‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:6
முதல் ஐந்து கடிதங்கள்
இன்னம்பூரான்
21 01 2015
தமிழ் மரபு அறக்கட்டளையின் முகமலராகிய மின் தமிழ் நாட்தோறும் புதிய விஷயங்களை கட்டியம் கூறி வரவேற்கவேண்டும்: ஆக்கப்பூர்வமாக இயங்கவேண்டும்; மாணவ சமுதாயத்துக்குத் தொண்டு செய்யவேண்டும்; த.ம.அ சேகரங்களை அலசி, ஆராய்ந்து அருளவேண்டும் என்ற என் அவாவுக்கு வரவேற்பு இருப்பதாக, கண்ணன், சுபா, திரு.நரசய்யா, ஷைலஜா போன்றவர்களின் பின்னூட்டங்கள் அமைகின்றன. தமிழ் மொழியை கையாளும் போது, நான் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் அறிவுரைகளை ஏற்கிறேன்.
“...தாய்மொழியிற் கல்வி பெறுவது இயற்கை...பின்னை வேறு பல மொழிகளை பயிலலாம்: ஆராயலாம்...இந்நாளில் (1932) தூயத்தமிழர் இன்னாரென்றும், குடிபுகுந்து நிலைத்த தமிழர் இன்னாரென்று பிரித்துக்காட்டல் எவராலும் இயலாததொன்று...இப்போது தூய ஆரியர் இன்னார்’-’தூய தனித்தமிழர் இன்னார்’ என்று எவரே பிரிக்கவல்லார்?...பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது...வடமொழி பாரதநாட்டுக்குரிய பொது மொழி...”
வல்லமையிலும் அவ்வாறே தான் எழுதிவருகிறேன். சொல்லின் பயனைப் பொருளின் சுவையில் காண்கிறேன். இந்த ஐந்து கடிதங்களும் வெவ்வேறு விதங்களில் சுவை கூட்டுகின்றன; மகிழ்விக்கின்றன; அறிவுரை அருளுகின்றன; இயல்பாக அமைந்து என் அணுகுமுறையை ஆதரிக்கின்றன.
- முதல் கடிதம் மிகவும் பிரபலமாக அமெரிக்காவில் பல்லாண்டு பல்லாண்டாக வளையவரும் சிரஞ்சீவி மடலின் தமிழாக்கம். பொறுப்பு எனதே. தற்கால தமிழாளுமையார்கள் வர்ஜீனியாவுக்கு பதில் போடுவார்களா என்பது கேள்விக்குறி. பதில் எழுதிய இதழாளர் சிறுமிக்கு புரியும் வகையில் எழுதினார்; ஷேக்ஸ்பிரிய ஆங்கிலத்தில் எழுதவில்லை. வர்ஜீனியாபிரிய ஆங்கிலத்தில் எழுதினார்.
- இது ரசிகமணி டி.கே.சி. அவர்களின் கடிதத்தில் ஒரு பகுதி. ‘ஆஸ்பத்திரி’, ‘பிரத்யேகமாக’, ‘பாஷை’ போன்ற சொற்களை இயல்பாகவே பயன்படுத்தியுள்ளார். தமிழார்வத்தில் நாம் ஒருவருக்கும் குறைந்தவர் இல்லை, அவர். இது அந்தக்கடிதத்தில் உள்ள மென்மையான நகைச்சுவையிலிருந்து தெரிகிறது. யாருமே அவர் பெயரை ஊகிக்கவில்லை என்று குறைப்பட்டுக்கொள்கிறேன்.
- இந்த கற்பனை கடிதம், எம்.ஏ. பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. திரு.நரசய்யா சொல்வதை என் நிர்வாக அனுபவம் ஆதரிக்கிறது. சுபாஷிணி சொல்வதை என் சமூகவியல் ஆய்வுகள் ஆமோதிக்கின்றன. அதீதமாக மிகைப்படுத்தி எழுதப்படும் கடிதங்கள் பொருட்படுத்தப்படுவதில்லை. ஆனால், மிகையாக தோன்றும் புகையே, பகை தான் என்றால் சிந்திக்கப்படவேண்டிய/அவசர உதவி அளிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது எனலாம். ஒரே கடிதத்தில், டாஸ்மாக் கண்டனம், சுகாதாரக்குறைவின் சாபமாக அன்னை ஆஸ்பத்திரியில், ஒரு உளவியல், வேலையில்லாத்திண்டாட்டம், பளாரென்று நம்மை செருப்பால் அடிக்கும் வறுமை எல்லாம் இடம் பெற்று விட்டன. இதை தர்ப்பண (முகம் பார்க்கும் கண்ணாடி) இலக்கியம் எனக் கருதுகிறேன். ‘இக்கடிதம் உண்மையே என்று எடுத்துக் கொள் ளும் நிலையில், தமிழகத்தின் மிகச் சாதாரண வாழ்வியல் நிலை அதாவது அடித்தட்டுவர்க்கமக்களின் அன்றாட நிலையை ஒரு கடிதத்திலேயே வெளிச்சமாக்கும் ஆவணமாகத் திகழ்கின்றது.’ என்பது நிதர்சனம்.
- ‘... 'ஜன சக்தி' வார மலரை ஒரு இதழ்கூடத் தவறவிடாமல், கட்டாயம் சேர்த்துவைப்பாய் என்று நம்புகிறேன்.’ என்பதிலேயே இவருடைய முகவிலாசம் இருக்கிறது. இவர் தான் கம்யூனிஸ்ட் துறவி ப. ஜீவானந்தம் அவர்கள். பெண்ணியத்துக்கு முகநூல் இந்தக்கடிதத்தொகுப்பு என்றால் மிகையல்ல. அவர் விளிக்கும் பெண்மணி கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால் கடித இலக்கியம் அற்புதமான படிப்பினைகளை அள்ளி அள்ளித் தருவதற்கு, இது ஒரு சான்று. ஜீவாவும் கோஷம், வியாபகம்,பரிட்சை போன்ற வடமொழிச்சொற்களை பயன்படுத்த தயங்கவில்லை. மேலும் ரஞ்சனி சொன்னாற்போல், ‘"நல்ல வைத்தியனிடம் மூன்று பண்புகள் இருக்கவேண்டும். ஒன்று, தன்னலங் கருதாமலும் உள்ளதை மறைக்காமலும் இருக்கும் உணர்வு; இறந்து, நோயாளி படுகிற துன்பத்தையும் வேதனையையும் தீர்க்க விரும்பும் பரிவு; மூன்று, நோயின் தன்மையையும் அதனால் வரும் கேட்டையும் பகுத்து அறிந்து, அதைக் குணப்படுத்தும் மருந்தை அறிகிற அறிவு" என்ரு பகுதியில் மூலத்திலேயே ‘இரண்டு’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘இறந்து’ என்ற சொற்பிழை நேர்ந்துள்ளது. ரஞ்சனி உன்னிப்பாகப்படித்தது எனக்கு ஆறுதல். மற்றபடி யார் படிப்பார்கள் என்று நினைத்தேன்.
- தமிழனை ‘அப்பாவி’ என்றும் அவன் பேசும் பாஷையை பொல்லாதது என்றும், அவனை பயித்தார ஆஸ்பத்திரிக்கு அனுப்பவேண்டும் என்று கேலி செய்தது ரசிகமணி அவர்கள் தாம். நாம் தான் இன்னும் மாறவில்லை.
-#-
No comments:
Post a Comment