Tuesday, October 8, 2019

தருமமிகு சென்னையும் நானும் முன்னுரை

மீள்பதிவு 08 10 2019
தருமமிகு சென்னையும் நானும்
09/09/2010Innamburan Innamburan
தருமமிகு சென்னையும் நானும்

முன்னுரை

     சுபஸ்ய சீக்ரம்! ரங்கனாராவது விட்டுக்கொடுத்தார். என் எட்டு வயது மருமான் பேரன் ஒரு பொன்வாக்கு உதிர்த்தான், ‘எனக்கு மீசை முளைக்க எட்டு வருஷம் ஆகும். அதுவரை உயிரோடு இருந்தால் நீங்கள் பார்க்கலாம்!’ என்று. தொடங்கிவிட்டேன், குறிப்புணர்ந்து. உள்ளது உள்ளபடி எழுதுவதால், சிந்தித்து சிந்தித்து குழம்பவேண்டிய தேவை இல்லை. அவ்வப்பொழுது கொஞ்சமாக எழுதினால், யாரும் விரட்டப்போவதுமில்லை. 
     பட்டிக்காட்டான் பட்டணம் வந்த கதை தான் எனது. அக்ஷராப்யாசம் செக்கானூரணியில். குக்கிராமம். நரவாஹனம் (சித்தியாவின் தோளுக்கு இனியானாக!) பக்கத்து வீட்டு லீலா டீச்சர் தான் எஸ்கார்ட். அவர் தான் அந்த கிராமத்து பள்ளி ஆல் - இன்-ஆல். பத்தடி நடை. அப்றம் அவர் தோளில். ஏதோ பாடம், எல்லா வகுப்புக்களுக்கும் ஒன்றாக. கூச்சல் கூறையை பிளக்கும். அந்த களைப்பில் அவர் மடியில் தூக்கம். அந்த உரிமை எனக்கு மட்டும். எல்லா பசங்களும் வரும் - கிழிச ட்றாயர், நோ சட்டை. கவண் கல் வீசினால், குருவி காலடியில் விழும். குறி தப்பாது. அதிலெ கெட்டி, அந்த பசங்க.  ஏழை பாழைகள். பெற்றோர்கள் படிக்காதவர்கள். முக்காவாசி பிரமலைக்கள்ளர்கள். லீலா தெய்வம், அவர்களுக்கு. எனக்கு முதல் பாடம்: ‘இன பேதம் என்று ஒன்று இல்லை’. இது உணர்ந்தது; பாடம் எடுக்கப்படவில்லை. இருபது வருடங்களுக்கு பிறகு, உடல் நலம் நலிந்த என் தந்தையை பார்க்க அவரும், கணவர் ஷண்முகமும் (அப்பாவின் சக ஊழியர்.) வந்திருந்தார்கள். லீலா டீச்சர் பூரித்து போய்விட்டார், ‘ராஜூ கார்லெ கொண்டு விட்றான், அழகிய மனைவி, அப்பா அம்மாவை பாத்துக்கிறான்’ என்று. இத்தகைய பெருமிதம் பள்ளி ஆசிரியருக்கு மட்டுமே.
     காட்சி மாறுகிறது. காரணம் நினைவில் இல்லை. காரைக்குடி முத்தூரணி கரையில் ஒரு குடிசை. அங்கு சமத்து வாத்தியாரின் திண்ணைப்பள்ளிக்கூடம். வைஷ்ணவக்கும்பல். பட்டையா நாமம் போட்டுக்கணும். மணல் தான் ஸ்லேட். சுளீர்னு பிரம்பால் அடிப்பார். லீலா டீச்சர் மடியில் ரெஸ்ட் எடுக்கும் எனக்கு இந்த கொடுமை ஒத்து வருமோ? கொள்ளுப்பாட்டியிடம் பிராது கொடுத்தேன். அவள் கையை பிடித்துக்கொண்டு, ‘சமத்தா’ மறுநாள் போனேன். பாட்டியின் வாக்கு, 
‘ஏண்டா சமத்து! ஏன் புத்தி கெட்டு அலையறே? குழந்தை மேலே கை வச்சே! கூறு கூறா வெட்டி குளத்தலே வீசிடுவேன்!’ 
     இல்லாத மீசையை முறுக்கிக்கொண்டேன்! அன்றைக்கு தான் நாமம் போட கற்றுக்கொண்டேன். இனி நான் தான் சமத்து. ஆனால், முனகுவார், ‘இந்த வாண்டு ஆட்டி வச்சிருத்து.’ நம்ம கிட்ட அளவு கடந்த கசப்பான கனிவு. நாலு மாசம் கூட அங்கே படிக்கவில்லை. அப்பவோ, பிறகோ, எப்டியோ எனக்கு ஃப்ரெண்ட் காதர் மொய்தீன். ஒரு நாள் அவன் குல்லாவை போட்டுக்கொள்ள, பாட்டி சிரியா சிரித்தாள். தாத்தா வெடியா வெடித்தார். நான் பொருட்படுத்தவில்லை. அப்பவே ‘டோண்ட் கேர் மாஸ்டர்’. தாத்தா வச்ச காரணப்பெயர். ஒரு நாள் அவரை பற்றி எழுதணும். எனக்கு வாழ்நெறி கற்றுக்கொடுத்த சான்றோன்.
     அப்றம் தஞ்சாவூர் கொங்கணேஸ்வரர் வித்யா சாலை. தொடர்பு இருக்கிறது. தலைமை ஆசிரியர் பிரகாஷ், என்னைப்பற்றிய பதிவுகள் எடுத்துக்கொடுத்தார், கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு பிறகு! முதலில் கிடைக்கவில்லை. சக்கு பாய் என்று தேடுங்கள் என்றேன். ஹூம்! விமலா என்று தேடச்சொன்னேன். கிடைத்தது. அவள் தான் அப்போது உயிர்தோழி என்றேன். ஹெட் மாஸ்டரோல்லியோ! ஒரு மாதிரியா பார்த்தார். நான் கண்டுகொள்ளவில்லை. எல்லாத்தையும் சொல்லிண்டுருப்பாளா? என்ன? 
     பிறகு உசிலம்பட்டி, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, சென்னை வருகை. இந்த ப்ராக்கெட்டுக்குள் 12 வருடங்கள். பெரும் காதைகள். சொல்றதுக்கு வேளை வந்தால், பார்த்துக்கொள்ளலாம். என்னடாது? சென்னையை பற்றி கேட்டால் சுயபுராணம் எழுதரானே என்று கேட்டால் - 1. இது எப்படி போகும் என்று எனக்கே தெரியாது. 2. நான்கு தலைமுறை தொடராகவும் பயணிக்கலாம். 3. தருமமிழந்த சென்னை மட்டும் பேசப்படலாம். 4. அஸ்வத்தாமை போல, திருமங்கலம் டாக்டர் சிரம் திருகியது முதல் நவம்பர் 2010 விழா வரை - வோல்காவிலிருந்து கங்கை வரை மாதிரி நீண்டும் போகலாம். 5. எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு விருப்பமில்லாதது உரைக்கப்படா.

ரங்கனார் அளித்த தாரக மந்திரம்: ‘ஒன்று விடாமல்’.

நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
09 09 2010
Sign in to reply
09/09/2010Mohanarangan V Srirangam
பரவாயில்லை. 
ராஜூ சொன்னத்தைக் கேட்கற நல்ல பையன்தான்.
:--))) 
 
நல்ல ஆரம்பம். 
நன்றி. 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

 



10/09/2010சீதாலட்சுமி
ராஜு சமத்து அண்ணா
அண்ணா உங்க சரித்திரம் நன்னா இருக்கு
சென்னை வரும் பொழுது உங்ககிட்டே ஜாக்கிரதையா பேசணும்
எனக்கு கிடைத்த முதல் பாடம்
 
 


 



10/09/2010Mohanarangan V Srirangam
உங்ககிட்டே ஜாக்கிரதையா பேசணும்<<<< 
 
இது யாரைக் குறித்து எழுதப்பட்டது? 
 
’ராஜு’வைக் குறித்து என்றால் நானும் ’ஆமாம் மாமி’ போட்றேன். 
:--))

 

10/09/2010சீதாலட்சுமி
ராஜு அண்ணாவைத்தான் குறிப்பிட்டேன்.
அவர் வீட்டிற்கருகில் ஓர் கல்வெட்டு ஆய்வாளர் இருக்கின்றார்
அவருடன் அண்ணா வீடு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை விவாதிக்க வருவதாகச் சொன்னேன். அத்துடன் பல மரபுச் செய்திகள், அரசியல் வரலாறும் 
விவாதிக்கப்பட இருக்கின்றன. நான் ஏதாவது உளறி என் அண்ணனின் கைவண்ணத்தில் அது வந்து விடுமோ என்று தான் அப்படி எழுதினேன்
இம்முறை தமிழகச் சுற்றுலா சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகின்றேன்
முடிந்த மட்டும் மின் தமிழ் அறிஞ்ர்கள் பலரைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்
 


 

10/09/2010S.Krishnamoorthy
இது மிக நல்ல தொடர். சுவையான செய்திகளையும், சம்பவங்களையும், நினைவுகளையும், அனுபவங்களையும் படித்து ரசிக்கலாம்.
1950-60 களில் சென்னைக்கு வந்து சிவமானேன் என்ற தலைப்பில் அன்றைய பிரபல எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதினார்கள்.  கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்த்து எப்படி?  சென்னையில் பட்ட இன்ப துன்பங்கள், மகிழ்ச்சி-வேதனை, சென்னை தன்னை எழுத்தாளனாக எப்படி உருவாக்கியது என்பது போன்ற சுவையான அனுபவப் பரிமாற்றங்களை அந்தத் தொடர் எடுத்துவைத்தது.
வழிப்போக்கன்





10/09/2010vadivelu kaniappan
அன்புடையீர்! வணக்கம். தொடக்கமே அமர்க்களம்.இதனைப் படிக்க நான் தயார். அருமையான Serial. தொடருங்கள் ஐயா. என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.



10/09/2010Rasa
திரு இன்னம்பூராரே
பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது. சொல்புதிது சுவைபுதிது. இப்பொழுது நீங்கள் எழுதும் இந்த நடை எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படியே தொடந்து எழுதுங்கள்.
அன்புடன்
ஆராதி



10/09/2010Tthamizth Tthenee
திரு இன்னம்புரார் மூலமாக  வெளிவரவேண்டிய  அருமையான தொடர், 
திரு இன்னம்புராரின்  கருத்து செறிந்த நடை மனதுக்கு இதமாகவும், பல அறிய செய்திகளையும் உள்ளடக்கி வரும் என்பது நமக்கெல்லாம் தெரியும்,
 
கரை புரண்டு  ஓடட்டும் ”தருமமிகு சென்னையும் நானும்”  
நாமும்  முத்தெடுப்போம்,
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

10/09/2010myself
சக்கு பாய் என்று தேடுங்கள் என்றேன். ஹூம்! விமலா என்று தேடச்சொன்னேன். கிடைத்தது. அவள் தான் அப்போது உயிர்தோழி என்றேன். ஹெட் மாஸ்டரோல்லியோ! ஒரு மாதிரியா பார்த்தார். நான் கண்டுகொள்ளவில்லை. எல்லாத்தையும் சொல்லிண்டுருப்பாளா? என்ன?//

இப்படி எழுத உங்களுக்குத் தான் வரும். மறுபடியும் சொல்றேன், அந்தக் காலத்து எஸ்.வி.வி.யைப் படிக்கிறாப்போல் ஓர் உணர்வு. அங்கேயே போயாச்சு!
அப்புறம் பேரனை வாத்தியார் அடிச்சதுக்குப் பாட்டி வாத்தியாரைக் கண்டிக்கிறது எங்க வீட்டிலேயும் என் கணவருக்கு நடந்திருக்கு. அந்த வாத்தியாரைப் பெரிய சார் னு கூப்பிடுவாங்க. எங்க கல்யாணம் ஆகி நாங்க நமஸ்காரம் செய்யப் போனப்போ அவர் என்கிட்டே சொன்னது முதல்லே இதுதான். ஒருநாள் உன் ஆம்படையானை அடிச்சுட்டேனு அவனோட பாட்டி வந்து என்னைக் கன்னாபின்னானு திட்டிட்டா! அதுக்கப்புறம் அவன் மேலே கையே வச்சதில்லை என்றார்.  அந்தக் காலத்தில் எல்லாப் பாட்டிங்களும் இப்படித் தான் இருந்திருப்பாங்க போல! 





Attachments (1)
360.gif
453 B   View   Download

11/09/2010N. Kannan
சூப்பரோ! சூப்பர்!
இனா எழுதினா தேனா இல்லையா?
சில நேரம் இப்படிக் கொட்டும். தேன்மழை எப்போதுமில்லை!
க.>

> ‘ஏண்டா சமத்து! ஏன் புத்தி கெட்டு அலையறே? குழந்தை மேலே கை வச்சே! கூறு கூறா வெட்டி குளத்தலே வீசிடுவேன்!’
>
>      இல்லாத மீசையை முறுக்கிக்கொண்டேன்!
>      அப்றம் தஞ்சாவூர் கொங்கணேஸ்வரர் வித்யா சாலை. தொடர்பு இருக்கிறது. தலைமை ஆசிரியர் பிரகாஷ், என்னைப்பற்றிய பதிவுகள் எடுத்துக்கொடுத்தார், கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு பிறகு! முதலில் கிடைக்கவில்லை. சக்கு பாய் என்று தேடுங்கள் என்றேன். ஹூம்! விமலா என்று தேடச்சொன்னேன். கிடைத்தது. அவள் தான் அப்போது உயிர்தோழி என்றேன். ஹெட் மாஸ்டரோல்லியோ! ஒரு மாதிரியா பார்த்தார். நான் கண்டுகொள்ளவில்லை. எல்லாத்தையும் சொல்லிண்டுருப்பாளா? என்ன? 
(தொடரும்)

3 comments:

  1. I am sure this piece of writing has touched all the internet users,
    its really really fastidious piece off writing on building up new
    blog.

    ReplyDelete
  2. I've read some excellent stuff here. Definitely price bookmarking for revisiting.
    I surprise how a lot effort you set to create this sort of
    great informative web site.

    ReplyDelete
  3. It's going to be end of mine day, but before ending I am reading
    this wonderful piece of writing to increase my experience.

    ReplyDelete