தொபக்கட்டீர் ! Monday, November 10, 2014, 5:38
– இன்னம்பூரான்.
‘… விபரீத புத்தி!’ பழமொழிகளை, அதுவும் வடமொழி கலப்பிலே எழுத அச்சமாக இருக்கிறது. ஆனாலும் அவை இயல்பாகவே உண்மை உரைக்கின்றன. சில ஜந்துக்கள் திருட்டு ஏணியில் வானமேறி, தன்மானம் இழந்தவர்கள். அந்த வெள்ளைக்காலர் திருடர்கள் அபரிமிதமாகவே குழப்பி, ஆட்டைத் தூக்கி மாட்டில் போடுவார்கள். மாட்டைத் தூக்கி ஆட்டில் போடுவார்கள். தலைகீழ் நிற்பார்கள். அர்த்தராத்திரியில் பிடித்தக் குடையை அநாமதேய பினாமிகளுக்கு பரிசளிக்கும் பேமானி ஆவார்கள். எதிர்வீட்டில் அடகு பிடிப்பார்கள். பக்கத்தூர் வங்கியிலே, இல்லாளுக்குக்கூடத் தெரியாமல், மர்ம நம்பர் கணக்கு வைப்பார்கள். ஹவாலாவில் மூழ்கி எழுவார்கள். ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து, பெற்ற பிள்ளைக்குக் கூட கிடைக்காதபடி, முடக்கிப் போடுவார்கள். கடந்த சில வருடங்களில் தலை விரித்து பேயாட்டம் ஆடி, பொது சொத்தை அபகரித்து, விதிமுறைகளை மீறி, பொய்க்கணக்கு எழுதி, பொல்லாதவர்களுடன் கூட்டமைத்த கஜானா களவாளிகள் எக்கச்சக்கம். அவர்களில் பலர் உங்களுக்கு அறிமுகமான பிராணிகள் தான். புலியையும், எலியையும் கூண்டில் வைக்கும் மக்கள், கொசுவையும், ஈயையும் நசுக்கும் நாம், இந்த இராக்கதர்களை உலவ விட்டிருக்கிறோம். வேலி நம் நிலத்திலும், அடுத்தவன் நிலத்திலும், புறம்போக்கு நிலத்திலும் மேய்கிறது, கேட்பார் இல்லாமல். எந்த தனிமனிதரையும் சுட்டாத இந்த பொது அறிமுகம் முற்றிற்று. இனி அடைமொழிகள் வாரா. இது இந்த தொடருக்கு சிறப்புப்பாயிரம் என்க. ஒவ்வொரு இழையிலும் இதுவும், ஈற்றடியும் திரும்ப, திரும்ப வரும்.
இனி, நவம்பர் 7, 2014 தகவலையும் அதன் பின்னணியையும் பார்ப்போம். ஆவணங்களும், சான்றுகளும் இல்லாத சேதி ஒன்றும் எழுதப்படமாட்டாது. நம் நாட்டின் முதல் பிரதமரும், தேசாபிமானியுமான பண்டித ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேத்தி பிரியாங்காவின் கணவர் ராபர்ட் வடேரா தன் சொத்துப்பத்துக்களை காபந்து பண்ணுவதாக செய்தி. எப்படி? அவர் தலைமையில் இயங்கும் 1. Lifeline Agrotech, 2. Greenwave Agro, 3.Rightline Agriculture, 4.Future Infra Agro, 5. Best Seasons Agro and 6.Primetime Agro என்ற கம்பெனிகளில் நான்கை கலைத்து விட்டார்; இரண்டை கலைத்துக் கொண்டிருக்கிறார். இது கம்பெனி இலாக்காவினால் நேற்று அறிவிக்கப்பட்ட செய்தி. இத்தனைக்கும் இந்த பட்டியலில் இல்லாத ஸ்கைலைட் என்ற கம்பெனி போன வருடத்துக்கு முந்திய வருடம் ஈட்டிய லாபம் ரூபாய் 33 கோடி. முப்பத்துமூன்று கோடி தேவர்கள் கூட இப்படி செல்வம் ஈட்ட முடியாது. ஏன் கலைத்தார்? யார் யாராருக்கு நஷ்டம்? இந்த கூடாநட்பின் மற்ற பிரகிருதிகள் யார் யார்? அவர்கள் வாளாவிருந்தனரா? போன வருடம் எப்படி இந்த லாபத்திற்கு பதில் ரூபாய். 2.3. கோடி நஷ்டம்? இவருடைய தொழிலே வேளாண்மையை ஒழித்துக்கட்டி, வீட்டுமனை போட்டு,எக்கச்சக்கமான லாபம் அடைவதே. எதற்காக இந்த வேளாண்மை அடைமொழி? இதற்கெல்லாம் விடை காண இயலவில்லை. அவரை கேட்க இயலாது. தக்கதொரு காரணமில்லாமல் வீ.வீ.ஐ.பி. யாக திகழ்ந்த இந்த மனிதர், குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன என்று வினவிய ஊடகத்தானை இம்மாதம் முதல் தேதியன்று, ஒலிப்பெருக்கியை பிடுங்கி, கன்னா பின்னா என்று வைது ஒரு வழி செய்துவிட்டார். அதன் எதிரொலியாகவா அவருடைய மாமியார் ஸோனியா காந்தி மாப்பிள்ளையின் வீட்டுக்கு சென்றார்? யாமறியோம். ஆனால், கம்பெனிகள் கலைகின்றன!
சரி, சரி, இதற்கெல்லாம் அடிப்பாரமான, ஆடிட்டர் ஜெனெரல் அலுவலகம் சொல்வது என்ன? ஊடகச்செய்தி படி முதல் நிலை ஆய்வு ஆவணம் (முதல் நிலை ஆவணங்கள் திருத்தப்படலாம்; அவை ஊடகத்திடையே உலவுவதே வியப்புக்குறிய சமாச்சாரம்.) கூறுவதாக சொல்லப்படுவது:
‘வெறுங்கையை வைத்து முழம் போடுவது போல்’ திரு. வடேரா ஒரு லக்ஷம் ரூபாய் முதல் போட்டு, அரசியல் ஆதரவின் பயனாக, தம்மாதூண்டு பணம் போட்டு (7.5 கோடி ரூபாய்) வாங்கிய நிலத்தை டி.எல்.எஃப் கம்பெனிக்கு ரூ. 58 கோடிக்கு விற்று ரூ.43.66 கோடி லாபம் ஈட்டினார். ஹரியானா அரசுடன் செய்து கொண்ட உடன்படிக்கைப் படி கட்ட வேண்டிய ரூ.41.5 கோடியை கபளீகரம் செய்து விட்டார். இதற்கு ஹரியானா காங்கிரஸ் அரசு உறுதுணை. திரு. வடேரா முதலில் போட்ட முதல் ஆகிய ரூ.7.5. கோடி கூட அவருடைய பணமில்லை என்கிறார், அந்த அரசினால் துன்புறுத்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. கேம்கா.
‘வெறுங்கையை வைத்து முழம் போடுவது போல்’ திரு. வடேரா ஒரு லக்ஷம் ரூபாய் முதல் போட்டு, அரசியல் ஆதரவின் பயனாக, தம்மாதூண்டு பணம் போட்டு (7.5 கோடி ரூபாய்) வாங்கிய நிலத்தை டி.எல்.எஃப் கம்பெனிக்கு ரூ. 58 கோடிக்கு விற்று ரூ.43.66 கோடி லாபம் ஈட்டினார். ஹரியானா அரசுடன் செய்து கொண்ட உடன்படிக்கைப் படி கட்ட வேண்டிய ரூ.41.5 கோடியை கபளீகரம் செய்து விட்டார். இதற்கு ஹரியானா காங்கிரஸ் அரசு உறுதுணை. திரு. வடேரா முதலில் போட்ட முதல் ஆகிய ரூ.7.5. கோடி கூட அவருடைய பணமில்லை என்கிறார், அந்த அரசினால் துன்புறுத்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. கேம்கா.
ஆக மொத்தம் தொபக்கட்டீர் !
எந்த புற்றில் எந்த பாம்போ?!
யாரு கண்டா?
-#-
பிரசுரம்: http://www.vallamai. com/?p=5225
சித்திரத்துக்கு நன்றி: http://www.clker.com/ cliparts/0/4/T/8/n/6/stickman- falling-md.png
இன்னம்பூரான்
No comments:
Post a Comment