Monday, April 28, 2014

சோறு பித்தம். கஞ்சி காமாலை !

சோறு பித்தம். கஞ்சி காமாலை !
  1. Tuesday, April 29, 2014, 5:06t

இன்னம்பூரான்
பால பருவத்தில் சோற்றுக்கு பஞ்சமில்லை. கஞ்சி காய்ச்சல் வந்தால் தான்.
pastedGraphic.pdf

யான் வாழ்ந்த சமுதாயத்தின் வரவு செலவு, இன்றைய இளைய தலைமுறையின் நோக்கில், வரவு நாலணா;செலவு பதினாலணா. ‘வரவு எட்டணா;செலவு பத்தணா.’ என்ற மாயை மேல்தட்டு மக்களால் எமக்கு நிர்ணயிக்கப்பட்டது. எட்டுக்கும் பத்துக்கும் நடுவில் ஒரு ஸ்பார்க். அவ்ளோ தான். நாலுக்கும் பதினாலாக்கும் நடுவில் இருப்பதோ மின்வெட்டு; ஆனாலும், சமாராதனைகளும், ததியாராதனைகளும் அடிக்கடி பசிப்பிணியை தணிக்கும். சுழற்சி முறையில் எல்லாரும் செய்வதால், அநாவசிய தாக்ஷிண்ய பிரச்னை இல்லை. அடுத்தாத்து சுந்தரேஸ்வரய்யர் வக்கீல் மாமா அடிக்கடி சமாராதனை அன்னதானம் அளிப்பார். ஃபேஸ்புக் மாதிரி நான் அவரது உண்மை பெயரை கூறுவதின் காரணம், ஜானகிராமன் போன்ற அவருடைய குடும்பத்தினர் பார்த்து மகிழ்வார்களோ என்ற நப்பாசை.
அரியக்குடியில் பகல்பத்து, ராப்பத்து உத்ஸவங்களுக்காக, அங்கே டேரா போட்டு, விமரிசையாக திருவேங்கடத்தானுக்கு பக்திமாலை சூட்டும் என் தாத்தாவின் உத்தரவுப்படி கோட்டையடுப்பு அணைக்கப்படமாட்டாது. தினந்தோறும் ததியாராதனை தான். ‘ததியாராதனை’ என்பது ‘சமாராதனைக்கு’ வைணவ பரிபாஷை; ‘ததியாரதனை’ க்கு ஸ்மார்த்தாள் பரிபாஷை ‘சமாராதனை’. ‘விருந்தோம்புதல்’ தனித்தமிழ். நாங்கள் மூன்றுக்கும் தயார்.
பேராரூணி தாத்தா முதல், வருகை புரியும் பெரியவர்கள், ‘அம்மா! ஒரு சொம்புலெ வென்னீர் தீர்த்தம் கொண்டு வா’ என்று கனிவுடன் கேட்பார்கள். வெள்ளிச்சொம்பில் தான் அந்த உபசரணை என்பது எழுதப்படாத விதி. கோயிலில் தாயாருக்கு புடவை சாத்திறா என்று எல்லா பொண்டுகளும் கோயிலுக்கு போன சமயம் பார்த்து, பன்னிரண்டு திருமண் காப்பு துலங்க, சேப்பு பட்டு சால்வை தூக்கி அடிக்க, தோடுடைய செவியன் மாதிரி, ஏழு கல் பெல்ஜியம் ப்ளூ ஜாகர் டயமண்ட் கடுக்கன்கள் டால் அடிக்க, ஒரு வைணவ சான்றோன் வந்து ( அவர் ஆண்டவன் ஆசிரமத்தில் பெரிய புள்ளியாம், அட்வகேட்டாம்.) ‘பயலே! ஒரு சொம்புலெ வென்னீர் தீர்த்தம் கொண்டு வா.’ என்றார். அவர் கேட்டவிதம் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், தாத்தாவின் நற்பெயரை கெடுக்க மனமில்லை. திருமப்பள்ளிக்கு (அதான் திருமடப்பள்ளி -சோற்றுக்கடை) விரைந்தேன். அப்பாத்துரையிடம், சீக்கிரம் ஒரு வெள்ளிச்சொம்பிலெ வென்னீர் கொடு.’ என்றேன். நான் போட்டுக்கொண்டு போய் கொடுக்கிறேன். நீ உன் வேலையை பாரு.’ என்று அதட்டினான். பல வருஷங்களுக்கு பிறகு தான் அப்பாத்துரை அம்மாவுக்கு அத்தை மூலம் பரிசம் போட்டவர் என்று அறிந்தேன். அதனால் ‘அதட்டினார்’. போறாத காலம் பால் பொங்க ஆரம்பித்தது. அவருடைய கவனம் சிதறியது. நானும் விரைந்து ஒரு வெள்ளிச்சொம்பு கொதி நீரை, ராஜாஜி மாதிரி, ஒரு துண்டால் அரவணைத்து எடுத்துச்சென்றேன். ‘ப்ளூ ஜாகர்’ ஒரு விழுங்கில் வீழ்ந்தார். அலறினார். கொப்பளித்தார். விழுந்து புரண்டார். கன்னாபின்னா என்று வைதார். அவருக்கு தெரியாது, நான் இரெகுநாத தாத்தாச்சாரியாரின் பேரன் என்று. என்னை அடிக்க அவர் ஓங்கின கை, நட்டாற்று குதிரையை போல, அந்தரத்தில் நின்றது. ஏனென்றால், என் தாத்தா ரெளத்ராபிஷேகராக, அவரை சொல்லால் தாக்கினார்.அப்பாத்துரைக்கு நல்ல டோஸ் கிடைத்தது. ப்ரைவேட்டாக, வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் முன் அவர் சொன்னார், ‘மண்டுப்பயலே! வென்னீர் என்றால் கும்போணம் டிக்ரீ காப்பி. அது பரிபாஷை. காப்பின்னு கேட்டா அபசாரம். நீயெல்லாம் என்ன படிச்சு உருப்படுவையோ!’ என்று. ‘நீ படிக்காதவன்’ என்று சொல்லிவிட்டு, கோயிலில் விஸ்வரூப தரிசனத்துக்கு தேசாந்திரிகளுக்கு, தாத்தா உபயமாக, கொடுக்கப்படும் தடிமன் தோசை வாங்கிக்கொள்ள போய்விட்டேன். அப்போது வயது 5/6/7. மலரும் நினைவுகள்.
35 வருடங்களுக்கு பிறகு ரயில்வே உத்தியோகம். தனி சொகுசு வண்டி. ஒரு ஸ்டேஷனில் யதேச்சையாக பார்த்த அப்பாத்துரை வந்து சில மணி நேரம் அரட்டை அடித்தபோது, வென்னீர் கதையை வஸந்தாவிடம் போட்டுக்கொடுத்து விட்டு ‘சிவனே’ (ஐ மீன்: ‘கோவிந்தா’) என்று போய்விட்டார். எங்கேயே ஆரம்பிச்சு எங்கேயோ போகிறேன். சுக்கானை திருப்பியாச்சு.
வக்கீல் மாமா சமாராதனையில் ஒரு ஸெளகர்யம். நாங்களே வாலண்டியர் என்பதால், போகச்சே வரச்சே… . தவிர, லட்டு, அப்பளம், தொன்னை பாயசம் எல்லாம் டபிள் டோஸ் பரிமாறப்படும், அண்ணன் தம்பி உபயமாக. அதில் முதல் செட்டு சாப்பிட; செகண்ட் செட், அனுமதிக்கப்படாத ஆருயிர் நண்பன் அப்துலுடன், குளக்கரையில். சிலசமயங்களில் ஜமா கூட சேரும்.
கமிங்க் டு தெ பாயிண்ட்: சோற்றை போடமாட்டார்கள். அவசரம். வெள்ளி முறத்தால் தள்ளுவார்கள். மிச்சம் வச்சா கஷ்டம். ஏன்னா, சமாராதனை விதிப்படி எச்சில் இலைகளை வக்கீலாத்து மாமி (அவள் தான் எடுக்கணும்.) எடுப்பதற்கு முன்னால், வக்கீல் மாமா, கரம் குவித்து, விருந்தினர்களை தொழுது (பொதுவாக), இலைகள் மீது விழுந்து புரண்டு அங்கப்பிரதக்ஷிணம் செய்வார். பிறகு ஸ்நானம் செய்து விட்டு, பூஜை செய்வார். அதனால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவது ஒரு பண்பு. புடைத்த வவுறு. வயத்து வலி. பித்தம். மதியம் நாலு மணி சுமார் ஜுரம் அடிக்கும் லேசா என்று பாட்டி டயக்னைஸ் செய்து, ராத்திரி கஞ்சித்தண்ணி உபவாசம். கண்ட கண்ட தண்ணியா. அப்பெல்லாம் இந்த ஃபில்டர், கில்டர் எல்லாம் கிடையாது. கஞ்சியோ? தண்ணீரோ, கண் மஞ்சளா இருக்கே, குழந்தைக்கு என்பாள் பாட்டி. டயக்னாசிஸ்: காமாலை. மறு நாள் ஆஞ்சனேய சர்மா வந்து, மந்திரித்து, ஊசியால் காமாலையை தண்ணீரில் இறக்குவார். அடடா! வைகாசி பிறக்கப்போறது. அடுத்த சமாராதனை வர்ரதே.
பழமொழி உபயம்: அடுத்தாத்து சிவகாமி மாமி.

சித்திரத்துக்கு நன்றி: https://hainalama.files.wordpress.com/2013/01/the-asthma-symptom.jpg?w=500

பிரசுரம்: http://www.vallamai.com/?p=44671#comment-10172

இன்னம்பூரான்


பின்னோட்டம்! 
revathinarasimhan wrote on 29 April, 2014, 6:47ததியாராதனை    சிலசமயம் தடியாராதனை என்று கூட வழங்கப்படும்    இ சார். மலரும் நினைவுகள் எங்க ஊர் வைக்கத்து அஷ்டமிக்கு அழைத்துச் சென்றது.                 ¬¬¬¬ வக்கீல் மாமா சமாராதனையில் ஒரு ஸெளகர்யம். நாங்களே வாலண்டியர் என்பதால், போகச்சே வரச்சே… . தவிர, லட்டு, அப்பளம், தொன்னை பாயசம் எல்லாம் டபிள் டோஸ் பரிமாறப்படும், அண்ணன் தம்பி உபயமாக. அதில் முதல் செட்டு சாப்பிட; செகண்ட் செட், அனுமதிக்கப்படாத ஆருயிர் நண்பன் அப்துலுடன், குளக்கரையில். சிலசமயங்களில் ஜமா கூட சேரும்.{{{    ப்ளூ ஜாகர்     மாமா      கண்முன்னால் நிற்கிறார்.
*
innamburan 
wrote on 29 April, 2014, 9:33

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்.
என்ஜாய் செய்ய கலாட்டாவே பிரதானம்.


No comments:

Post a Comment