னிக்கு இருந்தா, அவருக்கு எத்தனை சான்ஸ்!  ஊரை வித்திருக்கலாம்; ஏரியை வாங்கி இருக்கலாம். அதை வித்து ரண்டு ஊர் வாங்கியிருக்கலாம்.  இரண்டரை ஜீயை நாலேமுக்கால்ஜீயா வித்திருக்கலாம். மாமிக்கு வைரத்தோடு என்ன? வைரமாலையே போட்றுக்கலாம். கொடுத்து வைக்கலை பாவம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைக.

அமக்களமா ... அவர் style-லெ ... பரமனுக்குப் "பாத சேவை" நடந்துகொண்டிருக்கும்! :-)


ப: ஆமாம், நான் கூட இதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.....கன்னியப்பன் ஐயா கூறியது போல் சுயசரிதம் ஒரு நல்ல முயற்சியாக இருக்கும் என்று தோன்றுகிறது ஐயா. மிக சுவையாகவும் யதார்த்தமாகவும் இருக்கும். மிக ஆவலாக இருக்கிறது ஐயா.......

---------------------------

இது ஒரு மீள்பதிவு. படம் புதிசு: http://www.vallamai.com/wp-content/uploads/2011/07/cartoon-caricature-of-old-man-thumb2794801.jpg


Monday, April 15, 2013

இதுவும் ஒரு பிருகிருதி:‘பாய்சன் லெட்டர் பத்து’




இதுவும் ஒரு பிருகிருதி:‘பாய்சன் லெட்டர் பத்து’
Innamburan S.Soundararajan Tue, Apr 16, 2013 at 6:32 AM
To: Innamburan Innamburan
Bcc: innamburan88
பச்சண்ணா சந்தில் நவசீலம்!

‘பாய்சன் லெட்டர் பத்து’
Inline image 1

‘பாய்சன் கிங் எலமனூர்’, ‘பாய்சன் கிங் எலமனூர்’ என்று அந்தக்காலத்தில் பிராபல்யம். அவர் எலமனூர் ஸ்டேஷன் மாஸ்டர். நல்ல பாம்பு அல்லது எந்த விஷஜந்து கடித்து விட்டால், அவருக்கு தந்தி கொடுத்தால் போதும். அவர் மந்திரித்து விஷத்தை முறியடித்து விடுவாராம். வெள்ளைக்காரன் ரயில்வே கம்பெனி எந்த ஸ்டேஷனிலிருந்தும் அவருக்கு இலவசமாக தந்தி அனுப்ப வசதி செய்து கொடுத்தது. இதெல்லாம் சின்ன வயசிலே துண்டுப்பிரசுரத்தில் படித்தது. அந்த அளவுக்கு நம்ம பச்சாண்ண சந்து ‘பாய்சன் லெட்டர் பத்து’ என்ற பத்மன் என்ற பத்மநாபனுக்கு அபகீர்த்தி என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

பச்சண்ணா சந்து ஒரு தனி உலகம். அமீன் பிச்சுமணி கூச்சல் ரகம். டெய்லர் ராவுஜி மெளனராகம். சூட்டிகை கமலம் தான் உயிர்நாடி. மூணாவது கட்டு அண்ணாசாமி ஐயங்கார் செத்தாலும் செத்தார், அவருடைய சீமந்த புத்திரன் பத்துவுக்கு காவல் இல்லாமல் போய்விட்டது. அவனும் தன்னிஷ்டப்படி மடல்கூத்து நடத்திக்கொண்டிருந்தான். நாலாங்கிளாஸ் படிக்கும்போதே, மதுரம் டீச்சருக்கும் தாமஸ் சாருக்கும் தகாத உறவு என்று கழிவறையில் கிறுக்கின பிஸ்தா அவன்.  எஸ்.எஸ்.எல்.சி. கோட்டு அடிச்சாலும், அவன் ஜேபில் அஞ்சு மசி பேனாக்கள் இருக்கும். எப்போதும் அழுக்குக் கோட்டு ஒண்ணு. அதில் கடந்த காலத்து ஸ்டாம்ப் பேப்பர் வச்சுருப்பான். உயிலை மாற்றி எழுத, போலி கிரயப்பத்திரம் எழுத, பொய்க்கணக்கு எழுத ஆகி வரும். அற்புதமாக ஆங்கிலம் எழுதுவான். தப்பும் தவறும் இயல்பாகவே அமையும். படிக்கிறவா நம்பறமாதிரி இருக்கும். உலகமே அவனுக்கு சத்ரு. இப்டித்தான், இவன் கனம் கோர்ட்டாருக்கு ஒரு லெட்டர் போட்டான், ‘இந்த பிச்சுமணி துரைத்தனத்தாருக்கு உண்மையான அமீன் இல்லை. மஞ்சக்கடுதாசி கடங்காரன் கிட்ட பச்சை நோட்டு இரண்டு வாங்கிவிட்டான்.’ என்று. வில்ஸன் துரை வீட்டுக்கே வந்துட்டான். மாட்டிக்கொண்ட பிச்சுமணி உதறிப்போய்ட்டார். வில்ஸன் அண்ணாசாமி ஐயங்காரை விட்னெஸ்ஸா கூப்பிட்டான். அவருக்கு மயக்கம் வரும்போல ஆயிடுத்து, அந்த லெட்டரை பார்த்தவுடன். பிள்ளையாண்டான் கையெழுத்து ஸ்பஷ்டமா இருந்தது. எப்படியோ சமாளிச்சார்னு வச்சுக்கோங்கோ. அவனை ஒருவாறு அடக்கி வச்சிருந்தார். அவரும் போய்ட்டார். தறுதலைக்கும் விடுதலை.

ஜோஷிக்கடைக்கு ஒரு லிகிதம். ‘உன் கடையிலிருந்து ஒன்பது கஜம் சீட்டி எடுத்து ராவுஜி கமலத்துக்கு சித்தாடை தைச்சுக்கொடுத்தார்.’ ஜோஷி குஜராத்திக்காரனா? ராவுஜி கிட்ட நேரிடையா சொல்றான், ‘ராவுஜி! நீங்க அப்படியெல்லாம் செய்யற ஆளு இல்லை. இருந்தாலும் அந்த பத்மன் பாயி கிட்ட ஜாக்கிரதையாக இரும்.’ என்று. அவர் சக்குபாயிடம் மட்டும் தான் புலம்பினார். அவள் கமலத்திடம் சொல்ல, அவள் பத்மனை நார் நாரா கிழிச்சுப்போட்டாள். இதற்கெல்லாம் அடங்கறவனா, அவன். கறுவிக்கொண்டே இருந்தான்.

வழக்கம் போல, கமலம் சரோஜா மாமியை பார்க்கப்போனாள். மாமி அவளுக்கு பாட்டுக் கிளாஸ் எடுக்கிறாள். இரண்டு பேரும் அன்யோன்யம். கமலம் போல சமத்தும் கிடையாது. சரோஜா மாதிரி யாருக்கும் பரிவும் கிடையாது. இது பொறுக்குமோ, ‘பாய்சன் லெட்டர் பத்துவுக்கு’? மேல ராஜவீதி வக்கீல் ராகவாச்சாரியாருக்கு தஞ்சாவூர் கோர்ட்டில் மட்டுமில்லை, மதராஸ் ஹை கோர்ட்டில் கூட ரொம்ப மரியாதை என்று பேசிக்கொள்வார்கள். ஜட்ஜ் ஓல்ட்ஃபீல்ட் சாயரக்ஷையில் வந்து அவரிடம் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்கிறார். அதுக்காகவே, இவர் மாசாமாசம் மதராஸ் போறார்னு பேசிப்பா. எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு. அவர் முகத்தில் ஒரு தேஜஸ் இருக்கும். ரொம்ப அமரிக்கையாக இருப்பார். பெரிய ஹாலில் ஜே ஜேன்னு கட்சிக்காரர்கள் கூட்டம் இருந்தாலும், எல்லாரிடமும் கனிவாக பேசுவார். தீர விசாரித்துத் தான் கேஸை எடுத்துக்கொள்வார். கிரிமினல் சைடு செல்வம் ஈட்டும் என்றாலும், அவருக்கு அதில் ஆர்வம் கிடையாது. அவரை பற்றி, யாராவது கேட்டால், இன்னொரு நாள் தான் எழுதணும். 

சரோஜாவிடம் பாட்டு கற்றுக்கொண்ட கமலம் வீட்டுக்குத் திரும்பும்போது லேசாக இருட்டி விட்டது, அன்று. வாசலில் பராக் பார்த்துக்கொண்டு நின்ற பத்மன், ‘ஏண்டி கமலம் இத்தனை லேட்டு?’ என்றான். தேவையா? அவளுக்கு ஒரே எரிச்சல். ‘என்ன நச்சுக்கடுதாசி! நீங்க யாரு என்னை கேட்கறத்துக்கு?’ என்றாள். ‘அப்படி கேளும்மா, கமலம்.’ என்று தூபம் போட்டார் அமீன் பிச்சுமணி. அவமானம் தாங்காமல் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தால், ஆம்படையாள் ஜானம்மா ‘அந்தக் குட்டிக்கிட்ட என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு.’ என்று தோளில் முகத்தை உரசிக்கொண்டு அழகு காண்பித்தாள். பத்மனுக்கு கோபம் கொப்பளித்தது. ஏனென்றால், அன்று இரவு காயப்போட்டுவிடுவாள். வாசல் திண்னை தான் மஞ்சம். 

அந்த ஆத்திரத்தில் பேனாவை எடுத்தான். கன்னா பின்னான்னு ராகவாச்சாரியாரையும் கமலத்தையும் பற்றி அவதூறுகளை அரைகுறை பிட்ஜின் இங்க்லீஷில் எழுதி, கவரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜரிகை டர்பன் கோபாலாச்சாரியின் விலாசம் எழுதி விட்டு, தூங்கிப்போய் விட்டான். காலையில் எழுந்தவன், அதை மறந்து, சீட்டு விளையாடப்போய்விட்டான். ஜானம்மா, பாவம், அப்பாவி. நிரக்ஷரக்குக்ஷி. கமலம் ஸ்கூலுக்குக் கிளம்பச்ச்ச, அவளிடம் அதைக் கொடுத்து தபாலில் போடச்சொன்னாள். விலாசத்தைப்பார்த்துத் திகைத்துப்போன கமலம், நேராகப்போய் அதை கோபாலாச்சாரியிடமே சேர்த்து விட்டாள். அவரும் கொஞ்சம் ஓய்வில் இருந்ததால், சாவதானமாக, அதை பிரித்துப்படித்தார். முகம் கறுத்தது.  அவர் அண்ணாசாமி ஐயங்காருக்குப் பத்து நாள் தாயாதி. இரண்டு குடும்பத்துக்கும் ஜன்மப்பகை புகைந்து கொண்டு இருந்தது. கமலத்திடம் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அவள் முகம் சிவந்ததையும், அவளுக்கு அழுகை பொத்துக்கொண்டதையும், போலீஸ்ஸோல்லியோ, உன்னிப்பாக கவனித்தார். ஆதியோடந்தமாக, கேட்டு, எல்லாவற்றையும் எழுதி வாங்கிண்டார்.
வழக்கு பதிவு செய்து விட்டார். பச்சண்ணா சந்து என்ன? மேலராஜவீதியே அதிர்ந்தது. 
மாஜிஸ்ட்ரேட் மாசிலாமணி ஜெயில் தண்டனை கொடுத்து விட்டார். இத்தனைக்கும் வக்கீல் ராகாவாச்சாரியார் பிராது ஒன்றும் கொடுக்கவில்லை.
நாலு மாதம் கழித்து:
ஜானம்மா: என்னமோடியம்மா. கூழும், களியும் தான் என்று அழறார். ஆனா கொழு கொழுன்னு தான் இருக்கார். பேனா கேட்டார். விநாசகாலே விபரீத புத்தி! தரமாட்டேன் என்று சொல்லி விட்டேன்.
அடுத்து வருவது கமலம்.
இன்னம்பூரான்
19 11 2012

Sunday, April 14, 2013

இதுவும் ஒரு பிருகிருதி: பச்சண்ணா சந்தில் நவசீலம்!




இதுவும் ஒரு பிருகிருதி: பச்சண்ணா சந்தில் நவசீலம்!

Innamburan S.Soundararajan Mon, Apr 15, 2013 at 6:57 AM

10/19/12


பச்சண்ணா சந்தில் நவசீலம்!
mInline image 1

மனுஷ ஜன்மம் எல்லாமே ‘இதுவும் ஒரு பிருகிருதி’ தான். ஒவ்வொண்ணும் அஷ்ட கோணல். ஒரு வருஷம் ஆகப்போறது, கீதா சாம்பசிவம். ‘சரியாப் போச்சு போங்க,  சரியான இடத்திலே நிறுத்திட்டா என்ன அர்த்தம்?? ‘ என்று உரிமை பிரச்னை எழுப்பி. இப்பவாவது வரேனே, அதை சிலாகிச்சுக்குங்கோ, என்ன!

பச்சண்ணா சந்து அஃறிணையில்லை. அதற்கு ஆத்மா உண்டு. சாக்கடைக்கு எதிர்வாடைலே ஆறாவது வீடு தான் அந்த உசிரை பிடிச்சுண்டு நிற்கறது. ஒண்டுக் குடித்தனம் ஒன்பதா! அந்த உசிர் ஊசலாட்றது.  அமீன் பிச்சுமணி ஐயர் என்ற பேஃபார்ஸ் (இரண்டுங்கெட்டான்) ஆசாமியை பத்தி ஆரம்பிச்சதே தப்பு. நாக்கு உலர்ந்து போச்சு. பின்னெ என்ன? சர்வோத்தம ராவை விட்டுட்டு இந்த தடிப்பிராமணனை பத்தி என்ன பேச்சு வேண்டியிருந்தது? எழுதியாச்சு. அன்னிக்கு காளை ராஜன் நிவாரணம் அளிக்கவும் என்றார். இதோ நிவாரணம் வந்தாச்சு.

’பிச்சுமணி ராவுஜியை ஒரு பிடி பிடிச்சார். அந்த கதையை அப்றம் சொல்றேன்...’ என்றதற்குத் தான் உரிமை பிரச்னை எழுந்தது. எனக்கு சப்ஜாடா மறந்து போயிடுத்து. ‘ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’. சர்வோத்தமராவ் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஒண்ணு சகாராம ராவோட பிள்ளை என்று கேக்கணும்; இல்லை. சக்குபாய் ஆத்து மாமா என்று சொல்லணும். அத்தனை சாது அவர். அவரா சண்டைக்கு போகமாட்டார். வந்த சண்டையையும் விட்டுடுவார். நத்தை மாதிரி சங்கோஜி. அவராச்சு. அந்த லொட லொட தையல் மிஷின் ஆச்சு. அதுவும் ராத்திரியில் மட்டும். ஜன்னலைக் கூட சாத்திண்டு, அவிஞ்சு போயிண்டே, தீபாவளி ஆர்டர் எல்லாம் தயார் செய்வார். கொஞ்சம் சத்தம் கேட்டாக்கூட பிச்சுமணி அதட்டும். பகல்லெ நேரம் ஏது ஓய்? ஜோஷிக்கடைலெ முழம் போடவும், புடவை அடுக்கவும் தான் சரியா இருக்கும். சக்குபாய் மாமி அவருக்கேற்றவள். செட்டா குடித்தனம். கடன் வுடன் வாங்கமாட்டா. இரண்டு பேரும் பட்டினி கிடந்தாலும் கிடப்பா. கை நீட்டி யாசகம் செய்ய மாட்டா. குழந்தை கூட பெத்துக்கலெ என்றால் பாத்துக்கோங்களேன். சக்குபாய் மாமி எல்லாருக்கும் ஒத்தாசையா இருப்பாள். அதனாலே இந்த ஆறாம் நம்பார் ஸ்டோர் என்ன? பச்சண்ணா சந்திலெயும் சரி, மேலராஜவீதி வக்கீல்கள் வீடுகளிலும் சரி, அவளுக்கு நல்ல பெயர். அதுவும் வக்கீல் ராகவாச்சரியாரோடெ மாட்டுப்பெண் சரோஜாவுக்கு, மாமி மேலெ ஒரு பரிவும் உண்டு. இது நம்ம பிச்சுமணிக்கு எரிச்சல். அந்த விஷயத்தில் மட்டும் அவரோட ஆத்துக்காரி தையூவுக்கு பூர்ண சம்மதம்.

இனி ஒரு உரையாடல்:

பிச்சுமணி: (கூச்சல் போட்டு) என்ன ராவுஜி! நாங்கள் எல்லாம் மனுஷாளா உமக்குப் படலையா? தெரியாமாத்தான் கேக்றேன்.

கோடியாத்து கமலப்பொண்ணு: அம்மா! அந்த கிழம் ஏதோ கத்தறது. நான் சக்குபாய் மாமிக்குத் துணைக்குப் போறேன். (பதிலுக்கு நிக்கலை. ‘சர்’ணு, தாவணி சறுக்க, அங்கே போய் விட்டாள், ஒரு தடி புஸ்தகத்தை எடுத்துண்டு.)

சக்குபாய்: (மென்மையான குரலில்: உள் சுவரை பாத்துண்டு) அவா இப்போத்தான் ஜோஷிக்கடையிலிருந்து வந்தா. ஸ்நானம் பண்ணிண்டிருக்கா.

பி: சரி. சரி. எனக்கும் ஆயிரம் ஜோலியிருக்கு. அந்த மனுஷன் இன்னிக்கி ராத்திரி மிஷின் ஓட்டினா, என்ன நடக்கும்னு தெரியாது. சொல்றதை சொல்லிட்டேன்.

கமலா: மாமா! இன்னிக்கி வாண்டையாரோட ஆள் வந்து உங்களை கேட்டான். என்னமோ ‘ஜப்தியை’ ஜப்தி பண்ணிடுவோம்லெ’ அப்டின்னு சொல்லிண்டா. (சமயம் பார்த்துத் தாக்குவதில் கமலத்துக்கு இணை அவளே தான். அவளுக்கு நன்னா புருஷன் அமையணும் நான் ஸ்வாமியை கேட்டுப்பேன்.)

பி: சரி. சரி. நீ எங்கெ இங்கே வந்தே. படிக்கிற பொண்ணு. 
(ராவுஜி கதவை பார்த்து, உரக்க) குளிச்சுட்டு இங்கெ வரட்டும். ஒண்லெ ரண்டு பாத்துறலாம்.

ச: (மென்மையான குரலில்: உள் சுவரை பாத்துண்டு) நவராத்திரி இல்லையா. தேவி பூஜை பண்ணுவா. நாழியாகும். அவாள்டெ சொல்றேன். (இனி மாமி கிச்ச்ன்லெ ரிடயர்ட். ஃபீல்ட் ஓப்பன் ஃபார் கமலா. அவள் கிட்ட தான் பிச்சுமணிக்கு கொஞ்ச பயம். அப்படி வாயாடி, அவள்.)

பத்து நிமிஷ இண்டெர்வல். பிச்சுமணி பஜ்ஜி சாப்ட்டிண்டு இருக்கு.

பி: சர்வோத்தம ராவ்! கொஞ்சம் இப்டி வரேளா?

க: மாமா! சக்குபாய் மாமி சொன்னாளோனோ. எங்க அம்மா கூட சொன்னா. ராவுஜி மாமா பண்ற ஆத்மார்த்தமான பூஜையினால் தான் இந்த பச்சண்ணா சந்து நவசீலம்  உருப்படியா இருக்குனு. சரோஜா மாமி கூட சொன்னா, ‘ ராவுஜி மாமா பூஜை பண்ணப்றம், கொஞ்சம் பிரசாதம் எடுத்துண்டு வா. மாமனார் சந்தோஷப்படுவார்னு.  ராவுஜி மாமா கிட்ட என்ன சொல்லணும்னு சொல்லுங்கோ. நான் போய் சொல்றேன்.

பி: (உள்ளூர கருவிக்கொண்டு, ஆனா பொட்டிப்பாம்பா அடங்கிப்போய்) ஒண்ணுமில்லெம்மா. நீ போய் படி.
க: மாமா! லைட்டை போட்டுருங்கோ, மாமா. ப்ளீஸ். (‘உலகே மாயம்...’ முணுமுணுத்துண்டு போகிறாள்.)

பி: (தனி மொழி) என்ன பாட்டு வேண்டிகிடக்கு. ஒரு ஸ்லோகத்தை பாடாதோ.

தையூ: ஆமாம். அந்த குட்டி கிட்ட என்னமா பயப்படறேள். பெரிய அமீன்!!!
[பச்சண்ணா சந்துக்கு ஆத்மாவுடன் வாயும் இருந்தால், ஒரு நூறு பிருகிருதிகளையாவது ஒப்பேற்றலாம். எழுதறவனுக்கே இத்தனை மறதி இருந்தால், படிக்கிறவாளுக்கு எவ்வளவு இருக்கும். அதான், ‘இதுவும் ஒரு பிருகிருதி ~7’ கீழே.
இன்னம்பூரான்
19 10 2012
படத்துக்கு நன்றி: http://farm1.static.flickr.com/159/392184521_7f7aae9c18.jpg

Wednesday, April 10, 2013

இதுவும் ஒரு பிருகிருதி: 5


இதுவும் ஒரு பிருகிருதி: 5


     நிலம், நீச்சு, நாட்டாமை, கோயில் தர்மகர்த்தா எல்லாம் இருக்கறதாலே, ‘நித்திய பிரமஹத்தி’ கு.ரங்காச்சாரியார் (சில பேர் குரங்காச்சாரின்னு சேத்து படிச்சா, அதுக்கு நானா பிணை!) சட்டை போடாமலே காலரை தூக்கும் ரகம். எப்போ பாத்தாலும் ஒரு வீராப்பு. எல்லாரையும் வம்புக்கிழுக்கிறது. வாராத சண்டையெல்லாம், சல்லடை போட்டு தேடுவது முதல், ஆம்படையாளுக்கு கொஞ்ச நேரம் கண்ணை சுழட்டி வந்தாக்கூடா, அந்த வேலைக்காரப்பெண் வள்ளிக்குட்டிக்கிட்ட போய் .‘ஹிஹி’ந்னு இளிக்கிறது( இப்போ அதை ‘ஜொள்ளூ என்கிறார்கள். ), கீரைக்காரி சுப்பாம்மா கிட்ட ‘ஜோக்’ அடிக்கிறது. ( அவ ஒத்தி தான், ‘ஐயரே, விலகு’ என்று அதட்டுவாள்.) இந்த சாகஸக்காரருக்கு உள்ளூர, ரத்னசாமி என்ற தலையாரியிடம் கொஞ்சம் பயம். 

     கு.ரங்காச்சாரியாருக்கு நிலபுலன்கள் ஜாஸ்தி தான். எள்ளுத்தாத்தா காலத்தில் இருந்த ஏழு கிராமங்களில், ஆறு கிராமங்கள், சூது, வாது, டம்பம், தாசி என்ற வகைகளில் க்ரயம் ஆகி யிருந்தாலும், உள்ளதை காப்பாற்றினால். ஏழு ஜென்மம் தாங்குமே என்று வைத்தி சொல்லிட்டானாம். கு.ர.வுக்கு ஏகப்பட்ட குஷி. இத்தனைக்கும், போன வருஷம் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ண, லேண்ட் மார்ட்கேஜ் வங்கியில், கற்பனையாக ஒரு காரணம் சொல்லி, கெஞ்சி, கூத்தாடி, லோன் எடுத்தாச்சு. இவர் நாட்டாமை கட்டப்பஞ்சாயத்துமில்லை; அரசு நிர்வாக முறையும் அல்ல. எல்லாம் ரண்டும்கெட்டான் தீர்ப்புகள். அதனால், அவனவன், அவனவன் இஷ்டப்படி செய்வான். கேட்பாரில்லை. Back to Square one. 

     கோயில்னு வந்துட்டா, தர்மகர்த்தா ஐயா உஷார். உஷத்காலத்திலே என்ன பிரசாதம் என்பதிலிருந்து பிரம்மோத்ஸவ மரியாதைகள் வரை எல்லாவற்றிலும் தலையிடுவார். இல்லாத பிரச்னைகளை எழுப்புவார். அசடு மாதிரி, நாதஸ்வரக்காரனோடு, சண்டை போடுவார். அப்றம், கோஷ்டிலே வரவாளுக்கு தக்ஷிணையை குறைப்பதில் மாமாவுக்கு அல்பசந்தோஷம். அடுத்தப்படியா, அன்றைய உபயதாரரிடம் போய் ஏதாவது வத்தி வைப்பார். ‘இன்னைக்கி ஏன் பெருமாளுக்கு அட்டிகை சாத்தலே’ என்று கேளுங்கோ என்கிற மாதிரி. ஆனா, எல்லாருக்கும் இது புஸ்வாணம்னு தெரியும். உபயதாரர், அழைச்சிண்டு போய், இவருக்கு மாலை மரியாதை, முதல் தாம்பூலம் செஞ்சுட்டா போறும். உச்சி குளிர்ந்துவிடும். வைகுண்டம் போன மாதிரி ஃபீலிங்க். எல்லாவற்றையும் விட்டு விடுவார். 

     இரண்டு சமாச்சாரம்: ரத்னசாமி எங்கேயோ ஏடாகூடமாக, இவரை பார்த்திருக்கிறான். அவனுக்கு முன் நம்ம ‘நித்திய பிரமஹத்தி’ பொட்டிப்பாம்பு. நல்ல ஊமைக்காயம். மாமி வேறெ ரண்டு நாள் சோறு போடல்லைன்னு வதந்தி.

     இவருக்கு இந்த ‘நித்திய பிரமஹத்தி’ விருது வந்த விதம் என்ன? சுற்றுவட்டாரத்தில், ஏதாவது ‘இழவு’ விழுந்துவிட்டால் ( யாரவது இறந்து விட்டால்) ஐயா ஆஜராகிவிடுவார். அங்கே, தகனம், கல்லு எங்கே ஊன்றது, பிண்டப் பிரதானம், மாசியம், சோதகும்பம், தர்ப்பணம், வருஷாப்திகம், ஹிரண்ய திவசம், அது, இது என்று ஒரு பட்டிமன்றம் நடத்திவிடுவார், எல்லாரும் முகம் சுளிக்க. 

     அவரோட ஆம்படையா கோமளா மாமி கூட, ‘ஏன் இந்த பாவிப்பிராமணன் ‘சவுண்டிக்கொத்தன்’ மாதிரி அங்கே போய் தொத்திக்கிறது என்பாள். ஆனால், இந்த நித்திய பிரமஹத்தி சபிண்டீக்கரணம் அன்று ஒருஸ்தானத்தில் அமர்ந்து, வயிராற உண்டு, கொண்டு வரும் ஒல்லிப்பிச்சான் வெள்ளி டம்ளரையும், நூல் போன்ற தங்க மோதிரத்தையும் பத்திரப்படுத்துவாள். அவ தான் இவருக்கு ‘நித்திய பிரமஹத்தி’ விருது அளித்தவள்.

முதல்ல இதை சொல்லியிருக்கணும். இரண்டு பேரும் ஸென்ஸெஸ் பட்டியலில் ‘சுகஜீவி’ என்று பதிவு செய்து கொண்டனர்.
இன்னம்பூரான்
12 03 2011

2011/1/4 coral shree <coraled@gmail.com>:

> நல்ல காமெடியான காரக்டர்தான்...........நன்றாயிருக்கிறது ஐயா.

சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmE6HKTVmAKP5hcY3586futOxxiJ7VtnSslBjNhB85BOUF0rBgmjYAD4EySojOetMjSkA85ZG99OCqSWwn_0UBZHhZRlE0MtiXx7KMYPp5nNN0VyHyS10nbM3_GC_3A_LSY1x4awIKa-E/s1600/monkey+shadow+shocking.jpg
இன்னம்பூரான்
10 04 2013

Monday, April 1, 2013

இதுவும் ஒரு பிருகிருதி: 3


இதுவும் ஒரு பிருகிருதி: 3

நல்ல மனுஷாளும் இருக்காளோல்லியோ! கோடியாத்து சுப்பய்யர் மாமாவும் அப்படித்தான். காலாம்பறவே ஸ்னானபானாதிகள் முடிச்சுட்டு, தெரு பசங்களை, என்ன சொக்குப்பொடியோ போட்டு, ஒக்கார வச்சு, தேவாரம் க்ளாஸ் எடுப்பார். அப்றம் ஒரு திருக்குறள் விளக்கம். அட்டவணை மாறும். புதனும், வெள்ளியும், திருமுறைகளுக்கு பதிலா திவ்யபிரபந்தம் எடுப்பார். இப்போ யாருக்கு புரியாது. சைக்கிள் கட்டு என்று பெயர். தட்டாமாலை வேஷ்டியும் இல்லை. பஞ்ச்க்கச்சமும் இல்லை. ப்ராக்டிக்கலா, சைக்கிள் பெடல்லே சிக்கிக்கொள்ள்ளாத வேஷ்டி கட்டுதல். ஸ்கூலுக்கு பயணம். நாள் பூரா, அங்கே ஆசிரியர் கண்டிப்பு, ஆதரவு, உண்டு, இல்லை எல்லாம் இருக்கும். எல்லா பாடங்களும், எல்லா வகுப்புகளுக்கும் எடுக்கும் ஆற்றல் இருப்பதால், ஹெட் மாஸ்டர் சொன்னார் என்பதற்காக, இவர் தான் பெர்மெனெண்டா, சொல்லிக்காம லீவு எடுக்கறவா க்ளாஸ் எடுப்பார். முணுமுணுப்பை முற்றும் துறந்தவர்.

மத்த வாத்தியெல்லாம் இவரை அசடு என்று கேலி செய்வார்கள். சாமர்த்தியமா, எந்த அதிகபடி வேலை வந்தாலும், இவர் தலையிலே தான். மத்யானம், கொஞ்சம் ஓய்வு உண்டு, டிஃப்ன் சாப்பிட. அப்பத்தான், 'அந்த சந்தேஹம், இந்த பிரச்னை' என்று சில பெற்றோர்கள் வருவார்கள். இவர் தலைலே கட்டிடுவாங்க. ஃப்ர்ஸ்ட் பாயிண்ட்: வந்தவனுக்கு திருப்தியான பதில் உத்தரவாதம். அடுத்தபடியா ஸ்கூலுக்கு நல்ல பெயர். இப்பெல்லாம், இன்ஸ்பெக்டருக்கு எல்லாம் அரசியல் வாதிக்கு வால் பிடிக்கவே நேரமில்லை. அந்தக்காலத்தில் இன்ஸ்பெக்டர் வருவது பெரிய சேலஞ்ச். க்ளாஸ் எடுப்பதை பசங்க்ளோட அமர்ந்தும் பார்ப்பார்கள். கண்ணுக்கு தென்படாமலும் கண்காணிப்பார்கள். கணக்கு, வழக்கு பார்ப்பார்கள். இது, அது என்று இல்லை; புரட்டி எடுத்து விடுவார்கள். ஒரு நாள் இன்ஸ்பெக்டர் நமசிவாயம் முதலியார், ஹெட் மாஸ்டர் கிட்ட சொன்னார். பக்கத்து ஊர்லே -என்ன நாலு மைல் - பள்ளிக்கூடம் சரியாக நடக்கவில்லை. சுப்பய்யர் சார் வாரத்துக்கு இரண்டு நாட்கள் சென்று சில வகுப்புகள் எடுக்கலாமே என்று. ஊதிய உயர்வு பத்து ரூபாய் கொடுக்க தனக்கு அதிகாரம் இருக்கிறது என்றார். ஹெட் மாஸ்டர் முன்னதைச் சொன்னார்; பின்னைதை விட்டு விட்டார். ஒரு பிரதிபலன் எதிர்பார்க்காமல் சுப்பய்யரும் போய்ட்டு வந்தாரே. 

இதெல்லாம் இருக்கட்டும். அப்போ காந்தி மஹான் மேலே எல்லாருக்கும் ரொம்ப மதிப்பு. அவர் சொல்லுக்குக் கட்டுபட்டு, ஊருக்கு ஊர் ஹிந்தி க்ளாஸ். சார் வாரத்துக்கு நாலு நாள், சாயங்காலம் ஹிந்தி சொல்லிக்கொடுப்பார். மூணு நாள் ஸ்லோகங்கள், சம்ஸ்கிருத ஸுபாஷிதங்கள் சொல்லிக்கொடுப்பார். எப்போ போனாலும் அவரை பார்க்கலாம். மாமி கர்நாடகம் தான். புடவையை மூணு சுத்து சுத்திண்டு தான் , வாசபக்கமே வருவா. "ஏண்டா! மாமாவை இப்படி படுத்தறா, படுத்தறேள்?" என்று மாமி கேட்டதில்லை. உத்தமி. தெரிஞ்சவாகிட்ட மாமி குசலம் விஜாரிக்கறது ஆச்சரியமா இருக்கும். வம்பு, தும்பு பேச மாட்டா. ஆனா, மென்மையான விஷயங்களை கிரஹிச்சுண்ட்றுவா. ஒரு நாள் அம்மா அப்பாகிட்டே சொன்னது காதிலே விழுந்தது: 'ஏன்னா! அந்த சங்கரன் ஆம்படையாளை தள்ளி வச்சுட்டான்னோல்லியோ. மாமி கிட்ட சொல்லிருக்கா. அவ என்ன பண்ணா தெரியாது. அவன் சேத்துண்டுட்டான். அந்த பொண்ணை கோயில்லை பாத்த்தேன். அவ தான் சொன்னா: சங்கரன் ஆத்துக்கு வந்து, அவளொடா அப்பா, அம்மாவை சேவிச்சிட்டு, அவளை அழைச்சுண்டாட்டானாம். அந்தரங்கமா சொன்னானாம், ''சுப்பய்யர் சார் உப்பை நான் சாப்பிடல்லைடி. அவர் ரத்ததை குடிச்சிருக்கேன். நாமா யாருமே மனுஷாளா பிறக்கறதில்லை. வெறும் சிசு. சார் மாதிரி இருக்கறவா தான் குயவன் மாதிரி நமக்கு உரு கொடுக்கறா. மாமி எங்கிட்ட ஒரு வார்த்தை தான் சொன்னா, அவளோட குடித்தனம் பண்ணுடா என்றாள்". அந்த பொண் மாமி தான் சிவகாமி அம்மன் என்று சொல்லி தாரை தாரையா ஜலம் விட்டது'. 

இதெல்லாம் அவ்வளாவா புரிய வயசு இல்லை எனக்கு. இருந்தாலும் அந்த தம்பதியை போற்றணும்னு புரிஞ்சது. சொன்னா நம்ப மாட்டேள். பல வருஷம் கழிச்சு அவாத்துக்கு போறேன். இரண்டு பேரும் அசக்தம். வாசல்லே கொஞ்சம் கூட்டம். சார் மடிலே மாமி. மெல்ல, மெல்ல, அவளோட ஆத்மா பிரிஞ்சுண்டுருக்கு. அந்தக்காலத்து அக்ரஹாரம் தான்.  ஆயிரம் கட்டுப்பாடு. ஆனா, சேரி பூரா வாசல்லெ நின்னுண்டு அழறது. ஆளாளுக்கு ஒரு நன்றிக்கதை, குழறி குழறி சொல்றா.

எனக்கு ஒரு சந்தேஹம். இவாளுக்கெல்லாம் கொடுக்கப்படாத 'பாரத ரத்னா' வாங்கிக்க, மத்தவாளுக்கு என்ன அருகதை இருக்கு?

இன்னம்பூரான்
20 12 2010

பி.கு. பின்னூட்டங்களுக்கு நன்றி. மனசு கொஞ்சம் அழறது. என்னை விட்றுங்கோ.
Tthamizth Tthenee 
12/20/10
to thamizhvaasal
”, ''சுப்பய்யர் சார் உப்பை நான் சாப்பிடல்லைடி. அவர் ரத்ததை குடிச்சிருக்கேன். நாமா யாருமே மனுஷாளா பிறக்கறதில்லை. வெறும் சிசு. சார் மாதிரி இருக்கறவா தான் குயவன் மாதிரி நமக்கு உரு கொடுக்கறா. மாமி எங்கிட்ட ஒரு வார்த்தை தான் சொன்னா, அவளோட குடித்தனம் பண்ணுடா என்றாள்". அந்த பொண் மாமி தான் சிவகாமி அம்மன் என்று சொல்லி தாரை தாரையா ஜலம் விட்டது'.  “
எங்க சார் இருக்கா  இது மாதிரி  மனுஷா எல்லாம் இப்போ ?
யோசிச்சுப் பாத்தா   நாமெல்லாம்  அடைஞ்சதை விட  இழந்தது  அதிகம்னு  தோண்றது
உண்மையா  ,ஆத்மார்த்தமா  இருக்கற மனுஷாளப் பாத்தே ரொம்பக் காலமாச்சு
அன்புடன்
தமிழ்த்தேனீ
LK 
12/20/10
to thamizhvaasal
என்ன ஒரு மனுஷா ? இப்படி இருக்காளா இன்னும் ??
shylaja 
12/20/10
to thamizhvaasal
ரொம்ப எதார்த்தமா இருக்கு...நெகிழ்ச்சியாவும்.