இது சுபாஷிணி ஸ்பெஷல்.
இன்னம்பூரான் பக்கம் [5]:
மனோதிடம். [1]
"நாம் ஒரு விசயத்தை ஆழமாக விரும்பினால் அது கைகூடும் என்பது சாத்தியமே. நம் மனத்தின் வலிமை அது."
- முனைவர் சுபாஷிணி
தமிழுலகத்தில் முனைவர் சுபாஷிணியை அறியாதவர் சொற்பம். அவருடைய தமிழார்வம் என்னுடையதற்கு அடித்தளம். பல வருடங்களுக்கு முன் வித்துவான். மு. ராகவைய்யங்காரின் தமிழாய்வு பற்றி சுபாஷிணியிடம் பேசியதின் நினைவலை இந்த ‘மனோதிடம்’ தொகுப்புக்கு வித்திடுகிறது. சுபாஷிணி தமிழுக்காக பலவிதங்களில் மெச்சத்தகும் ராஜபாட்டைகளில் லாகவத்துடன் உலாவுகிறார்; பீடுநடையும் போடுகிறார்.
அதில் ஒன்று, படித்ததை பதிக்கும் போது அதன் மேல் முல்லைக்கொடி படர்வது போல், தன் கருத்துக்களை அவர் பதிவு செய்யும் திறன். நான் அதை பாராட்டுபவன். நான் பதிவு செய்திருக்கும் அவரது மேற்கோள் ஒரு சூத்திரமாகவே அமைந்து விட்டது. அதை முன்வைத்து என் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள ‘மனோதிடம்’ என்ற இந்த தொடரை துவக்கியிருக்கிறேன். வரலாற்றின் ஏடுகளை புரட்டிப்பார்க்கும் போது, சாத்தியங்களின், சாதனைகளின், அபார சாதனைகளின் விவரங்கள் கிடைக்கும். அவை கருத்தின், எண்ணத்தின், சிந்தனையின் பிரதிபலிப்பு, எதிரொலி ஆகியவையாகவும் அமையலாம். உதாரணத்துக்கு, ஒரு ‘மனவலிமை’ சிந்தனை இன்று:
Give me a lever long enough and a fulcrum on which to place it, and I shall move the world.
- Archimedes
ஆர்க்கிமிடீஸ் என்ற கிரேக்க கணித மேதை, தத்துவ ஞானி, விஞ்ஞானி உலகத்தையே அசைத்துவிடுவது சாத்தியமே, நீண்டதொரு நெம்புகோலும், அதை நட்டுவைக்க உகந்த இடம் கிடைத்தால் போதும் என்றார், 23 நூற்றாண்டுகளுக்கு முன். இது ஒரு உவமை. நெம்புகோலை நாடவேண்டியதில்லை. ஆர்க்கிமிடீஸ்ஸின் சிந்தனை, திறந்த மனம், ஆய்வுத்திறன், செயலாற்றல், மற்றும் அற்புதமான குணாதிசயங்கள் ஆகியவை அவர் பற்பல விஷயங்களை ஆழமாக விரும்பினார்; ஆகவே, அவை எல்லாமே கைகூடின; மனத்தின் வலிமையால் அவை சாத்தியமாயின என்பது வெள்ளிடை மலை. இந்த சொல்லாக்கம் வேறு ஒரு பின்புலத்தில், சுபாஷிணியின் மனத்தில் உற்பத்தி ஆன விந்தையை நான் மிகுந்த மனநிறைவுடன் நோக்குவதால் தான் ஆர்க்கிமிடீஸ் வருகை புரிகிறார்.
‘கண்டு கொண்டேன்’ -யுரேகா(Eureka!) என்ற ஆர்க்கிமிடீஸ்ஸின் வியத்தகு சொல்லாக்கம் விஞ்ஞானத்தின் தூண்களில் ஒன்று. அவருடைய மனவலிமையின் சேவை -எளிய முறையில் பிரபஞ்சத்தை உலகுக்குப் புரிய வைத்தது. ‘எண்ணில் அடங்கா’ என்று எல்லையற்றதை முதலில் விளக்கியதும், பரிமாணத்தை அளக்கும் முறையை கண்டுபிடித்ததும், கணக்கு சாத்திரத்தின் பன்முகங்களை எளிதில் கையாண்டததும், இவற்றின் தொடர்பாக பற்பல விஞ்ஞான கோட்பாடுகளையும், கணக்கும் நிர்ணயங்களையும் வகுத்தது அவரே. பற்பல நூற்றாண்டுகளுக்கு பிறகு ந்யூட்டன், ஐன்ஸ்டீன் ஆகியோரின் விஞ்ஞான கோட்பாடுகளை காணும்போது தான் அதற்கெல்லாம் அடித்தளம் போட்டதும், உபகரணங்களை படைத்ததும் ஆர்க்கிமிடீஸ் என்று புரிகிறது.
சுருங்கச்சொல்லின், மனித சமுதாயத்தின் விஞ்ஞான வளர்ச்சியை, சுபாஷிணி கூறும் மனவலிமை என்ற நெம்புகோலால் ஆர்க்கிமிடீஸ் நிமிர்த்திய சாதனைக்கு, அவருடைய ஆழமான விருப்பம் துணை போனது என்பதே.
அடுத்து வருவது யார் என்று பார்ப்போம்.
அன்புடன்,
இன்னம்பூரான்
மே 14, 2016.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
No comments:
Post a Comment